தனியாருக்கு விலை பேசப்பட்டதா அவினாசி பல்கலைக்கழகம்?

போராட்டத்தில் ஆசிரியர்கள், மாணவிகள்!

ழை எளிய மாணவிகளின் நலனுக்காக கல்வியாளர் அவினாசிலிங்கத்தால் தொடங்கப்பட்டதும், பெண்களுக்கான முதல் பல்கலைக்கழகமுமான அவினாசிலிங்கம் நிகர்நிலை பெண்கள் பல்கலைக்கழகம், மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதி உதவியுடன் கோவையில் இயங்கி வருகிறது. 

'நிதி உதவி பெறும் பல்கலைக் கழகங்கள் புதிய விதிமுறைகளை ஏற்காவிட்டால், அரசின் நிதி நிறுத்தப்படும்’ என 2010ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி அனுப்பிய கடிதத்தில், '201415 ஆண்டில் வெளியிடப்பட்ட பல்கலைக்கழக மானியக்குழுவின் திருத்தத்தை ஏற்காவிட்டால் 2017ம் ஆண்டு மார்ச் மாதத்தோடு நிதியுதவி முழுமையாக நிறுத்தப்படும்' என பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்தது. இந்தக் கடிதம் குறித்த விவரங்கள் இப்போது வெளியானதால், பல்கலைக்கழக வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்த ஆசிரியர்கள் இருவர் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு ஆதரவாக மாணவிகளும் போராட்டத்தில் குதித்தனர். இதனால் நிர்வாகம், கடந்த 5 மாதங்களில் மூன்றாவது முறையாகப் பல்கலைக் கழகத்தை காலவரையறை இன்றி மூடியது.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர் களிடம் பேசினோம். 'மறைந்த கல்வியாளர் டி.எஸ்.அவினாசிலிங்கத்தால் கடந்த 1957ம் ஆண்டு தொடங்கப்பட்ட கோவை அவினாசிலிங்கம் மனையியல் மகளிர் கல்லூரி, 1988ம் ஆண்டு முதல் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மத்திய அரசின் உதவியுடன் இயங்கி வருகிறது. 2010ம் ஆண்டு புதிய விதிமுறைகளை பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டது. பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் இதனை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டு உள்ளன. ஆனால், அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் கடைசி வரை ஒப்பந்தத்தை ஏற்கவில்லை. 'ஸ்பான்ஸரிங் சொசைட்டி’யாக மனிதவள மேம்பாட்டுத் துறை இருப்பதும், வேந்தரை அந்தத் துறைதான் நியமிக்க வேண்டும் என்பதும் நிர்வாகத்தின் எதிர்ப்புக்கு முக்கியக் காரணம்.

எப்போதும் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்று அறக்கட்டளை நிர்வாகத்தினர் கருதுகின்றனர். புதிய விதிமுறைகள், அவர்கள் அதிகாரத்தில் கைவைப்பதாக இருக்கிறது. எனவே, விதிமுறைகளைப் பின்பற்றாமல் இருக்க வழிதேடுகின்றனர். அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள சுயநிதிப் பல்கலைக்கழகமாக மாற்ற நினைக்கின்றனர். சுயநிதியாக மாறினால் நிலைமை மோசமாகும். சம்பளமாக மட்டும் மத்திய அரசு மாதம்தோறும் ரூ.4.50 கோடி கொடுக்கிறது. இதில் பாதிப்பு ஏற்படும்' என்றனர்.

இதுதொடர்பாக அவினாசிலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் மீனாட்சி சுந்தரத்திடம் பேசினோம்.

'பல்கலைக்கழகம் சுயநிதியாக மாற்றப்படாது. அதேநேரத்தில் ஸ்பான்ஸரிங் சொசைட்டியாக, மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு பதில், அவினாசிலிங்கம் அறக்கட்டளை இருக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரியுள்ளோம். 2017ம் ஆண்டுக்குள் நிதி நிறுத்தப்படும் என ஆகஸ்ட் இறுதியில் பல்கலைக்கழக மானியக்குழு கடிதம் கொடுத்தது உண்மை. ஆனால், செப்டம்பர் மாதம் வந்த கடிதத்தில், 'இந்த விதிமுறைகள் உங்கள் பல்கலைக்கழகத்துக்குப் பொருந்தாது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது' என்றார்.

கொட்டும் மழையில் விடிய விடியப் போராட்டம், போராட்டத்துக்கிடையே அடுத்தடுத்து மயக்கம் என கடந்த வாரங்களில் பரபரத்தது பல்கலைக்கழக வளாகம். மாணவிகள், ஆசிரியர்கள் போராட்டம் தீவிரமாகி வரும் நிலையில், மற்றுமொரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. மீனாட்சிசுந்தரம் விரைவில் வேந்தர் பதவியில் இருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் ஸ்ரீகிருஷ்ணா கல்லூரி குழுமங்களின் தலைவர் மலர்விழி, அறங்காவலர் குழுவில் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டார். கல்லூரி காவலாளிகளுடன் பல்கலைக்கழகத்தில் அதிரடியாய் நுழைந்த அவர், மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தைக்குப் பின்னர் மாணவிகளின் போராட்டம் இன்னும் வேகமெடுத்தது. புதிய அறங்காவலராகச் சேர்க்கப்பட்டுள்ள மலர்விழியும், கல்லூரி காவலாளிகளும் பல்கலைக்கழகத்தில் நுழைந்து தங்களை மிரட்டுவதாகவும் மாணவிகள் புகார் சொல்கிறார்கள்.

'ஸ்ரீகிருஷ்ணா கல்லூரிக் குழுமங்களின் தலைவரான மலர்விழி, திடீர்னு அறங்காவலர் குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கார்.  இவ்வளவு பிரச்னை நடந்துட்டு இருக்கும்போது அவரை எதுக்கு அறங்காவலர் உறுப்பினராகப் போடணும்? பொறுப்பை ஏத்துக்கொண்ட 3 மணி நேரத்துல தன்னோட செக்யூரிட்டிகளோட யுனிவர்சிட்டிக்குள்ள வந்து எங்களை மிரட்டுறார். எங்களைக் கூப்பிட்டு, 'கல்யாணம் பண்ணிக்க போற உங்களுக்கு டிகிரி சர்டிபிகேட் இல்லைனா என்ன? ஒழுக்கமாக இருங்க. போராட்டம் நடத்துனா அவ்வளவுதான். நான் இங்கே நிறைய முதலீடு செஞ்சிருக்கேன். மனிதவள மேம்பாட்டுத் துறைக்குக் கீழே எல்லாம் கொண்டு வர முடியாது’ என்று மிரட்டுறார். இதை எல்லாம் நாங்க ரெக்கார்டு பண்ணியிருக்கோம். (ஆடியோ பதிவை காட்டுகிறார்கள்). பேச்சுவார்த்தை நடக்கும்போது வேந்தர் பேசாம உட்காந்துட்டு இருக்கார்.

சுயநிதிப் பல்கலைக்கழகமாக மாத்தினா, எந்த உதவியும் கிடைக்காது. கல்விக் கட்டணம் அதிகரிக்கும். ரூ.20 ஆயிரம், ரூ.40 ஆயிரம் என்று வசூலிக்கப்படும். மாணவிகளில் 60 சதவிகிதம் பேர், கிராமப்புறங்களில் இருந்து வர்றாங்க. தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்த மாணவிகள் அதிக அளவில் படிக்கிறாங்க. அவங்களுக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்குது. இடஒதுக்கீடு முறை இருக்காது' எனக் கண்ணீருடன் முறையிட்டனர் மாணவிகள்.

பல்கலைக்கழகத்தைக் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை.

ச.ஜெ.ரவி

படங்கள்: தி.விஜய்

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick