ஊழலை ஒழிக்க உதவும் நிழல் அமைச்சரவை!

மனதுவைக்குமா மத்திய அரசு?

ழல்... இந்தியாவில் மட்டும் அல்ல, உலக நாடுகளின் அரசியலிலும் இந்த வார்த்தை ஓர் அச்சுறுத்தல்தான். ‘ஊழலை ஒழிப்போம்’ என்று பல பேர் உரக்கச் சொன்னாலும் அதற்கான எந்த நடவடிக்கைகளும் இதுவரைக்கும் எடுக்கப்பட வில்லை என்பதே நிஜம்.

நாட்டின் பிரதமராக இருப்பவர் அனைத்துத் துறைகளிலும் சென்று ஆய்வுசெய்து ஊழலை ஒழிக்க முடியும் என்று கூறுவது சமுத்திரத்தில் தவறி விழுந்த உப்புக்கல்லைத் தேடுவதற்கு ஒப்பாகும். அப்படி என்றால் ஊழலை ஒழிக்க என்னதான் வழி?

நிழல் அமைச்சரவை என்பது பிரிட்டன் நாட்டிலும் பிரிட்டிஷ் நாடாளுமன்ற முறையைப் பின்பற்றும் மற்ற சில நாடுகளிலும் நடைமுறையில் உள்ள ஒரு ஜனநாயக முறையாகும். நிழல் அமைச்சரவை என்பது ஆளும் கட்சியின் அமைச்ச ரவைக்கு நிகராக எதிர்க் கட்சியினர் அமைக்கும் ஓர் அமைச்சரவை. அதாவது, ஆளும் கட்சியில் உள்ள அனைத்துத் துறைகளுக்கும் எதிர்க் கட்சியில் இருந்து ஒருவர் நிழல் அமைச்சராக எதிர்க் கட்சியின் தலைவரால் நியமிக்கப்படுவார்.

நிழல் அமைச்சரவையினர் ஆளும் கட்சி அமைச் சர்களின் செயல்பாடுகளைக் கண்காணிப்பார்கள். அவர்கள் தவறுசெய்யும்போது அதனை ஆக்கப் பூர்வமாக சுட்டிக்காட்டுவார்கள். தேவைப்பட்டால் நிழல் அமைச்சருக்கு ஆளும் கட்சியின் அமைச்சர் பதில் அளிக்க வேண்டும்.

இந்தியாவும் பிரிட்டிஷ் நாடாளுமன்ற முறையை மாதிரியாகக்கொண்டு ஏற்படுத்தப்பட்ட முறை என்றபோதும் அங்கு பின்பற்றப்படும் நிழல் அமைச்சரவை முறை, இந்தியாவில் இல்லை.  இந்த நிழல் அமைச்சரவை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இருந்திருந்தால், இன்று நடக்கும் பல்வேறு முறை கேடுகளைத் தடுத்திருக்கலாம். உதாரணமாக, தகவல் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக ஆ.ராசா இருந்தபோது அவருடன் நிழல் அமைச்சராக, எதிர்க் கட்சியில் எவரேனும் இருந்திருந்தால் 2ஜி அலைக்கற்றை ஏல முறையை எதிர்த்திருப்பார். இதனால் அரசுக்கு வரும் இழப்பை முன்னரே தடுத்திருக்கலாம். ஆனால், அதனைத் தடுக்க அங்கு எந்த அமைப்பும் இல்லை. ஒவ்வொரு முறையும் தவறு நடந்த பின்னரே நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன. நிழல் அமைச்சரவையை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் கொண்டு வருவதன் மூலமாக அரசுத் துறையில் நடக்கும் அனைத்துத் தவறுகளையும் முன்னரே தடுக்க முடியும்.

இதனையும் மீறி ஏதாவது தவறு நடந்தால், ஆளும் கட்சி அமைச்சர் மீது மட்டும் அல்ல, அந்தத் தவற்றைக் கவனிக்கத் தவறியதற்காக அந்தத் துறையின் நிழல் அமைச்சர் மீதும் நடவடிக்கை பாயும். ஆதலால், நிழல் அமைச்சர் நிச்சயமாக நேர்மையாகச் செயல்படுவார். இதன் மூலமாக அரசுத் துறைகளில் நடக்கும் தவறுகளை மிக எளிமையாகத் தவிர்க்கலாம்.

இந்த நிழல் அமைச்சரவையை மத்திய அரசில் மட்டும் அல்லாது, அனைத்து மாநில அரசுகளிலும் கொண்டு வருவதன் மூலமாக எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஊழலற்ற ஆட்சியை மக்கள் பெற முடியும். உலக நாடுகளுக்குச் சென்று வரும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு இருக்கும் இது மாதிரியான நல்ல விஷயங்களையும் இங்கு கொண்டு வந்தால் தேர்தல் பரப்புரையில் முழங்கியதைப்போல ஊழலற்ற அரசாங்கத்தை இனி வரும் எல்லாக் காலங்களிலும் எவர் ஆட்சிப் புரிந்தாலும் கொடுக்க முடியும்.

நிழல் அமைச்சரவை பற்றி தமிழகத்தில் குரல் கொடுக்கும் ஒரே கட்சி பா.ம.க. நிழல் பட்ஜெட்களையும் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் பாலுவிடம் கேட்டோம். ‘‘ஆட்சி அதிகாரம் ஆளும் கட்சி வசம் இருந்தாலும், அதன் நிர்வாகத்தைக் கண்காணிப்பதில் எதிர்க் கட்சிகளுக்கும் பங்கு உண்டு. வெறுமனே தவறுகளைச் சுட்டிக்காட்டுவது மட்டும் எதிர்க் கட்சிகளின் வேலையல்ல.  நிழல் அமைச்சரவை என்பது ஆட்சியில் இருப்பவர்களின் அதிகாரமிக்க மனநிலையை மாற்ற உதவும். ஓர் ஆட்சியின் செயல்பாடுகளைக் கண்காணிக்கக் கூடியதாக இருக்கும். ஒவ்வோர் அமைச்சருக்கும் ஒரு நிழல் அமைச்சர் எதிர்க் கட்சிகளில் இருந்து நியமிக்கப்பட வேண்டும். இதனால் வெளிப்படைத் தன்மை கிடைக்கும். ரகசியமாக எந்த முடிவையும் எடுக்க முடியாது. நிழல் அமைச்சரவையின் கருத்தையும் ஆலோசனையையும் கேட்டுத்தான் செயல்பட வேண்டும் என்கிற சூழல் உருவாக்கப்பட வேண்டும். நிழல் அமைச்சரவை என்பது அரசின் காவலாளிகள்.

முதல்வர், ஓர் அமைச்சர், எதிர்க் கட்சித் தலைவர் எல்லாம் சேர்ந்துதான் தன்னாட்சி அதிகாரம்கொண்ட தகவல் ஆணையர் போன்ற பதவிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்கிறார்கள். அதேபோல் நிழல் அமைச்சரவைக்கும் ஆட்களைத் தேர்வு செய்ய சட்டம் கொண்டுவர வேண்டும்.  பல நாடுகளில் நிழல் அமைச்சரவை இருக்கிறது. நம் நாட்டிலும் இதை உடனே கொண்டு  வரவேண்டும்’’ என்றார்.

  - எஸ்.கே.பிரேம் குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick