அமராவதி... ஆந்திராவின் கனவு!

நனவாக்குவாரா சந்திரபாபு?

‘அமராவதி’... நேற்றுவரை ஆந்திர மாநிலம் குண்டூரில் கிருஷ்ணா நதிக்கரை ஓரத்தில் அமைந்த ஒரு விவசாயக் கிராமம். இன்று ஆந்திரா மட்டுமல்ல... இந்தியா முழுவதும் ஒலிக்கும் பெயர். மாஸ்டர் பிளானுடன் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட ஹைடெக் நகரமாக நாளை உருவாகப்போகிறது. இந்தக் கனவு நகரமான அமராவதிதான், ஆந்திர மாநிலத்தின் தலைநகர் ஆகப்போகிறது.

தெலங்கானா, ஆந்திரா என ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட பிறகு, தலைநகராக இருந்த ஹைதராபாத் தெலங்கானாவுடன் சென்றுவிட்டது. ஆந்திரா மாநில பிரிப்புச் சட்டபடி இன்னும் 10 வருடங்களுக்கு ஹைதராபாத் இரண்டு மாநிலங்களுக்குப் பொதுவான தலைநகராக இருக்கும். அதற்குள் ஆந்திர மாநில அரசு, புதிய தலைநகரை நிர்மாணித்துக்கொள்ள வேண்டும் என்கிறது அந்தச் சட்டம். ஆந்திரா மற்றும் சீமாந்திராவைச் சேர்ந்த தொழிலதிபர்களில் பெரும்பாலானான முதலீடுகள் ஹைதராபாத்தில்தான் இருக்கின்றன. தமிழகத்தில் ஐ.டி கம்பனிகளும், தொழிற்சாலைகளும் எப்படி சென்னையைச் சுற்றியே இருக்கிறதோ, அதேபோல்தான் ஆந்திராவில் வேலைவாய்ப்புகளும், வசதிகளும் ஹைதராபாத்தில் மட்டுமே இருக்கின்றன. ஹைடெக் சிட்டியான ஹைதராபாத்தைத் தெலங்கானாவுக்கு விட்டுத்தர ஆந்திரா மக்களுக்கு மனமே இல்லை.

1995 முதல் 2004 வரை ஆந்திர முதல்வராக இருந்தபோது ஹைதராபாத்தை ஹைடெக் சிட்டியாக மாற்றிய சந்திரபாபு நாயுடுதான் இப்போது பிரிந்துவந்த ஆந்திராவின் முதல்வராக உள்ளார். ஆந்திர மக்கள், ‘தாங்கள் வஞ்சிக்கப்பட்டுவிட்டோம்’ என்று நாள்தோறும் புலம்பிக்கொண்டிருப்பதைப் பார்த்து, ‘ஹைதராபாத்தைவிட பல மடங்கு வசதிகளைக்கொண்ட சிங்கப்பூரைப் போன்ற ஒரு தலைநகரை ஆந்திராவில் உருவாக்குவேன்’ என்று சபதம் ஏற்றார் நாயுடு.

புதிய தலைநகரைத் தேர்ந்தெடுக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். கூட்டத்துக்கு வந்திருந்த எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் தங்களது பகுதியில்தான் தலைநகரை அமைக்க வேண்டும் என்று கூச்சல் போட்டனர். இதைப் பார்த்து கடுப்பான நாயுடு, ‘நான் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவன். எனக்கு என் மாவட்டத்தில் தலைநகரை அமைக்க வேண்டும் என்று ஆசை. என் சுயநலத்தினால் மற்ற பகுதி மக்கள் பாதிப்படைவார்கள். எல்லாப் பகுதி மக்களும் திருப்தியடையும் வகையில் தலைநகரை அமைக்க வேண்டும். இப்போது உள்ள நகரங்களான விசாகப்பட்டினம், விஜயவாடா போன்றவற்றை மேலும் விரிவுப்படுத்த முடியாது. நமக்குப் புதிய இடம் வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தார்.

புதிய தலைநகரைத் தேர்ந்தெடுக்கப் பல குழுக்கள் அமைக்கப்பட்டு மாநிலம் முழுவதும் கருத்துக் கேட்கப்பட்டது. கடைசியில் மாநிலத்தின் மத்தியில் உள்ள குண்டூரில், கிருஷ்ணா நதிக்கரை ஓரத்தில் புதிய தலைநகரை அமைக்க ஆந்திர அரசு முடிவுசெய்தது. அதற்காக 30,000 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. புதிய தலைநகரில் அரசு அலுவலகங்கள் மட்டுமல்லாமல் சமூக, பொருளாதார வசதிகளைக்கொண்ட உலகத்தரம் வாய்ந்த நகரமாக உருவாக்க ஆசைப்பட்ட சந்திரபாபு நாயுடு, தலைநகரைத் திட்டமிட்டுத் தருவதற்காக சிங்கப்பூர் அரசின் உதவியை நாடினார். சிங்கப்பூர் அரசும் தனியார் நிறுவன உதவியுடன் தலைநகருக்கான வசதிகளை ஆராய்ந்து முதற்கட்ட திட்ட வரைபடத்தை ஆந்திர அரசிடம் ஒப்படைத்துள்ளது. உலக மக்களையும் பன்னாட்டு நிறுவனங்களையும் ஈர்க்கும் விதமாகவும் பாரம்பர்ய புத்த பெருமைகளைக்கொண்ட இந்தப் பகுதிக்கு ‘அமராவதி’ எனப் பெயர் சூட்டப்பட்டது. கடந்த விஜயதசமி அன்று அமராவதி கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா பிரதமர் மோடி முன்னிலையில் நடந்தது. இந்தியாவிலேயே அமராவதிதான் ஒரு திட்டமிட்ட அனைத்து வசதிகளையும் கொண்ட தலைநகரமாக விளங்கும் என்று ஆந்திர மக்கள் நம்புகின்றனர்.

‘‘அமராவதியில் ஆந்திர மக்கள் மட்டுமல்லாமல் உலக மக்களும் வேலைபார்க்க, குடியிருக்க, விளையாட உகந்ததாக இருக்க வேண்டும் என்பதே ஆந்திர அரசின் விருப்பமாக உள்ளது. சிங்கப்பூர் அரசு அளித்த மாஸ்டர் பிளான்படி, அமராவதி எட்டு நகர பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அரசு கட்டடங்கள், மருத்துவம், கல்வி, சுற்றுச்சூழல் பாதிக்காத தொழிற்சாலைகள், ஐ.டி., விவசாயம், உணவுப் பதப்படுத்தும் மையம் என ஒவ்வொரு நகரப் பகுதிகளையும் தனித்தனி வளர்ச்சி மையங்களாக மாற்ற முடிவு செய்துள்ளோம். அத்துடன் சுற்றுலா, பொழுதுபோக்கு, ஆன்மிகத்துக்கு என தனியாக நகரப் பகுதிகளை ஒதுக்கியுள்ளோம்.

கிருஷ்ணா நதியில் உள்ள தீவுகளை மேம்படுத்தி சுற்றுலாப் பயணிகள் தீவுகளில் தங்குவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதுடன், நதி ஓரத்தில் கிரிக்கெட், கோல்ப் மைதானங்கள், தீம் பார்க்குகளும் அமைய உள்ளன. விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு கடல்வழிப் போக்குவரத்துத் திட்டமும் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சுற்றுச்சூழலைப் பாதிக்காத, இயந்திரங்கள் இல்லாத போக்குவரத்துக்காக,  கிருஷ்ணா நதியை மையாக வைத்து 80 கி.மீ-க்கு நீர்வழிப்பாதையும் நதி ஓரத்தில் சைக்கிளில் செல்ல தனிப்பாதையும், நடந்துசெல்ல தனிப்பாதையும் அமைக்கப்பட உள்ளது.

விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தப்பட்டு உள்ள 30,000 ஏக்கர் நிலம் அரசிடம் உள்ளது. அமராவதியில் உணவு விடுதிகள், வணிக வளாகங்கள், திரையரங்கம்,, மருத்துவமனை, தொழிற்சாலை என எது கட்ட வேண்டும் என்றாலும், ஆந்திரா அரசிடம் பணம் செலுத்தித் தேவையான நிலத்தை வாங்கிக்கொள்ளலாம்’’ என்கிறார் ஆந்திரா தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர்.

மண்வளம் மிக்க விவசாய நிலத்தை விட்டுத்தர விவசாயிகள் ஆரம்பத்தில் மறுத்தனர். ஒரு ஏக்கருக்கு வருடத்துக்கு 30,000 முதல் 50,000 வரை நிவாரணம். தலைநகரம் கட்டமைத்த பிறகு, நிலத்தை இழந்த விவசாயிகளுக்கு 1,200 சதுர அடி கமர்ஷியல் இடம், விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என ஏகப்பட்ட சலுகைகளை அள்ளி வழங்கி  நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

‘‘தலைநகர் குறித்து பகல் கனவு காணும் முதல்வரே, இதற்கு எல்லாம் நிதி எங்கிருந்து வரும்?” என்று எதிர்க் கட்சிகள் கேள்வி மேல் கேள்வி கேட்க, சந்திரபாபு நாயுடுவோ, ‘‘தலைநகரை உருவாக்க நாடே ஒன்றிணைந்து உதவிசெய்யும்’’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால், மத்திய அரசு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, கூடுதல் நிதி என எதற்கும் ஒப்புதல் தராமல் மறுத்து வருகிறது. கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் ஆந்திர அரசின் பட்ஜட்டில் 17,000 கோடி ரூபாய் பற்றாக்குறை உள்ளது. ஒரு பக்கம் விவசாயிகளின் அதிருப்தி, மறுபக்கம் வருவாய் இல்லாமல் தள்ளாடும் அரசு என இக்கட்டான சூழ்நிலையில் சந்திரபாபு நாயுடு, தலைநகரை எப்படி உருவாக்கப் போகிறார்?

 - ஆ.நந்தகுமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick