ஃபிப்டி, ஃபிப்டி பிஸ்கட் போல இருக்கிறது அ.தி.மு.க. ஆட்சி!

ஜி.கே.வாசன் மனம் திறந்த பேட்டி

மிழ் மாநில காங்கிரஸ் கட்சி நவம்பர் 3-ம் தேதி 2-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. கட்சியின் இரண்டாவது பிறந்த நாளில் உற்சாக மூடில் இருந்த ஜி.கே.வாசன் தேர்தல் கூட்டணி, தமிழக அரசின் செயல்பாடுகள் பற்றி நம்மிடம் பேசினார்.

‘‘உங்கள் பிரசாரப் பயணம் எப்படி இருக்கிறது?’’

‘‘ஆகஸ்ட் 3-ம் தேதியில் இருந்து 3 மாத காலமாக சுற்றுப்பயணம் செய்திருக்கிறேன். இதுவரை 80 சட்டமன்றத் தொகுதிகளில் நிர்வாகிகளையும், தொண்டர்களையும் பொதுமக்களையும் சந்தித்துள்ளேன். இன்னும் பல தொகுதிகளில் பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். 2016-ம் ஆண்டு பிப்ரவரி 3-வது வாரத்துக்குள் 130 முதல் 150 சட்டமன்றத் தொகுதிகளைச் சுற்றிவரத் திட்டமிட்டிருக்கிறேன். பயணத்தின் மூலம் மக்களின் எண்ண ஓட்டங்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது. கட்சித் தொண்டர்களின் மனநிலையையும் அறிய முடிகிறது. இந்தப் பயணம் தேர்தல் வியூகத்தின் ஒரு பகுதிதான்.’’

‘‘சுற்றுப்பயணம் எதிர்பார்த்த பலனைத் தந்துள்ளதா?’’

‘‘பயணத்தின்போது மக்கள் குறைகளைக் கேட்கிறேன். அவர்களின் குறைகளை, கட்சியால் நிறைவேற்ற முடியுமா என்று முயற்சி செய்கிறோம். அரசுதான் அந்தக் குறையை தீர்க்க முடியும் எனில், கட்சி நிர்வாகிகள் உதவியுடன் மக்களுடன் இணைந்து அரசு அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, மக்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம். த.மா.கா. எந்த நோக்கத்துக்காகத் தொடங்கப்பட்டதோ அந்த நோக்கம் சிறப்பாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. த.மா.கா. தொடங்கியதை மகிழ்ச்சியாகத்தான் பார்க்கிறேன். அந்த மகிழ்ச்சியை இந்தப் பயணம் அதிகப்படுத்தி இருக்கிறது.

பயணத்தின்போது ஏராளமான கட்சி நிர்வாகிகளை அவர்களின் வீடுகளுக்கே சென்று சந்திக்கிறேன். கட்சி நிர்வாகிகள் வீடுகளுக்கு மட்டுமல்லாது, நலம் விரும்பிகள் வீடுகளுக்கும் சென்று வருகிறேன். பயணத்தின்போது ஆங்காங்கே மக்கள் பிரச்னைகளுக்காக ஆர்ப்பாட்டம், போராட்டம், பேரணி, பொதுக்கூட்டம் என்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறேன். இதன்மூலம் கட்சியை வலுவானதாக உருவாக்கி வருகிறோம்.

திருச்சி, தஞ்சை, நெல்லை, விருதுநகர், சேலம் ஆத்தூர், சிவகங்கை ஆகிய இடங்களில் மாநாடுபோல பிரமாண்ட கூட்டங்களை நடத்தி இருக்கிறோம். நவம்பர் 30-ம் தேதி கடலூரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.”

“சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவீர்களா? கூட்டணி அமைத்து போட்டியிடுவீர்களா?’’

‘‘மக்கள் எண்ணங்களை த.மா.கா. தொண்டர்கள் மூலமாகத் திரட்டி வருகிறோம். தேர்தலுக்கு முன்னதாக, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து எங்கள் நிலைப்பாடு குறித்து முடிவு எடுக்கப்படும். தமிழ் மாநில காங்கிரஸ், அனைத்து மக்களும் விரும்பும் கட்சியாக இருக்கிறது. மக்கள் மனநிலைக்கு ஏற்றவாறு அவர்கள் விரும்பும் வெற்றிக் கூட்டணியாக த.மா.கா கூட்டணி அமையும்.

த.மா.கா. எடுக்கும் முடிவு, கூட்டணியில் அதைச் சார்ந்த கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு ஏற்படுத்துவதாக இருக்கும்.

2016-ம் ஆண்டு பிப்ரவரி 3-வது வாரத்தில்தான் தேர்தல் கூட்டணி குறித்த நிலைப்பாட்டை அறிவிப்போம். அதற்கு முன்னதாகக் கூட்டணி குறித்து சொல்வதற்கு இது சரியான நேரம் அல்ல.’’

‘‘ஜி.கே.வாசன், விஜயகாந்த் போன்றவர்கள் மக்கள் நலக் கூட்டணியில் சேர வேண்டும் என்று வைகோ அழைப்பு விடுத்துள்ளாரே?’’

‘‘கூட்டணிக்கு அழைப்பு விடுத்த வைகோ மற்றும் மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். மக்கள் நலக் கூட்டணியில் யார் யார் இடம்பெற முடியும். யாருக்கெல்லாம் இடமில்லை என்பதை அந்தக் கூட்டணி வெளிப்படையாக அறிவித்து இருக்கிறது. த.மா.கா தேர்தல் வியூகம், கூட்டணி முடிவுகள் எல்லாம் நான் ஏற்கெனவே கூறியபடி, எனது சுற்றுப்பயணம் முடிந்த பிறகு, பிப்ரவரி மாதத்தில் அறிவிப்பேன்.”

‘‘தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் பயணம் சென்று வந்திருக்கிறீர்கள். தமிழக அரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது?’’

‘‘மக்களின் தேவைகளைத் தமிழக அரசு ஓரளவு செய்து வருகிறது. இன்னொரு புறம் பல மக்கள் நலத் திட்டங்களை அரசு இன்னும் செயல்படுத்த வேண்டியுள்ளது. பல இடங்களில் தண்ணீர், மருத்துவம், மின்சாரம் போன்ற அடிப்படைத் தேவைகளில் தமிழகம் இன்னும் பின்தங்கிய நிலையில்தான் இருக்கிறது.

நான்காண்டு கால அரசின் செயல்பாடுகள் ஃபிப்டி, ஃபிப்டி பிஸ்கட் போல இனிப்பும், உப்புமாகத்தான் இருக்கிறது. தற்போதைய ஆட்சியை மட்டும் நான் குறை சொல்லவில்லை. காமராஜர் ஆட்சிக்குப் பிறகு தமிழகத்தின் வளர்ச்சி ஃபிப்டி, ஃபிப்டி என்ற விகிதத்தில்தான் இருக்கிறது. தமிழகத்தை ஆட்சி செய்த, ஆட்சியில் இருக்கும் திராவிடக் கட்சிகள்தான் இந்தத் தேக்கத்துக்கு முக்கியக் காரணம்.’’

‘‘தமிழகத்தில் எத்தகைய ஆட்சி அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?’’

‘‘காமராஜர் ஆட்சி என்ற பொற்கால ஆட்சி தமிழ்நாட்டில் மீண்டும் மலர வேண்டும் என்பதே எங்கள் லட்சியம். வெளிப்படையான, நேர்மையான, எளிமையான, சாமானிய மக்களுக்கும் அரசியல் அதிகாரம் கிடைக்கும் வகையிலான ஆட்சி அமைய வேண்டும். அதை முன்னிறுத்தித்தான் இந்த ஓராண்டாக மக்களிடம் கட்சியைக் கொண்டு சென்றுள்ளோம். காமராஜர் ஆட்சி என்ற புனிதப் பயணத்தை அடைய வேண்டும் என்றால் கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறேன்.”

‘‘அ.தி.மு.க-வுடன்தான் நீங்கள் கூட்டணி வைப்பீர்கள் என்கிறார்களே?”

‘‘ஆளும்கட்சி தவறு செய்யும்போது கண்டிப்பதும், நல்லது செய்யும்போது பாராட்டுவதும்தான் த.மா.கா-வின் பாணி. எதிர்க் கட்சி என்றாலே எதிரிக் கட்சியாக இருக்கத் தேவையில்லை. இந்த ஆட்சியின் குறைபாடுகளை நாங்கள் சுட்டிக்காட்டித்தான் வருகிறோம். தேர்தல் நேரத்தில் எங்கள் முடிவை அறிவிப்போம்!”

‘‘யாரோடு கூட்டணி என்று நீங்கள் சொல்லவில்லையே?”

‘‘இன்னும் யாருமே சொல்லலையே. என்கிட்ட மட்டும் கேட்கிறீங்களே சார்!” என்று மூப்பனார் பாணியில் சொல்கிறார் ஜி.கே.வாசன்!

- எஸ்.முத்துகிருஷ்ணன்
படம்: ஜெ.வேங்கடராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick