அசைவ உணவு - ஃபேஸ்புக் - லெக்கின்ஸ் - வாட்ஸ் அப்.... அத்தனைக்கும் ஆப்பு

கொந்தளிக்கும் மாணவர்கள்

“காலையில, காலேஜ் வாசல்ல நான்-டீச்சிங் ஸ்டாஃப் வந்து நிக்கிறாங்க. ஒவ்வொரு மாணவியும் எப்படி ட்ரெஸ் பண்ணிட்டு வர்றாங்கனு வாட்ச் பண்றாங்க. யாராவது லெக்கின்ஸ் போட்டுவந்தாலோ, டாப்ஸ் போட்டுட்டு வந்தாலோ உடனே மடக்கிருவாங்க. ‘நீ காலேஜுக்கு படிக்கவர்றியா இல்ல, .........க்கு வர்றியா?’னு எல்லோர் முன்னாடியும் அசிங்கமாக கேக்குறாங்க”னு கொந்தளித்தார்கள்

சென்னை அருகே ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரி உள்ளது. அங்கு, மாணவர்களுக்கான சுற்றறிக்கை  ஒன்றை கடந்த வாரம் அனுப்பியது கல்லூரி நிர்வாகம். அதில், ‘பிறந்த நாள் கொண்டாடக் கூடாது, ஆண்களுடன் பெண்கள் பேசக் கூடாது, ஃபேஸ்புக், வாட்ஸ்அப் பயன்படுத்தக் கூடாது, பெண்கள் லெக்கின்ஸ் அணியக் கூடாது, காரிலோ பைக்கிலோ வரக் கூடாது என்பது உட்பட இதுபோன்ற 22 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன.
இதைக் கண்டித்து, அந்தக் கல்லூரியின் மாணவர்கள் கடந்த 29-ம் தேதி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களைச் சந்தித்தோம். “காலேஜ் நிர்வாகம் எங்களுக்குக் கொடுக்குற டார்ச்சர் கொஞ்சநஞ்சமல்ல. 50-க்கும் மேற்பட்ட நான்-டீச்சிங் ஸ்டாஃப்ஸ் இருக்காங்க. மாணவர்களைக் கண்காணிக்கிறது மட்டும்தான் அவங்க வேலையே. எதுக்கெடுத்தாலும் அபராதம் போடுறாங்க. ‘காலேஜுக்கு செல்போன் கொண்டு வந்தாரு, முடிவெட்டாமல் வந்தாரு’னு கோகுல்னு ஒரு மாணவருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் போட்டாங்க” என்று குமுறினார் ஒரு மாணவர்.

இன்னொரு மாணவரிடம் பேசினோம். “பாலு என்று நான்-டீச்சிங் ஸ்டாஃப் ஒருத்தர் இருக்கார். அவரோட தலைமையிலதான் மற்ற எல்லாரும் இயங்குறாங்க. வகுப்பு நடந்திட்டு இருக்கும்போது, ரவுண்ட்ஸ் வருவாங்க. போன வாரம் வகுப்புல ஒரு பொண்ணுகிட்ட நோட் கேட்டேன். அதை ரவுண்ட்ஸ் வந்தவங்க பாத்துட்டு பாலுகிட்ட கூட்டிட்டுப் போனாங்க. அவர் அசிங்கமா திட்டினாரு. அதுக்கப்புறம் எங்க அப்பா, அம்மாவைக் கூட்டிட்டு வரச்சொல்லி, என்னையும் அந்தப் பொண்ணையும் திட்டுனாங்க. ஒரு பொண்ணும் பையனும் பேசிக்கிறது அவ்வளவு பெரிய குற்றமா?” என்றார்.

மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர், “புதுசா நிறைய ரூல்ஸ் போட்டுருக்காங்க. இன்டர் காலேஜ் போட்டிகளுக்குப் போன கேர்ள்ஸும், பாய்ஸும் சேர்ந்து போட்டோ எடுத்து ஃபேஸ்புக்ல போட்டாங்க. அவங்க எல்லோரையும் மிரட்டி பாஸ்வேர்டை வாங்கிட்டாங்க. ஃபேஸ்புக் அக்கவுண்ட்டை ஓபன் பண்ணி, அவங்க சாட் பண்ணினதை எல்லாம் ப்ரின்ட் எடுத்து பேரன்ட்ஸ்கிட்ட காட்டியிருக்காங்க. இவங்க காலேஜ் நடத்துறாங்களா? இல்லை, போலீஸ் ஸ்டேஷன் நடத்துறாங்களா?” என்று கொந்தளித்தார்.

இந்த மாணவர்களுக்கு ஆதரவாகப் போராடிவரும் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் தேசியச் செயலாளர் கவிதா கிருஷ்ணன் நம்மிடம், “இந்தக் கல்லூரியின் அடிமைத்தனமான கட்டுப்பாடுகள் பற்றி நிறைய புகார்கள் வருகின்றன. இது கல்லூரியா? இல்லை சிறையா என்ற சந்தேகம் வருகிறது. ஆடை சுதந்திரத்துக்காக மட்டும் இந்த மாணவிகள் போராடவில்லை. தங்களின் சுயபாதுகாப்புக்காகவும் போராடுகிறார்கள். மாணவிகளைத் தனிமைப்படுத்துவதன் மூலம் அவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறி ஆக்குகிறார்கள். கல்லூரி நிர்வாகம் இப்படி நடந்துகொள்வது ஒரு வகை வன்கொடுமை” என்று குற்றம்சாட்டினார்.

இந்தக் கல்லூரியின் முதல்வர் ஜெயக்குமாரிடம் பேசினோம். “அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கிய விதிகளைத்தான் நாங்களும் பின்பற்றுகிறோம். எல்லா கல்லூரிகளிலும் மெக்கானிக்கல் பிரிவில் ஆண்கள் மட்டுமே படிப்பார்கள். அந்த மாணவர்கள் வேறு பிரிவு பெண்களுடன் பேச முற்படும்போது, தேவையில்லாத பிரச்னை உருவாகிறது. எனவேதான், மாணவர்களும் மாணவிகளும் பேச வேண்டாம் என்கிறோம். ஒரே வகுப்பில் படிக்கும் ஆண்களும் பெண்களும் பேசுவதற்குத் தடை இல்லை. மாணவிகள் லெக்கின்ஸ் போன்ற உடைகளை அணிந்துவந்தால், மாணவர்களில் கவனம் சிதறும் வாய்ப்பு இருக்கிறது. வெறும் 60 பேர் மட்டுமே போராட்டம் நடத்துகிறார்கள். அதுவும் நியாயமான விஷயத்துக்காக அல்லாமல், பெண்களின் ஆடைக்காகப் போராடுகிறார்கள். எங்கள் கல்லூரியின் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாத சிலர், மாணவர்களைத் தூண்டிவிட்டுள்ளார்கள்” என்றார்.

- ஆ.நந்தகுமார்
படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick