அராஜகம்... அசிங்கம்... ஆயுதப்படை!

‘மன்மத’ காக்கிகளின் மர்ம பக்கங்கள்!

காவல் துறை உள்ளிட்ட ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திவந்த பல துறைகளில், இன்றைக்கு ஏராளமான பெண்கள் வந்துவிட்டார்கள். அவர்கள் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் பணியாற்றி வருகிறார்கள். காவல் துறையில், கான்ஸ்டபிள் தொடங்கி ஐ.பி.எஸ். வரை அனைத்து மட்டங்களிலும் ஆயிரக்கணக்கான பெண்கள் பணியாற்றுகிறார்கள். சமூகத் தடைகள், சவால்கள் என பலவற்றையும் கடந்துதான் காவல் துறைக்கு அவர்கள் வருகிறார்கள். அப்படி வரும் பெண்களில் பலர், இந்தத் துறைக்கு வந்தவுடனேயே பல அதிர்ச்சிகளை சந்திக்கிறார்கள், பல அவமானங்களை எதிர்கொள்கிறார்கள், கடும் வேதனைகளை அனுபவிக்கிறார்கள்.

‘மன்மத காக்கிகளின் மர்ம பக்கங்கள்’ என்ற தலைப்பில் கடந்த ஜூ.வி. இதழில் வெளியான ஸ்பெஷல் ஸ்டோரியைப் படித்துவிட்டு, ஆயுதப்படை உட்பட தமிழக காவல் துறையின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் பெண் போலீஸார் பலரும் நம்மைத் தொடர்புகொண்டார்கள். மேலதிகாரிகளுக்கு இணங்கிப்போகவில்லை என்றால் எப்படியெல்லாம் டார்ச்சர் செய்கிறார்கள் என்று கண்ணீர்விட்டுக் கதறினார்கள் அந்தப் பெண் போலீஸார்.

தமிழ்நாட்டில் மாவட்டத் தலைநகரங்களில் எஸ்.பி. கட்டுப்பாட்டின்கீழ் ஆயுதப்படை செயல்பட்டுவருகிறது. தலைநகர் சென்னை, கோவை, நெல்லை, மதுரை, வேலூர், பழநி, திருச்சி ஆகிய இடங்களில் பட்டாலியன் எனப்படும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை செயல்பட்டு வருகிறது. இவற்றில் ஏராளமான பெண் போலீஸார் பணியாற்றி வருகிறார்கள்.

கனவுப்பிரதேசம்!

காவல் துறை பணிக்குத் தேர்வாகி பயிற்சி முடித்தவர்களுக்கு, இந்த இடங்களில் பணி வழங்கப்படுகிறது. ஏராளமான போலீஸ் வாகனங்கள், பிரமாண்டமான மைதானம், அடுக்குமாடி குடியிருப்புகள் என தனி ராஜ்ஜியம்போலவே இந்த இடங்கள் காட்சியளிக்க, காக்கி உடை அணிந்த போலீஸார் மிடுக்குடன் அங்கே நடமாடிக்கொண்டிருப்பார்கள். போலீஸ்காரராக ஆக வேண்டும் என்று விருப்பம் கொண்ட இளைஞர்களுக்கு அந்த இடம் ஒரு கனவுப்பிரதேசம். ஆனால், போலீஸாகப் பணியில் சேர்ந்து அங்கு செல்லும் பெண்களுக்கோ, அது ஒரு நரகம். காரணம், பெண் என்றாலே தங்களுக்கான போகப்பொருள் என்று நினைக்கும் ஆண் அதிகாரிகள் அதிகாரம் செலுத்தும் இடமாக அவை இருப்பதுதான்.

அனுசரித்தால் அனைத்தும் நடக்கும்!

“நான் கிராமத்துச் சூழலில் பிறந்து வளர்ந்தவள். பி.காம் படிச்சிட்டு போலீஸ் தேர்வுக்குப் போனேன். செலக்ட் ஆனேன். அபாயின்ட்மென்ட் ஆர்டரை கையில் வாங்கியபோது, நான் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை. ‘போலீஸ் ஆயிட்டியாம்மா’ என்று என்னைப் பார்த்து எங்க சொந்தக்காரங்க எல்லாம் பெருமைப்பட்டாங்க. தென்மாவட்டத்துல இருக்கிற ஒரு ஏ.ஆர். கேம்ப்ல சேர்ந்தேன். போலீஸ் குவார்ட்டர்ஸ்ல வீடு கொடுத்தாங்க. அங்கே நான்கு பெண்கள் தங்கியிருந்தோம். ஆரம்பத்துல, காலையில் பரேடுக்குப் போகும்போது ரொம்ப உற்சாகமாக இருக்கும். போலீஸாக இருந்து ஏதாவது சாதிக்கணும்னு தோணும். ஆர்வத்தோட பரேடுக்குப் போவேன். ரொம்ப சந்தோஷமாகத்தான் இருந்துச்சு. ஆனால், போகப்போக அந்த இடத்தோட சுயரூபம் எனக்குத் தெரிய ஆரம்பிச்சது” என்று சோகத்துடன் சொன்னார், தென் மண்டலத்தில் உள்ள ஆயுதப்படையில் கடந்த 3 ஆண்டுகளாகப் பணியாற்றிவரும் பெண் காவலர் ஒருவர்.

அவர் மேலும் பேசுகையில், “அங்கே, பெண் போலீஸ் என்றாலே சற்று ஏளனமாகத்தான் பார்ப்பார்கள். அதுவும், என்னைப் போன்ற அடிமட்ட நிலையில் உள்ள காவலர்கள் நிலைதான் ரொம்ப பரிதாபம். நாங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க முடியாது. அதை, எங்களுக்கு மேல் உள்ள டி.எஸ்.பி. போன்ற அதிகாரிதான் முடிவுசெய்வார். இதில் சாதியையும் பார்ப்பார்கள். தன் சமூகத்தைச் சேர்ந்த பெண் போலீஸாக இருந்தால், அவர்கள் மீது டி.எஸ்.பி. கொஞ்சம் கருணை காட்டுவார். மற்றவர்களின் கதி கஷ்டம்தான். டி.எஸ்.பி-யிடம் கொஞ்சம் குழைந்து பேசிவிட்டால், அந்தப் பெண் போலீஸுக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது. ரோல்கால் அட்டர்ன் பண்ண வேண்டியதில்லை; பாரா, பந்தோபஸ்து என எதுவுமே இல்லை. நமக்கு மேலே உள்ள அதிகாரிக்கு எப்போதெல்லாம் போர் அடிக்கிறதோ, அப்போது போனில் கொஞ்சிப் பேசவேண்டும். அதுதான் முக்கியமான டியூட்டி. அனுசரித்துப் போனால் அனைத்தும் நடக்கும். இல்லையென்றால், எல்லாமே இதற்கு நேர் எதிராக நடக்கும்” என்றார்.

தென் மாவட்டத்தில் உள்ள ஆயதப்படை பிரிவில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் மீது எக்குத்தப்பாக குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்கள் பெண் போலீஸார். அங்கு நீண்டகாலமாகப் பணியாற்றும் போலீஸ் அதிகாரி ஒருவர் நம்மிடம் பேசினார்.

“இங்கே ஓர் அதிகாரி இருக்கிறார். அவர்தான் பெண் போலீஸாரை ஆட்டிப்படைக்கிறார். தனக்கும், உயர் போலீஸ் அதிகாரிகள் சிலருக்கும் பெண் போலீஸை எப்படி ‘பணி’ செய்ய வைப்பது என்பது அவருக்கு கைவந்த கலை. பெரும்பாலும், உயர் அதிகாரிகள் வீடு, கேம்ப் ஆபீஸ் என ரெண்டு இடங்களுக்குத்தான் பெண் போலீஸுக்கு டியூட்டி தரப்படும். அந்த அதிகாரி பற்றி யாரும், யாரிடமும் புகார் சொல்ல முடியாது’’ என்றார்.

மாதவிடாய் கால கொடுமை!

திருச்சியில் உள்ள ஆயுதப்படை முகாமில் உள்ள ஒரு பெண் போலீஸிடம் பேசினோம். “எங்களுக்கு, நல்லது கெட்டதுக்கு விடுமுறை கிடைப்பது எல்லாம் குதிரைக்கொம்பு மாதிரி. அதைத்தான், பெண் சபலம் கொண்ட போலீஸ் அதிகாரிகள், தங்களுடைய ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள். மாதவிடாய் நேரத்தில் விடுமுறை கேட்டால் தரமாட்டார்கள். அந்த நாட்களில்தான் அதிகமாக வேலை வாங்குவார்கள். வேண்டுமென்றே இந்தக் கொடுமையைச் செய்வார்கள். சக ஆண் போலீஸிடம் ஒரு பெண் போலீஸ் பேசுவதை அதிகாரிகள் பார்த்துவிட்டால், அவ்வளவுதான். அவர்கள் ரெண்டு பேருக்கும் பாரா போட்டு பிராணனை வாங்கிவிடுவார்கள்” என நொந்துகொண்டார்.

மூன்று தற்கொலைகள்!

திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றிய மூன்று பெண் போலீஸார் கடந்த 2 ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அவர்களின் மரணத்துக்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், போலீஸ் அதிகாரிகளின் டார்ச்சர்தான் முக்கியக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

இதுபற்றி அங்கு பணியாற்றும் பெண் எஸ்.ஐ. ஒருவர் நம்மிடம் பேசினார். “கடந்த ரெண்டு வருஷத்துல, மூன்று பெண் போலீஸார் தற்கொலை செய்துகிட்டாங்க. அதில் ஒருத்தர் மதிய உணவு நேரத்துல விஷம் குடித்து தற்கொலை செய்துகிட்டாங்க. அதற்கு போலீஸ் அதிகாரி ஒருவர்தான் காரணம். அவரை அனுசரித்துப்போனால் எந்தப் பிரச்னையும் இருக்காது. இல்லையென்றால், மிகவும் கஷ்டமான பணிகளைக் கொடுத்து, டார்ச்சர் கொடுப்பார். அதற்குப் பயந்து பல பெண் போலீஸார் தங்களை இழந்துள்ளனர். அவர்களில் இந்தப் பெண்ணும் ஒருவர். ஒருகட்டத்தில், அந்தப் பெண் போலீஸை அழைத்து உயர் அதிகாரி கண்டித்துள்ளார். அதாவது, தனக்கும் அனுசரித்துப்போக வேண்டும் என்று அவர் நெருக்கடி கொடுத்திருக்கிறார். அதனால் ஏற்பட்ட மனஉளைச்சலில் அந்தப் பெண் காவலர் தற்கொலை செய்துகொண்டார். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு, அந்த போலீஸ் அதிகாரியை வேறு ஊருக்கு டிரான்ஸ்ஃப்ர் செய்துவிட்டார்கள். சொந்தக் காரணங்களால் அந்தப் பெண் போலீஸ் தற்கொலை செய்துகொண்டார் என வழக்கை முடித்துவிட்டார்கள்.

ஏழு மாதங்களுக்கு முன்னாடி, இன்னொரு பெண் காவலர் தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வேலைப்பளு அதிகமாக இருந்தது. கணவர் மிகவும் சந்தேகப்பட்டு வந்ததால், கடுமையான மனஉளைச்சலில் இருந்தார். திடீரென ஒருநாள் இரண்டு குழந்தைகளைத் தவிக்கவிட்டு தற்கொலை செய்துகொண்டார். நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு பெண் போலீஸ் மூன்று மாதங்களுக்கு முன்பு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். அந்தப் பெண்ணின் குடும்பப்பின்னணி மிகவும் பரிதாபமானது. குடும்பத்தைவிட்டு தந்தை ஓடிப்போய்விட்டார். மனநலம் சரியில்லாத அம்மா. ஒரே தம்பி. ஆயுதப்படையில் பணிபுரிந்துகொண்டே போட்டித் தேர்வுகளை எழுதிவந்தார். குரூப்-2 தேர்வுக்கு விண்ணபித்தார். அதற்குப் படிப்பதற்காக விடுப்பு கேட்டார். கிடைக்கவில்லை. தொடர் முயற்சிக்குப் பிறகு விடுப்பு கிடைத்தது. அந்த நிலையில்தான், அவர் தற்கொலை செய்துகொண்டார்.  அவர், உருக்கமான கடிதம் ஒன்றையும் எழுதிவைத்திருந்தார். அதில், ‘எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. வேலையும் பிடிக்கவில்லை. அதனால்தான், தற்கொலை செய்துகொள்கிறேன்’ என்று எழுதியிருக்கிறார். போலீஸ் அதிகாரிகள் சிலர், அந்தப் பெண்ணுக்குத் தொடர்ந்து செக்ஸ் டார்ச்சர் கொடுத்துள்ளார்கள். அதுதான் அவரது தற்கொலைக்குக் காரணம் என்று அப்போது பேசப்பட்டது. அதிகாரிகள் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் உண்மைகள் அனைத்தையும் மூடிமறைத்துவிட்டார்கள்” என்றார் அந்தப் பெண் எஸ்.ஐ.

கடந்த மே மாதம் சென்னையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்துக்கு திருச்சி மாநகர ஆயுதப்படையில் உள்ள பெண் காவலர்களிடம் இருந்து புகார் கடிதம் ஒன்று சென்றது. அதில், 10-க்கும் மேற்பட்டோர் பெண் போலீஸார் கையெழுத்திட்டு இருந்தனர். அதில், ‘திருச்சி ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் ஒருவர், பெண் காவலர்களிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுகிறார். எதிர்த்துக்கேட்கும் பெண் காவலர்களை மற்ற ஆண் காவலர்களுடன் தொடர்பு இருப்பதாகக் கதைகட்டுகிறார். அந்த நபர், பெண் காவலர் ஒருவருடன் தொடர்புவைத்துள்ளார். அந்த விஷயம், அவரது மனைவிக்குத் தெரியவந்தது. அது பற்றி திருச்சி ஆயுதப்படை உயர் அதிகாரியிடம் புகார் கொடுத்தார். சம்பந்தப்பட்ட இருவரையும் அழைத்து அவர் கண்டித்துள்ளார். மேலும், இதுபற்றி விரிவான விசாரணை நடத்தச் சொல்லி அறிக்கை வாங்கியிருக்கிறார், திருச்சி போலீஸ் கமிஷனர். ஆனால், அதன் பிறகு எதுவுமே நடக்கவில்லை” என்று புலம்புகிறார்கள், அங்குள்ள பெண் காவலர்கள்.

 சிவப்புத்தோல் டார்கெட்!

கோவை மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர் ஒருவர் நம்மிடம் பேசினார்.

“பெண் போலீஸ் என்றாலே நண்பராகவோ, சகோதரியாகவோ பார்க்க மாட்டார்கள். வெறும் போகப்பொருளாகத்தான் பார்க்கிறார்கள். இங்கே ஒரு இன்ஸ்பெக்டர் இருக்கிறார். அவருக்கு சிவப்புத்தோல் கொண்ட பெண்கள்தான் பிடிக்கும். சிவப்பாக இருப்பதால் நான் படும் கஷ்டங்களை வெளியே சொல்ல முடியாது” என்று புலம்பினார்.

வேலை பிடிக்கவில்லை!

பெண் போலீஸார் சந்திக்கும் மன உளைச்சல்கள் பற்றி நேரடியாக ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளார் மனநல மருத்துவர் சித்ரா அரவிந்த். அதுபற்றி நம்மிடம் அவர் பகிர்ந்துகொண்டார். “பெண் போலீஸார் 250 பேரை சந்தித்து இந்த ஆய்வை நடத்தினோம். பெண் போலீஸார் களப்பணியில் இருக்கும்போது பல பிரச்னைகளை சந்திக்கிறார்கள். உடைமாற்றும் வசதி, கழிப்பறை வசதி, ஓய்வு அறை என எந்த அடிப்படை வசதிகளும் அங்கு இருப்பதில்லை. அதனால், கடும் மன உளைச்சல் ஏற்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மழை, வெயில் பார்க்காமல் வேலை செய்வதால் சிரமமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். எட்டு மணி நேரத்துக்கும் அதிகமாக வேலை பார்க்க நிர்பந்தம் செய்யப்படுவது, விடுமுறை கிடைக்காதது போன்ற துயரங்களை அனுபவித்து வருகிறார்கள். இதனால், பெரும்பாலான போலீஸார் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். பெண் என்றாலே மேலதிகாரிகள் ஏளனமாகப் பார்ப்பதாகவும், தங்களை அவர்கள் மதிப்பது இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வில், தங்களுக்கு போலீஸ் வேலை பிடிக்கவில்லை என்று 69 சதவிகித பெண் போலீஸாரும், மன உளைச்சலில் வேலை பார்ப்பதாக 64 சதவிகிதம் பேரும், குடும்பச் சூழ்நிலையால் இந்த வேலையில் தொடர்வதாக 40 சதவிகிதம் பேரும் தெரிவித்துள்ளனர்” என்றார்.

இந்தக் கொடுமைகளுக்கு முடிவே கிடையாதா? என்று ஏங்குகிறார்கள் பெண் போலீஸார். பணியிடங்களில் பாலியல் தொல்லைகள் ஏற்பட்டால் அதுகுறித்து புகார் தெரிவிக்க அனைத்து அலுவலகங்களிலும் புகார் கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என்பது உச்ச நீதிமன்றம் உத்தரவு. தமிழ்நாடு காவல் துறையில் அதுபோன்ற ஒரு கமிட்டி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அது ஒழுங்காகச் செயல்படுகிறதா?

அடுத்த இதழில்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick