நான் தற்கொலைக்கு முயன்றபோது தடுத்தவர் விஷ்ணுப்ரியா!

கண்ணீர் கதை சொல்லும் யுவராஜ் மனைவி!

காட்டுக்குள் இருந்து கேசட் விட்டார் வீரப்பன். தொழில்நுட்பம் மலர்ந்து நாட்டுக்குள் இருந்தே வாட்ஸ் அப் விடுறார் யுவராஜ்!

‘இன்னைக்கு யுவராஜ் வாட்ஸ் அப் வந்திருக்கா?’ என்று கேட்கும் அளவுக்கு போலீஸுக்குத் தினமும் ‘ஆட்டயம்பட்டி முருக்கு’ கொடுத்துக்கொண்டு இருக்கிறார் யுவராஜ். கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்படும் அவர், விஷ்ணுப்ரியா தற்கொலை வழக்கில் இன்னும் டென்ஷனை ஏற்றிவருகிறார். இந்த நிலையில், யுவராஜின் மனைவி சுவிதாவைச் சந்தித்தோம்.

சேலம் சங்ககிரியில்  தன்னுடைய இரண்டு குழந்தைகளோடு ஒரு வாடகை வீட்டில் இருக்கிறார் சுவிதா. நீண்ட தயக்கத்துக்குப் பிறகு நம்மிடம் பேசினார்.

‘‘தலைமறைவு ஆன பிறகு யுவராஜ் இதுவரை உங்களிடம் பேசவே இல்லையா?”

‘‘சத்தியமா இல்லங்க. ஜூன் 23-ம் தேதி நைட்டு வீட்லதான் இருந்தார். 24-ம் தேதி காலையில வழக்கம்போல ஆபீஸ் கிளம்பிப் போனார். இரண்டு மூன்று முறை போன் பண்ணி எப்பவும் போலத்தான் பேசினார். சாயங்காலத்துல இருந்து அவருடைய போன் சுவிட்ச் ஆஃப். அதற்குப் பிறகு என்ன நடந்துச்சுன்னு எங்க யாருக்குமே தெரியல. ஆனா போலீஸ்காரங்க, என் கொழுந்தனார் (யுவராஜின் தம்பி தங்கதுரை), மாமனார், மாமியார், என் அம்மா, அப்புறம் அமைப்புல உள்ள பொருளாளர், செயலாளர், அவருடைய வாட்ஸ் அப் குரூப்ல இருந்த ஆட்கள்னு 200-க்கும் மேற்பட்டவங்களை விசாரணைக்கு அழைச்சுக்கிட்டு போனாங்க. அதில் பலரை அடிச்சு துன்புறுத்தி இருக்காங்க. என் கொழுந்தனார் எந்தப் பிரச்னைக்கும் போகாதவர். அவர்மேல ஒரு கேஸ்கூட கிடையாது. அவரை 15 நாள்கள் புடிச்சுவெச்சிருந்துட்டு, அப்புறமா குண்டாஸ் போட்டாங்க!”

‘‘உங்களை போலீஸ் விசாரித்ததா?”

‘‘என்னையும் அழைச்சுக்கிட்டுப் போய் விசாரிச்சாங்க. என்னை 10 நாட்களா தினமும் காலையில திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வரச்சொல்லி, கேட்ட கேள்வியையே திரும்பத்திரும்ப கேட்டாங்க. தெரிஞ்சாதானே சொல்லமுடியும்? ராத்திரி பத்தரை மணிக்குத்தான் அனுப்புவாங்க. கொச்சையான வார்த்தையில திட்டுவாங்க. அதுக்கப்புறம்  வீட்டுக்கு வர ஆரம்பிச்சிட்டாங்க. தினமும் ரெண்டு மூணு டீம் எங்க வீட்டுக்கு வந்துகிட்டே இருந்தாங்க. எல்லோரும் கலர் ட்ரெஸ்ல வந்ததால வர்றது போலீஸான்னே தெரியாது. நைட்டு 10.30 மணிக்குமேல வந்து கதவைத் தட்டுவாங்க, வீட்டுமேல கல்லெறிஞ்சாங்க. இப்படி டார்ச்சர் பண்றத்துக்குப் பதிலாக என்னை ஜெயிலுக்குள்ள போடுங்கனு சொல்லிப் பார்த்தேன். ஆனா, அவுங்க விடுறமாதிரி தெரியல. அனுமதி இல்லாம வீட்டுக்கு வந்துகிட்டே இருந்ததால வீட்டுல கேமரா வைக்கலாம்னு முடிவு பண்ணோம். ஆனா அதை டி.எஸ்.பி ராஜு தடுத்தார். இந்தத் தொந்தரவு தாங்காமத்தான் வாடகை வீட்டுக்கு மாறினோம். அவருக்குக்கூட இது தெரியாது.

அவர் உயிரோட இருக்காரான்னே சந்தேகமா இருந்துச்சு. பயந்துகிட்டே இருந்தேன். அவர் கடைசியா பேசுன ஆடியோவுல தேதியை சொன்னதுக்கு அப்புறம்தான் எனக்கு நம்பிக்கையே வந்துச்சு.”

‘‘டி.எஸ்.பி விஷ்ணுப்ரியா தற்கொலை செய்ததைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”

‘‘அவங்க அவ்வளவு நல்லவங்க. என் கணவருடைய 37 நிமிஷ ஆடியோ ஒண்ணு வெளியாகி இருந்த நேரத்துல ஒருநாள் முதன்முதலா எங்க வீட்டுக்கு வந்தாங்க. அப்ப வயலுக்கு நடுவுல இருந்த எங்க வீட்டை பாத்துட்டு, ‘இதுக்குள்ள எப்படி இருக்கீங்க?’னு கேட்டாங்க. அப்புறம், பசங்களைப் பார்த்து ஹாய்னு சொல்லிட்டு, ‘பசங்கள நல்லா பாத்துக்கோங்க. யுவராஜ் உங்ககூட கான்டாக்ட்ல இல்லங்கிறது எனக்கு நல்லா தெரியும். நீங்க வாட்ஸ் அப்ல யுவராஜுக்குப் பேசணும். அவரை சரணடையச் சொல்லி சம்திங் திரட்னிங் பண்ணாதான் பிரச்னை சால்வ் ஆகும்’னு சொன்னாங்க. அதுக்கு நான் ஒப்புக்கலை.

அதுக்குப்பிறகு போலீஸ், என் குழந்தைங்க படிக்கிற ஸ்கூலுக்கும் போக ஆரம்பிச்சுட்டாங்க. அதனால ஸ்கூல்ல என்னைக் கூப்பிட்டு, ‘இங்கே போலீஸ் வந்துக்கிட்டே இருந்தா, பசங்களை நிறுத்திக்கோங்க’னு சொல்லிட்டாங்க. நான் வீட்டுல இல்லாத நேரத்துல போலீஸ் வந்து என் கணவரோட துணியை எடுத்துட்டு போயிட்டாங்க. ‘அதுல ரத்தக்கறை இருக்கு. அதை நீதான் வாஷ் பண்ணியிருக்க. அதுனால உன்மேல கேஸ் போடுவோம்’னு மிரட்டுனாங்க. அதுக்குப்பிறகுதான், ஸ்கூலுக்கு போலீஸ் போனா குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்குவேன்னு ஆர்ப்பாட்டம் செய்தோம். என் புள்ளைங்களை ஸ்கூலைவிட்டு நிறுத்துனது, எனக்குப் பெரிய அவமானமா போயிடுச்சு. நான் தற்கொலை பண்ணிக்கலாம்னு மருந்தெல்லாம் கரைச்சுட்டேன். ஆனா, என் அம்மா தடுத்துட்டாங்க. இதை மறுநாள் சனிக்கிழமை விசாரணைக்கு வந்த டி.எஸ்.பி மேடத்துக்கிட்ட எங்க அம்மா சொல்லி அழுதாங்க. ‘அதெல்லாம் ஒண்ணும் இல்ல. பசங்களை ஸ்கூலுக்குப் போக விடாம நிறுத்தினாலாவது யுவராஜ் வருவாரானு பாக்குறோம். இதுக்காக தற்கொலை முயற்சிக்கலாம் போகலாமா..?’னு அட்வைஸ் பண்ணுவாங்க,  வீட்டுக்குப் போனதுக்கு அப்புறமும் போன் பண்ணி அட்வைஸ் பண்ணாங்க. மறுநாளும் வீட்டுக்கு வந்து, ‘உங்க பசங்க ஸ்கூலுக்குப் போறதுக்கு நான் ஏற்பாடு பண்றேன். அதிகாரிகள்ட்ட பேசுறேன்’னு சொல்லிட்டுப் போனாங்க.

அப்புறம் ரெண்டுநாள் கழிச்சு வீட்டுக்கு வந்த போலீஸ், நாங்க குடியிருக்கிற ஓனர்கிட்ட வந்து மிரட்டினாங்க. வீட்டு ஓனரும் பயந்துபோய் வீட்டை காலி பண்ணிக்குங்கனு சொல்லிட்டாங்க. அப்பதான் நான் விஷ்ணுப்ரியா மேடத்துக்கு கால் பண்ணி, ‘என்னால முடியல. பசங்களை ஸ்கூலவிட்டு நிறுத்துனாங்க. இப்போ என்னை வீட்டைவிட்டு காலி பண்ணச்சொல்லிட்டாங்க. நானும் என் குழந்தைங்களும் சாகறதைத் தவிர வேற வழி இல்ல’னு சொன்னேன். விஷ்ணுப்ரியா மேடம் உடனே எங்க அமைப்புல உள்ள ஆட்களுக்கு போன் பண்ணி, சுவிதா இதுமாதிரியான மனநிலையில இருக்காங்க. உடனடியாகப் போய் காப்பாத்துங்கனு சொல்லிருக்காங்க. அடுத்த அஞ்சு நிமிஷத்துல அமைப்புல இருந்து வந்துட்டாங்க. அதுக்குப்பிறகு நான் மேடத்துகிட்ட பேசவே இல்லை. அவங்களும் பேசலை. எனக்கு அட்வைஸ் பண்ண அவங்க தற்கொலை பண்ணிகிட்டாங்கனு நினைக்கும்போது ரொம்ப கவலையா இருக்கு’’ என்ற சுவிதாவின்  கண்களில் நீர் பெருக்கெடுத்துவிட்டது.

‘‘டி.வி-யில என்னென்னவோ போடுறாங்களே, அவரை சுட்டுடுவாங்களாங்க?’’ என்று அப்பாவியாக கேட்கும் சுவிதாவுக்கு யுவராஜ்தான் பதில் சொல்ல வேண்டும்!

- எம்.புண்ணியமூர்த்தி
படம்: க.தனசேகரன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick