வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டது எதனால்?

சி.எம்.டி.ஏ. கண்ணை மூடிக்கொண்டதால்!

ஒரு சில நாட்களில் கொட்டித் தீர்த்த கன மழையால் ஒட்டுமொத்த சென்னை நகரமும் துயரத்தில் மூழ்கியது. சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.), சென்னை மாநகராட்சி, பொதுப்பணித் துறை உள்ளிட்ட அரசு அமைப்புகளில் இருக்கும் ஓட்டைகளும், கோளாறுகளும், குறைபாடுகளும், அக்கறையின்மையுமே வெள்ளத்தில் சென்னை மூழ்கியதற்குக் காரணம்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் வளர்ந்துவரும் சென்னைப் பெருநகரத்தைத் திட்டமிட்டுக் கட்டமைப்பதற்காகத்தான் சி.எம்.டி.ஏ. உருவாக்கப்பட்டது. சென்னை மாநகராட்சிப் பகுதிக்குள் கட்டப்படும் ஒவ்வொரு கட்டடத்துக்கும் அனுமதி வாங்க வேண்டும். ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து, கண்டிஷனுக்கு மேல் கண்டிஷன் போட்டுத்தான் அனுமதியே கொடுப்பார்கள். அவ்வாறு அனுமதி பெற்று உருவான நகரம், மழைவெள்ளத்தில் தத்தளிக்கிறது.

நீடித்த, நிலையான சுற்றுச்சூழலை உருவாக்குவது, தொழில்நுட்பத் திறனில் புதுமையைக்கொண்ட நிர்வாகக் கொள்கைகள் மற்றும் செயல் திட்டங்கள் மூலம் சென்னைப் பெருநகர் பகுதி மக்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டை உறுதிப்படுத்துவது, மக்கள் நல நிர்வாகத்தைக் கொடுப்பது என்பதுதான் சி.எம்.டி.ஏ-வின் தொலைநோக்குப் பார்வையாகும். ஆனால் இந்தத் தொலைநோக்குப் பார்வையோடு சி.எம்.டி.ஏ. செயல்பட்டிருக்கிறதா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி.

சி.எம்.டி.ஏ-வானது முதலாவது மாஸ்டர் பிளான், இரண்டாவது மாஸ்டர் பிளான் என்று இரண்டு திட்டங்கள் மூலம் சென்னை நகரை வடிவமைக்கிறது. தற்போது பின்பற்றப்படுவது இரண்டாவது மாஸ்டர் பிளான். இதில், மழை வெள்ளம் ஏற்படும் காலங்களில் மழைநீரை வடிய வைப்பதற்கு எந்தத் திட்டமும் இல்லை என்கின்றனர் நிபுணர்கள். சென்னையில் 1943, 1976, 1985, 2002, 2005 ஆகிய ஆண்டுகளில் புயல் காற்றுடன் கனமழை பெய்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ள 2-வது மாஸ்டர் பிளானிலேயே, ‘சென்னைப் புறநகரில் போதிய வடிகால் வசதி இல்லாததால், அடிக்கடி வெள்ளப் பாதிப்பு ஏற்படுகிறது’ என்றும் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. தவற்றைச் சுட்டிக்காட்டிவிட்டு, அதைச் சரிசெய்வதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதுதான் சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளிப்பதற்கு முக்கியக் காரணம்.

கால்வாய்களா, தொட்டிகளா?

சென்னை மாநகராட்சி சார்பில் நகருக்குள் பரவலாக மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தெருக்களில் இருந்து வடிகால் வாய்க்காலுக்கு மழைநீர் சென்று, பின்னர் கூவம் அல்லது அடையாறு ஆகிய ஆறுகளில் கலந்து, அங்கிருந்து கடலுக்குச் செல்ல வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு மழைநீர் வடிகால் கால்வாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆனால், இந்த மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படவில்லை. அதனால் அவை, வடிகால் வாய்க்கால்களாக இல்லாமல், தண்ணீர் சேகரிப்புத் தொட்டியைப்போல இருக்கின்றன. மாம்பலம் கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய், கேப்டன் கால்வாய், ஓட்டேரி நல்லா கால்வாய், அடையாறு, கூவம் ஆகியவற்றுடன் சேரும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கின்றன. வடிகால்களைக் குப்பைகளும், கழிவுகளும் அடைத்துக்கொண்டிருக்கின்றன. அதனால், தண்ணீர் போவதற்கு வழியில்லை. அதன் விளைவுதான், கழிவுநீரோடு மழைநீர் கலந்து சாலைகளில் பெருக்கெடுக்கிறது.

 காற்றில் பறக்கும் விதிமுறைகள்...

கட்டடம் கட்ட அனுமதி கேட்கும்போது, சி.எம்.டி.ஏ-வில் கொடுக்கப்படும் பிளான் ஒன்று. ஆனால், அதன்படி கட்டடம் கட்டப்படுவது இல்லை. தங்கள் இஷ்டத்துக்கு பிளானை மாற்றுவார்கள். இரண்டு மாடிகளுக்கு அனுமதி வாங்கிவிட்டு மூன்று மாடிகள் கட்டுகிறார்கள். கார் பார்க்கிங் இடம் என்று பிளானில் காட்டிவிட்டு, அதைக் கடைகளாகக் கட்டி வாடகைக்கு விடுகிறார்கள். இந்த விதிமுறை மீறல்கள் சி.எம்.டி.ஏ. அதிகாரிகளுக்குத் தெரியாமல் நடப்பதில்லை. அதிகாரிகள் நன்றாக ‘கவனிக்கப்படுவதால்’ விதிமீறல்கள் கண்டுகொள்ளப்படுவது இல்லை. மேலும், ‘இன்னும் கொஞ்சம் இழுத்துக் கட்டிக் கொள்ளுங்கள்’ என்று அதிகாரிகள் தாராளம் காட்டுகிறார்கள்.

தூர்வாரப்படாத பக்கிங்ஹாம்! 

2001-ம் ஆண்டுக்குப் பிறகு வளர்ச்சிடைந்த வேளச்சேரி, மடிப்பாக்கம் பகுதிகளில் வெள்ளநீரை வடிப்பதற்காக வீராங்கால் ஓடை அமைக்கப்பட்டு உள்ளது. அந்த ஓடை ஆதம்பாக்கத்தில் தொடங்கி, வாணுவம் பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை வழியாகச் சென்று சோழிங்கநல்லூர் அருகே பக்கிங்ஹாம் கால்வாயில் சேருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாகப் புறநகர் பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் சுத்தப்படுத்தப் படவில்லை. வீராங்கால் ஓடை சென்று சேரும் பங்கிங்ஹாம் கால்வாயும், கடந்த நான்கு வருடங்களாகத் தூர்வாரப்படவே இல்லை.

வளரும் நகரம்... தேயும் சி.எம்.டி.ஏ.!

இந்திய நகரத் திட்ட அமைப்பு மையத்தைச் சேர்ந்த ஏ.என்.சச்சிதானந்தன், “சி.எம்.டி.ஏ. தனது 2-வது மாஸ்டர் பிளானில், 2026-ம் ஆண்டு வரை சென்னையின் மக்கள்தொகை எந்த அளவில் அதிகரித்திருக்கும், நிலத்தின் பயன்பாடு எப்படி இருக்கும் என்ற மதிப்பீடுகள் தெளிவுபடுத்தப்பட்டு இருந்தன. ஆனால், அவற்றையெல்லாம் மீறி சென்னை வளர்ச்சி அடைந்துள்ளது. உதாரணத்துக்கு, கொத்தவால்சாவடி நெருக்கமாக இருக்கிறது என்று சொல்லி கோயம்பேடு மார்க்கெட்டை உருவாக்கினார்கள். இன்றைக்கு கோயம்பேடு அதீத வளர்ச்சி பெற்று நெருக்கடி நிறைந்த பகுதியாகிவிட்டது. புறநகருக்கும் இது பொருந்தும். ஆனால், அதற்கேற்ப வேலை செய்ய சி.எம்.டி.ஏ. உள்ளிட்ட அரசமைப்புகள் வளர்ச்சி பெறவில்லை. ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளை ஆக்கிரமிக்கக் கூடாது, அவற்றின் கரைகளில் கட்டடங்கள் கட்டக் கூடாது என்று விதிமுறை உள்ளது. ஆனால், சென்னையில் ஏராளமான ஏரிகள் காணாமல் போய்விட்டன’’ என்றார் வேதனையுடன்.

ஆக்கிரமிப்பில் அரசு?

வள்ளுவர் கோட்டம் அமைந்திருப்பதே, நுங்கம்பாக்கம் ஏரியில்தான். கோயம்பேடு மார்க்கெட் அமைந்திருப்பது, அருகம்பாக்கம் ஏரியில்தான். இதுபோல், சென்னையில் இன்று பல மாடிக் கட்டடங்களாக உயர்ந்து நிற்கும் ஐ.டி. நிறுவனங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், ஷாப்பிங் மால்கள் எல்லாம் ஏரிப்பகுதிகள்தான். அவை அனைத்தும், குறைந்த விலைக்கு வாங்கியோ, ஆக்கிரமிக்கப்பட்டோ கட்டப்பட்டுள்ளன. தனியார் மட்டுமல்ல, அரசாங்கமே இந்தத் தவறுகளைச் செய்துள்ளது. அரசு சார்பில் கல்லூரிகளும், நீதிமன்றங்களும், பஸ் நிலையங்களும் நிர்மாணிக்கத் தேர்ந்தெடுப்பது ஏரிகளைத்தான். இந்தத் தவறுகளுக்கு யாரைத் தண்டிப்பது?

குப்பைகளும்... கட்டடக் கழிவுகளும்!

குப்பைகளை அப்புறப்படுத்தவும், அவற்றை அழிக்கவும் சரியான திட்டங்கள் இல்லை. அதனால் ஏரிகளும், குளங்களும்தான் குப்பைக்கிடங்குகளாக மாற்றப்படுகின்றன. சென்னையில் கூவம், அடையாறு கரைகளின் ஓரத்தில் ஓட்டுக்காகக் குடிசைவாசிகளை அரசியல்வாதிகள் காலம் காலமாக குடியேற்றி வருகின்றனர். கழிப்பறை வசதி, குப்பைத் தொட்டிகள் போன்ற எந்த அடிப்படைச் சுகாதார வசதிகளும் செய்யாமல் அவர்களை அப்படியே வைத்துள்ளனர். அவர்களுக்கு நகருக்குள் உரிய முறையில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டிக்கொடுத்து, ஆற்றின் கரையில் முறையாக வடிகால் அமைப்பை ஏற்படுத்தாமல், ஆற்றங்கரைப் பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்குவதைத் தடுக்கவே முடியாது. அதுதொடர்பான, சிந்தனை எதுவும் சி.எம்.டி.ஏ-விடம் இல்லை.

  அதிகாரிகள் உண்டு... ஆட்கள் இல்லை!

சி.எம்.டி.ஏ. பணிகளை மேற்கொள்ள 10 சதவிகித ஊழியர்கள்கூட கிடையாது. 500 டவுன்களை பார்க்கும் டவுன் பிளானருக்குக் கீழ் 10 முதல் 20 ஊழியர்கள்தான் இருக்கின்றனர். அவர்களால் எந்த வேலையையும் செய்ய முடியாது. சி.எம்.டி.ஏ. வழங்கும் அனுமதிகள், திட்டங்கள் போன்றவற்றை மேற்பார்வை செய்யும் மானிட்டர்  குழு அறவே அங்கு கிடையாது. அதுபோல, அங்குள்ள அதிகாரிகளின் அதிகாரம் என்பது வெறும் காகிதங்களில் மட்டும்தான் இருக்கிறது. மற்றபடி அந்தத் துறையை முழுவதும் கட்டுப்படுத்துவது ஆளும் கட்சி அரசியல்வாதிகள்தான். மவுலிவாக்கம் கட்டட விபத்து நடந்தபோது, முதலமைச்சர் ஜெயலலிதா சம்பவ இடத்துக்கு நேரில் சென்று, ‘‘அதிகாரிகள் மேல் எந்தத் தவறும் இல்லை” என்று அவசர அவசரமாக சான்றிதழ் கொடுத்ததில் இருந்தே இதைப் புரிந்துகொள்ள முடியும்.

பொறியாளர் குழு எங்கே?

சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர் சங்கத் தலைவர் ராமராவிடம் இதுகுறித்துக் கேட்டோம். “மழைநீர் வடிகால்கள் அமைக்கும் முன்பு, அந்தப் பகுதியில் பருவமழை காலத்தில் பெய்யும் மழையின் அளவு, மழைநீர் வடிகால் கால்வாயில் இணைக் கப்படும் வழித்தடம் மற்றும் எவ்வாறு அந்தப் பகுதியில் தண்ணீர் தேங்குகிறது என்பதை ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வுக்குப் பின்னர், மழைநீர் வடிகால் குறித்து வரைபடம் தயாரித்து, அதன் பின்னர்தான் வடிகால்கள் கட்டப்படும். 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தப் பணிகளைச் செய்ய சென்னை மாநகராட்சியில் தனியாக பொறியாளர்கள் குழு இருந்தது. இப்போது அந்தக் குழுவே இல்லை. அதனால்தான், தன்வாட்டத்தில் மழை நீர் வடிந்துவிடும் வகையில் சாலைகளோ, தெருக்களோ, வடிகால்களோ அமைக்கப்படுவது இல்லை. கடமைக்காக ஒப்பந்தம் கிடைத்து விட்டது என்பதற்காக எதையோ செய்கிறார்கள். அதன் விளைவை இப்போது அனுபவிக்கிறார்கள்.

 வீடுகளுக்குக் கழிவுநீர், மின் இணைப்பு கொடுக்கும்போது, மழைநீர் வடிகால்களை ஒட்டியோ அல்லது தாண்டியோதான் கொடுக்க முடியும். அந்த வேலையைச் செய்யும்போது, மழைநீர் வடிகால்களை உடைத்துவிடுகின்றனர். அதை மீண்டும் சரி செய்வதில்லை. அதபோல, கழிவுநீரை வெளியேற்றவும் மழைநீர் வடிகால்களை உடைப்பதும் நடக்கிறது. மழைநீர் வடிகால் அடைப்புகளைச் சரி செய்ய உறிஞ்சும் இயந்திரங்களைப் பயன்படுத்துகின்றனர். அவற்றால், முழுமையாக அடைப்புகளைச் சரிசெய்ய முடியாது. கழிவுநீர் பாதாளச் சாக்கடைகளில் ஆட்கள் இறங்கிச் சுத்தம் செய்யக் கூடாது என்று நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆனால், மழைநீர் வடிகால்களில் ஆட்கள் இறங்கி வேலை செய்வதற்கு தடை இல்லை. நீதிமன்ற உத்தரவைத் தவறாகப் புரிந்துகொண்டு மழைநீர் வடிகால்களைச் சுத்தம் செய்வதில்லை” என்றார்.

வேண்டும் வெள்ளப் பாதிப்புத் துறை!

இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின்  சென்னைப் பிரிவுத் தலைவர் குமாரிடம் பேசினோம், “வெள்ளப் பாதிப்புகள் ஏற்படும் முன்பே மாநகராட்சி, பொதுப்பணித் துறை ஆகியவற்றை ஒருங்கிணைத்து சி.எம்.டி.ஏ. மேற்பார்வை செய்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். வெள்ளப் பாதிப்பு என்ற துறையை ஏற்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பாதிப்புக்குப் பிறகு செய்ய வேண்டிய நடவடிக்கைகளுக்கு அந்தத் துறைதான் பொறுப்பு ஏற்க வேண்டும். ஏரிகளில் ஆக்கிரமிப்பைத் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்வாய்களில் குப்பை கொட்டுவது, கழிவுநீர் விடுவது ஆகியவற்றைத் தடுக்கவேண்டும்” என்றார்.

- கே.பாலசுப்பிரமணி, ஜோ.ஸ்டாலின், எஸ்.மகேஷ்
படங்கள்: ஜெ.வேங்கடராஜ், ப.சரவணகுமார், தி.குமரகுருபரன்


கோட்டைவிட்ட மாநகராட்சி!

சி.எம்.டி.ஏ-வும், மாநகராட்சியும் கோட்டைவிட்ட இடங்கள் என தமிழ்நாடு பொதுப்பணித் துறையின் முன்னாள் சிறப்புப் பொறியாளர் அ.வீரப்பன் பட்டியலிட்ட விஷயங்கள்...

மழைநீர் வடிகால்கள் திட்டமின்றி தரக் குறைவாக கட்டப்பட்டு நீர் வடிதலைச் செய்யாமல் தடுக்கப்பட்டது.

மழைநீர் வடிகால்கள், தானே ஓடக்கூடிய வாட்டத்துடன் கட்டப்படாதது.

மழைநீர் வடிகால்கள் அருகிலுள்ள கால்வாய்கள், கூவம், ஓட்டேரி நல்லா போன்ற சிற்றாறுகளோடு இணைக்கப்படாதது.

அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்கள் வட கிழக்குப் பருவ மழைக் காலம். இதில் அதிக மழை பெய்யும் என்று தெரிந்தும் வடிகால்களில் குறைந்தபட்ச மராமத்து வேலைகளைச் செய்யாதது.

சென்னை மாநகரப் பகுதிகளில் 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பள்ளமான பகுதிகளில் அறிவியல், பொறியியல் ஆய்வு எதையும் செய்யாமல் குடியிருப்புகள், புதிய நகர்கள், காலனிகளை லட்சக்கணக்கில் அனுமதித்தது.

சென்னை நகரின் உட்புறப் பகுதிகளிலும் புறநகர்ப் பகுதிகளிலும் 36 ஏரிகளும் நூற்றுக்கணக்கான குளங்களும் இருந்தன. இவற்றைக் கல்வி, மருத்துவம், தொழிற்சாலை என்ற பெயரில் அரசாங்கமும் பெரிய நிறுவனங்களும் ஆக்கிரமித்துத் தூர்த்தது; மேடாக்கியது.

இயற்கையாக அமைந்திருந்த வடிகால் வாய்க்கால்களை, நீர்வழிப்பாதைகளை சாலைகள் என்ற போர்வையில் மூடியது.

மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள், தனியார் கட்டடக் கழிவுகளை பள்ளங்களில் கொட்டி நிரப்பியது.

காகிதத்துடன் நின்ற அறிக்கைகள்!

சென்னையில் புயலுடன் கனமழை பெய்து நகரம் அதிகம் பாதிக்கப்பட்ட ஆண்டுகளில், அதுபற்றி அரசாங்கம் தொடர்ந்து ஆய்வு செய்துள்ளது. அந்த அறிக்கைகளில் நகரத் திட்டமிடல், ஆக்கிரமிப்பு, மழைநீர் வடிகால் என்று ஒவ்வொரு விஷயத்திலும் பல யோசனைகளைத் தெரிவித்துள்ளன. ஆனால், அவை எல்லாம் காகிதங்களில் மட்டும் அப்படியே இருக்கிறதே தவிர, வேறு ஒன்றும் நடக்கவில்லை. இதுவரை அப்படி நடந்த ஆய்வுகள்...

1. 1976-பொறியாளர் பி.சிவலிங்கம் குழு அறிக்கை.

2. 1980-பொதுப்பணித் துறை நியூக்ளியஸ் செல் ஆய்வறிக்கை.

3. 1993-சென்னைப் பெருநகர் வெள்ள நிவாரணம், மழைநீர் வடிகால் முதன்மைத் திட்ட ஆய்வு.

4. 1994-சென்னை நகரின் முதன்மை மழைநீர் வடிகால் திட்டம் மற்றும் சென்னைப் பெருநகர் பகுதிக்கான செய்யத் தக்கமைக்கான ஆய்வறிக்கை.

5. 1995-சுற்றுச்சூழல் செயல் விளைவின் பகுப்பாய்வு பள்ளிக்கரணைப் பகுதியின் வடிகால் மற்றும் மறு சீரமைப்பு உத்தேச அறிக்கை.

6. 1998-‘நீரி’யின் சுற்றுச்சூழல் விளைவுகளின் ஆய்வறிக்கையின் மறு ஆய்வு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick