“ஓடி ஒளிகிற ஆள் இல்லை... தேடி அடிக்கிற ஆளு!”

ஸ்டாலினை விளாசும் விந்தியா

ஸ்டாலின் ‘நமக்கு நாமே’ சுற்றுப்பயணம் போய்வந்த இடங்களுக்கு எல்லாம் இப்போது அ.தி.மு.க சார்பில் ரவுண்டு கட்டுபவர்கள் இரண்டு பேர். ஒருவர், அ.தி.மு.க கொள்கைப்பரப்புத் துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத். இன்னொருவர், நடிகை விந்தியா.

அரசின் நான்கு ஆண்டுகால சாதனைகளை எடுத்துக்கூறியும், அரசின் மீதான விமர்சனங்களைக் கண்டித்தும் கடந்த 1-ம் தேதி திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் தென்னூர் உழவர் சந்தை திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக நாஞ்சில் சம்பத், நடிகை விந்தியா கலந்துகொண்டு பேசினர்.

முதலில் பேசிய நடிகை விந்தியா, ‘‘வயசான காலத்துல ஊர் ஊராக ஸ்டாலின் நமக்கு நாமேன்னு நடக்கிறார். அவர் நம்மிடம் வந்து நியாயம் கேட்பதை விட்டுட்டு கருணாநிதியிடம் போய், ‘எல்லோரும் மகனை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கிறாங்க. என்னை அறிவிக்க முடியுமா’ன்னு கேட்க முடியுமா? தேர்தலில் தோற்றால் பதுங்கிவிட வேண்டியது. எலெக்‌ஷன் வந்தாத்தான் வெளியே வருவாங்க. நாங்க ஓடி ஒளிகிற ஆள் இல்லை... தேடி அடிக்கிற ஆளு. எலெக்‌ஷன் வந்தால்தான் டீக்கடைக்காரரில் இருந்து ரிக்‌ஷா ஓட்டுகிறவன், டிராக்டர் ஓட்டுகிறவன் எல்லாம் ஃப்ரெண்ட் ஆவாங்க. தோற்கப்போறோம்னு தெரிஞ்சே ஊர் ஊரா போய் சைக்கிள் ஓட்டுகிறார் ஸ்டாலின்.

நமக்கு நாமே சுற்றுப்பயண விளம்பரத்தில், ‘கோபப்படுங்கள்... கோபப்படுங்கள்’னு போட்ருக்காங்க. மக்கள் ரொம்பவே கோபப்படுவாங்க. ஏற்கெனவே அவங்க கோபப்பட்டதாலதான் கடந்த தேர்தல்ல மொத்தமா போச்சு. நாடாளுமன்றத் தேர்தல்ல சுத்தமா போச்சு. ஆட்சியைப் பிடித்தபிறகுதான் திட்டம் போடணும். திட்டம் போட்டு எல்லாம் ஆட்சியைப் பிடிக்க முடியாது” என்றவர், அடுத்ததாக விஜயகாந்த்தை விளாசினார்.

“ஊர் ஊராகப் போய், அம்மாவை அடுத்த தேர்தலில் தோற்கடிக்க எந்த தியாகத்தையும் செய்வேன்னு சொல்றார். அவர் எதையும் செய்ய வேணாம். எங்கம்மா பிச்சைப்போட்ட எதிர்க் கட்சித் தலைவர் பதவியை தூக்கிப் போட்டுட்டு போனா போதும்” என்றவர், வைகோவை ஒரு பிடிபிடித்தார்.

‘‘அரசியல் அநாதைன்னு சொல்வாங்களே, அப்படித்தான் ஆகிட்டார் வைகோ. ம.தி.மு.க-வில் வைகோவைத் தவிர, வேறு யாரும் இல்லை என்கிற அளவுக்குக் கட்சி போயிடுச்சு. எங்கம்மாகூட இருக்கும்போது எவ்வளவு நல்லா வெச்சிருந்தாங்க. தானாக, வீணாகப் போனவர் இவர்தான்’’ என விளாசி முடித்தார்.

அடுத்து மைக் பிடித்த நாஞ்சில் சம்பத், ‘‘24 உலக நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, எங்கள் அம்மாவின் வீட்டுக்கே வந்து சந்தித்துவிட்டுப் போகிறார். அம்மாவின் நிர்வாகத் திறமையைப் பார்த்து இந்த நாடே வியந்து நிற்கிறது. மோடி பல்வேறு நாடுகளுக்குப் போய் முதலீடுகளைக் கொண்டு வந்துள்ளார். ஆனால், அம்மா உட்கார்ந்த இடத்திலேயே கோடிக்கணக்கான ரூபாயை முதலீடாக வர வைத்துள்ளார்.

ஊர் ஊராகச் சுற்றி, அம்மாவைக் கேள்விக்கேட்டு வரும் ஸ்டாலின், எதிர்க் கட்சித் தலைவர்கூட இல்லை. அதையும் ஒருவர் தட்டிச் சென்றுவிட்டார். துணிச்சல் இருந்தால், அறிவாலயத்தில் வளர்ந்தவர் என்றால், சட்டமன்றத்தில் வந்து கேள்வி கேட்க வேண்டும். துணிவு இருக்கிறதா? போகிற இடங்களில் எல்லாம் ஸ்டாலின், ‘ரேஷன் கடைகள் பூட்டிக்கிடக்கின்றன. சட்டம்  - ஒழுங்கு கெட்டுவிட்டது’ எனப் பொய் சொல்கிறார். சட்டம் - ஒழுங்கு சரியாக இல்லையென்றால், மதுரையைத் தாண்டி இவர் வந்திருக்க முடியுமா? அழகிரி விட்டிருப்பாரா? கடந்த ஆட்சியில், நிலத்தை அபகரிப்பதிலேயே அமைச்சர்கள் குறியாக இருந்தார்கள். அம்மா ஆட்சியில் 3 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

நடிகர் சங்கத் தேர்தலில் பொருளாளராக வெற்றி பெற்ற நடிகர் கார்த்தி, ‘இந்தத் தேர்தல் நியாயமாக நடக்க முதல்வர் அம்மாதான் காரணம்  எனச் சொன்னாரே’, அதுதான் அம்மாவின் ஆட்சி. நீலவானம் இடிந்து கீழே விழுந்தாலும் விழும்... என் அன்புக்குரிய எதிரணியினரே அப்போதும் நீங்கள் ஆட்சிக்கு வரமுடியாது’’ என முடித்தார்.

பட்டையக் கிளப்புகிறார்கள்!

- சி.ஆனந்தகுமார்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick