தாத்தாவின் ஆசியுடன் அரசியலுக்கு வருகிறேன்!

பி.ஜே.பி-யில் கலாம் பேரன்

சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி எனச் சொல்லப்படும் பி.ஜே.பி-யில் சேர்ந்ததன் மூலம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறார் சேக் சலீம். மறைந்த அப்துல் கலாமின் பேரனான இவர், அமித்ஷா முன்னிலையில் கட்சி உறுப்பினராகி உள்ளார். சொந்த ஊர் திரும்பிய சலீமை அவரது இல்லத்தில் சந்தித்தோம்.

‘‘எந்த அரசியல் கட்சியிலும் சேராமல் வாழ்நாள் முழுவதும் மாணவர்கள் மத்தியிலேயே வாழ்ந்தவர் அப்துல் கலாம். அவரது பேரனான நீங்கள், திடீரென அரசியல் கட்சியில் சேர்ந்ததன் காரணம் என்ன?”

‘‘என் தாத்தா கலாம், அரசியலில் ஈடுபடவில்லை. ஆனாலும், இந்தியாவின் மக்கள்தொகையில் 50 சதவிகிதத்துக்கு மேல் உள்ள இளைஞர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் என விரும்பினார். தாத்தாவைச் சந்தித்த ஒரு சில மாணவர்கள், அரசியல்வாதி ஆக விரும்புவதாகத் தெரிவித்திருக்கின்றனர். அவர்களிடம், ‘அரசியல்வாதியாக மாற விரும்புகிறாயா அல்லது அரசியல் தலைவராக விரும்புகிறாயா?’ என அடுத்த கேள்வியை கேட்டு, அவர்களை நல்ல அரசியல் தலைவராக உருவாக ஆலோசனை சொல்லியிருக்கிறார். மக்களின் பணிகளை, குறைகளை அறிந்து அவற்றை நிவர்த்தி செய்பவரே நல்ல அரசியல் தலைவரின் அடையாளம் என தாத்தா சொல்லியிருக்கார். ‘மாற்றத்துக்கான ஒரு சாசனம்’ என்ற புத்தகத்தில் பெருவாரியான இளைஞர்களைக்கொண்ட இந்தியாவில் பஞ்சாயத்து நிர்வாகம் முதல் பார்லிமென்ட் வரை எவ்வாறு இயங்க வேண்டும்; மக்கள் பிரதிநிதிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் எனச் சொல்லியிருக்கிறார். இதுதொடர்பாக தாத்தாவுடன் விவாதிக்கும் வாய்ப்பு அவருடன் இருந்த காலங்களில் கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக என்னுள் அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் உருவானது. அதுமட்டுமல்ல, எனது தந்தை தி.மு.க-காரர். அவரது அரசியல் செயல்பாடுகளையும் பார்த்து வளர்ந்தவன் நான்.’’

‘‘அரசியல் கட்சியில் சேர்வது குறித்து உங்க தாத்தாவிடம் பேசியிருக்கிறீர்களா?’’

‘‘ஒரு வருடத்துக்கு முன்பே எனது அரசியல் விருப்பம் குறித்து தாத்தாவிடம் சொன்னேன். அப்போது அவர், ‘நீ அரசியலில் ஈடுபட இப்போது சரியான தருணம் இல்லை. முதலில் சமுதாயப் பணிகளில் உன்னை ஈடுபடுத்திக்கொள். மக்களின் பார்வை உன் மீது பட்டபின் நல்ல அரசியல் தலைவராக நீ மாறலாம்’ என அறிவுரை சொன்னார். அவரது அறிவுரைப்படி ராமேஸ்வரம் தீவில் ‘சோலார் விஷன்’ திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம். ‘இன்டர்நேஷன் வீ சர்வ்’ ஃபவுண்டேஷனுடன் இணைந்து மாணவர்களுக்குப் பயன்படும் டிஜிட்டல் நூலகங்கள் அமைத்து வருகிறோம். தீவுப் பகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கு சோலார் விளக்குகளை வழங்குதல், 22 அரசுப் பள்ளிகளில் முற்றிலும் சோலார் மின்சார வசதி... எனப் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இதன் தொடர்சியாக தாத்தாவின் ஆசியுடன் அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ளேன்.’’

‘‘நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகள் இருக்க, பி.ஜே.பி-யில் இணைந்ததன் காரணம்?’’

‘‘முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்திலும் சரி, இப்போதும் சரி இந்திய நாட்டின் வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பி.ஜே.பி ஆட்சி இயங்கிவருகிறது. பிரதமர் மோடியின் திட்டங்களான ‘மேக் இன் இந்தியா’, ‘கிளீன் இந்தியா’ போன்ற திட்டங்கள் இதற்கு உதாரணம். இந்தத் திட்டங்களின் மூலம் வேலைவாய்ப்பு பெருகும். நாட்டின் பொருளாதாரம் மேம்படும். கல்வித்தரம் உயரும்.’’

‘‘கலாம் உயிருடன் இருந்திருந்தால் உங்களது முடிவை ஏற்றுக்கொண்டிருப்பாரா?’’

‘‘எந்த ஒரு தனிமனிதர் முடிவுகளிலும் தாத்தா தலையிட மாட்டார். அவர் கட்சி சாராதவராக இருந்தாலும் தனது குடும்பத்தினரை, நண்பர்களை அரசியலுக்கு வர வேண்டாம் எனச் சொன்னதில்லை. எனவே நிச்சயம் எனது முடிவினை ஏற்றுக்கொண்டிருப்பார்.’’

‘‘சிறுபான்மையினர் நலனுக்கு எதிரானவர்கள் என்ற விமர்சனம் பி.ஜே.பி மீது உள்ளதே?’’

‘‘கட்சிக்கு வெளியே இருந்து குற்றம் சொல்வதைவிட அந்தக் கட்சியின் உள்ளே சென்று பார்த்தால் உண்மையிலேயே பி.ஜே.பி சிறுபான்மையினரின் நலனுக்கு எதிரானதா என்பதை முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியும். சிறுபான்மையினர் என்ற தனித்த எண்ணத்துடன் ஒதுங்கியிருக்காமல் நாம் அனைவரும் இந்தியர் என்ற எண்ணத்துடன் இணைந்து இயங்க வேண்டும். ஒட்டுமொத்த தேசத்தின் வளர்ச்சிதான் இந்தியாவின் வளர்ச்சியாகும்.’’

‘‘அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து?’’

‘‘நான் தாத்தாவுடன் டெல்லியில் தங்கியிருந்தபோது, கிழக்கு டெல்லி எம்.பி மகேஷ்கிரியின் நட்பு கிடைத்தது. அவரது உதவியுடன் அமித்ஷாவை சந்தித்தேன். ‘நீங்க கட்சியில சேர்ந்தது சந்தோஷம். உங்களோட பணியைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் நல்ல பொறுப்பை வழங்குவது குறித்து விரைவில் தெரிவிக்கிறேன்’ என்று சொன்னார்.’’

‘‘கலாமின் நண்பர்களுடன் இணைந்து தொடங்கிய ‘அப்துல் கலாம் லட்சிய இந்தியா இயக்கம்’?’’

‘‘அந்த இயக்கம் சாதி, மதம், அரசியலுக்கு அப்பாற்பட்டது. தாத்தா கலாமின் லட்சியங்களை நிறைவேற்றும் இயக்கமாக அது நாடு முழுவதும் செயல்படும்.’’

- இரா.மோகன்,
படம்: உ.பாண்டி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick