“ஈழத்தமிழர் எதிர்காலம் முதல்வர் கையில் இருக்கிறது!”

வேல்முருகன் சொல்கிறார்

க்கியநாடுகள் சபை அலுவலகம் முற்றுகை, ரயில் மறியல் போர், சுங்க கட்டணம் வசூல் மையம் முற்றுகை என்று போராட்டக் களங்களில் பரபரப்பாக இயங்கி வருகிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன். திருச்சி சிறப்பு முகாம் அகற்றும் போராட்ட ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தவரை நாம் சந்தித்தோம்.

‘‘நீதிக்காக ஏங்கி நிற்கும் தமிழீழ மக்களுக்கு ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தின் 30-வது அமர்வு பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது. மனித உரிமை மன்ற உயர் ஆணையர் புலனாய்வு அறிக்கையை செப்டம்பர் 16-ம் நாள் வெளியிட்டபோது, நீதியின் வருகை நெருங்கிவிட்டதுபோல் ஒரு நம்பிக்கை துளிர்விட்டது. மனித உரிமை நாடகமாடிய அமெரிக்க வல்லரசு, இலங்கைக்கு ஆதரவாகத் தீர்மானம் கொண்டுவந்து தமிழர்களை நம்பவைத்து கழுத்தறுத்தது. அந்தத் தீர்மானத்தை இந்தியாவும் சேர்ந்து ஆதரித்தது என்பதில் இருந்தே அதன் லட்சணத்தை நாம் தெரிந்துகொள்ளலாம். இலங்கை அரசே அந்தக் குற்றங்கள் பற்றி விசாரிக்க வழி செய்ததன் மூலம் அமெரிக்காவும், இங்கிலாந்தும், இந்தியாவும் நீதிக்கொலை செய்துவிட்டன. காங்கிரஸ் அரசைப்போலவே பி.ஜே.பி அரசும் கூட்டுக் களவாணி வேலை பார்க்கிறது. எந்தவித சமரசமும் செய்துகொள்ளாத தமிழக முதல்வரின் உறுதியான நிலைப்பாடு உலகத் தமிழர்களுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது’’ என்று ஆரம்பித்தார்.

‘‘தமிழக அரசை கண்டித்தும் இலங்கைத் தமிழர்களுக்காக போராட்டங்கள் நடத்துகிறீர்களே?’’

‘‘தமிழீழத்தில் சிங்கள பேரினவாதத்தின் இனப்படுகொலை, அழித்தொழிப்பில் இருந்து தப்பித்து தாய்த்தமிழகத்துக்கு வந்த ஈழத்தமிழ் உறவுகளில் 14 பேர் செய்யூர், திருச்சி சிறப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சிறப்பு முகாம்கள், கருணாநிதி ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டவை. விடுதலைப்புலிகள் அமைப்புக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீட்டிக்கவும் அந்தக் கோரிக்கைக்கு வலுசேர்க்கும் வகையில் ஈழத்து உறவுகள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களை மூடிவிட்டு, அவர்களை பொதுமுகாம்களிலோ அல்லது அவர்கள் விரும்புகின்ற, உறவுகள் வாழ்கின்ற வெளிநாடுகளுக்கோ அனுப்ப வேண்டும்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி சுரேஷ்குமார் என்பவர் அக்டோபர் 1-ம் தேதி தொடர் உண்ணாவிரதம் தொடங்கினார். தனது கோரிக்கை நிறைவேறாத நிலையில் கை நரம்புகளை வெட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர்மீது போலீஸாரை கொலைசெய்ய முயற்சி செய்தார் என்று வழக்குப் பதிவு செய்துள்ளனர். போரில் பாதிக்கப்பட்டு, இடுப்புக்குக் கீழே பாதம் வரை செயலிழந்து இருக்கும் அவர்மீதே காவல் துறை இரக்கமற்ற முறையில் நடந்துகொண்டது வேதனை அளிக்கிறது. ஈழத் தமிழ் உறவுகள் அகதிகளாக வந்தபோதும் நரக வாழ்க்கை வாழுகின்ற அவலம் நீடிக்கிறது. கல்வி, அரசின் சமூக நலத்திட்ட உதவிகள் அனைத்தும் ஈழத்தமிழர்களுக்கு தமிழக முதல்வர் கிடைக்க செய்துள்ளதை உலகத் தமிழ் சமூகம் நன்றிப் பெருக்குடன் பார்க்கிறது. எனவே, சிறப்பு முகாமில் உள்ளவர்களை முதற்கட்டமாக, பொதுமுகாம்களுக்காவது மாற்ற முதல்வர் உத்தரவிட வேண்டும்.’’.

‘‘தமிழர் விவகாரங்களில் மத்திய அரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது?’’

‘‘இலங்கைத் தமிழர் பிரச்னை தீர்வுக்கு தமிழக முதல்வர், சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து ஏகமனதாக நிறைவேற்றி பிரதமருக்கு  அனுப்பி வைக்கிறார். தமிழ்நாட்டுப் பிரச்னைகளை தமிழக அரசியல் கட்சிகள் சொல்லாமல் வேறு யார் சொல்ல வேண்டும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது என்று தெரியவில்லை. அ.தி,மு.க., தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., காங்கிரஸ் கட்சிகள் மட்டுமல்லாது தமிழக பி.ஜே.பி தலைவர்களும் குரல் கொடுக்கிறார்கள். தமிழகத்தின் உயிர்நாடி பிரச்னையான நதிநீர் பிரச்னைகள், தமிழர்களின் வாழ்வாதாரத்தைச் சீரழிக்கும் மீத்தேன், நியூட்ரினோ என்று எந்த பிரச்னையாக இருந்தாலும் மத்திய அரசு கண்டுகொள்வதே இல்லை. இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி கொடுக்கக் கூடாது என்று முதல்வர் கடிதம் எழுதியும் மரியாதை இல்லை. தமிழ்நாடு, இந்தியாவுக்குள்தான் இருக்கிறதா என்று தெரியவில்லை. மாற்றான் தாய் மனப்பான்மையோடு நடந்துகொண்ட காங்கிரஸ் ஆட்சி, அதிகாரத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டது. தமிழகத்தில் துடைத்தெறியப்பட்டது. அதே நிலைமைதான் நாளைக்கு பி.ஜே.பி-க்கும் ஏற்படும் என்பதை மோடி அரசு நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். உலகத் தமிழர்கள் நலன் காக்கும் உலகத் தமிழர்களின் மாநாடு நவம்பர் 5, 6 ஆகிய தேதிகளில் தென் ஆப்பிரிக்காவில் நடக்கிறது. அந்த நாட்டு அதிபர் உள்பட உலகமெங்கும் வாழும் தமிழர் தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

அ.தி.மு.க., தி.மு.க உள்பட அனைத்துக் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை இனப்படுகொலைக்கு நீதி தேடல், அவர்களின் வாழ்வுரிமைகள் குறித்து விவாத்திக்கப்பட இருக்கிறது.’’

‘‘சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அணிகள் அமைவது வேகமெடுக்கும் நிலையில், நீங்கள் எந்தக் கூட்டணியில் இருக்கிறீர்கள்?’’

‘‘நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து அ.தி.மு.க அணியில்தான் இருந்து வருகிறேன். தமிழர்களின் வாழ்வுரிமையைக் காப்பாற்றுவதில் முதல்வர் அம்மா முதல் இடத்தில் இருக்கிறார். அவரது ஆணித்தரமான முடிவுகளால்தான் ஈழத்தமிழர்களுக்கும் தாய்த்தமிழகத்துக்கும் விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.’’

- எஸ்.முத்துகிருஷ்ணன், படம்: சு.குமரேசன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick