அலங்கோலத்தில் அண்ணா நூலகம்!

முடக்கும் அரசு... முடுக்கும் நீதிமன்றம்!

‘‘வாழ்க்கையில் அடிப்படை தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தகங்களுக்குத் தரப்பட வேண்டும்’’- அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலக வாசலில் கையில் புத்தகத்துடன் அமர்ந்திருக்கும் அண்ணா சிலைக்குக் கீழ் பொறிக்கப்பட்டுள்ள பொன் எழுத்துகள் இவை. ‘அண்ணா நாமம் வாழ்க’ என்று சொல்லிவரும் ஜெயலலிதா அரசு, இந்த நூலகத்தை முடக்கும் எண்ணத்தில் முழு மூச்சுடன் இருப்பதுதான் காலக்கொடுமை.

சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம், தென் ஆசியாவிலேயே மிகப் பெரிய நூலகங்களில் ஒன்றாகக் கருதப்படும் சிங்கப்பூர் நூலகத்தைப் போன்று உருவாக்கப்பட்டது. கடந்த தி.மு.க ஆட்சியில் இதற்காகக் குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழுவினர் சிங்கப்பூர் நூலகத்தைப் பார்வையிட்டு அறிக்கை அளித்தனர். அதன் அடிப்படையில் 2010-ம் ஆண்டு, ரூ.172 கோடி செலவில், 3.75 லட்சம் சதுர அடிகள் பரப்பளவில், 9 தளங்களுடன், ஒரே நேரத்தில் 5,000 பேர் படிக்கும் வசதியுடன் அண்ணா நூலகம் உருவாக்கப்பட்டது.  ‘தெற்கு ஆசியாவின் இரண்டாவது பெரிய நூலகம்’ என்ற பெருமையும் கிடைத்தது.

12 லட்சம் புத்தகங்களை வைக்கும் வசதி, யுனெஸ்கோவின் உலக இணைய நூலகத்துடன் இணைக்கப்பட்ட டிஜிட்டல் வசதி, பார்வையற்ற வர்களுக்காக 500-க்கும் மேற்பட்ட பிரெய்லி புத்தகங்கள், போட்டித் தேர்வுக்குப் படிப்பவர்களுக்கு தனி அரங்கம், குழந்தைகளுக்குத் தனிப்பிரிவு, உட்கார்ந்த இடத்தில் இருந்தே கணினி மூலம் புத்தகத்தைத் தேடும் சாஃப்ட்வேர், அரங்கம் என அமெரிக்காவில் உள்ள ‘லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்’ தரத்துக்கு ஈடாக அண்ணா நூலகம் கட்டப்பட்டது.

2011-ல் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் இந்த நூலகம் ‘உயர் சிறப்புக் குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றப்படும்’ என்று அறிவித்தார் ஜெயலலிதா. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில்,  ஓய்வுபெற்ற பேராசிரியர் மனோன்மணி,  நூலகத்தை மருத்துவமனையாக மாற்றுவதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடந்தார். இந்த வழக்கில், ‘தமிழக அரசு, அண்ணா நினைவு நூலகத்தை கோட்டூர்புரத்திலிருந்து இடமாற்றம் செய்யக் கூடாது’ என்று உயர் நீதிமன்றம் குட்டு வைத்தது. நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் பராமரிப்புப் பணிகளையும் அரசு மேற்கொள்ளாமல் தட்டிக் கழித்தது.

இதனால் நீதிமன்றம், இந்த வழக்கை நேரடிக் கண்காணிப்பில் எடுத்துக்கொண்டு ஆஷா, சுந்தரம் ஆகியோரைக்கொண்டு வழக்கறிஞர் கமிஷன் அமைத்து, நூலகத்தின் நிலைகுறித்து அறிக்கை தாக்கல் செய்யச்  சொன்னது. அறிக்கையில் அடிப்படை வசதிகள் இல்லை என்பது வெளிச்சத்துக்கு வந்தது. இரண்டு மாதங்களுக்குள் அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்யவில்லை என்றால், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர்  ஆஜராக வேண்டியிருக்கும் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது. அத்துடன், நீதிமன்றப் பாதுகாப்பு பணிக்காக ஒதுக்கப்பட்ட ரூ.2.55 கோடி எங்கே சென்றது? சென்னை மாநகராட்சி வசூலித்த ரூ.31 கோடி நூலக வரியில், நூலகத்துக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்பட்டது என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நீதிமன்ற உத்தரவு வந்த அன்று, அண்ணா நூலகம் எப்படிச் செயல்படுகிறது என வலம் வந்தோம். வாசகர்கள் சாப்பிடுவதற்காகக் கட்டப்பட்ட கேன்டீன் பூட்டிக்கிடப்பதால், நூலகத்தின் நுழைவு வாயிலில் உள்ள செக்யூரிட்டி அறையில் 30 இளைஞர்கள் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். 

போட்டித் தேர்வு பிரிவில் புத்தக அலமாரிகளில் புத்தகங்கள் இல்லாமல் தூசி படிந்துகிடந்தது. சொந்தப் புத்தகங்கள் படிக்கும் பிரிவில் போதிய நாற்காலிகள் இல்லாததால் தரையில் அமர்ந்து படித்தார்கள். ஒவ்வொரு பிரிவுகளிலும் ஐந்து கணினிகள் இருந்தன. அதில் எதுவும் பயன்படுத்தும் நிலையில் இல்லை.

நூலகப் பிரிவில் இருந்த ஊழியரிடம் பேசினோம். ‘‘யூ.பி.எஸ் எரிந்ததால் எல்லா கம்ப்யூட்டர்களும் ஆஃப் ஆகிக் கிடக்கின்றன. ஏழை மாணவர்கள் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க வழியில்லாமல் போய்விட்டது.

நூலகம் தொடங்கப்பட்டபோது, முதல்வராக இருந்த கருணாநிதி முதல் உறுப்பினராக சேர்ந்தார். அதன் பிறகு யாரையும் உறுப்பினராகச் சேர்க்கவில்லை. நூலகம் ஆரம்பிக்கப்பட்டபோது 5.5 லட்சம் புத்தகங்கள் வாங்கியதோடு சரி. நான்கு ஆண்டுகளாக ஒரு புத்தகம்கூட வாங்கவில்லை. புத்தகத் திருட்டை தடுப்பதற்கான சென்சர்கள் செயலிழந்துவிட்டதால், 50,000-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் திருடுபோய்விட்டன.

உலகின் முக்கியமான நூலகங்களைத் தொடர்பு​கொள்ள ​யுனெஸ்கோவுடன் போடப்பட்ட ஒப்பந்தம் பயன்பாடு இல்லாததால் ரத்தாகிவிட்டது. இதற்காக வாங்கப்பட்ட கணினிகள் செயலிழந்து கிடக்கின்றன.  கருத்தரங்கக் கூடம், புத்தக வெளியீடு மற்றும் திறந்தவெளி அரங்கங்கள், ஆய்வா ளர்களின் ஆய்வு விடுதி...  போன்றவை செயல் படுத்தமுடியாத நிலையில் உள்ளன. ஆய்வாளர்களுக்காகக் கட்டப்பட்ட விடுதிகள் அனைத்தும் இரவு ஒன்பது மணிக்கு மேல் சமூக விரோதிகளுக்குப் பயன்படுகின்றன.

ஹிலாரி கிளிண்டன் திறந்துவைத்த ஆடிட்டோரியத்​தில் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமண  விழா நடத்த வாடகைக்கு விட்டார்கள். இதை எதிர்த்து வழக்கு போட்டர்கள். திருமணம் நடத்த தடை விதித்த உயர் நீதிமன்றம், ‘கல்வி, கலாசாரம் சார்ந்த விழாக்களை நடத்திக்​கொள்ளலாம்’ என்று தெள்ளத்தெளிவாக சொன்னது. ஆனால், உயர் நீதிமன்றம் தடை விதித்திவிட்டது என்று ஆடிடோரியத்தை இழுத்து மூடிவிட்டார்கள்.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நூலகர் பணிக்கு நியமிக்கப்பட்ட 96 பேரை  நான்கு ஆண்டுகளாகத் தற்காலிக ஊழியர் களாகவே வைத்துள்ளார்கள். இதனால், 26 பேர் வேலையை உதறிவிட்டுச் சென்று விட்டனர்’’ என்றார்.

அரசியல் நோக்கங்களுக்காக அண்ணாவையும், நூலகத்தையும் பழிவாங்கலாமா?

- ஆ.நந்தகுமார்
படங்கள்: கே.கார்த்திகேயன், ஜெ.வேங்கடராஜ்


தனித்தகுதி உண்டு!

தேசிய வைப்பு நூலகங்களில் ஒன்றாக அறிவிக்கப்படுவதற்கான தகுதிகள் அனைத்தும் அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு உண்டு. இந்தியாவில் மொத்தம் நான்கு தேசிய வைப்பக நூலகங்கள் (Depository Library) உள்ளன. கொல்கத்தா தேசிய நூலகம், தில்லி பொது நூலகம், மும்பையின் ஆசிய சொசைட்டி நூலகம் மற்றும் சென்னை கன்னிமாரா நூலகம் ஆகிய இந்த நான்கு நூலகங்களுக்கு இந்திய நூல்கள் வழங்கல் சட்டத்தின்படி, இந்தியாவின் எந்த மூலையிலும் வெளியாகின்ற நூல்கள் மற்றும் பருவ இதழ்கள், செய்தித்தாள்களின் ஒரு பிரதியை கட்டாயம் அனுப்பிவைக்க வேண்டும். அந்த வரிசையில் இடம்பெற வேண்டிய அண்ணா நூற்றாண்டு நூலகம் எந்த அங்கீகாரமும் இல்லாமல் கிடக்கிறது.

- கோ.இராகவிஜயா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick