“செக்ஸ் டார்ச்சருக்கு முடிவே கிடையாதா?”

‘மன்மத’ காக்கிகளின் மர்ம பக்கங்கள்

சிங்கத்தின் குகை வரைக்கும் போய்விட்டு, குதறப்படாமல் தப்பி வந்த மானைப்போல, ‘மன்மத’ போலீஸ் அதிகாரி ஒருவரிடம் சிக்கிவிட்டு, பத்திரமாகத் தப்பிவந்த பெண் போலீஸ் ஒருவர் நம்மிடம் அளித்த வாக்குமூலம் இது...

“தமிழகத்தின் தென்கோடியில் உள்ள ஒரு கிராமம்தான் எனக்குப் பூர்வீகம். என் அப்பா, சாராயம் விற்பவர். எங்க வீட்டுக்கு அடிக்கடி போலீஸ்காரங்க வருவாங்க. அப்பாவையோ, அம்மாவையோ பிடிச்சிட்டுப் போயிடுவாங்க. நான் டிகிரி முடிச்சுட்டு, போலீஸ் தேர்வுக்குப் போனேன். செலக்ட் ஆனேன். போலீஸ் துறைக்குள் போன பிறகு, பல அதிர்ச்சிகளைச் சந்திச்சேன். நான் அழகாக இருப்பதால், எனக்கு செக்ஸ் டார்ச்சர் அதிகம். வக்கிரம் பிடிச்ச அதிகாரி ஒருத்தர் இருந்தார். மைதானத்துல என்னைத் தனியாக ஓடச்சொல்லி, அதைப் பார்த்து ரசிப்பார். அதிகாரி உத்தரவிட்டால் தட்ட முடியாதே. மின்வாரிய ஊழியர் ஒருவரும் நானும் காதலிச்சோம். அது, போலீஸ்ல சிலருக்குத் தெரிஞ்சுபோச்சு. ஒரு நாள் எங்க முகாமுக்குப் புதுசா ஓர் அதிகாரி வந்தார். அவர் என்னை அழைப்பதாகச் சொல்லி கூட்டிபோனார்கள். முரட்டு மீசையோடு இருந்தார். என்னை விழுங்குவது போல ஏற இறங்கப் பார்த்தார். பிறகு போகச் சொல்லிவிட்டார். எதற்காகக் கூப்பிட்டார் என்று எனக்குக் குழப்பமாக இருந்தது.

ஒரு மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் அழைத்தார்கள். ஒரு எஸ்.ஐ. என்னை ஜீப்பில் கூட்டிக்கொண்டு போனார். ஒரு ஹோட்டலுக்கு முன் ஜீப் நின்றது. உள்ளே போனால், அந்த முரட்டு மீசை அதிகாரி போதையில் இருந்தார். அவர் என்னிடம், ‘உன் காதல் கதை எனக்குத் தெரியும். எங்கிட்டே மட்டும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. உனக்கு வேண்டியதைத் செய்றேன்’ என்று கூலாகச் சொல்ல, எனக்குத் தூக்கிவாரிப் போட்டுச்சு. அப்போ திடீர்னு எனக்கு ஒரு யோசனை வந்துச்சு. ‘ஸாரி சார். இது மென்சஸ் டைம்’ என்று சொல்லி சமாளித்தேன். ‘அப்படியா...அடச் சீ...’ என்று தலையில் அடித்துக்கொண்டு, ‘சரி சரி... போ!’ என்று கடுப்பாகச் சொன்னார். அந்தக் கண்டத்தில் இருந்து ஒருவழியாகத் தப்பிச்சேன்” என்று கலங்கிய அந்தப் பெண் போலீஸ், “இது மாதிரி செக்ஸ் டார்ச்சர் கொடுக்கும் அதிகாரிகளிடமிருந்து பெண் போலீஸார் எப்படித்தான் தப்பிப்பது? இதற்கு ஒரு தீர்வே கிடையாதா?” என்று ஆதங்கப்பட்டார்.

பெண் போலீஸார் மட்டுமல்ல, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளைத் தடுக்கும் வகையில் சில உத்தரவுகளையும், வழிகாட்டல்களையும் நீதிமன்றங்கள் வழ்ங்கியுள்ளன. குறிப்பாக, பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள் புகார் கொடுக்கவும், அதை விசாரித்து நடவடிக்கைகள் எடுக்கவும் புகார் கமிட்டிகளை அமைக்க வேண்டும் என்று, விசாகா வழக்கில் 1997-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் துறைகளில் புகார் கமிட்டிகள் அமைக்க முயற்சிகள் நடந்தன. அதுபோன்ற புகார் கமிட்டி தமிழக காவல் துறையிலும் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

“காவல் துறையில் பெண் போலீஸாருக்கு பாலியல் தொந்தரவுகள் அதிகமாக இருப்பதாகக் கேள்விப்படுகிறோம். பெண் காவலர்கள் பணி என்பது சவால்கள் நிறைந்தது. போலீஸ் துறையில் உயர் அதிகாரிகளால் தங்களுக்குப் பாலியல் தொந்தரவு வருகிறது என்றால், அந்த அதிகாரி மீது புகார் கொடுக்க அவர்கள் தயங்குகிறார்கள். தங்கள் வேலைக்கு ஆபத்து வரும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கருதுகிறார்கள். பிற துறைகளில், பாதிக்கப்படும் பெண்கள் புகார் கொடுத்தால் அதன் மீது உரிய விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது துறைவாரியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், காவல் துறையில் இதுபோன்ற தவறுகளைச் செய்யும் அதிகாரிகள் அல்லது சக ஆண் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது மாதிரி தெரியவில்லை. பாலியல் தொல்லைகள் தருபவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்” என்கிறார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வி.

‘நீங்கள் ஏன் புகார் கொடுக்கவில்லை?’ என்று பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் ஒருவரிடம் கேட்டோம். “உயர் அதிகாரி செக்ஸ் டார்ச்சர் கொடுத்தால், அதை வெளியே சொல்ல முடியாது. ஒருவேளை புகார் கொடுத்துவிட்டால், நமக்குப் பல நெருக்கடிகள் வரும். நிம்மதியாக வேலை செய்ய முடியாது. அதற்குப் பயந்து யாரும் வாய் திறப்பது இல்லை. மற்ற அரசுத் துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு இதுபோன்ற பாதிப்புகள் வருகிறது என்றால், அவர்களுக்காகக் குரல் கொடுக்கவும், நியாயம் கேட்கவும் சங்கங்களோ, அமைப்புகளோ இருக்கின்றன. எங்களுக்கும் அதுபோன்ற சங்கங்கள் இருந்தால், தவறு செய்யும் அதிகாரிகளுக்குக் கொஞ்சம் பயமாவது இருக்கும். ஆனால், எங்கள் துறையில் சங்கம் வைத்துக்கொள்ள அனுமதி இல்லை. எனக்கு ஒரு பாதிப்பு வந்தபோது, என்னுடன் வேலை செய்பவர்கள்கூட நியாயம் கேட்க முன்வரவில்லை. நமக்கு எதுக்கு வம்பு என்று ஒதுங்கிக்கொண்டார்கள். புகார் கமிட்டி என ஒன்று இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், உண்மையிலேயே அப்படி ஒன்று இருக்கிறதா? அதற்கு பொறுப்பானவர்கள் யார் என்பது பற்றிய எந்தத் தகவலும் எங்களுக்குத் தெரியாது” என்றார்.

இதுகுறித்து சென்னையில் உள்ள போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். “காவல் துறையில் அனைத்து மாவட்டங்களிலும் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட பெண் போலீஸார் தயங்காமல் அந்த கமிட்டியில் புகார் கொடுக்கலாம். ஆனால் கமிட்டியில் கொடுக்கப்படும் புகார்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணக்கூடிய வகையிலேயே உள்ளன. அந்தப் புகார்களையும் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்றார்.

ராணுவத்தைப் போல காவல் துறையும் ஒரு யூனிஃபார்ம் சர்வீஸ் என்பதால், அதற்கென சில சிறப்பு அதிகாரங்கள் உள்ளன. அதிகாரிகள் பிறப்பிக்கும் உத்தரவுக்கு கீழ்ப்படிந்தே ஆகவேண்டும். எதிர்கேள்வி கேட்காமல் அந்த உத்தரவை நிறைவேற்றியே ஆகவேண்டும். ஆனால், அந்த சிறப்பு அதிகாரத்தை பலர் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதில்தான் பிரச்னையே ஆரம்பிக்கிறது.

“காவல் துறையில் உள்ள புகார் கமிட்டியில் சமூக ஆர்வலர்கள் உட்பட காவல் துறைக்கு வெளியே இருப்பவர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். ஆனால், தண்டனை குறித்து முடிவு செய்யும் அதிகாரம் காவல் துறையைச் சேர்ந்தவரிடம்தான் உள்ளது. அதனால், நடவடிக்கை என்பது இல்லாமல் போகிறது. எனவே, நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை காவல் துறை அல்லாத ஒருவரிடம் கொடுக்க வேண்டும்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜாமணி.

இந்தப் பிரச்னை குறித்து வழக்கறிஞர் சுதா ராமலிங்கத்திடம் கேட்டோம். “பெண் போலீஸ் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதைக் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்காகத்தான், விசாகா கமிட்டி மற்றும் பாலியல் வன்முறைகளுக்கு எதிரான கமிட்டி அமைக்க சட்ட வழிமுறை கொண்டுவரப்பட்டது. தமிழக காவல் துறையில் அது எந்தளவுக்கு செயல்படுகிறது? இதுவரை எத்தனை புகார்கள் வந்துள்ளன? எத்தனை புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்கிற விவரங்களைக்கூட மறைக்கிறார்கள். இதில் வெளிப்படைத்தன்மையோடு அவர்கள் செயல்பட வேண்டும்’’ என்றார்.

பெண் போலீஸாரின் இந்தக் குமுறல்கள் வெடிகுண்டு மாதிரி. வெடிப்பதற்கு முன் உரிய நடவடிக்கை எடுப்பது எல்லோருக்கும் நல்லது.

- ஆ.பழனியப்பன், பி.ஆண்டனிராஜ், சி.ஆனந்தகுமார், ஆ.நந்தகுமார், எஸ்.மகேஷ், அ.சையது அபுதாஹிர், மா.அ.மோகன் பிரபாகரன்


“கதவு இல்லாத கழிவறை!”

தென்மண்டலத்தில் பணியாற்றும் ஆயுதப்படை பெண் போலீஸார் சிலர், “நாங்கள் தங்கியிருக்கும் குவாட்டர்ஸில் எந்தவொரு அடிப்படை வசதியும் கிடையாது. காலைக்கடனுக்குக்கூட கால்கடுக்க காத்திருக்க வேண்டும். குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் போதிய வசதிகள் இல்லை. அதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும். சில பாத்ரூம்களிலும், கழிவறைகளிலும் கதவுகளே இல்லை. எங்கள் அறைகளில் உள்ள கட்டில்கள் ஓட்டையும் உடைசலுமாக உள்ளன. அங்கு வழங்கப்படும் உணவை வாயிலே வைக்க முடியவில்லை. எங்களை கொத்தடிமைகளைப்போல வேனில் ஏற்றுவார்கள். ஏதாவது ஓர் இடத்தில் இறக்கிவிட்டு மணிக்கணக்கில் நிறுத்தி வைப்பார்கள். அங்கே, சிறுநீர் கழிக்க எந்த வசதியும் இருக்காது. ரொம்ப கஷ்டமாக இருக்கும். பக்கத்தில் வீடுகள் அல்லது வணிக வளாகங்கள் இருந்தால் அங்கே போய் சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். அதைத் தேடிப்போவது பெரும் அவஸ்தை. அடிமட்டத்தில் வேலை செய்யும் எங்களைப் போன்ற காவலர்களின் இந்தப் பிரச்னைகளை எல்லாம் அதிகாரிகள் கண்டுகொள்ளவே மாட்டார்கள்” என்றனர்.


அவஸ்தைகள்!

“வி.ஐ.பி-க்கள் வரும் வழியில் எங்களை பல மணி நேரம் காவல் காக்க வைக்கிறார்கள். ஆனால், எங்களுக்கு எந்தவொரு அடிப்படை வசதியும் செய்து தருவதில்லை. குறிப்பாக, சிறுநீர் பிரச்னை. ஆண் போலீஸார் என்றால், சாலையோரம்கூட சிறுநீர் கழிக்க ஒதுங்கிவிடுவார்கள். பெண்களால் அப்படிச் செய்ய முடியுமா? சில நேரங்களில், மேம்பாலத்தில் நிற்க வேண்டியிருக்கிறது. பல மணி நேரம் அந்த இடத்தைவிட்டு நகர முடியவில்லை. அங்கே எப்படி சிறுநீர் போவது? இதனாலேயே, பல பெண் காவலர்களுக்கு சிறுநீரகத் தொற்று ஏற்படுகிறது. மழை, வெயில் என்று பாராமல் சாலையோரம் நிற்கிறோம். நீண்ட நேரம் கால்கடுக்க நிற்பதால், பல பேருக்கு மூட்டுவலி வந்துவிட்டது. ஒரு சில இடங்களில் மொபைல் டாய்லெட் வைத்திருக்கிறார்கள். அதை எல்லா இடங்களிலும் கொண்டுவந்தால் நல்லது” என்று வேதனையோடு சொல்கிறார்கள் மேற்கு மண்டலத்தில் பணியாற்றும் பெண் போலீஸார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick