‘சோட்டா’ ராஜனின் ‘படா’ கதை!

தாவூத் ஆபத்து... கைது நாடகம்?

மும்பை குண்டுவெடிப்பு மற்றும் கடத்தல், கொலை வழக்குகளில் தொடர்புடைய ‘சோட்டா’ ராஜனை கடந்த 25-ம் தேதி இந்தோனேஷியாவில் உள்ள பாலித்தீவில் கைது​செய்தது அந்த நாட்டு போலீஸ்.

‘‘ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்ரா நகரில் வசித்த சோட்டா ராஜன், அடிக்​கடி இந்தோனேஷியாவுக்குப் பயணம் செய்ததால் அவரைப்பற்றி விசாரித்தோம். அவர் இந்தியா பாஸ்போர்ட்டில் இருந்ததால், உடனடியாக இந்தியாவில் உள்ள இன்டர்போல் அதிகாரிகளிடம் விசாரித்தபோது, அவர்கள் ‘சோட்டா’ ராஜன் பற்றியும் ஏற்கெனவே அவருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் கொடுத்த விவரங்களையும் சொன்னார்கள். அதனால், அவரைக் கைதுசெய்து இருக்கிறோம்’’ என்று பாலித்தீவின் காவல் துறை அதிகாரி ஒருவர் மீடியாக்களிடம் சொல்லி இருக்கிறார்.

‘உண்மையில் ‘சோட்டா’ ராஜனை யாரும் கைதுசெய்யவில்லை. அவரை தாய்லாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா என்று பல்வேறு நாடுகளில் கடந்த 23  ஆண்டுகளாக இந்திய அரசுதான் கவனமாகப் பாதுகாத்து வருகிறது. அன்டர்கிரவுண்டு தாதா தாவூத்தின் தொடர்புகள், அவரது சட்டவிரோதத் தொழில்கள் என... தாவூத்தின் மறுபக்கத்தை அறிந்த நபர் என்பதால், தாவூத் இப்ராஹிமை அழிக்க ‘சோட்டா’ ராஜனைப் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறது. இப்போது ‘சோட்டா’ ராஜனுக்கு தாவூத்தின் ஆட்கள் மூலமும், ஐ.எஸ்.ஐ. ஆட்கள் மூலமும் ஆபத்து என்பதால், ‘சோட்டா’ ராஜனை பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வரும் திட்டத்துடன் இந்தக் கைது நாடகம் நடந்துள்ளது என்று சர்ச்சை கிளப்பப்படுகிறது.

யார் இந்த ‘சோட்டா’ ராஜன்?

ராஜேந்திர நிகல்ஜே என்பதுதான் ‘சோட்டா’ ராஜனின் உண்மையான பெயர். இவரது தந்தை சதாஷிவ், சாதாரண மில் தொழிலாளி.  மும்பைக்கு அருகில் உள்ள லோனார் என்கிற கிராமம்தான் சொந்த ஊர். அங்குதான் ‘சோட்டா’ ராஜன் பிறந்தார். பள்ளிப் படிப்பை தாண்டாத ‘சோட்டா’ ராஜன் மும்பையில் உள்ள பல்வேறு சினிமா திரையரங்குகளில் பிளாக்கில் டிக்கெட் விற்றபோது, ஆறு போலீஸ்காரர்களை தாக்கிய விவகாரம் அவரது க்ரைம் வாழ்க்கையில் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின்  சிறை வாழ்க்கை குளிர்விட்டுப்போனது.

பிறகு இரண்டு மூன்று கொலைகளைச் செய்தவர், நீதிமன்றத்தில் வைத்து பிரபலமான தாதா ஒருவனை சினிமாக் காட்சிகளை மிஞ்சும் வகையில் கொலைசெய்த சம்பவம்தான் ‘சோட்டா’ ராஜனை தாவூத்திடம் கொண்டுபோய்ச் சேர்த்தது.

தாவூத்தின் தளபதியாக ‘சோட்டா’ ராஜன் வலம் வர ஆரம்பித்தார். இதனால், தாவூத்தின் மற்ற தளபதிகளான ஷக்கீல், சௌத்யா, சரத் ஷெட்டி போன்றவர்கள் ‘சோட்டா’ ராஜனை உள்ளுக்குள் இருந்தே கருவறுக்கும் வேலைகளைச் செய்து வந்தனர். இந்த நிலையில் தொழில் முறை போட்டியில் 1993-ம் ஆண்டு  தாவூத்தின் ஆட்களே அவருடைய சம்மதத்துடன் ‘சோட்டா’ ராஜனை கொலை செய்ய துபாயில் திட்டம் தீட்டப்பட்டது. இது ‘சோட்டா’ ராஜனுக்குத் தெரிந்ததும் மயிரிழையில் துபாயில் இருந்து தப்பித்து மலேசியாவில் குடியேறினார்.

இந்திய உளவுத் துறை, தாவூத்தை ஒழித்துக்கட்ட ‘சோட்டா’ ராஜனுக்கு பாஸ்போர்ட், விசா உள்பட பல்வேறு உதவிகளைச் செய்து கொடுத்து, தாவூத்தின் தொழில்களை முடக்கியது. அந்தச் சூட்டோடு துபாய் நாட்டுக்கும் நெருக்கடி கொடுத்து தாவூத்தை கைதுசெய்ய துபாய்க்குப் போனது இந்திய உளவுத் துறை. ஆனால், அதற்குள் துபாய் நாட்டின் உதவியோடு அங்கிருந்து தப்பித்து பாகிஸ்தானில் உள்ள கிளிப்டன் கடற்கரை நகரத்தில் குடியேறினார் தாவூத்.

தாவூத் பல்வேறு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதால், எந்த நேரமும் தான் கொல்லப்படலாம் என்று நினைத்தார் ‘சோட்டா’ ராஜன். நடுக்கடலில் சொகுசுக்கப்பலில் வாழ்ந்து வந்த ‘சோட்டா’ ராஜனை மோப்பம் பிடித்த தாவூத்தின் ஆட்கள் அவரை கொலை செய்ய திட்டமிட, அங்கிருந்து தப்பித்து விஜய் தாமஸ் என்கிற பெயரில் சென்னை முகவரியில் பாஸ்போர்ட் எடுத்து பாங்காங் நகரில் குடிபுகுந்தார்.

2000-ம் ஆண்டு பாங்காங் நகரில் ‘சோட்டா’ ராஜன் தங்கி இருந்த வீட்டில் வைத்து  தாவூத்தின் ஆட்கள் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் ‘சோட்டா’ ராஜனின் தளபதி ரோஹித் வர்மா கொல்லப்பட்டார். ‘சோட்டா’ ராஜன் வயிற்றில் குண்டடிபட்டு மீண்டும் மயிரிழையில் உயிர் தப்பினார்.

2005-ம் ஆண்டு ஜூலை மாதம்  நடந்த தாவூத்தின் மகளின் திருமணத்தில் தாவூத்தை கொலைசெய்ய ‘சோட்டா’ ராஜனின் ஆட்கள் பரித் தனஷா, விக்கி மல்கோத்ரா ஆகியோரை இன்டர்போல் போலீஸார் பயன்படுத்தத் திட்டம் தீட்டி, கடைசி நாளில் அது கைவிடப்பட்டது என்கிற தகவல் பத்திரிகைகளில் வந்து பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. ‘சோட்டா’ ராஜனுக்கு வயது 55-க்கும் மேல் ஆகிவிட்டது. ‘‘பல்வேறு நோய்கள் இருப்பதாகவும் கடைசி காலத்தில் அவர் மும்பையில் வாழ வேண்டும்’’ என்றும் ‘சோட்டா’ ராஜனின் மனைவி சுஜாதா சொன்னதால், ‘சோட்டா’ ராஜனை மீண்டும் மும்பைக்குக் கொண்டு வரவே இந்தக் கைது படலம் என்றும் பேசப்படுகிறது.

- சண்.சரவணக்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick