அன்னிய முதலீடுதான் அனைத்துக்கும் தீர்வா?

கறுப்புப் பணம் களமிறங்கலாம்!

பீகாரில் பி.ஜே.பி-க்குக் கிடைத்த பலத்த அடியைத் தொடர்ந்து, மத்திய அரசு எடுத்த முடிவு பரபரப்பான விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது. சில்லரை வணிகம், பாதுகாப்பு, கட்டுமானம் உட்பட 15 துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது என்பதுதான் அந்த முடிவு.

பெரும் ‘பில்டப்’ உடன் அறிவிக்கப்பட்ட ‘மேக் இன் இந்தியா’வுக்கு பெரிய அளவிலான வரவேற்பு கிடைக்காத நிலையில், காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டுக்கான அனுமதியை 49 சதவிகிதமாக உயர்த்திய பிறகும் அது, எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தாத நிலையில், மத்திய அரசின் இந்த முடிவால் பலன் கிடைக்குமா என்பதுதான் விவாதத்துக்குக் காரணம்.

‘‘அன்னிய முதலீட்டுக்கான அளவுகளை அதிகமாக்குவதால் முதலீடுகள் வந்துவிடாது. பொது​வாகவே, உலக அளவில் முதலீடுகள் குறைவாகத்தான் இருக்கின்றன. இந்த நிலையில், இந்தியாவை நோக்கி முதலீடுகள் வருமா என்பது சந்தேகம்தான். அதுதவிர, இந்தியாவில் தொழில் செய்வதில் நிறைய பிரச்னைகள் இருப்பதாக உலக வங்கியின் அறிக்கை ஒன்று சொல்கிறது. நிறைய கட்டுப்பாடுகள் இல்லாத, அரசின் தலையீடுகள் இல்லாத, ஊழல் இல்லாத, அதிக வரிகள் இல்லாத... என தொழில் செய்வதற்கு உகந்த சூழலுக்கான காரணங்களைவைத்துப் பார்த்தால், உலக அளவில் 130-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. இதுதவிர தற்போது, பீகாரில் பி.ஜே.பி கடும் தோல்வியைச் சந்தித்ததால், மாநிலங்களவை அதன் பலம் அதிகரிக்க வாய்ப்பில்லை. இந்த நிலையில், ஜி.எஸ்.டி. சட்டத்தை நிறைவேற்ற முடியுமா என்று தெரியவில்லை. அதை நிறைவேற்றாத சூழலில், அன்னிய முதலீடு வரவாய்ப்பில்லை” என்கிறார், சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர் இரா.சீனிவாசன்.

‘‘பொருளாதார வளர்ச்சி, ஜி.டி.பி என்றெல்லாம் ஆட்சியாளர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், மக்களுக்குத் தேவையானது வேலைவாய்ப்பு. எவ்வளவு முதலீடுகள் வந்தாலும் வேலைவாய்ப்புகள் அதிகரிப்பது இல்லை. 10 ஆண்டுகளுக்கு முன்பு 100 கோடி ரூபாய் முதலீடு செய்தால், 100 பேருக்கு வேலை கிடைக்கும். ஆனால், இப்போது, 100 கோடி ரூபாய் முதலீடு செய்தால் 10 பேருக்குக்கூட வேலை கிடைப்பது இல்லை. வேலை கிடைத்தாலும், அது நிரந்தரமில்லாத வேலையாகவே இருக்கிறது. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த 10 ஆண்டுகளில், 100 கோடி ரூபாய் முதலீடுகொண்ட ஆயிரம் தொழிற்சா லைகளாவது வந்திருக்கும். அவற்றின் மூலம் எவ்வளவு வேலைவாய்ப்பு பெருகியுள்ளது? அந்த வேலையின் தன்மை எத்தகையது என்று பார்த்தால், 90 சதவிகிதம் பேர் நிரந்தரமற்ற தொழிலாளர்கள். அப்படிப்பட்ட வேலை வாய்ப்பைத்தான் உருவாக்குவோம் என்று ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள். அரசின் இந்த முடிவு, இந்திய பெருமுதலாளிகள் வெளிநாடுகளில் பதுக்கிவைத்துள்ள கறுப்புப் பணம் உள்ளே வருவதற்குப் பயன்படலாம்” என்கிறார் பொருளாதார வல்லுநர் ஜெயரஞ்சன்.

பொருளாதார வல்லுநர் வெங்கடேஷ் ஆத்ரேயா, ‘‘பீகார் தோல்வியை மறைப்பதற்காக இதைச் செய்திருக்கிறார்கள். அன்னிய நேரடி முதலீடு என்பது நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் மிகச் சிறிய பங்குதான். ஆனால், அன்னிய முதலீடு வந்துவிட்டால், அனைத்துப் பிரச்னைகளும் சரியாகிவிடும் என்பதுபோல ‘படம்’ காட்டுகிறார்கள். ஏற்கெனவே பல துறைகளில் அன்னிய முதலீட்டுக்​கான வரம்பை அதிகரித்து, கட்டுப்பாடுகளை நீர்த்துப்போகச் செய்திருக்கிறார்கள். இன்னும் சில துறைகளில் அதற்கான அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள். ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, பிரதமர் மோடி நாடு நாடாகச் சென்று வேண்டுகோள்விடுத்தும் பெரிய அளவுக்கு அன்னிய முதலீட்டை ஈட்ட முடியவில்லை. இப்போது, உலகப் பொருளாதாரச் சூழல் மந்தமாக இருக்கிறது. மேலும், அன்னிய முதலீடுகள் இங்கு வரவேண்டும் என்றால், கட்டமைப்புத் துறைகளில் நிறைய முதலீடுகளைச் செய்ய வேண்டும். ஆனால், அதற்குத் தடையாக இருப்பது அரசின் தாராளமயக் கொள்கைகள்தான்” என்கிறார்.

பீகார் தேர்தலில் பி.ஜே.பி-யின் பெரும் தோல்வியைக் கண்டு முதலில் பீதியடைந்தவர்கள் பெருமுதலாளிகள். “பீகார் தேர்தல் முடிவுகள் சீர்திருத்த நடவடிக்கைகளைப் பின்னுக்குத் தள்ளிவிடும். இனிமேல், சமூக நலத்திட்டங்களுக்குத்தான் அரசு முன்னுரிமை கொடுக்கும்” என்று பெருமுதலாளிகள் அலறினார்கள். உடனே களத்தில் குதித்தார், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி. ‘அந்தக் கவலை எல்லாம் உங்களுக்கு வேண்டாம். முன்பைவிட வேகமாக சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும். எனவே, நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள்” என்று அவர்களைச் சாந்தப்படுத்தினார். அதைத்தொடர்ந்து எடுக்கப்பட்டதுதான், 15 துறைகளில் அன்னிய நேரடி முதலீடுகளுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் முடிவு. 

இவர்கள், யாருக்காக ஆட்சி நடத்துகிறார்கள்?

- ஆ.பழனியப்பன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick