பள்ளம்... வெள்ளம்... சென்னை!

தாமதமாக வந்த முதல்வர்... அலட்டிக்கொள்ளாத அமைச்சர்கள்! செயல்படாத மேயர்...

கொட்டித்தீர்த்த மழையில் தத்தளிக்கிறது தலைநகர் சென்னை. உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று சென்னை மாநகராட்சி நிர்வாகத்தைத் திட்டித்தீர்க்கிறார்கள் தலைநகர் வாழ் பொதுமக்கள்.

சென்னை மாநகராட்சியின் கீழ் 15 மண்டலங்கள் உள்ளன. அவை அத்தனையும் கனமழையின் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. மழை வெள்ளத்தால் கடும் பாதிப்புகளுக்கு ஆளான பகுதிகளுக்குச் சென்றோம். நாம் முதலில் சென்றது, முதல்வரின் தொகுதியான ஆர்.கே.நகர். இடைத்தேர்தல் சமயத்தில் ஜொலிஜொலித்த இந்தப் பகுதி இப்போது தண்ணீரால் சூழ்ந்திருந்தது. ஆர்.கே.நகர்வாசியான தயாளனிடம் பேசினோம். “பெயர்தான் முதல்வரோட தொகுதி. தேர்தல் முடிந்தபிறகு எதையும் கண்டுக்கல. மெட்ரோ வாட்டர்ல சாக்கடை கலந்து வந்துச்சு. பல தடவை புகார் செஞ்சோம். யாரும் அதைக் கண்டுக்கவே இல்லை. இப்போ, கடும் மழையால் எங்க ஏரியாவுல எல்லா வூட்லயும் தண்ணீர் புகுந்துருச்சு. தேர்தல் நேரத்துல தேவையானதை எல்லாம் செஞ்சாங்க. ஆனா இப்போ, யாரும் எங்களை வந்து எட்டிப்பார்க்கலை” என்றார் வருத்தத்துடன்.

தொடர்மழையால், வட சென்னையில் உள்ள கேப்டன் காட்டான் கால்வாய் திடீரென உடைப்பெடுத்ததால் வியாசர்பாடி, சத்யமூர்த்தி நகர், மல்லிகைப் பூ காலனி, சாமந்தி பூ காலனி, நேரு நகர், முல்லை நகர், ராம் நகர், கென்னடி நகர், தேபர் நகர், எம்.ஜி.ஆர். நகர், உதயசூரியன் நகர் உட்பட்ட பல பகுதிகளில் வீடுகளில் மழை நீர் சூழ்ந்திருக்கிறது. வெள்ளம் சூழ்ந்திருந்த வியாசர்பாடியைச் சேர்ந்த இளங்கோ, “வீட்டில் எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தோம். அதிகாலை 5 மணி இருக்கும். திடீரென எங்கள் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தது. அப்போது, கரன்ட் வேறு இல்லை. இருட்டில் ஒன்றும் செய்யமுடியவில்லை. ஃபிரிட்ஜ், டி.வி., கிரைண்டர், ஃபேன் என எல்லாப் பொருட்களும் நாசமாகிவிட்டன. மேயரோட செல்போனுக்குத் தொடர்பு கொண்டோம். எந்தப் பதிலும் இல்லை. பின்னர் மாநகராட்சிக்குப் போன் செய்தேன். எங்கள் பகுதிக்கு வந்த அதிகாரிகள் மீட்பு நடவடிக்கைகள் எதையும் செய்யாமல் சென்றுவிட்டார்கள். மாநகராட்சியிடம் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை.  இதே நிலை தொடர்ந்தால் சாலை மறியல் செய்வதைத் தவிர எங்களுக்கு வேறுவழியில்லை” என்றார்.

“வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்கியிருக்கு. வீட்டுக்குள்ள போகக்கூட முடியல. மாநகராட்சி அதிகாரிகள்கிட்ட சொல்லிப் பார்த்தோம். யாரும் வரல. இந்த மாதிரி நேரத்துல உதவிக்கு வரலைன்னா, அந்த மாநகராட்சி எதுக்குத்தான் இருக்கு?” என்றார் பனையூரைச் சேர்ந்த பொன்சேகர் கோபமாக.

இடிந்த சுவர்கள்!

கொருக்குப்பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் 15 அடி உயரமுள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. சைதாப்பேட்டை சுடுகாட்டின் 11 அடி உயரச் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. அங்கே நிறுத்திவைக்கப்பட்டு இருந்த இரண்டு மினி வேன்கள் சேதமடைந்தன. அம்பத்தூர் ராஜீவ் காந்தி நகரில் ஒரு தனியார் நிறுவனத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் கார் மற்றும் இருசக்கர வாகனம் சேதமடைந்தன. ஆவடியில் முபாரக் பகுதிக்குப் பின்புறம் உள்ள சுடுகாட்டின் சுவர் இடிந்து விழுந்தது. அதன் அருகில், ஒரு வீட்டின் சுவர் சேதம் அடைந்தது. ஏழு கிணறு சமயபுரத்தம்மன் கோயில் தெருவிலும் ஒரு வீட்டுச்சுவர் இடிந்து விழுந்தது. அயனாவரம் வசந்த கார்டன் இரண்டாவது தெருவில் உள்ள ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 கார்கள் சேதம் அடைந்தன. இந்த சம்பவங்களில் உயிரிழப்பு ஏதுமில்லை.

சாய்ந்த மரங்கள்!

தொடர் மழைக்கு சென்னை மாநகராட்சி எல்லைக்குள் 250-க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்துள்ளன. சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை நுழைவாயில் அருகே மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. கிண்டி கவர்னர் மாளிகை வளாகத்தில் மரம் சரிந்து விழுந்ததில் விருந்தினர் மாளிகையில் சேதம் ஏற்பட்டது. அபிராமபுரம் டாக்டர் ரெங்கா சாலை, எழும்பூர் ஹால்ஸ் சாலை ஆகிய இடங்களிலும் மரங்கள் வேரோடு சாய்ந்தன. பெரவள்ளூர் பெரியார் நகர் கார்த்திகேயன் சாலையிலும் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் இந்தப் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாநகராட்சி ஊழியர்கள் உடனுக்குடன் மரங்களை வெட்டி அகற்றினார்கள்.

பாதிப்பு அதிகமான பகுதிகள்!

அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு, ஓட்டேரி, கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், வேப்பேரி, கிண்டி என்.ஜி.ஓ. காலனி, வேளச்சேரி, சைதாப்பேட்டை, வில்லிவாக்கம், சோழிங்கநல்லூர், பனையூர்குப்பம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை,  நந்தம்பாக்கம், துரைப்பாக்கம், நன்மங்கலம், ஒட்டியம் பாக்கம், அம்பத்தூர், அண்ணாநகர், திருமங்கலம், திருவொற்றியூர், கொண்டித்தோப்பு உள்ளிட்ட இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ரயில் சேவைகள் பாதிப்பு...

தொடர் மழையால் கடந்த 13-ம் தேதி மின்சார ரயில்கள் நடுவழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் வரும் ரயில்களின் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாயினர்.  பலர், தண்டவாளம் வழியாகவே சென்ட்ரலுக்கு நடந்து வந்தனர்.  மழைநீர் தேங்கியதால் சேத்துப்பட்டு கெங்குரெட்டி சுரங்கப்பாதை, பெரம்பூர் ரயில்வே பாலம், வியாசர்பாடி ரயில்வே பாலம் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டது.  வியாசர்பாடி ரயில்வே பாலத்தின் கீழே கழுத்து அளவுக்கு தண்ணீர் சென்றது. மோட்டார் சைக்கிள்களை மீன்பாடி வண்டிகளில் ஏற்றிச்சென்று பாலத்தைக் கடந்தனர்.

150 பேர் பலி!

தமிழகத்தில் பெய்த தொடர்மழைக்கு இதுவரை 150 பேர் பலியாகியிருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.  சென்னையில் மட்டும் 6 பேர் பலியாகி உள்ளதாகத் தெரிகிறது. மழை நீர் முழுமையாக வடிந்தபிறகே பலியானவர்களின் சரியான விவரம் தெரியவரும்.

அதிகரிக்கும் ‘டெங்கு’ பயங்கரம்!

தற்போது, சென்னையைக் கலங்கடித்துக்கொண்டு இருக்கும் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு தொடர் மழைக்குப்பிறகு இருமடங்காக அதிகரித்து உள்ளதாக சுகாதாரத் துறையினர் சொல்கிறார்கள். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தேங்கி நிற்கும் மழை நீரில் டெங்குவைப் பரப்பும் ஏ.டி.எஸ். கொசு உற்பத்தி அதிகமாகி இருக்கிறது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள் சென்னை மாநகராட்சியும், மாநில சுகாதாரத் துறையினரும்.

முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியனிடம் பேசினோம். “சென்னை முழுவதும் மழைநீர் வடிகால் கால்வாய்களை சரியாகப் பராமரிக்கவில்லை. அதுதான், இவ்வளவு பாதிப்புக்கும் முக்கியக் காரணம். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரியம் என எந்தத் துறையுடனும் கலந்து ஆலோசிக்கவில்லை. கடந்த 4 ஆண்டுகளாக சேவைத் துறை கூட்டமே நடத்தப்படவில்லை” என்றார்.

மாநகரத் தந்தை எங்கே?

நிவாரண நடவடிக்கைகள் குறித்து கேட்பதற்காக மேயர் சைதை துரைசாமி மற்றும் மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் ஆகிய இருவரையும் செல்போனில் தொடர்புகொண்டோம். இருவரிடம் இருந்தும் நோ ரெஸ்பான்ஸ். எனவே, மாநகராட்சி அதிகாரி ஒருவரைத் தொடர்புகொண்டு பேசினோம். “சுரங்கப்பாதைகளில் தேங்கியிருக்கும் தண்ணீர், மோட்டார் பம்ப் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. ஜே.சி.பி. மூலம்  தற்காலிக வடிகால்வாய்  அமைக்கப்பட்டு மழை நீர் வெளியேற்றப்படுகிறது. மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரத் தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், அனைத்து அதிகாரிகளும், ஊழியர்களும் மீட்பு பணிக்காக முடுக்கிவிடப் பட்டுள்ளனர்” என்றார்.

சென்னை நகரின் பல பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக இருந்தன. பல மாதங்களாக சென்னை மக்கள் மோசமான சாலைகளில்தான் அவதியோடு பயணித்தனர். அதைப்பற்றி அப்போது கவலைப்படாத அரசு நிர்வாகம், சமீபத்தில் அதாவது மழைக்காலம் தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பாகத்தான் பல இடங்களில் சாலைகள் அமைத்தது. அந்தச் சாலைகள் அனைத்தும் தற்போதைய மழையில் சேதமடைந்துவிட்டன.

அதேபோல ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் மழைநீர் வடிகால்வாய்களும் அடைப்புகள் எடுக்கும் பணிகளுக்காக லட்சக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த ஆண்டு, கால்வாய்கள் பாராமரிப்புப் பணிகள் நடக்கவே இல்லை என்றும், அதுதான் இவ்வளவு பாதிப்புகளுக்கும் காரணம் என்றும் புகார்கள் எழுந்துள்ளன.

பலத்த குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு விளக்கம் அளித்துள்ள சென்னை மேயர் சைதை துரைசாமி, வழக்கத்துக்கு மாறாக அதிகமாக மழை பெய்ததுதான் சேதங்களுக்குக் காரணம். இதுபோன்ற சூழ்நிலைகளைச் சமாளிப்பது சற்றுக் கடினம்தான். ஆனால் நாங்கள் சமாளித்துக்கொண்டிருக்கிறோம்’’ என்று சமாளித்துக்கொண்டிருக்கிறார்.

- ஜோ.ஸ்டாலின், எஸ்.மகேஷ்

படங்கள்: சு.குமரேசன், கே.கார்த்திகேயன், ஆ.முத்துக்குமார், ப.சரவணகுமார், தே.அசோக்குமார்


சைதை துரைசாமி Vs வெற்றிவேல்

முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா, மேயர் சைதை துரைசாமி, மாநகராட்சி கமிஷனர் விக்ரம் கபூர் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். கொடுங்கையூர், வ.உ.சி. நகர். இளையமுதலி தெருவில் தேங்கிய மழை நீரை ஆய்வு செய்தபோது முன்னாள் எம்.எல்.ஏ-வும் மாவட்டச் செயலாளருமான வெற்றிவேல் தரப்பினருக்கும் மேயர் தரப்பினருக்கும் திடீர் வாக்குவாதம். மேயரைப் பார்த்து, ‘இவருக்கு இங்கே என்ன வேலை’ என்று கேட்டதாகக் கூறப்படுகிறது. இதை மேயரின் பாதுகாப்பு அதிகாரி யேசுராஜ் தட்டிக்கேட்டுள்ளார். அதைத் தொடர்ந்து வெற்றிவேலின் ஆதரவாளர்களுக்கும், மேயர் தரப்பினருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. யேசுராஜ் மற்றும் மேயரின் தனி உதவியாளர் பழனிச்சாமியை வெற்றிவேல் தரப்பினர் தாக்கியுள்ளனர். அதைத் தடுக்க மேயர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் முயன்றனர். இந்தக் கூச்சல் குழப்பத்துக்குப் பிறகு இருதரப்பினரும் பிரிந்து சென்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick