சித்ரவதைக் கூடமாகும் சிறைக்கூடம்!

மீறப்படும் மனித உரிமைகள்

குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களைத் திருத்தும் பாடசாலையாக இருக்கவேண்டிய சிறைச்சாலைகள், சித்ரவதைக் கூடங்களாக மாறிவருவதாகக் கைதிகள் தரப்பில் குமுறல்கள் எழத்தொடங்கி இருக்கின்றன.

தமிழக சிறைகளில் கைதிகள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பது குறித்து சிறை வட்டாரங்களில் விசாரித்தோம். அப்போது, நமக்குக் கிடைத்த தகவல்கள் கடும் அதிர்ச்சி ரகம்.

“ஒரு கைதி சிறைக்குள் நுழைந்ததில் இருந்து சித்ரவதைகள் தொடங்கிவிடுகின்றன. காலை 7 மணி அளவில் காலை உணவும், முற்பகல் 12 மணிக்குள் மதிய உணவும் கைதிகளுக்கு வழங்கப்படுகின்றன. பெரும்பாலும் அந்தச் சமயங்களில்தான், சிறப்புப் படையினர் சோதனை செய்கிறார்கள். ஆனால், உணவு நேரத்தில் சோதனை நடத்துவது மனித உரிமைகளை மீறும் செயல் என்று விதி இருக்கிறது. அது சாதாரண சோதனை அல்ல, கைதிகளை ஜட்டியோடு உட்காரவும் எழவும் சொல்வார்கள். பின்னர் உரை மாட்டிய கைகளைக் கொண்டு, கைதியின் மலத்துவாரத்துக்குள் சோதனை செய்வார்கள். அது மிகவும் கொடுமையாக இருக்கும். அதே கையைக்கொண்டு, அப்படியே கைதியின் உணவையும் சோதனை செய்வார்கள். அந்த உணவைத்தான் கைதிகள் சாப்பிட வேண்டும்” என்கிறார், சிறைக் கைதிகள் உரிமை மையத்தின் இயக்குநர் வழக்கறிஞர் புகழேந்தி.

மேலும் பல அதிர்ச்சித் தகவல்களைச் சொன்னார் புகழேந்தி. “சிறைக்குள் உள்ள மருத்துவமனைகள் பெயர் அளவுக்கே செயல்படுகின்றன. வெளியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும் என்றால், ஆயிரத்தெட்டு விதிமுறைகள். தண்டனை பெற்ற நோயுற்ற கைதிகள் தங்களின் கடைசிக்காலத்தை குடும்பத்தினருடன் கழிக்க அனுமதிக்கலாம். அதற்கு கைதிகளில் பலர் விண்ணப்பம் செய்வார்கள். அதை சிறை அதிகாரிகள் கண்டுகொள்ள மாட்டார்கள். அனுமதி வரும் நேரத்தில் அந்தக் கைதி செத்தே போய்விடுவார். கேரளாவைச் சேர்ந்த திருமுருகன் என்பவர், கொலை வழக்கு ஒன்றில் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். ஆயுள்தண்டனை வழங்கப்பட்டு 9 ஆண்டுகள் சிறைவாசமும் அனுபவித்துவிட்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்துவிட்டன. அவரை குடும்பத்துடன் வாழ அனுமதிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம், 2014 பிப்ரவரியில் உத்தரவிட்டது. அதை சிறைத் துறை மதிக்கவே இல்லை. அவர், சிறைக்குள்ளேயே இறந்துவிட்டார்.

தடைசெய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் சிறைக்குள் தாராளமாகக் கிடைக்கின்றன. அதற்கு சிறைத் துறையினரே முக்கியக் காரணம். பணத்துக்கு ஆசைப்படும் சிறைக் காவலர்கள், வார்டன்கள், ஜெயிலர்கள் மூலமாக செல்போன்கள், போதைப்பொருட்கள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் என எல்லாம் கிடைக்கின்றன. கடலூர் சிறையில் கஞ்சா விற்பனை தொடர்பாக, கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் 2007-ம் ஆண்டு ஒருவர் கொல்லப்பட்டார். அதில், ஜெயிலர் சேகர் உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது” என்றார்.

 “தமிழக சிறைத் துறை சார்பில் நடத்தப்படும் ஃப்ரீடம் பஜார் சிறப்பாகச் செயல்படுகிறது. ஆனால், அங்கு பணியாற்றும் கைதிகளுக்கு (டெய்லரிங் தவிர)நான்கு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதுபோல, சிறைக்குள் பல்வேறு வேலைகள் செய்யும் கைதிகளின் சம்பளத்தில் 50 சதவிகிதம் அவர்களின் உணவுக்கும், 20 சதவிகிதம் அவரால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும், 20 சதவிகிதம் கைதிகளின் சம்பளத்துக்கும் என வழங்கப்படும். கடந்த 20 ஆண்டுகளாக, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குப் பணம் வழங்கப்படவில்லை. இது, 100 கோடி ரூபாயைத் தாண்டும்”  என்கிறது சிறை வட்டாரம்.

இவ்வளவு கொடுமைகளும், அநியாயங்களும் சிறைகளுக்குள் நடக்கும்போது, இதற்குப் பொறுப்பானவர்கள் ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை.

சிறைத் துறை உயரதிகாரி ஒருவர், “புழல் சிறையில் சமீபகாலமாக கைதிகளுக்கும் சிறைக் காவலர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் நடக்கிறது. சில அதிகாரிகள் மீது எங்களுக்குப் புகார்கள் வந்துள்ளன. அது குறித்து விசாரித்துவருகிறோம். மனநிலை பாதிக்கப்பட்ட கைதிகள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. பெண்கள் சிறைகளில் பெரும்பாலும் பெண் வார்டன்களே இருக்கிறார்கள். ஒருசில இடங்களில் ஆண்கள் இருக்கிறார்கள். அதை விரைவில் சரிசெய்வோம்.” என்றார்.

ஜெயிலர் இளவரசனின் கருத்தைக் கேட்க அவரது செல்போன் எண்ணுக்கு முயற்சித்தோம். பேச முடியவில்லை.

- எஸ்.மகேஷ்


பெண்கள் சிறையில் ஆண் வார்டன்கள்!

‘‘பெண்கள் சிறையில் நடக்கும் கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல. பெண்கள் சிறையில் ஆண் வார்டன்களும், ஆண் ஜெயிலர்களும் பணி அமர்த்தப்படுகிறார்கள். இதனால், சிறைக்கு உள்ளேயே பாலியல் கொடுமைகள் நடக்கின்றன. திண்டிவனம் பெண்கள் கிளைச் சிறையில் பாலியல் வன்கொடுமைச் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அதுதொடர்பாக சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, ‘இனிமேல் பெண்கள் சிறையில் ஆண் அதிகாரிகள் பணி அமர்த்தப்பட மாட்டார்கள்’ என்றார். ஆனால், அது நடைமுறைக்கு வரவில்லை. வேலூர், சேலம் உள்ளிட்ட சில பெண்கள் சிறைகளில் ஆண் அதிகாரிகள் இருக்கிறார்கள்’’ என்கிறது சிறைத் துறை வட்டாரம்.

கைதிகளுக்கு  தூக்க மாத்திரை!

‘‘கைதிகளில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ்நாட்டுச் சிறைகளில் 100-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்களை நடத்தும் விதம் படுமோசம். அவர்களை தனி அறையில் அடைத்துள்ளனர். அவர்களுக்கு ஜட்டியைத் தவிர வேறு எந்த ஆடையும் வழங்கப்படுவதில்லை. அவர்களுக்கு அதிக அளவில் தூக்க மாத்திரைகள் கொடுக்கப்படுகின்றன. அதனால், நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டு மரணத்தைத் தழுவுகிறார்கள். 2013-ல், வேலூர் சிறையில் மனநலம் பாதிக்கப்பட்ட கைதி ஒருவர் கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்துகொண்டார்’’ என்கிறது சிறைத் துறை வட்டாரம்.

‘உங்களை கொல்லாமல் விடமாட்டேன்!’ - ஜெயிலர் மிரட்டினாரா?

சென்னை புழல் சிறைச்சாலையில் சில நாட்களுக்கு முன்பு கலவரம் நடந்தது. ஜெயிலர்தான் அந்தக் கலவரத்துக்குக் காரணம் என்று ஒரு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் ‘தடா’ ரகீம் நம்மிடம் பேசினார்.

“முஸ்லிம் கைதிகள் சிறைத் துறையினரால் திட்டமிட்டு தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள். சமீபத்தில் ஒருநாள், உயர் பாதுகாப்பு அறை பகுதி 2-ல் அடைக்கப்பட்டு இருந்த போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், பகுதி 1-ல் அடைக்கப்பட்டு இருந்த காஜா, அபு, நவாஸ், ஹக்கீம் மற்றும் பொது பிளாக்கில் இருந்த மண்ணடி அப்துல்லா ஆகியோரை சிறைக்கண்காணிப்பாளர் அழைப்பதாக சிறைக் காவலர்களும், வார்டன்களும் அழைத்துச் சென்றுள்ளனர். அவர்களிடம் ஜெயிலர் இளவரசன் மற்றும் வார்டன்கள், சிறைக்காவலர்கள் என மொத்தம் 25-க்கும் மேற்பட்டோர் தரக்குறைவாகப் பேசியுள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தாக்குதலில் இருந்து தப்பிக்க உயர் பாதுகாப்பு பகுதி 1-க்குள் சென்று கைதிகள் தாழிட்டுள்ளனர். அங்கு கைதிகளின் எண்ணிக்கையை சரிபார்த்த மாரியும், குமாரும் சிறைக்குள் சிக்கிக்கொண்டனர். அதைச் சிறைப்பிடித்ததாகச் சொல்லிவிட்டனர்.

சில மாதங்களுக்கு முன்பு பிலால் மாலிக் தற்கொலை செய்துகொண்டதாக மைக்கில் சொல்லப்பட்டுள்ளது. எந்த நோக்கத்துக்காக அப்படிச் சொன்னார்கள் என்று தெரியவில்லை. இதுதொடர்பாக ஏ.டி.ஜி.பி-யிடம் மனுக் கொடுத்துள்ளேன். வேறு சிறைக்கு மாற்றப்பட்ட கைதிகள் மீண்டும் அங்கு தாக்கப்பட்டுள்ளனர். புழல் சிறையில் உள்ள அபுதாகீர், ஹக்கீம், நவாஸ் ஆகியோரை தனி அறையில் ஜட்டியோடு நிற்க வைத்து அவர்களிடம், ‘எஸ்.பி ராஜேந்திரன் இன்னும் சில தினங்களில் ஓய்வுபெற்றுவிடுவார். அதன்பிறகு இவர்களை கொல்லாமல் விடமாட்டேன்’ என்று இளவரசனும் சில சிறைத் துறை காவலர்களும் சொல்லி இருக்கிறார்கள். சிறையில் சுரங்கப்பாதை அமைக்க முயன்றதாகவும் கதைகட்டுகிறார்கள்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick