முதலமைச்சராக ஜெயலலிதாவின் செயல்பாடு?

தமிழகத்தின் சிறந்த எதிர்க் கட்சித் தலைவர் யார்?ஜூ.வி. ஸ்பெஷல் சர்வேஜூ.வி. டீம், ஓவியங்கள்: கண்ணா

தேர்தல் தேதியை இன்னும் குறிக்கவே இல்லை. அதற்குள், ‘எலெக்‌ஷன் கவுன்ட்டவுண்’ தொடங்கிவிட்டது. ‘நமக்கு நாமே’, ‘முடியட்டும்... விடியட்டும்!’ என தமிழகம் முழுவதும் முதல்கட்ட  பிரசாரத்தை முடித்துவிட்டார் ஸ்டாலின், ‘விஷன் - 234’ என இலக்கு நிர்ணயித்து ‘ஒளிரும் நிகழ்காலம்... மிளிரும் வருங்காலம்!’, ‘தழைக்கட்டும் தமிழகம்... செழிக்கட்டும் தமிழர்கள்!’, ‘தொடரட்டும் மேம்பாடு... ஜொலிக்கட்டும் தமிழ்நாடு!’ என அடுத்தடுத்த பிரசாரங்களைத் தொடங்கிவிட்டது அ.தி.மு.க. ‘மாற்றம்... முன்னேற்றம்... அன்புமணி!’, ‘ஒரு சொட்டு மது இல்லாத, ஒரு பைசா ஊழல் இல்லாத தமிழகம்!’ எனச் சொல்லி தேர்தல் அறிக்கை எல்லாம் வெளியிட்டு அன்புமணி ஒரு பக்கம் தோள் தட்டுகிறார். இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க என வைகோ தலைமையில் ‘மக்கள் நலக் கூட்டணி’ குறைந்தபட்ச செயல் திட்டத்தை எல்லாம் வெளியிட்டுத் தேர்தலுக்குத் தயாராகி நிற்கிறது. ‘காங்கிரஸ் தயவில் கூட்டணி ஆட்சி அமையும்’ என ‘திரி’ கொளுத்திப் போட்டு வருகிறார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். தமிழ் மாநில காங்கிரஸ் மதில் மேல் பூனையாக உள்ளது. நாம் தமிழர் கட்சியும், காந்திய மக்கள் இயக்கமும் சில தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. இப்படி தேர்தல் களம் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஜனவரி தொடக்கத்தில் இன்னும் தகிக்கத் தொடங்கிவிடும்.

இப்படிப்பட்ட சூழலில் மக்களின் மனநிலை, நாடித்துடிப்பை அறியாமல் இருந்தால் எப்படி? தமிழகத்தின் மனவோட்டத்தை அறிய சர்வே நடத்த முடிவெடுத்தது ஜூ.வி. எல்லா எதிர்பார்ப்புகளையும் சந்தேகங்களையும் கேள்விகளாக்கிக் களம் புகுந்தது ஜூ.வி. படை. செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், மாணவப் பத்திரிகையாளர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளைச் சுற்றி வலம் வந்தார்கள். அனைத்துத் தரப்பு மக்கள், கிராம நகர பகுதிகள், ஆண், பெண் விகிதாச்சாரம் என எல்லாம் பார்த்து 16,846 நபர்களைச் சந்தித்தது ஜூ.வி. டீம். இதில் பெண்கள் மட்டும் 6,163 பேர்.

ஐந்தாண்டுகளை நிறைவுசெய்யப் போகும் முதல்வர் ஜெயலலிதாவின் செயல்பாடு எப்படி இருந்தது? எதிர்க் கட்சித் தலைவராக யார் சிறப்பாகச் செயல்பட்டார்கள் என்கிற எதிரும் புதிருமாக இருக்கும் இரண்டு விஷயங்கள் மட்டும் இந்த இதழில் இடம்பெற்று உள்ளன. ‘முதல்வராக ஜெயலலிதாவின் செயல்பாடு’ பற்றிய கேள்விக்கு சூப்பர், சுமார், மோசம், மிக மோசம் என நான்கு விடைகளைக் கொடுத்திருந்தோம். ‘சுமார்’ என்பதைதான் மிக அதிகம் பேர் ‘டிக்’ அடித்திருந்தனர். 39 சதவிகிதம் பேர் சுமார் எனச் சொல்லியிருந்தார்கள். அதற்கு அடுத்த இடத்தில் ‘சூப்பர்’ எனச் சொன்னவர்கள் உள்ளார்கள். ஆனால் ‘மோசம்’, ‘மிக மோசம்’ என இரண்டையும் சொன்னவர்கள் எண்ணிக்கை 32 சதவிகிதம். மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, லேப்டாப், கறவை மாடுகள், தாலிக்கு தங்கம், பசுமை வீடுகள் என இலவசத் திட்டங்கள் பலருக்கு கிடைத்திருப்பதை சர்வேயின்போது அறிய முடிந்தது. ஆனாலும் முதல்வர் மீது அதிருப்தியில் இருப்பதைதான் சர்வே முடிவுகள் பிரதிபலித்தன.

‘தமிழகத்தின் சிறந்த எதிர்க் கட்சித் தலைவர் யார்?’ என்ற இரண்டாவது கேள்விக்கு கருணாநிதி, விஜயகாந்த், வைகோ, ராமதாஸ், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மற்றவர்கள் என ஆறு ஆப்ஷன்கள் அளிக்கப்பட்டிருந்தன. இதில், டாப் கியரில் முதலிடத்தில் இருந்தவர் கருணாநிதிதான். அவருக்கு மிக அதிகமாக 41 சதவிகிதம் பேர் ஆதரவு கொடுத்திருந்தார்கள். இரண்டாவது இடத்தை விஜயகாந்த்தும், மூன்றாவது இடத்தை வைகோவும் பெற்றுள்ளார்கள்.

விஜயகாந்த்துக்கும் வைகோவுக்கும் நூல் இழை வித்தியாசம்தான் இருந்தது. நான்காவது இடத்தில் டாக்டர் ராமதாஸ் இடம்பெற்றார். ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கடைசி இடம்.

சர்வே அணிவகுப்பு அடுத்தடுத்த இதழ்களிலும் தொடர்கிறது. அ.தி.மு.க-வின் நம்பர் டூ யார்?, தி.மு.க. யாரை அறிவிக்க வேண்டும்?... போன்ற அதிர்ச்சிக் கேள்விகளுக்கு ஆச்சர்ய முடிவுகள் அறியக் காத்திருங்கள்!

- படங்கள்: கா.முரளி, மா.பி.சித்தார்த், ம.சுமன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick