‘அன்புள்ள அப்பா... நீ எனக்கு வேணும்ப்பா!’

குடிகார அப்பாவை திருத்த பிள்ளைகளின் கடித வேண்டுகோள்!

‘அன்புள்ள அப்பாவுக்கு... குடிக்காதே அப்பா! நீ இல்லனா நானும் அம்மாவும் அனாதையா கஷ்டப்படணும்ப்பா. நான் சொன்னா நீ கேப்பனு எனக்குத் தெரியும்ப்பா! - இப்படிக்கு உன் நிழலில் வாழும் நானும் அம்மாவும்’ - இப்படியொரு ஒரு கடித போஸ்டரை அச்சடித்து ஒட்டியிருக்கிறார்கள் பள்ளி மாணவர்கள்.

கடலூர் மாவட்டம் கீழப்பாளையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள்தான் இப்படி மெய்சிலிர்க்க வைத்தவர்கள். இப்படி பிஞ்சுகளின் இதயத்தில் நற்செயலை புகுத்தியது பள்ளியின் ஆசிரியர் வசந்தன். அவரிடம் பேசினோம். ‘‘ஏழு ஆண்டுகளாக இங்கே பணியாற்றி வருகிறேன். மாணவர்களின் குறைகளை எழுதித் தரச்சொல்லி தீர்த்துவைப்பேன். அப்படித்தான் ஒரு பிரச்னையை என்னிடம் சொன்னார்கள். ‘எங்கள் வீட்டில் அடிக்கடி அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டை நடக்கிறது’ என இங்கே படிக்கும் 107 மாணவர்களில் 83 பேர் எழுதிக்கொடுத்தார்கள். விசாரித்தால் பிரச்னைக்குக் காரணம் மது! கிராமத்தில் பெரும்பான்மையானவர்கள் கூலிகள். வேலை முடிந்ததும் கூலியுடன் குவார்ட்டரையும் வாங்குகிறார்கள். 300 ரூபாய் வருமானத்தில் பாதி டாஸ்மாக் கடைக்குப் போய்விடும். ‘உடம்பு வலிக்காகக் குடிக்கிறேன்’ எனச் சொல்லி குடிநோயாளிகளாக மாறிவிட்டார்கள். மதுப்பழக்கத்தில் இருந்து மீட்டெடுக்கும் நெய்வேலி ‘அனானிமஸ் ஆல்கஹாலிக்ஸ்’ என்ற அமைப்பிடம் பேசினேன். அவர்கள் ‘குடிநோயாளிகளிடம் பேசியபோது, ‘எங்கள் பிள்ளைகளால்தான் குடிப்பழக்கத்தை நிறுத்தினாம்’ எனச் சொன்னதை என்னிடம் கூறினார்கள். பெரிய பிள்ளைகள் சொன்னதைக் கேட்டு குடியை நிறுத்தும் பெற்றோர்கள் ஏன் குழந்தைகள் சொன்னால் கண்டிப்பாகக் கேட்பார்கள் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதன் விளைவுதான் ‘அன்புள்ள அப்பாவுக்கு’ கடிதம். மாணவர்களைத் தினமும் கடிதம் எழுத வைத்து அவர்களின் பெற்றோர்களிடம் படித்துக் காட்டச் சொன்னோம். அடுத்து அந்த வாசகங்களை வீட்டுச் சுவரில் எழுதி ஒட்டவைத்தேன். குடிப்பவர்களின் மனதை மாற்ற தொடர்ந்து மாணவர்கள் கடிதம் எழுதினார்கள். இதைக் கேள்விப்பட்டு மற்ற பள்ளி மாணவர்களும் கடிதம் எழுதுகிறார்கள்’’ என்றார்.

‘அப்பா நீ எனக்கு வேணும்ப்பா! குடிச்சு நீ செத்துப் போயிட்டா நாங்க நடுத்தெருவுலதான் நிக்கணும்ப்பா. அப்புறம் எங்கள யாரு படிக்க வைப்பா? யாரு காப்பாத்துவாங்கப்பா? நானும் அம்மாவும் பிச்சை எடுக்கணுமாப்பா. அதுக்குப் பேசாம எங்கள சாகடிச்சுட்டு சந்தோஷமா நீ குடிப்பா? என்னைவிட உனக்கு சாராயம் பெருசில்லனு தெரியும்ப்பா. தயவு செஞ்சி குடிக்கிறத நிறுத்துப்பா’ என முதலில் கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள். அதன்பிறகு ‘எனக்காக இரண்டு நாட்கள் குடிக்காம இருந்ததற்கு நன்றி அப்பா (குடித்திருந்தாலும்)’ என தபால் அட்டைகளை போஸ்ட் செய்திருக்கிறார்கள். அதன்பின் ஒவ்வொரு வீட்டின் முன்பும் ‘அன்புள்ள அப்பா, நீ இல்லன்னா நானும் அம்மாவும் அனாதை ஆகிவிடுவோம்’ என வாசகம் பொருந்திய அட்டை வைத்திருக்கிறார்கள். தொடர்ந்து 50 நாட்களாக  தபால் எழுதுகிறார்கள். கடித வேண்டுகோளால் சுந்தர்ராஜன் என்பவர் குடியை நிறுத்தியிருக்கிறார்.

பிஞ்சுகளின் கடிதம் நெஞ்சைத் தொடுமா?

- மு.ஜெயராஜ், த.எழிலரசன்

படங்கள்: எஸ்.தேவராஜன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick