“பிரபாகரனும் எம்புள்ள தானப்பா”

போலீஸிடம் மருகிய மாரியம்மாள்

வைகோவின் தாயார் மாரியம்மாளின் மரணம், அரசியல் பேதங்கள் கடந்து அரசியல் தலைவர்களை சோகத்தில் ஆழ்த்திவிட்டது. 98-ம் வயதில் தன் மூச்சு காற்றை நிறுத்திக்கொண்டார் மாரியம்மாள். கலிங்கப்பட்டியே கண்ணீரில் மிதந்தது. ‘இந்த வீட்டுக்கு வரும்போதெல்லாம் எங்களைப் பாசத்துடன் பராமரித்த தாய் மறைந்துவிட்டாரே” என கதறினார்கள்.

“வைகோவின் தந்தை வையாபுரி காங்கிரஸ்காரர் என்பதால் கலிங்கப்பட்டிக்கு நிறைய அரசியல் தலைவர்கள் வந்திருக்காங்க. வைகோ திராவிட கொள்கையால் ஈர்க்கப்பட்டு தீவிரமாக செயல்பட்ட போதிலும், அவரது குடும்பத்தினர் யாரும் எந்த விதத்திலும் வருத்தப்பட்டதில்லை. அதற்குக் காரணமே மாரியம்மாள்தான். யார் வந்தாலும் முகத்தைப் பார்த்தே அவரது நிலைமையை யூகித்துவிடும் ஆற்றல் படைத்தவர். வீட்டுக்கு யார் வந்தாலும் அவர் கேட்கும் முதல் கேள்வியே, ‘என்னப்பா... இப்பத்தான் வந்தியா... சாப்பிடுதியா?’ என்பதுதான். ‘வேண்டாம்மா.. சாப்பிட்டுத்தான் வந்தேன்’னு சொன்னாக்கூட, வந்தவரின் முகத்தைவைத்தே சாப்பிடவில்லை என்பதைக் கண்டுபிடித்துவிடுவார். உடனே, உணவு படைத்து சாப்பிடச் சொல்வார். குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதில் இருந்து, அனைத்து விஷயங்களையும் கரிசனத்தோடு விசாரிப்பார். வந்தவருக்கு என்ன உதவி தேவைப்படுகிறது என்பதைப் புரிந்துகொண்டு அதற்குத் தகுந்த ஏற்பாடுகளைச் செய்வார். அவரிடம் பண உதவிகளைப் பெற்றவர்கள் நிறையப் பேர் இருக்காங்க. உதவி பெற்றவர்கள் வெளியில் சொன்னால் தவிர அது யாருக்குமே தெரியாது. எங்களுக்காக இந்த வீட்டில் இருந்த ஜீவன் போயிருச்சு. இனி உதவின்னு யாருகிட்ட வந்து நிற்கப் போறோம்” என சொல்லி கலங்குகிறார்கள் கலிங்கப்பட்டிக்காரர்கள்.

வாழ்வின் கடைசி நாள் வரையிலும் அவரே அவரது தேவைகளைக் கவனித்துக் கொண்டார். குறைவாக உணவு எடுத்துக்கொண்டாலும் உடல் நலத்துடனேயே இருந்தார். அன்றாட நிகழ்வுகளை தொலைக்காட்சி வாயிலாகத் தெரிந்துகொண்டு உறவினர்கள் மற்றும் கிராமத்து மக்களிடம் விவாதிப்பது அவரது அன்றாட நிகழ்வாக இருந்திருக்கிறது. காந்தியவாதி சசிப்பெருமாள் மறைந்த செய்தியை தொலைக்காட்சி வாயிலாகத் தெரிந்தபோது மிகுந்த வருத்தத்துடன் இருந்தார். அவரைச் சந்திக்க வந்திருந்த கிராமத்துப் பெண்​களிடம், தமது கிராமத்திலும் மதுக்கடை இருக்கிறதே என வருத்தப்பட்டுப் பேசியிருக்கிறார். அந்த மதுக்கடையை அகற்றக்கோரி போராட்டம் நடத்துவது என முடிவு செய்திருக்கிறார். அருகில் இருந்த பெண்கள் அதற்கு சம்மதிக்கவில்லை. ‘அண்ணனிடம் கேட்டு முடிவு செய்யலாம்’ என்று சொல்லியிருக்கின்றனர். ‘ஏம்மா.. அவனிடம் கேட்டால் வேண்டாம்னு சொல்லி​டுவான். அவங்கிட்ட சொல்ல வேண்டாம். வாங்க நாம அந்தக் கடையை முற்றுகையிடப் போவோம்’னு கிளம்பிவிட்டார். இதைக் கேள்விப்பட்டு கலிங்கப்பட்டி கிராமம் மட்டும் அல்லாமல், பக்கத்து ஊர்களைச் சேர்ந்த மக்களும் திரண்டுவிட்டனர். டாஸ்மாக் முற்றுகையை கேள்விப்பட்டு பதறியடித்து வந்த வைகோ, ‘இந்த தள்ளாத வயதில் நீங்க எதுக்கு ரோட்டுக்கு வந்தீங்க? வீட்டுக்குப் போங்க நாங்க பார்த்துக்கிறோம்’னு சொன்னபோதும், நாள் முழுவதும் அவரும் மதுக்கடை முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்றார். அவர் நடத்திய போராட்டத்தால்தான் கலிங்கப்பட்டி கிராமத்தில் இன்று வரையில் மதுக்கடையை திறக்க முடியாத நிலை நீடிக்கிறது.

மாரியம்மாளுடன் நெருங்கிப் பழகிய சிலர், ‘‘அம்மா ரொம்ப திடமான முடிவை எடுப்பாங்க. அவங்க ஒரு விஷயத்தைத் தீர்மானித்துவிட்டால் அதில் இருந்து பின்வாங்க மாட்டாங்க. அதே சமயத்தில் தனது கருத்தை மற்றவர்கள் பின்பற்ற வேண்டும் என வற்புறுத்த மாட்டாங்க. வைகோ அரசியல் ரீதியாக எடுக்கும் முடிவுகள் பற்றி மாறுபட்ட கருத்து இருந்தாலும் அதை வெளிக்காட்ட மாட்டாங்க. வைகோவே சில நேரங்களில் அம்மாவிடம் அரசியல் பேசுவார். கடைசியில், ‘யப்பா... நீ நாலு ஊருக்கு போறவன். லட்சக்கணக்கான மக்களைப் பார்க்குறவன். உனக்கு எது சரி, எது தப்புன்னு தெரியும். மக்களுக்கு உதவுற உன்னோட குணத்தை மட்டும் மாத்திக்காதே’ என்று மட்டும் சொல்வாங்க. குடும்பத்தில் உள்ள எல்லோரிடத்திலும் ரொம்ப அன்பாக இருப்பாங்க’’ என உருகிறார்கள்.

‘‘எதற்கும் அஞ்சாத மன உறுதி அவரிடம் இருந்துச்சு. நெருக்கடி காலத்தில் வைகோ கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்​பட்டார். அவரைச் சந்தித்து ஆறுதல் சொல்லச் சென்றபோது அவர் ரொம்ப இயல்பாகவே இருந்தார். ‘மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தால் வைகோவை விடுதலை செஞ்சிருவாங்களாம். மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துட்டு வெளியே வரச்சொல்லுங்கம்மா’னு கேட்டோம். ‘என் மகன் கொலை செய்தானா? கொள்ளை அடித்தானா? எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்? இந்திரா காந்தி அம்மா எம்புள்ளய எத்தனை வருஷத்துக்கு உள்ளே வெச்சிருவார்னு பார்ப்போம்’ என தைரியத்தோடு பேசியதைக் கேட்டு நாங்கள் திகைத்துப் போனோம்.

பொடா சட்டத்தில் வைகோ சிறையில் அடைக்கப்பட்ட போதும் மனம் தளரவில்லை. ‘அரசியல்னு வந்துட்டா இதை எல்லாம் சந்திச்சுத்தானே ஆக வேண்டும்’ என்று சொன்னார். வீட்டில் போலீஸ் சோதனை போட்டபோது சுவரில் மாட்டியிருந்த பிரபாகரனின் படத்தை அகற்ற முயற்சி செய்தனர். அதைப் பார்த்து பதறியவர் ‘அந்தப் படத்தை ஏனப்பா கழட்டுறீங்க. அது எம்புள்ள தானப்பா.. அதை எடுக்காதீங்க’ எனத் தடுத்தார். அந்த அளவுக்கு அவருக்கு கொள்கை மீது பிடிப்பு அதிகம். சோதனை போட்ட போலீஸுக்கே காபி கொடுத்ததை பார்த்து காக்கிகளே நெகிழ்ந்து போனார்கள். பகைவர் என்றாலும் பாசம் காட்டக்கூடியவர்’’ என நினைவு கூர்கிறார்கள்.

‘நள்ளிரவில் வந்தாலும் உணவு எடுத்து​வந்து எனக்குப் பரிமாறும் தாயின் அரவணைப்பு இனி இல்லை என நினைக்கவே துயரமாக இருக்கிறது’’ என கலங்குகிறார் வைகோ.

- ஆண்டனிராஜ்
படங்கள்: ரா.ராம்குமார்


100 வயதை நெருங்கியவர்!

வைகோவுக்கு மூன்று சகோதரிகள், ஒரு சகோதரர். மூத்த சகோதரிக்கு இப்போது வயது 81 ஆகிறதாம். அதைவைத்து மாரியம்மாள் 100 வயதை நெருங்கியவர் என்கிறார்கள். அந்த வயதிலும் தன் தேவைகளை தானே கவனித்துக்கொண்டார். செண்பகவல்லி அணைக்கட்டுக்காக வைகோ தலைமையில் உண்ணாவிரதம் நடந்தபோது நாள் முழுவதும் சாப்பிடாமல் உண்ணாவிரதத்தில் பங்கேற்றார். 

அரசியல்வாதிகளின் அரவணைப்பு!

மாரியம்மாளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகப் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கலிங்கப்பட்டிக்கு வந்தனர். அந்த அளவுக்கு அரசியல்வாதிகளோடு நட்பில் இருந்திருக்கிறார் மாரியம்மாள். கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் என மாரியம்மாளை சந்திக்காத தலைவர்களே கிடையாது. மாரியம்மாளைச் சந்தித்தபோது, ‘எனது தாயை சந்தித்த உணர்வு ஏற்பட்டது’ என்று நெகிழ்ச்சியாகச் சொன்னார் ஜெயலலிதா. இவரது மறைவுக்கு எல்லா அரசியல் கட்சியினரும் இரங்கல் செய்தி வெளியிட்டனர். ஸ்டாலின், கனிமொழி, ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருமாவளவன், டாக்டர் கிருஷ்ணசாமி, ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், எம்.நடராஜன், சுதீஷ் என பல கட்சியினரும் நேரில்வந்து அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick