ஊரெங்கும் டெங்கு... ஆட்சியை கலங்கடிக்கும் கொசு!

‘டெல்லியை மிரட்டும் டெங்கு, ஜெயலலிதா ஆட்சியில் தமிழகத்தை நெருங்க அச்சப்படுகிறது’ என்று சட்டசபையில் சொன்னார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர். அவையில் எல்லோரும் கைதட்டினார்கள். இப்போது நிலைமை அப்படி இல்லை. கைதட்டிய கரங்கள், என்ன செய்வது எனக் கையைப் பிசைந்துகொண்டு இருக்கின்றன.

டெங்குவைப் பரப்பும் ஏ.டி.எஸ். வகை கொசுக்கள் மத்திய, மாநில சுகாதாரத் துறைகளை கலங்கடித்துக் கொண்டு இருக்கின்றன. 1990-ம் ஆண்டில் கொசு மூலம் பரவும் முக்கியமான நோயாக டெங்கு இருந்தது. ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கானோர் இதற்கு பாதிப்படைந்து வருகிறார்கள்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் சுமார் 3,000 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. ஆனால், இந்தப் புள்ளி விவரத்தைவிட அதிக அளவிலான மக்கள், டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினந்தோறும் அரசு, தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்குப் பாதிக்கப்பட்ட மக்கள் சிகிச்சை பெற வருவதைப் பார்த்தாலே தெரியும். இதை மர்மக் காய்ச்சல் என்று கூறி டெங்குவின் உண்மையான பாதிப்பை மறைத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. மர்மக் காய்ச்சலில் பாதிக்கப்பட்டு மரணம் அடைபவர்கள் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் 120 பேரும், சேலம் மாவட்டத்தில் 38 பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த அக்டோபர் 15-ம் தேதி வரையிலான கணக்கெடுப்பின்படி 106 பேரும், கோவை மருத்துவமனையில் 8 பேரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறையின் கணக்குப்படி, அக்டோபர் 25-ம் தேதி வரை 93 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  உண்மை என்னவென்றால், சென்னையில் 1,000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தத் தகவல்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் கடந்த 2013-ம் ஆண்டில் 133 பேரும், 2014-ல் 137 பேரும், 2015 அக்டோபர் 25-ம் தேதி வரை 93 பேரும் டெங்குவால் பாதிக்கப்பட்டதாக மாநகராட்சி மற்றும் மாநில சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். சென்னையில் தேனாம்பேட்டை மண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 200 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அடையாறு மண்டலத்தில் 50 பேரும் சிகிச்சை பெறுகிறார்கள். அண்ணா நகர், மணலி, திருவொற்றியூர் பகுதிகளில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகமாக உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் மர்மக் காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தாண்டுகிறது.

சென்னையில் நடந்த டெங்கு காய்ச்சல் ஆய்வுக் கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தத் தவறிய சுகாதாரத் துறையினர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை பாயும் என்று எச்சரித்தனர். அதன்பிறகும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் பெயரளவுக்கே நடந்து வருகின்றன. போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் வகையில் நிலவேம்பு கசாயம் கொடுக்கும் நிகழ்ச்சிகளை மட்டும் ஆளும் கட்சியினர், அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். அதன்பிறகு கொசுவை அழிக்கும் பணி பெயரளவுக்கு நடத்தப்படுகிறது. அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள பழைய டயர்கள் அகற்றுதல், தண்ணீர் தேங்கி உள்ள பகுதிகளில் கொசு மருந்து அடித்தல் ஆகிய பணிகள் மட்டுமே நடப்பதால் டெங்குவைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

டெங்கு காய்ச்சலின் பாதிப்பு குறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகம், சம்பந்தப்பட்ட மாநகராட்சி மண்டல அலுவலக சுகாதாரத் துறையினருக்கு இமெயில் மூலம் தகவல்களை அனுப்பினர். இந்தத் தகவல்கள் மாநகராட்சியின் சுகாதாரத் துறையில் சில உயர் அதிகாரிகள் மூடிமறைத்துவிட்டனர். அதோடு டெங்குவை பரப்பும் கொசு ஒழிப்பிலும் அவர்கள் அக்கறை செலுத்தவில்லை. இதுவே டெங்கு காய்ச்சலின் பாதிப்பு தமிழகத்தில் மற்ற பகுதிகளைவிட சென்னையில் அதிகரித்ததற்கு முக்கியக் காரணம் என்கிறார்கள் சுகாதாரத் துறையினர். டெங்கு காய்ச்சலில் இறப்பவர்களை மர்மக் காய்ச்சலில் இறந்துவிட்டதாகச் சொல்லும்படி ஊழியர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் அமைச்சர் ஆய்வுக்குச் சென்றபோதுகூட அங்குள்ள அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கான தனி வார்டில் பெயரளவுக்கே நோயாளிகளுக்கு கொசு வலைகள் கொடுக்கப்பட்டு இருந்தன. திருத்தணி அரசு மருத்துவமனையில் பலர் மர்மக் காய்ச்சலுக்குச் சிகிச்சை பெற்ற விவரத்தைத் தெரிந்த அமைச்சரும், செயலாளரும் அங்குள்ள சுகாதாரத் துறையினருக்கு கடும் டோஸ் விட்டுள்ளனர். இவ்வாறு தமிழகத்தை டெங்கு காய்ச்சல் மிரட்டி வருகிறது. ஆனால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லை.

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநிலத் தலைவர் செந்திலிடம் பேசினோம். “டெங்கு காய்ச்சல் உயிர்கொல்லி நோயாக இருந்தாலும் அதைக் குணப்படுத்தலாம். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இதற்கான வசதிகள் உள்ளன. இதன்காரணமாக டெங்குவால் இறப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தது. கொசு ஒழிப்பில் உள்ளாட்சி அமைப்புகள் அக்கறை செலுத்தினால் டெங்குவை முற்றிலும் தடுத்துவிடலாம். தேவையில்லாத மருந்துகளையும், சுய மருத்துவத்தையும் மேற்கொள்ளும்போதுதான் உயிரழிப்பு நேரிடுகிறது. காய்ச்சல் தொடர்ந்து இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். ஊசி போடுவதைத் தவிர்ப்பது நல்லது” என்றார்.

சுகாதாரத் துறை வட்டாரங்கள், “டெங்கு காய்ச்சலில் சிக்கலானதாகக் கருதப்படுவது டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சல் (dengue hemorrhagic fever), டெங்கு ஷாக் சிண்ட்ரோம் (dengue shock syndrome) ஆகியவை. இந்த வகை டெங்கு காய்ச்சலில்தான் மக்கள் அதிக அளவில் இறப்பதுண்டு. கடந்த 2013-ம் ஆண்டு நெல்லை, சங்கரன்கோவில், விருதுநகர் மாவட்டம், கரூர், திருவள்ளூர் மாவட்டம் போன்ற இடங்களில் இறப்பு விகிதம் அதிகமாக இருந்தது. இப்போது மக்களிடையே விழிப்பு உணர்வு ஏற்பட்டதாலும் நோயின் வீரியம் குறைவாக இருப்பதாலும், மக்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரித்ததாலும் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. 2012-ம் ஆண்டைவிட இந்த ஆண்டு பாதிப்பு குறைவாகவே உள்ளது. டெங்குவைத் தவிர்த்த வைரஸ் காய்ச்சல் அதிகமாகப் பரவி வருகிறது. இதையும் டெங்கு பட்டியலில் சேர்ப்பதால்தான் பாதிப்பு அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது” என்றனர்.

- எஸ்.மகேஷ்


நோய் அறிகுறிகள்!

காய்ச்சல், திடீரெனக் காய்ச்சல் ஏற்பட்டு, 40-40.5 டிகிரி செல்சியஸ் வரை உடல் உஷ்ணம் அதிகரிக்கும். சருமத்தில் வேனற்கட்டிகள் அல்லது வெடிப்புகள், நோய் தொற்றிய 3 அல்லது 4 நாட்களில் உடலின் நடுப்பகுதியில் தோன்றி, முகம், கை, கால்கள் என்று பரவத் தொடங்கும். தசை, மூட்டுகளில் வலி மற்றும் தலைவலி ஆகிய அறிகுறிகள் காணப்படும். இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும்.

சிகிச்சை

டெங்கு காய்ச்சலை பொறுத்தவரை ஓய்வு தேவை. மேலும், திரவ வகை உணவுகளைச் சாப்பிட வேண்டும். உடல் உஷ்ணத்தைக் குறைக்க அசிட்டாமினோஃபென் மாத்திரைகளைச் சாப்பிடலாம். ரத்தக் கசிவு ஏற்படும்போது மருத்துவமனையில் அனுமதித்தல் அவசியம். இதற்கான தகுந்த ஆலோசனைகளை உங்கள் மருத்துவர் வழங்குவர். ரத்த அணுக்களின் அளவு 40 ஆயிரத்துக்கும் குறைவாக இருக்கும்போது புதிய ரத்தமோ அல்லது ரத்தவட்டுக்கள் (பிளாஸ்மா), அதாவது பி.ஆர்.பி. ஏற்றப்படும்.

தடுப்பது எப்படி?

கொசுக்கடிகளிலிருந்து நம்மைப் பாதுகாப்பதன் மூலம் டெங்குவைத் தடுக்கலாம். பாதுகாப்பான உடைகள், கொசு விரட்டிகள் இவற்றின் பங்கு அவசியம். வாழ்விடங்களுக்கு அருகில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மழைக் காலங்களில் நன்றாகக் காய்ச்சிய குடிநீரைப் பயன்படுத்துவது மிக மிக அவசியம்.

கொசுவை விரட்டலாம்!

‘‘காஞ்சாங்கோரை அல்லது வேப்பிலையை வீட்டின் முன்புறம் மற்றும் கொல்லைப்புற வாசல்களில் தோரணம்போல் தொங்கவிட்டால், அதன் வாசனைக்கு கொசுக்கள் உள்ளே வராது. அதேபோல, நொச்சி இலை அல்லது காஞ்சாங்கோரை இலையை நிழலில் காயவைத்து நெருப்பில் போட்டு புகை வரவழைத்தால், அந்தப் புகையும் கொசுவை உள்ளே வராமல் விரட்டிவிடும். ஆடாதொடை இலை மற்றும் வேப்பிலையை  வெயிலில் காயவைத்து சமஅளவு எடுத்து பொடியாக்கி, அதனுடன் சிறிதளவு சாணத் தூள் சேர்த்து, அதில் பச்சரிசிக் கஞ்சியை ஊற்றி ஊதுவத்திபோல் உருட்டி வெயிலில் காயவைத்து எடுத்து கொசுவத்திபோல் பயன்படுத்தினாலும் கொசு வராது” என்கிறது சித்த மருத்துவத் துறை.

சித்த மருத்துவம்

சில ஆண்டுகளுக்கு முன், சிக்குன்குன்யா காய்ச்சல் தமிழகத்தில் வேகமாகப் பரவியபோது, ஆங்கில மருத்துவத்தால் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அந்தநேரத்தில், சிக்குன் குன்யாவை உருவாக்கும் வைரஸைக் கட்டுப் படுத்தும் மருந்து, சித்த மருத்துவத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ‘‘டெங்கு காய்ச்சலையும் சித்த மருத்துவம் மூலம் எளிதில் குணப்படுத்தலாம். நிலவேம்பு இருக்கும்போது கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. பப்பாளி இலைச் சாறு நல்லதொரு மருந்து’’ என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick