“மாற்றம் வேண்டும்!”

சட்டமன்றத் தேர்தல்போல நடிகர் சங்கத் தேர்தல்!

ட்டமன்றத் தேர்தலுக்கு இணையாக பரபரத்துக்கொண்டிருக்கிறது நடிகர் சங்கத் தேர்தல்!

கடந்த 2-ம் தேதி... ஒரேநாளில் சரத்குமார் அணியும், விஷால் அணியும் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்து விட்டன. சரத்குமார் அணியின் கமிட்டிக் கூட்டம், நடிகர் சங்கம் அருகிலுள்ள ஒரு மண்டபத்தில் நடந்தது. நடிகர் சங்க உறுப்பினர்கள் பார்வையாளர்களாக இருக்க, மேடையில் தலைவருக்கு பதவிக்கு போட்டியிடும் சரத்குமார், பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் ராதாரவி ஆகியோர் மட்டும் அமர்ந்து இருந்தனர். ‘நடிகர் சங்கத் தேர்தல் வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு ஓட்டுக்கு 1,000 ரூபாயை எதிர் அணியினர் கொடுத்துள்ளனர். எல்லோரும் இங்கே கூட்டத்தை முடித்துவிட்டு, அங்கே செல்வதற்கு முன், சாப்பிட்டுவிட்டுப் போங்கள். அங்கே போய் பட்டினியாக நிற்காதீர்கள்’’ என்று பேச்சை தொடங்கினார் ராதாரவி.

அப்போது சரத்குமார் ஒரு துண்டுச்சீட்டில் ஏதோ எழுதி ராதாரவியிடம் நீட்டினார். அதைப் படித்துப் பார்த்த ராதாரவி, ‘‘தலைவர் சரத்குமார், என்னை தவறான வார்த்தையில் பேச வேண்டாம் என்று எழுதிக் கொடுத்து இருக்கிறார். சிங்கத்தை கர்ஜிக்காமல் இருக்கச் சொன்னால் எப்படி? யானையை பிளிறாமல் இருக்கச் சொன்னால் எப்படி?” என்று எதிர்க் கேள்வி கேட்டார். அப்போது சரத் அணியின் சார்பில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சிம்பு கூலிங்கிளாஸுடன் என்ட்ரி ஆனார். இவர்கள் குழுவில் சிம்புவுக்கு முக்கிய இடம் தரப்பட்டு உள்ளது! ஒரு வழியாக கமிட்டிக் கூட்டம் முடிந்தபின் மீடியாவை சந்தித்த சரத்குமார், ‘விஷால் அணியை கமல்ஹாசன் தூண்டிவிடுகிறார்’ என்று கமல்மீது குற்றச்சாட்டு வைத்தார்.

ராதாரவியோ, ‘‘நாங்கள் நிச்சயமாக ஜெயிப்போம். அதன்பின்பு நடிகர் சங்கக் கட்டடத்தை நாங்களே கட்டுவோம்” என்று சூளுரைத்தார்.

அதேநாளில் ரஜினிக்குச் சொந்தமான ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் விஷால் அணியின் கூட்டம் நடந்தது. தலைவர் பதவிக்கு நாசர், பொதுச் செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணைத் தலைவர்களாக பொன்வண்ணன் - கருணாஸ் போட்டியிடுகின்றனர். விஷால் அணிக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்த குஷ்பு ஆப்சென்ட். அவருக்குப் பதில் சுந்தர்.சி ஆஜர். சச்சு மேடையில் அமர்ந்து இருந்தார். ஆர்யா, ‘ஜெயம்’ ரவி, விஷ்ணு, விக்ராந்த், விமல், சந்தானம், சூரி என்று இளம் நடிகர்கள் கூட்டம் நிரம்பியது. 

‘‘இந்த நடிகர் சங்கத்துக்கு பெரிய வரலாறு இருக்கிறது. அன்றைய முக்கியத் தயாரிப்பாளரான ஜெமினி எஸ்.எஸ்.வாசன், கே.பி.சுந்தராம்பாளை சந்தித்து ‘ஒளவையார்’ படத்தில் நடிக்க அழைத்தார். அப்போதே 4 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்தார். கே.பி.சுந்தராம்பாள் இலங்கைக்குச் சென்று ஒரு லட்சம் பேர் நடுவில் மைக் இல்லாமல் பாட்டுக் கச்சேரி நடத்தி, அதில் கிடைத்த பணத்தை நடிகர் சங்கத்துக்குக் கொடுத்தார். சுந்தராம்பாள் மட்டுமல்ல, எம்.ஜி.ஆர்., சிவாஜி, எஸ்.எஸ்.ஆர் ஆகியோரும் நாடகம் மற்றும் சினிமாவில் நடித்து வாங்கிய நிலத்தில் கட்டிய கட்டடம் இப்போது காணாமல் போய்விட்டது” என்று வருத்தத்துடன் பேசினார், நடிகர் சிவகுமார்.

சத்யராஜ், திடீர் பிரவேசம் செய்தார். ‘‘நடிகர் சங்கத்தில் மாற்றம் வரவேண்டும். புதியவர்களுக்கு பழைய ஆட்கள் விட்டுக்கொடுக்க வேண்டும்” என்றார். இந்தக் கூட்டத்துக்கு வந்த வடிவேலு, ‘ஒருநாள் நடிகர் சங்கத்துப் பக்கம்போய் எட்டிப் பார்த்தால் அங்கே இருக்குற பில்டிங்கையே காணோம். என்னோட படத்துல கிணத்தைக் காணோம்னு போலீஸ்ல கம்ப்ளெயின்ட் கொடுப்பேன்ல... அதுபோல நடிகர் சங்கக் கட்டடத்தைக் காணோம்னு புகார் கொடுக்கப் போறேன்” என்று கிண்டலடித்தார்.

சரத்குமார், ராதாரவியை பகிரங்கமாக விமர்சித்துவரும் எஸ்.வி.சேகர், ‘ஒருவர் அரசாங்கப் பதவியில் இருந்தால் இன்னொரு பதவியில் இருக்கக் கூடாது என்பது சட்டம். அப்படியிருக்க எம்.எல்.ஏ பதவியில் இருந்து அரசாங்கத்திடம் சம்பளம் வாங்கும் சரத்குமார், எப்படி நடிகர் சங்கத்தில் தலைவர் பதவியை வகிக்கலாம்?” என்று கேள்வி கேட்டார்.

அடுத்து மேடைக்கு ‘பூச்சி’ முருகனை அழைத்து, ‘‘இவர் பெயர்தான் ‘பூச்சி’ முருகன். இந்தப் பாண்டவர் அணி உருவாவதற்கு இவர்தான் முக்கியக் காரணம்’’ என்று கெளரவித்த நாசர் மைக்கைப் பிடித்தார். ‘‘எங்களை ராதாரவி ‘நாய்கள்’ என்று கேவலமாகப் பேசினார். நாங்கள் அவரது தந்தை எம்.ஆர்.ராதா படத்தைப் போட்டு அவரை பெருமைப்படுத்தி இருக்கிறோம். இதுதான் பாண்டவர் அணியின் பண்பு. நாங்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடும் ஒரே நோக்கம் நடிகர் சங்க நிலத்தில் நமக்கான கட்டடத்தைக் கட்ட வேண்டும் என்பதற்காகத்தான். எங்களை கமல்ஹாசன் தூண்டிவிடுவதாகச் சொல்வது அபாண்டமான குற்றச்சாட்டு. நாங்கள் பதவிக்கு வந்தால் நலிந்த கலைஞர்கள் என்கிற சொற்றொடரில் இருக்கின்ற ‘நலிந்த’ என்கிற வார்த்தையையே நீக்கிவிடுவோம்’’ என்று விளக்கினார்.

‘‘ராதாரவி என்னை ‘நாய்’ என்று முன்பு சொன்னார். இப்போது ‘பரதேசி நாய்’ என்று சொல்லி இருக்கிறார். நாய் நன்றியுள்ள பிராணி. அப்படி என்னை அழைப்பதால் எனக்கு வருத்தமில்லை” என்று நெகிழ்வாக பேசினார் விஷால்.

ஏற்கெனவே கமல் தனது பரிபூரண ஆதரவை விஷால் அணிக்குத் தெரிவித்து இருக்கிறார். இந்தக் கூட்டம் நடத்துவதற்காக ரஜினி தனது ராகவேந்திரா மண்டபத்தை விஷால் அணிக்குத் தர, ரஜினியின் ஆதரவும்  பாண்டவர் அணிக்குத்தான் என்று எல்லோரும் எண்ணிக்கொண்டு இருக்கின்றனர்.

இந்தச் சூழ்நிலையில், வருகிற 11-ம்தேதி சரத்குமார் அணி நடத்தும் கூட்டத்துக்கு ரஜினி தனது ராகவேந்திரா மண்டபத்தைக் கொடுத்து இருக்கிறார்.

நடிகர் சங்கத் தேர்தல் 18-ம் தேதி நடக்கிறது. அதுவரை நிலவரம், கலவரமாகத்தான் இருக்கும்.

- எம்.குணா, படங்கள்: சு.குமரேசன்


நடிகர்களை ‘கவர்’ செய்த மதுரை ஆதீனம்!

சில நாட்களுக்கு முன் மதுரை சங்கம் ஹோட்டலில், நூற்றாண்டு பெருமைகொண்ட மதுரை நாடக நடிகர் சங்கத்தினரை ஒன்றுகூட்டி, நல்ல சாப்பாடு அளித்து கைச்செலவுக்கு பணமும் கொடுத்தனர். இவை அனைத்தும் மதுரை ஆதீனத்தின் ஏற்பாடுதான். ஆதீனத்தைப் பொறுத்தவரையில், அ.தி.மு.க-வுக்கு விசுவாசமாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறார். அந்த அடிப்படையில் அ.தி.மு.க ஆதரவு நடிகரான சரத்துக்கு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்வதாக உறுதியளித்துவிட்டார். இந்த நிலையில், நடிகர் சரத் அணிக்குத் திரையுலகில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ள சூழலில், அவர் நம்புவது நாடக நடிகர்களின் வாக்குகளைத்தான்.

ஏற்கெனவே நாடக நடிகர்களை சந்தித்த விஷால் அணியினர், பாண்டி கோயில் அருகே மதுரை நாடக நடிகர் சங்கம் வாங்கிப் போட்டிருக்கும் இடத்தில் மஹால் கட்டித்தருவதாக உறுதி அளித்துள்ளனர். இந்த வாக்குறுதி சரத் அணிக்கு பெரும் குடைச்சலை கொடுத்தது. இந்த நிலையில்தான் மதுரை நாடக நடிகர் சங்க வாக்குகளை வாங்கித் தரும் பொறுப்பை மதுரை ஆதீனத்திடம் விட்டார். அதற்குத்தான் அன்று சங்கம் ஹோட்டலில் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியிருந்தார்கள்.

தேர்தல் நிலைப்பாடு பற்றி அங்கு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த மதுரை நாடக நடிகர் சங்கத் தலைவர் மோகனிடம் கேட்டோம். ‘‘இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு மொத்தம் 140 பேர் வந்துள்ளனர். நாங்கள் அனைவரும் சரத் அணிக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளோம். 20 பேர் மட்டும் விஷால் அணியில் உள்ளனர்’’ என்றார்.

அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள மதியத்துக்கு மேல் சரத், ராதாரவி, ராதிகா, ராம்கி உட்பட பலர் வந்திருந்தனர். ஆதீனத்துக்கு நெருக்கமான பாலு, வெகுநேரம் சரத்துடனும் ராதாரவியுடனும் பேசிக்கொண்டிருந்தார்.

ராதாரவி பேசும்போது, ‘‘இப்பத்தான் அவனுங்களுக்கு மதுரை, புதுக்கோட்டை எல்லாம் தெரியுது. இவனுங்களுக்கும் நாடகத்துக்கும் என்ன சம்பந்தம்? எங்களுக்கு ஓட்டு போடலைன்னா, எங்களுக்கு நல்லது; போட்டா உங்களுக்கு நல்லது. அவன் தருகிற 500, 1,000-த்தை வாங்காதீங்க’’ என்றார்.

சரத் பேசும்போது, ‘‘ரஜினி, கமல் ஆதரிச்சா ஆதரிக்கட்டும். ஜனநாயக நாட்டுல அவங்களுக்கு உரிமை இருக்கு. விஜயகாந்த் இருக்கும்போதுதான் நடிகர் சங்கத்துக்கு நிறைய செய்தார்கள்னு சொல்றாங்க. நான் எவ்வளவு செய்திருக்கேன்னு அங்கு வந்து பார்த்தால் தெரியும்’’ என்றார்.

- செ.சல்மான்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick