புலிகளும் வேதாளங்களும் மோதலை நிறுத்துமா?

‘இது அட்டகாசமான புலி... அசத்தலான புலி... அட்ராக்ட் பண்ற புலி... அதிசய புலி... அசால்ட்டான புலி... அற்புதமான புலி... அசுரப் புலி...’ என்று புலி திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் டி.ராஜேந்தர் பேசிய பேச்சை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திருக்க முடியாது. ஆனால், அதுவே விஜய் ரசிகர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாகப் பெரிய தலைவலியாகிவிட்டது. அதை வைத்தே இன்று வரை சமூக வலைதளங்களில் களைகட்டி வருகின்றன மீம்ஸ் கிண்டல்கள்.

இத்தகைய மோதல்கள் ‘தல - தளபதி’ ரசிகர்கள் இடையேதான் அதிகமாக இருக்கின்றன. அஜித் ரசிகர்கள் என்கிற போர்வையில் சிலர் மோசமாகக் கிண்டல் அடிக்க கொதித்துப்போன விஜய் ரசிகர்கள், தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் காவல் துறை கண்காணிப்பாளர்களிடம் புகார் அளித்துள்ளனர்.

இன்றைய தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தில் இருப்பவர்கள் விஜய் மற்றும் அஜித்.  இவர்கள் இருவரின் படங்களுக்கும் கோடிகளில் மார்க்கெட் இருக்கிறது. படம் ரிலீஸ் ஆனதும் கட்-அவுட், போஸ்டர் வைத்து தங்களின் அபிமான ‘ஹீரோ’ மீது அன்பைக் காட்டிக்கொண்ட ரசிகர்கள் சில சமயங்களில் இதற்காக மோதிக்கொண்டதும் நடந்திருக்கிறது.

அந்த மோதலின் பகிரங்க பரிணாமம்தான்  ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றில் விஜய் ரசிகர்கள் ஓர் அணியாகவும், அஜித் ரசிகர்கள் ஓர் அணியாகவும் இருப்பது. போட்டி நடிகரின் படமோ, அந்தப் படம் பற்றிய தகவல்களோ, பாடல்களோ, ட்ரெய்லர்களோ வெளியிடப்பட்டால்போதும், சமூக வலைதளங்களில் பதிலுக்கு பதில் தாக்கிக் கொள்கிறார்கள். இது பல நேரங்களில் வரம்பு மீறிவிடுகிறது.

இதுதொடர்பாக விஜய் ரசிகர்களிடத்தில் பேசினோம். ‘‘சமூக வலைதளங்களில் கிண்டல், கேலி செய்துகொள்வது சகஜம்தான். ஆனால், இப்போது எல்லாம் விஜய் பற்றியும்,  அவரது ரசிகர்களான எங்களைப் பற்றியும், எங்கள் குடும்பத்தைப் பற்றியும் மிகவும் மோசமான வார்த்தைகளால் பேசுகிறார்கள். அவர்களைப்போல நாங்களும் பேசலாம். ஆனால், அது இறுதியில் வன்முறையில் கொண்டுபோய் விட்டுவிடும். ஃபேஸ்புக்கில் அஜித் ரசிகர்கள் என்கிற போர்வையில் தனியாக சில புனைப்பெயர்களில்  பக்கங்களை உருவாக்கி அதில் ‘புலி’ படத்தை மோசமாக விமர்சித்தார்கள். இதை அஜித் ரசிகர்கள் செய்வதுபோல இருந்தாலும், இதன் பின்னணியில் யாரோ சில விஷமிகள் இருந்துகொண்டு இந்த மோதலை ஊக்கப்படுத்தி வருகிறார்கள். இதற்குப் பின்னணியில் அஜித்தின் நம்பிக்கையைப் பெற்றதாகச் சொல்லிக்கொள்ளும் ஒருவர் இருப்பதாகச் சந்தேகிக்கிறோம். காரணம், ட்விட்டரில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட  பக்கத்தை அவர் பின்தொடர்கிறார். அதில் வரும் செய்திகளை அவரும் பகிர்கிறார். இந்த அவதூறு தகவல்களை அள்ளிவீசும் ஒருவர் அந்தக் குறிப்பிட்ட மேனேஜரின் பெயரைச் சொல்லி, ‘‘அவர் மாதம் 30 ஆயிரம் ரூபாய் கொடுத்து இதை நடத்தச் சொல்கிறார். உங்களால் முடிந்ததைப் பார்த்துக்கொள்ளுங்கள் என சவால் விடுகிறார்” என்று சொன்னார்.  சமீபத்தில் அந்தப் பக்கம் முடக்கப்பட்டது. ஆனால், இரண்டே நாட்களில் மீண்டும் அதே பெயரில் வேறு பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிலும் விஜய் பற்றிய தகவல்கள் பரப்பப்படுகின்றன. அதைத் தாங்க முடியாமல்தான் காவல் துறையிடம் புகார் அளித்தோம். இருந்தும் அதை வைத்தும் தொடர்ந்து கிண்டல் செய்து வருகிறார்கள். இந்த விஷயம் பெரிதாவதைத் தெரிந்துகொண்டு, தான் தப்பிப்பதற்காக அந்த மேனேஜர் தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித்துக்கு நெஞ்சுவலி என்று செய்தி போட்டுவிட்டு சிறிது நேரம் கழித்து என் ட்விட்டர் பக்கத்தை யாரோ முறைக்கேடாகப் பயன்படுத்தி அந்தச் செய்தியை வெளியிட்டுவிட்டார்கள் என்று பதிவிட்டிருக்கிறார்’’ என்று வருத்தப்பட்டனர்.

இதுகுறித்து சினிமா வட்டாரத்தில் பேசினோம். ‘‘சமீப காலமாகத் தொடர்ந்து இதுபோன்ற மோதல்கள் அதிகரித்து வருகின்றன. இதை வெளியில் இருந்து பார்த்தால் சாதாரணமாக இருக்கும். ஆனால், அதனால் பல விளைவுகள் ஏற்படுகின்றன. கோடிகள் புரளும் தொழில் இது. ஒரு படம் சறுக்கினாலும் அந்த நடிகருக்கு மார்க்கெட் மாறிவிடும். சமீபகாலமாக ‘தலைவா’, ‘துப்பாக்கி’, ‘புலி’ என விஜய் படங்கள் தொடர்ந்து பிரச்னைகளை சந்தித்துதான் வெளிவருகின்றன. இப்படி இருக்கும்போது ரசிகர்கள் என்கிற போர்வையில் படம் வெளியானதும் மோசமான விமர்சனங்கள், கருத்துகள் தெரிவிப்பது அந்தப் படத்தின் லாபத்தை பாதிக்கும். அதிலும் முக்கியமாக திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் தொடங்கி அடிமட்ட ஊழியன் வரை பாதிப்பை ஏற்படுத்தும். ரசிகர்கள் இதனை உணர்ந்து செயல்பட வேண்டும். காவல் துறை உடனடியாக அந்தப் புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

‘தல - தளபதி’ இருவரும் இதற்கு ஒரு முடிவுகட்ட வேண்டும்.

- மா.அ.மோகன் பிரபாகரன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick