வாடகைத் தாய்கள்... அநாதையாகும் பிஞ்சுகள்!

காப்பாற்ற சட்டம் வருமா?

ருத்துவமும், ஆராய்ச்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு மனிதகுலப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயன்றுகொண்டிருக்கின்றன. ஆனால், பல நேரங்களில் தீர்வுகளே பிரச்னையாகிவிடுவதும் உண்டு. அப்படி, புதிதாய் முளைத்ததுதான் ‘சரோகேட்’ என்று சொல்லப்படும் வாடகைத் தாய் முறை.

குழந்தை பிறக்க வாய்ப்பு இல்லாதவர்கள், பல்வேறு மருத்துவ வழிகளில் முயற்சி செய்வார்கள். எல்லா முறைகளும் பயனற்றுப் போனபின், தம்பதியர் நாடுவது வாடகைத் தாய் முறை. மனைவியின் கருமுட்டை மற்றும் கணவனின் விந்தணு இரண்டையும் இணைத்து வேறொரு பெண்ணின் கருப்பைக்குள் வைத்து குழந்தை பெற்றுக்கொள்வதுதான் வாடகைத்தாய் முறை. கருமுட்டை வளர்ச்சி இன்மை அல்லது அறுவைச் சிகிச்சையின்போது கர்ப்பப்பை அகற்றப் படுதல் போன்ற காரணங்களால் ஒரு பெண் கருத்தரிக்க முடியாமல் போகலாம். அந்தப் பெண்ணின் கணவருடைய விந்தணுவையும், வேறொரு பெண்ணுடைய கருமுட்டையையும் வாடகைத் தாய் பெண்ணின் கர்ப்பப்பைக்குள் வைத்து குழந்தை பெறுவது அல்லது ஆணின் விந்தணுவையும் வாடகைத் தாயின் கருமுட்டையையும் சேர்த்து வாடகை தாயின் கர்ப்பப்பைக்குள் வைப்பது. இப்படித்தான் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறப்படும்.

குழந்தைப் பேறு பிரச்னை, உலகெங்கும் நிலவுகிற சோகம். விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாகத் திரும்புகிறத் திசையெல்லாம் குழந்தையின்மை சிகிச்சை மையங்கள் முளைத்து வருகின்றன. மருத்துவம் தாண்டி, இப்படி ஒரு வருமானமா என ஒரு தொழிலாகவே இது விரியத் தொடங்கியது.

சில வருடங்களுக்கு முன், குஜராத்துக்கு ஒரு ஜப்பானிய தம்பதியினர் வந்தனர். வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள எண்ணிய இவர்கள்,  ஒரு மருத்துவ மனையை நாடினர். மருத்துவமனை அதற்கான ஏற்பாடுகளைச் செய்து, வாடகைத்தாய் ஒருவரையும் தேர்வுசெய்து ஜப்பான் தம்பதியருக்குக் கொடுத்தது. வாடகைத்தாயின் வயிற்றில், குழந்தை வளர ஆரம்பித்த சில மாதங்களில், ஜப்பான் தம்பதியர், தங்கள் நாட்டுக்குச் சென்றுவிட்டு குழந்தை பிறக்கும் மாதத்தில் வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றனர். இங்கேதான் விபரீதம் விளைந்தது.

ஜப்பானுக்குச் சென்ற தம்பதியரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட, இருவரும் பிரிந்து விட்டனர். அதே சமயம் இங்கே வாடகைத் தாய்க்குக் குழந்தை பிறந்துவிட பிரிந்துவிட்ட ஜப்பான் தம்பதியினரோ, குழந்தையைப் பெற்றுக் கொள்ள விரும்பவில்லை. ஏற்பாடுசெய்த மருத்து வமனையும் கையை விரித்துவிட்டது. வசதி இல்லாத வாடகைத்தாயும் குழந்தையை வளர்க்க விரும்பவில்லை. அனாதையாய் நின்ற குழந்தையின் நிலை பலரின் நெஞ்சையும் உலுக்கியது.

 இன்னொரு சம்பவம்...

இது நடந்தது தாய்லாந்தில். வெளிநாட்டி லிருந்து வந்த ஒரு தம்பதியினர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள தாய்லாந்து நாட்டுக்கு வந்தனர். தெருவோர உணவகத்தில் வேலைசெய்யும் பெண் ஒருவர்,  இவர்களுக்கு வாடகைத் தாயாகக் கிடைத்தார். வெளிநாட்டுத் தம்பதியினரும் உடனிருக்க, இரட்டைக் குழந்தைகளைப் பெற்று எடுத்தார் அந்த வாடகைத் தாய். ஆனால், பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஓர் ஆண் குழந்தை மூளை வளர்ச்சியற்று பிறக்கவே, அந்தக் குழந்தையை வாடகைத் தாயிடமே விட்டுவிட்டு, நன்றாக இருந்த குழந்தையை மட்டும் எடுத்துக்கொண்டு தங்கள் சொந்த நாட்டுக்குப் பறந்துவிட்டனர் அந்தத் தம்பதியினர்.

இப்படி உலகம் முழுதும் பலவிதமான பிரச்னைகள். வாடகைத்தாய் குழந்தை முறையை இனி வெளிநாட்டவர்களுக்கு அனுமதிக்கக் கூடாது என்று இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவர்களுக்கும் சமீபத்தில் சுற்றறிக்கையை அனுப்பியிருகிறது, இந்தியன் கவுன்சில் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச் அமைப்பு.

ஆகாஷ் குழந்தையின்மை மருத்துவ மையத்தின் தலைவர் காமராஜிடம் கேட்டபோது, ‘‘வாடகைத்தாய் முறைகளுக்காக வெளிநாட்டவர்கள் இங்கே அதிகம் வருகின்றனர். இதுபோன்ற முயற்சிகள், பிரச்னைகளுக்கு உள்ளாகாமல் செயல்பட வேண்டும். கவுன்சில் மூலமாக அனுப்பப்பட்டிருப்பது ஒரு சுற்றறிக்கையே தவிர, சட்டமல்ல. முறையான வழிமுறைகளும் நடைமுறைகளும் கொண்ட சட்டம் இயற்றப்பட்டால் மட்டுமே இது போன்ற பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண இயலும்’’ என்றார்.

இதற்கான சட்டம் கண்டிப்பாகத் தேவை!

- மலையப்பன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick