டி.ஜி.பி-க்கு சவால்விடும் ‘வாட்ஸ் அப்’ யுவராஜ் கதை!

திருச்செங்கோடு மலையில் வைத்து கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டு 100 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கில் தேடப்படும் சங்ககிரி யுவராஜ் தலைமறைவு ஆகியும் 100 நாட்கள் ஆகிவிட்டன. முன்பெல்லாம் தேடப்படும் குற்றவாளிகள் தங்கள் நிழலையோ, மூச்சுக்காற்றையோகூட யாரும் கண்டுபிடித்துவிடக் கூடாது என்று நினைப்பார்கள். ஆனால் யுவராஜ், வாரம் தோறும் வாட்ஸ் அப்பில் செய்திகளை வெளியிடுகிறார்; கடிதம் அனுப்புகிறார்; எந்த இடத்தில் இருக்கிறேன் என்று தைரியமாகச் சொல்கிறார். ஆடியோவில், போலீஸ் டி.ஜி.பி. அசோக்குமாருக்கே சவால்விடுகிறார். யுவராஜை பிடிக்க முடியவில்லையா, பிடிக்க நினைக்கவில்லையா என்று தெரியவில்லை.

யார் இந்த யுவராஜ்?

 சேலம் - கோயம்புத்தூர் பைபாஸ் சாலையில் உள்ள மஞ்சக்கல்பட்டி, யுவராஜின் ஊர்.

பி.சி.எஸ். படித்துவிட்டு விவசாயம் செய்தார். பின்னர், வங்கியில் கடன் வாங்கி ஜே.சி.பி ஒன்றை வாங்கினார். அதை விற்றுவிட்டாரா, காணாமல் போனதா எனத் தெரியவில்லை. பிறகு, ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியைச் செய்துவந்தார். இதைத் தொடர்ந்து, தனியரசுவின் கொங்கு இளைஞர் பேரவையில் 2008-ல் சேர்ந்தார். அதில் இருந்தே பரபரப்பு புகார்களில் இவர் பெயர் அடிபட ஆரம்பித்தது. இருவருக்கும் சில ஆண்டுகளில் மோதல் ஏற்பட்டது. 2011-ல் தனியரசுவின் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். சுவிதாவுடன் யுவராஜுக்குத் திருமணம் நடந்தது.

அடிதடி, ஆள் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் என ஏராளமான பிரிவுகளில் சங்ககிரி, குமாரபாளையம், கரூர், திருச்செங்கோடு, பெருந்துறை உள்ளிட்ட காவல் நிலையங்களில் யுவராஜ் மீது வழக்குகள் பதிவாகின.

‘ஈமு எதிர்ப்பு சங்கம்’ என்று ஆரம்பித்தார். ஈமுவை எதிர்க்கிறாரா, இல்லை ஈமு அதிபர்களை வளைக்கிறாரா என்ற சந்தேகம் பலருக்கும் வந்தது. இது சம்பந்தமாக அவர் மீது பல வழக்குகள் பதியப்பட்டு, கைதுசெய்யப்பட்டார். பிறகுதான், ‘தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை’ என்று கடந்த ஆண்டு ஆரம்பித்தார். கர்நாடகாவில் உள்ள ஒரு சட்டக்கல்லூரியில் சேர்ந்தார் யுவராஜ். ஆனால், சட்டப்படிப்பை முடிக்கவில்லை.

‘‘திருச்செங்கோடு பகுதியையே தன் கலாசாரக் கண்காணிப்பின் கீழ் வைத்திருந்தார். இளம் வயது ஆணும் பெண்ணும் ஜோடியாக நடந்து சென்றால், அவர்களைப் பிடித்து விசாரிப்பார். இருவரும் வேறு வேறு சாதியினராக இருந்தால், அவர்களை மிரட்டி, அடித்து உதைப்பார். இதற்கென தனியாக ஓர் இளைஞர் படையை வைத்திருந்தார்” என்று சொல்கிறார்கள் அந்த வட்டாரத்தில். எழுத்தாளர் பெருமாள்முருகனுக்கு தொல்லை கொடுத்த பின்னணியில் இவரும் இருந்ததாகச் சொல்கிறார்கள்.

தன்னுடைய சாதி மக்களுக்கு நல்லது செய்பவர்போல அவருக்கு உருவம் கிடைத்தது. சேலம், கரூர், நாமக்கல் பகுதிகளில் எந்தப் பிரச்னையாக இருந்தாலும், அதில் தலையிட்டுத் தீர்த்துவைக்கும் நிலைக்கு மாறினார். ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என சமூக வலைதளங்கள் மூலமாகவும் தன் புகழைப் பரப்பினார். கொங்கு கவுண்டர் சமுதாயத்துக்காக அதுவரை செயல்பட்டு வந்த ஈஸ்வரன், தனியரசு ஆகியோர் அரசியலுக்கு வந்துவிட்டதால் ஏற்பட்ட வெற்றிடத்தை யுவராஜ் பயன்படுத்திக்கொண்டார்.

 ‘‘பொறியியல் கல்லூரியில் ஒன்றாகப் படித்த கோகுல்ராஜும், சுவாதியும் நண்பர்கள். சுவாதியின் உறவினர் ஒருவர், யுவராஜின் அமைப்பில் இருந்தார். அவர்தான், கோகுல்ராஜ் - சுவாதி விவகாரத்தை யுவராஜின் கவனத்துக்குக் கொண்டுசென்றார். பிறகுதான், கோகுல்ராஜை கடத்திச் சென்றுள்ளனர்” என்கிறது போலீஸ்.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜை போலீஸார் தேடத் தொடங்கியதும் தலைமறைவாகி விட்டார். அந்த வழக்கின் விசாரணை அதிகாரி விஷ்ணுப்ரியாவை போனில் தொடர்புகொண்டு, வழக்கு சம்பந்தமாகவே பேசிய ஆடியோவை எடிட் செய்து சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டார். ‘போரிங்’ தொழிலுக்காக இந்தியா முழுவதும் வலம் வந்த யுவராஜ், அந்த நட்பு மூலமாகவே இப்போது இடங்களை மாற்றிக்கொண்டே இருக்கிறார். அங்கிருந்து தன் ஆதரவாளர்கள் மூலம் இந்த ஆடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

வடமாநிலத்தில் ஒருவருடைய வீட்டில் யுவராஜ் தலைமறைவாக இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாம். அங்கு தனிப்படை சென்று அவரது நடவடிக்கைளை கண்காணித்து வருகிறது. அவரது சொத்துகளை முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் போலீஸ் சொல்ல ஆரம்பித்துள்ளது. அதற்குள் எத்தனை வாட்ஸ் அப் மெசேஜ் வரப்போகிறதோ?

- எஸ்.மகேஷ்,
மா.அ.மோகன் பிரபாகரன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick