ஸ்டாலினுக்கு பின்னால் பிரசாந்த் கிஷோர்?

பிரதமர் நாற்காலியில் மோடியை அமரவைத்த தகவல் தொழில் நுட்பம்தான், இப்போது பீகாரில் நிதிஷ்குமாரை அரியணையில் ஏற்றியி ருக்கிறது. இதற்குப் பின்னால் இருந்தது பிரசாந்த் கிஷோர்.

இவர், 300 பேர் கொண்ட டீமுடன் பீகார் தேர்தல் உத்திகளை வகுத்தவர். நிதிஷ்குமா ருக்குத் தேர்தலில் தொழில்நுட்ப உதவியும், ஆலோசனையும் வழங்கியதோடு நிதிஷ்குமாரின் உடை தொடங்கி பிரசார ஸ்டைல் வரை அனைத்தையும் மாற்றினார் பிரசாந்த். ‘மகா கூட்டணி 145 இடங்களுக்குக் குறைவாகப் பெற்றால் தொழிலையே விட்டுவிடுவேன்’ என சபதம் போட்டு அவரை வெற்றிபெற வைத்தவர் பிரசாந்த்.

‘பிரசாந்த் கிஷோர் வியூகத்தை நம்மூர் கட்சிகள்கூட பயன்படுத்திக்கொள்ளலாம்’ என பீகார் தேர்தல் பற்றி ஜூ.வி-யில் வெளியான கட்டுரையில் சொல்லி யிருந்தோம். அதைக் கட்சிகள் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன.

‘நமக்கு நாமே’ என தி.மு.க-வும், ‘விஷன் 234’ என அ.தி.மு.க-வும் டிஜிட்டல் தேர்தல் களத்துக்குள் புகுந்துவிட்டன. ‘ஒளிரும் நிகழ்காலம்! மிளிரும் வருங்காலம்’, ‘தழைக்கட்டும் தமிழகம்! செழிக்கட்டும் தமிழர்கள்’, ‘தொடரட்டும் மேம்பாடு! ஜொலிக்கட்டும் தமிழ்நாடு’ என அடுத்தடுத்த பிரசாரங்ளைத் தொடங்கிவிட்டது அ.தி.மு.க. சென்னை எலியட்ஸ் பீச்சில் ‘ஃப்ளாஷ் மாப்’ நடத்திக் காட்டியதோடு சாதனைகளை விளக்கும் ‘ப்ளாக் போஸ்ட்கள்’, ‘இன்ஃபோ கிராஃபிக்’, படச் செய்திகள், வீடியோக்கள் என 360 டிகிரி கோணத்திலும் சுழல ஆரம்பித்துவிட்டது அ.தி.மு.க. அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் அ.தி.மு.க. பயணிப்பதற்குப் பின்னால் இருந்தது, கட்சியின் ஐ.டி. விங்க். தமிழகத்தில் தகவல் தொழிநுட்பப் பிரிவை முதலில் ஆரம்பித்தது அ.தி.மு.க-தான். இந்தப் பிரசார உத்திக்கு முளையாக இருந்து செயல்படுபவர் ஐ.டி. விங்க் செயலாளரும் தகவல் தொழில்நுட்ப வல்லுநருமான சுவாமிநாதன். துறைசார் வல்லுநர் ஒருவர் மாஸ்டர் மைண்டாக இருப்பதால்தான் டிஜிட்டல் பிரசாரங்களை அ.தி.மு.க. இந்த அளவுக்கு மேற்கொண்டு வருகிறது. அப்படியொரு எக்ஸ்பர்ட் நமக்கும் வேண்டும் என தி.மு.க. திட்டமிட்டபோது கண்ணெதிரே தெரிந்தவர்தான் பிரசாந்த் கிஷோர்.

ஸ்டாலின் பிரசாரத்தின் பின்னால் இருந்து வடிவமைப்பவர் அவரது மருமகன் சபரீசன். டிஜிட்டல் தளத்திலும் அவர் இயங்கிக் கொண்டிருக்கிறார். அவர்தான் பிரசாந்த் கிஷோரை சமீபத்தில் போய் சந்தித்திருக்கிறார் என தகவல்கள் கசிகின்றன. இந்த சந்திப்பு பற்றி அறிந்தவர்களிடம் பேசினோம். ‘‘தமிழகத்தின் அரசியல் சூழல்,  வயது வாரியான வாக்காளர் களின் டெமோ கிராஃபிக்ஸ், தொகுதிகள், பாலின விவரங்கள் என பல கேள்விகளையும், தகவல் களையும் பிரசாந்த் கிஷோர் கேட்டிருக்கிறார். பிறகு அவரே கம்ப்யூட்டரைத் தட்டி தமிழகத்தின் புள்ளிவிவரங்களைச் சொல்லியிருக்கிறார். பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இறுதியாக பிரசாந்த்துடன் பட்ஜெட் ஒதுக்கீட்டில் ஒப்பந்தம் போடப்பட்டது. தகவல் தொழில்நுட்ப ஊடகங்களுக்கான செலவும் பிரசாந்த் கிஷோரின்  நிறுவனத்துக்கான கட்டணமும் பேசி முடிக்கப்பட்டு விட்டது’’ என்கிறார்கள்.

அ.தி.மு.க-வைப்போலவே தொழில் முறை நிபுணரை வெளியிலிருந்து அழைத்து வந்திருக்கிறது தி.மு.க. சுவாமிநாதனோ, துறைசார் வல்லுநர் என்பதோடு அ.தி.மு.க-வின் உறுப்பினரும் ஆவார். ஜெயிக்கப் போவது பிரசாந்த் கிஷோரா, சுவாமிநாதனா? தேர்தல் வரை பொறுத்திருப்போம். 

பிரசாந்த் கிஷோர் யார்?

பீகாரைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோருக்கு வயது 37. ஐ.நா-வில் சுகாதார நிபுணராகப் பணியாற்றியவர். 2011-ல் இளம் தொழில்நுட்ப நிபுணர்களுடன் சேர்ந்து IPAC – Indian People’s Action Committee என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். 2012 குஜராத் சட்டசபைத் தேர்தலிலும், 2014 எம்.பி. தேர்தலிலும் மோடிக்கு வியூகங்களையும், தொழில்நுட்ப ஆலோசனைகளையும் இந்த நிறுவனம்தான் வழங்கியது. மோடியின் தகவல் தொழில்நுட்ப ஆலோசகராக இருந்து எம்.பி. தேர்தலில் பல வியூகங்களை வகுத்தார் பிரசாந்த். தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆட்சியையே பிடிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர். இதுவரை, எந்த அரசியல் கட்சியும், இப்படியொரு ஒரு பிரசாரத்தைச் செய்ததில்லை என பலரையும் வாய்பிளக்க வைத்தது கிஷோரின் பணி. அதன்பின், மோடி முகாமில் இருந்து தாவி பீகார் தேர்தலில் நிதிஷ்குமாரின் வெற்றிக்கு உதவி பி.ஜே.பி-யை மண்ணைக் கவ்வ வைத்திருக்கிறார். தமிழகத்தில் அவரின் ஜாலம் எப்படி இருக்கும்?

-எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick