கவுன்சிலர் கொலையில் ராஜேந்திரபாலாஜிக்குத் தொடர்பா?

திகில் அடிக்கும் சி.டி. ஆதாரங்கள்

மிழக அமைச்சரவையில் செய்தித்  துறை அமைச்சராக இருக்கும் ராஜேந்திரபாலாஜி மீது கொலைப் புகார் ஒன்று சொல்லப்படுகிறது. இந்த விவகாரம் ஜெயலலிதாவின் பார்வைக்கு அ.தி.மு.க-வினராலேயே அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. எந்த நேரத்திலும் ராஜேந்திரபாலாஜியின் பதவிக்குச் சிக்கல் வரலாம் என்பதே அ.தி.மு.க வட்டாரத்துத் தகவல்!

ராஜபாளையம் பேருந்து நிலையம்  அருகே மளிகைக் கடை நடத்தி வருபவர் சிவசுப்பிரமணியன். இவருக்கு மீனாட்சிசுந்தரம், சக்தி சரவணன் என்ற இரு சகோதரர்கள் உண்டு. இதில் சிவசுப்பிரமணியனும், சக்தி சரவணனும் மளிகைக் கடையை கவனித்துக்கொள்ள, மீனாட்சிசுந்தரம் அரசியலில் ஈடுபட்டுள்ளார். இரண்டு முறை கவுன்சிலராக பதவி வகித்த அவர், செய்தித் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் தீவிர ஆதரவாளர்.

இதற்கு, கை மேல் பலனாக ராஜபாளையம் நகர எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளர் பதவியும்  மீனாட்சி சுந்தரத்துக்குக் கிடைத்தது. ராஜபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் பதவியும் அவரைத் தேடிவந்தது. இவரது வளர்ச்சி ராஜபாளையத்தில் இருந்த மற்ற அ.தி.மு.க. பிரமுகர்களுக்கு ஆத்திரத்தைக் கிளப்பியது. இந்த நிலையில் மீனாட்சி சுந்தரம் உயிருக்குக் குறி வைக்கப்பட்டது.

  கடந்த ஆண்டு மே மாதம் 13-ம் தேதி அது நடந்தே விட்டது.  கவுன்சிலர் மீனாட்சிசுந்தரம் வழக்கம்போல் காலை 9.30 மணிக்கு ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் எதிரேயுள்ள தனது அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு டூ வீலரில் செல்ல கிளம்பியிருக்கிறார். அப்போது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த விருதுநகர் சீனிவாசன், நாதன், கிடா என்ற நீராத்திலிங்கம், ரமேஷ், தாமஸ் என்ற தமிழ்வளவன் ஆகிய 5 பேர் கத்தி, அரிவாளுடன் வந்து மீனாட்சிசுந்தரத்தை வழி மறித்து வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

‘‘ராஜபாளையம் திருவள்ளுவர் நகரில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடை பாரை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட இளைஞர் அணி நிர்வாகியான சீனிவாசன் என்பவருக்கு கவுன்சிலர் மீனாட்சிசுந்தரம் கடந்த 2013-ம் ஆண்டில் எடுத்துக் கொடுத்துள்ளார். அந்த பாரின் குத்தகை காலம் முடியவும், பணம் வாங்கிக்கொண்டு வேறு யாருக்கோ கைமாற்றிவிட கவுன்சிலர் மீனாட்சிசுந்தரம் முயற்சி செய்திருக்கிறார். இதையறிந்த  சீனிவாசன் தனது கூட்டாளிகளுடன் மீனாட்சிசுந்தரத்தின் அலுவலகத்துக்குச் சென்று அவரிடம் இந்த முறையும்  தனக்குத்தான் அந்த பாரை எடுத்துத் தர வேண்டும் என்று பேசியிருக்கின்றனர். ஒரு கட்டத்தில் சாதாரணமாக பேசிக்கொண்டிருந்தவர்கள் மத்தியில் திடீரென்று தகராறு ஏற்பட்டுள்ளது. நீ மட்டும்தான் வாழ வேண்டுமா? நாங்க எல்லாம் வாழக் கூடாதா? திருவள்ளுவர் நகர் பார் எனக்குக் கிடைக்கவில்லை என்றால் என் கையால்தான் வெட்டுப்பட்டு சாவாய் என்று சீனிவாசன் மிரட்டிவிட்டுச் சென்றுள்ளார். இதை எல்லாம் அவரது அலுவலகத்தின் பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தவர்கள் இரு தரப்பையும் விலக்கி விட்டிருக்கின்றனர். மீனாட்சிசுந்தரம் உயிருடன் இருந்தால், இந்த தடவை பார் நமக்குக் கிடைக்காது என்று நினைத்த சீனிவாசன் தனது கூட்டாளிகளுடன் சென்று கவுன்சிலர் மீனாட்சிசுந்தரத்தை பட்டபகலில் ரோட்டில் வைத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர்” என்று போலீஸ் தரப்பு அப்போது சொன்னது.

 மீனாட்சிசுந்தரத்தின் உறவினர்கள் கொலைக்குற்றவாளிகளை உடனே கைதுசெய்ய வேண்டும் என்று சாலை மறியல் செய்யவும் வத்திராயிருப்பு அருகே செண்பகத்தோப்பில் மறைந்திருந்த சீனிவாசன் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீஸார் கைதுசெய்தனர்.

இவை அனைத்தும் ஓராண்டுக்கு முந்தைய விஷயங்கள். ஆனால், இந்தக் கொலையில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு தொடர்பு இருப்பதாகச் சொல்லி வாட்ஸ்அப்பில் இப்போது ஒரு ஆடியோ வெளியாகி கலக்கி வருகிறது. அதைத்தான் மீனாட்சிசுந்தரத்தின் தம்பி சக்தி சரவணன்
சி.டி-யில் பதிவு செய்து பரப்பி வருகிறார். முதல்வர் பார்வைக்கும் இது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ராஜபாளையம் வந்த மு.க.ஸ்டாலினிடமும் இதைக் கொடுத்துள்ளார்கள்.

கவுன்சிலர் மீனாட்சிசுந்தரத்தின் அண்ணன் சிவசுப்பிரமணியன் வாட்ஸ் அப்பில் 10 ஆடியோக்களை வெளியிட்டுள்ளார். ‘‘அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி என்னைக் கொலை செய்துவிடுவாரா? என்னை யாராலும் கொல்ல முடியாது. என்னை ஆண்டவனால் மட்டுமே கொல்ல முடியும்” என்று பேசும் மீனாட்சிசுந்தரம், ‘‘துரைப்பாண்டியனை அந்த போஸ்ட்டிங்கில் போட்டால் போடட்டும், எனக்கு என்ன? அமைச்சர் கே.டி.ஆரு. என்ன செய்வாரு? என்னாலேயே ஒரு நகரச்செயலாளர் பதவியை வாங்க முடியவில்லை. அவர் மாவட்டம், மந்திரின்னு பதவி வாங்க எவ்வளவு கஷ்டப்பட்டாரோ?” என்று அந்த ஆடியோ பேச்சு முடிகிறது. இதைத்தான் மீனாட்சிசுந்தரம் குடும்பத்தினர் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு உள்ளனர்.

இது தொடர்பாக மீனாட்சிசுந்தரத்தின் அண்ணன் சிவசுப்பிரமணியத்தை சந்தித்துப் பேசினோம்.

 ‘‘எனது தம்பி மீனாட்சிசுந்தரத்தின் கொலைக்கு அ.தி.மு.க-வில் நிலவிய உட்கட்சி பிரச்னைதான் காரணம். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் மாவட்ட நிர்வாகியாக இருக்கும் சீனிவாசனுக்கு ஆளும் கட்சியாக அ.தி.மு.க இருக்கும்போது எப்படி என் தம்பி பார் ஏலம் எடுத்துக் கொடுப்பான்? பார் பிரச்னையால் இந்தக் கொலை சம்பவம் நடக்கவில்லை. மாவட்ட வேளாண்மை விற்பனை நிலையத் தலைவர் பதவிக்கு மீனாட்சிசுந்தரம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்திருக்கிறான். அதை திரும்ப கேட்கவும்தான் மீனாட்சிசுந்தரத்துக்கும், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆட்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால்தான் சீனிவாசன் மற்றும் அவனது கூட்டாளிகளை வைத்து கொலை செய்துவிட்டனர்” என்று சொல்கிறார் சிவசுப்பிரமணியன்.

இதுதொடர்பாக விருதுநகர் மாவட்ட எஸ்.பி. மகேஸ்வரனை தொடர்புகொண்டு கேட்டபோது, ‘‘மீனாட்சிசுந்தரம் கொலை தொடர்பாக 26.08.15 அன்று இமெயில் மூலம் எனக்கு புகார் அனுப்பியிருந்தார் அவரது அண்ணன் சிவசுப்பிரமணியன். இதையடுத்து ராஜபாளையம் டி.எஸ்.பி., தலைமையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. ராஜபாளையம் டி.எஸ்.பி., இந்த சிவசுப்பிரமணியனுக்கு சம்மன் அனுப்பியுள்ளார். அதில் நீங்கள் ஆஜர்படுத்துவதாக சொல்லியிருந்த கொலையான மீனாட்சிசுந்தரத்தின் செல்போன், மெமரிகார்டு, சிம் கார்டு ஆகியவற்றை 17.9.15-ம் தேதி மாலை 6 மணிக்குள் நேரில் வந்து சமர்ப்பிக்கும்படி கூறியுள்ளார். ஆனால் சிவசுப்பிரமணியன் வரவும் இல்லை. முக்கிய ஆதாரங்களான அவற்றை சமர்ப்பிக்கவும் இல்லை” என்றார்.

இதுதொடர்பாக அமைச்சர் கே.டி.ராஜேந்திர​பாலாஜியை தொடர்புகொண்டு பேசினோம். ‘‘சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் இதுபோன்ற வதந்திகளை எல்லாம் கிளப்பி விடுவார்கள். தே.மு.தி.க-வில் இருந்து வந்த மீனாட்சிசுந்தரத்துக்கு இந்த முறை அ.தி.மு.க சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட சிபாரிசு செய்ததே நான்தான். கவுன்சிலர் மீனாட்சிசுந்தரம் உடனே ராஜபாளையம் நகரச்செயலாளர் பதவி கேட்டார். இப்போதுதான் அ.தி.மு.க-வுக்கு வந்து இருக்கீங்க. உடனே பெரிய பொறுப்புகளை கொடுக்க முடியாது. கட்சியில் சீனியருங்க நிறைய பேர் இருக்காங்க. கொஞ்சம் பொறுமையாக இருங்கன்னு சொல்லி வெச்சேன். சரின்னு ஏத்துக்கிட்டார். மீனாட்சிசுந்தரம் மீது பெண்கள் விஷயம் உள்பட பல புகார்கள் இருப்பதாக இப்போதுதான் எனக்குத் தகவல்கள் வருகின்றன. பார் பிரச்னையால்தான் அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறாருன்னு போலீஸ்காரங்க கண்டுபிடிச்சு கொலையாளிங்களை கைதுபண்ணியிருக்காங்க. எனக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்தும் விதமாக சில விஷமிகள் இதுபோன்ற கீழ்த்தரமான வேலையை செஞ்சுக்கிட்டு வர்றாங்க.

 அவங்க அண்ணன் சிவசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள ஆடியோவில் என்கிட்ட ஒரே ஒரு முறை பேசிய பேச்சுத்தான் ரிக்கார்டு ஆகியிருக்கு. அதுவும் கட்சிக்காரங்களுக்கு ரேஷன்கடையில் வேலை போட்டு தர்றது சம்பந்தமா பேசுனாரு. அப்புறம் என்கிட்ட பேசலை. இப்போது கொலை நடந்த ஒரு வருஷம் கழிச்சு இந்த ஆடியோவை வெளியிடுறதுல ஏதோ உள்நோக்கம் இருக்கு. சரி, இப்போ 10 ஆடியோதான வெளியிட்டு இருக்காங்க. மீனாட்சிசுந்தரத்தின் செல்போனில் பேசிய மற்ற பேச்சு விவரங்கள் எல்லாம் எங்கே? ஏதோ பெரிய அளவில் திட்டமிட்டு என்னைப்பத்தி பேசிய ஆடியோவை மட்டும் வெளியே விட்டிருக்காங்க. என்னோட ஆளுங்ககிட்ட சில மாதம் முன்பு  யாரோ சிலர் இந்த ஆடியோவை வெச்சு பேரம் பேசியிருக்காங்க. என்னோட ஆட்கள் திட்டி அனுப்பிட்டதாக சொன்னாங்க. நானும் சரி விடுங்கன்னு சொல்லிட்டேன்.

ஏதோ பணத்துக்கு ஆசைப்பட்டு யாரோ தூண்டி விடுறாங்க. நீங்களே இந்த கொலை வழக்கை தீவிரமாக விசாரிச்சு உண்மையை வெளியே கொண்டு வாங்க!” என்றார்.

சிவசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள ஆதாரங்களில் பதவிகளைப் பெறுவதற்கு நடத்தப்பட்ட பேரங்கள் உள்ளன. ஆளும் கட்சி பிரமுகர் தனக்கு அமைச்சர் ஒருவரால் உயிர் பயம் உள்ளது என்கிறார், ஆளும் கட்சிக்காரர் பார்களை பணத்துக்கு விற்கிறார்.. இந்த மோசமான அரசியல் செய்கைகளை எப்படித் தடுக்கப் போகிறார் முதல்வர்?

- எம்.கார்த்தி
படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick