“ஊழல் அமைச்சர்கள்... நடவடிக்கை எடுக்காத கவர்னர்!”

இளங்கோவன் காட்டம்

“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ‘கே.ஜி. டு பி.ஜி.’ என்கிற இலவச கல்வித்திட்டத்தைச் செயல்படுத்துவோம். 80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துவிட்டு வேலைக்காகக் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு வேலை கிடைக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். மதுவை ஒழிப்போம்” என்று வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை இப்போதே அடுக்கத் தொடங்கிவிட்டார் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் இளங்கோவன். சில வாரங்களுக்கு முன்புவரை அறிக்கைகள், பேட்டிகள் என பரபரப்பாக இருந்த இளங்கோவன் இப்போது கொஞ்சம் அமைதியாக இருக்கிறார். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“கடந்த சில வாரங்களாக அமைதியாக இருக்கிறீர்களே? உங்கள் மீது தொடரப்பட்ட வழக்குதான் அமைதிக்குக் காரணமா?”

“எப்போதும்போல மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்தி வருகிறோம். அமைதியாக இருக்கவில்லை. கடந்த இரண்டு வாரங்களாகத் தொடர்ந்து சுற்றுப்பயணங்களில் இருக்கிறேன். சென்ற வாரம்கூட திருச்சியில் மிகப் பிரமாண்டமாக மண்டல மாநாட்டை நடத்தினோம். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் கலந்துகொண்டார். சென்னையில் மகிளா காங்கிரஸ் விழா நடந்தது. கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறேன். செய்திகளில் வந்தால்தான் ஆக்டிவ் ஆக இருக்கிறோம் என்று அர்த்தமா என்ன? என் மீது போடப்பட்ட வழக்கு என்னவென்றே தெரியவில்லை. திடீரென்று ஒரு நாள் வழக்குப் போடப்பட்டதாகச் சொன்னார்கள். அதற்கு ஆஜராகி கையெழுத்திட்டேன். அதன்பிறகு அந்த வழக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை.”

“தனித்துப் போட்டி என்று சொல்லி பரபரப்பைக் கூட்டி வருகிறீர்களே? தமிழகத்தில் காங்கிரஸுக்கு அது சாத்தியமா?”

“மற்றவர்கள்போல, அரசியல் பரபரப்புக்காக அப்படிச் சொல்லவில்லை. தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதே எங்களின் ஒரே குறிக்கோள். அதற்காகத்தான் தமிழகம் முழுவதும் கூட்டங்கள், உறுப்பினர்கள் சேர்க்கை என கட்சியைப் பலப்படுத்தி வருகிறோம். இதுவரை, 20 லட்சம் ‘உண்மையான’ உறுப்பினர்களைச் சேர்த்து உள்ளோம். நாடாளுமன்றத் தேர்தலின்போது, மக்களுக்கு காங்கிரஸின் மீது கோபம் இருந்தது உண்மைதான். தற்போது, தமிழக மக்கள் மத்தியில் எங்கள் கட்சியின் மீது மதிப்புக் கூடியிருக்கிறது. அதனால், எங்கள் பக்கம் மக்கள் இருப்பார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது.”

“மக்களைச் சந்திக்க காங்கிரஸ் எந்த மாதிரியான திட்டங்களை வைத்திருக்கிறது?”

“மக்களைச் சந்திக்கிறேன் என்று சொல்லி எல்லா தலைவர்களும் தமிழகத்தைச் சுற்றி வருகிறார்கள். யாரைப் பார்த்து இவர்கள் இதைச் செய்கிறார்கள்? இதற்கு முன்பே, எங்கள் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்திதான், நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பல தரப்பட்ட மக்களை நேரில் சந்தித்தார். அதை இப்போது காப்பி அடிக்கிறார்கள். இப்போது நாங்கள் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் முகவர்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். 80 சதவிகிதப் பணிகள் முடிந்துவிட்டன. அதுதவிர, எங்கள் கட்சியின் தலைவர்கள் வட்டார, நகர, கிராமப்புறப் பஞ்சாயத்துகள் என எல்லா பகுதிகளிலும் மக்களைச் சந்தித்து, மக்கள் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுத்து வருகிறார்கள். அதை நாங்கள் விளம்பரப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை.”

“நீங்கள் பதவியேற்ற பிறகும் தமிழக காங்கிரஸுக்குள் கோஷ்டிப் பூசல் தொடர்கிறதா? உங்கள் தலைமையிலான காங்கிரஸை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?”

“காங்கிரஸில் இப்போது எந்த கோஷ்டிப் பூசலும் இல்லை. குமரி முதல் சென்னை வரை தொண்டர்கள் ஒன்றாக இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். ஒரு சில தலைவர்கள் மட்டும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை. அது ஒரு பெரிய விஷயம் அல்ல. சமீபகாலமாக எனக்கு எதிராகச் செயல்பட்டு வந்த சில தலைவர்கள்கூட என் நடவடிக்கைகளுக்கு எந்த இடையூறும் செய்வதில்லை. கட்சி சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. நான் தலைவராகப் பதவியேற்ற பிறகு, முன்பு இருந்த நிலையைவிட மக்களிடம் காங்கிரஸ் செல்வாக்கு பெற்றுள்ளது. எங்களிடம் இருந்துபோனவர்களும் அதை உணர்ந்துள்ளனர். தமிழ்நாட்டில் சமீபத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்ட கூட்டத்தில் மழையையும், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். காங்கிரஸ் பலவீனமாக இருக்கிறது என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், நாங்கள் இழந்த பலத்தைவிட பல மடங்கு வேகத்தில் மீண்டு வருகிறோம்.”

 “நான்கு கட்சிகள் இணைந்து உருவாக்கிய மக்கள் நலக் கூட்டு இயக்கம் தேர்தல் கூட்டணியாக மாறி இருக்கிறதே? அவர்களின் கூட்டணி எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்?”

“அது ஒரு உருப்படாத கூட்டணி என்று அது உருவானபோதே நான் சொல்லிவிட்டேன். தமிழகத்தைப் பொறுத்தவரை மூன்றாவது கூட்டணி என்பது மக்களிடம் எடுபடாது. அது ஒரு தேறாத கேஸ். அப்படியென்றால், காங்கிரஸின் நிலை என்ன என்று நீங்கள் கேட்கலாம். நாங்கள் தனித்துத்தான் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதற்கான பணிகளைத்தான் மேற்கொண்டு வருகிறோம். ஆனாலும், கூட்டணி தேவையென்று எங்கள் கட்சித் தலைமை முடிவு எடுத்தால், அதற்கு கட்டுப்படுவோம். எப்படி இருந்தாலும் நாங்கள்தான் ஆட்சிக்கு வருவோம். இல்லாவிட்டால், காங்கிரஸ் ஆதரவு தரும் கட்சிதான் ஆட்சிக்கு வரும்.”

“குஷ்பு, நக்மா என்று சினிமா பிரபலங்களை முன்னிறுத்தி வாக்குகளை அள்ளிவிடலாம் என்று காங்கிரஸ் நினைக்கிறதா?”

 

“சினிமா பிரபலங்கள் என்று சொல்வது தவறு. அவர்கள் சினிமாவில் இருந்து வந்தவர்கள். ஆனால், அதைத் தாண்டியும் பல ஆண்டுகளாக அரசியலில் இருந்துவருகிறார்கள். சினிமா பிரபலமாக இல்லாத பலரும் எங்கள் கட்சியில் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். கடந்த ஓர் ஆண்டு காலமாக எங்களுடன் இணைந்து குஷ்பு பணியாற்றி வருகிறார். நக்மா, 10 ஆண்டு காலமாக காங்கிரஸில் இருக்கிறார். தற்போது அவருக்கு தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மகிளா காங்கிரஸ் பொறுப்பாளர் பதவி தரப்பட்டுள்ளது. அதையும் சிறப்பாகச் செய்து வருகிறார்.”

“தமிழக அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் புகார்களுக்கு ஆதாரங்கள் இருப்பதாகச் சொன்னீர்களே?”

“தமிழகத்தில் இருக்கும் பிரச்னைகளைச் சொல்ல ஒருநாள் போதாது. எல்லாவற்றிலும் ஊழல், மோசமான நிர்வாகம். இதை எல்லாம் கவனிக்காமல் அம்மையார் ஓய்வெடுக்க மலையேறி கொடநாடு சென்றுவிட்டார். இதற்காகத்தான் மக்கள் அவரை ஜெயிக்க வைத்தார்களா? சட்டமன்றக் கூட்டத்தொடரில்கூட அவர் புகழ்பாடினார்களே தவிர, உருப்படியாக ஒன்றும் நடக்கவில்லை. அது ஒரு பஜனை மடம். அதேபோல அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களுக்கு எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன. இதுதொடர்பாக தமிழக ஆளுநரிடம் புகார் கொடுத்தோம். எந்த நடவடிக்கையும் இல்லை. அதனால் அந்த ஊழல் புகார்களை மக்கள் மன்றத்தில் இன்னும் சில நாட்களில் வெளியிட இருக்கிறோம்.”

“காங்கிரஸ் வேண்டாம் என்று பி.ஜே.பி-க்கு மக்கள் வாக்களித்தார்கள். அந்த நம்பிக்கையை பி.ஜே.பி-யின் ஆட்சி இன்னமும் தக்கவைத்திருக்கிறதா?”

“மக்கள் தற்போது அதைப்பற்றி அதிகம் யோசிக்கத் தொடங்கிவிட்டார்கள். பி.ஜே.பி ஆட்சிக்கு வந்ததில் இருந்து சாதிய வன்முறைகள், தலித் மக்களின் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. அதைப்பற்றி கேட்டால், ‘நாய்களின் மீது கல்லெறிந்தால்கூட அதற்கு
பி.ஜே.பி அரசுதான் பொறுப்பா?’ என்று மத்திய அமைச்சர் வி.கே.சிங் ஏளனமாகப் பேசுகிறார். ஒருபக்கம் முற்போக்குக் கருத்துகளை அழிக்கப் பார்க்கிறார்கள். அதற்காக எழுத்தாளர்களை கொலை செய்கிறார்கள். நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கிறார்கள். கறுப்புப் பணத்தைத் தேடுவதாகச் சொல்லிக்கொண்டு நாடு நாடாக பிரதமர் மோடி சுற்றுப்பயணம் போகிறார். கூடவே அதானி, அம்பானி என பெரும் தொழிலதிபர்களைக் கூட்டிச்செல்கிறார். அவர்களுக்குத் தொழில் தொடங்க உதவுகிறார். மக்களை ஏமாற்றி, முதலாளிகளைக் கொழுக்க வைக்கிறது கார்பரேட் பி.ஜே.பி. அரசு.”

- மா.அ.மோகன் பிரபாகரன்
படம்: கே.கார்த்திகேயன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick