குடும்பத்தை தவிக்கவிட்டு தலைவராகி என்ன செய்யப் போகிறீர்கள்?

நெஞ்சை உலுக்கும் விஷ்ணுப்ரியாவின் குரல்!

விஷ்ணுப்ரியா இறந்துபோய்விட்டார். அவரது மரணத்தில் பல்வேறு மர்மங்கள் உள்ளன. ஆனால், அவர் எல்லோருக்கும் ஒரு வாழ்க்கைப் பாடத்தைச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.

விஷ்ணுப்ரியாவிடம் தான் பேசியதாக 1 மணிநேரம் 59 செகண்ட் கொண்ட ஆடியோவை கடந்த வாரத்தில் யுவராஜ் வெளியிட்டார். அந்த ஆடியோ எடிட் செய்யப்பட்டது என்பதை கேட்பவர்கள் அனைவரும் உணரமுடியும். எடிட் செய்யப்படாத அந்த ஆடியோவில்தான் விஷ்ணுப்ரியா என்ற ஒரு மனுஷியின் மனிதாபிமானக் குரல் ஒலிக்கிறது. சாகசங்கள் என்ற பெயரால் சொந்தக் குடும்பத்தைப்பற்றிக் கவலைப்படாமல் ‘காரியங்கள்’ செய்துவரும் ‘ஆண்களை’ விளாசுகிறார். அந்த ஆடியோவில் இருக்கும் விஷ்ணுப்ரியாவின் குரல் இதோ...

 “எங்களுக்குத் தேவை ஏ1 யுவராஜ். நீங்க இன்னும் எங்க கையில கிடைக்கல. அப்புறம் நாங்க என்ன பண்ணுவோம்? யுவராஜ் கிடைக்கிறவரைக்கும் யாரெல்லாம் கிடைக்கிறாங்களோ அவுங்களையெல்லாம் வெச்சி விசாரிச்சுக்கிட்டே இருப்போம். உங்க ஃபேமிலியைத் தவிர, நிறைய பேரை  புட்டிங் இன் த ப்ரெஷர்!

ஏங்க உங்க ஃபேமிலிய போய்ப் பார்க்குறேன்... உங்க குழந்தைங்களைப் பார்க்குறேன். அவுங்க எவ்வளவு சோகமா இருக்காங்க தெரியுமா?  நான் ஒரு வுமன் ஆஃபீஸர்ங்க. சரியா? போலீஸ்ங்குறதெல்லாம் அடுத்த விஷயம். எனக்கும் ஃபேமிலி இருக்கு. நான் பாக்குறேன். உங்க குழந்தைங்க எல்லாம் எவ்வளவு சஃபர் ஆகுறாங்கனு எனக்குத் தெரியும். உங்க ஒய்ஃப் எவ்வளவு சஃபர்  ஆகுறாங்கங்குறது எனக்குத் தெரியும். அந்த வீடு இருக்குற இடமும் அந்தச் சூழலும் அவுங்க பயந்துக்கிட்டே இருக்காங்க.. நான் போனாலே அந்த அம்மா (யுவராஜ் மனைவி) அழுகுறாங்க. இவ்ளோ ப்ரெஷர் உங்க ஃபேமிலிக்கு கொடுக்குறீங்க. உங்கள நம்பி வந்தவங்களுக்கு இவ்ளோ ப்ரஷர் கொடுக்குறீங்க. அதுக்கு நீங்க ஒரு ஆள் சரண்டர் ஆனா என்னங்க ஆகப்போகுது..?

உங்களுக்கு முன்ஜாமீன் எடுக்கணும்.. நீங்க நல்லா இருக்கணும்னு இவ்ளோ கவலைப்படுற நீங்க...  உங்களால இத்தன பேர் பாதிக்கப்பட்ருக்காங்க.  அந்த குமார், சங்கர், அருண், செந்தில் அவுங்க செட்டு. அப்புறம் ஃபர்ஸ்ட் போன அந்த லேடி. அவுங்க ஹஸ்பண்டு. அதுக்கப்புறம் ஒரு நாலு பேரு.... எவ்ளோ பேர் சஃபர் பண்ணியிருக்காங்கனு எனக்குத் தெரியும். ஏங்க எனக்கு இருக்குற பரிதாபம்கூட உங்களுக்கு வரலையாங்க? மத்தவங்களை விடுங்க. ரெண்டு குழந்தைங்க வெச்சிருக்கீங்க. சின்னக் குழந்தைங்க. அப்படி பயப்படுதுங்க அந்தக் குழந்தைங்க!

அந்த லேடியைப் பார்க்க அந்த வீட்டுக்குப் போனேன். ஃபர்ஸ்ட் டைம்ங்கிறதால வீடு  சரியா தெரியாம திரும்பிப் போயிட்டேன். அவுங்க அதுக்குள்ள பயந்துபோயி கார் இந்தப் பக்கம் வந்துச்சினு யார் யாருக்கோ போன் பண்றாங்க. அதுக்கப்புறம் அட்ரஸ் கண்டுபுடிச்சி  தேடிப் போறேன்.  நீங்கதான் வந்தீங்களானு கேட்குறாங்க. ஆமா, நான்தான் வந்தேன். வீடு தெரியல, அதுனால திரும்பிப் போயிட்டேன்னு சொல்றேன். அதுக்கப்புறம்தான் அவுங்களுக்கு நிம்மதியே வருது. அந்த அளவுக்கு  பயந்துகிட்டு உட்காந்துருக்காங்க  அந்தம்மா. எனக்குப் பயமா இருக்குனு கதறுறாங்க. அத பார்த்துட்டு நான் நெஜமாலுமே... அஸ் எ வுமன் ஆஃபீஸரா ஐ ஃபீல் வெரி பேட்.

ஒரு ஃபேமிலிய இவ்வளவுதூரம் தவிக்க விட்டுட்டு போயிருக்கீங்க. உங்க குழந்தைங்களை இவ்வளவுதூரம் தவிக்கவிட்டுட்டுப் போயிருக்கீங்க. கொஞ்சம்கூட கான்ஸியஸ் இல்லையா உங்களுக்கு...?  சும்மா ஜஸ்ட் போயிட்டு, என்னங்க ஏதாவது தகவல் இருக்கானு கேட்கப் போனாலே நடுங்குறாங்க.’’ 
 
(குறுக்கிடும் யுவராஜ் சிரித்தபடியே, ‘‘காக்கி சொக்காயை கண்டாலே தெரிச்சில்ல ஓடுறாங்களாம் எல்லாம்” என்கிறார்! )

‘‘காக்கிச்சட்டையெல்லாம்கூட போடலைங்க.  உங்க வீட்டுக்கு மஃப்ட்டிலத்தான் போனேன். இவ்வளவு தூரம் விசாரிக்கிற நீங்க, இவ்வளவு தூரம் தெரிஞ்சுக்குற நீங்க உங்க குழந்தைங்க என்னா சிச்சுவேஷன்ல இருக்காங்கனு கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க. மத்த விஷயங்களையெல்லாம்கூட அப்புறம் விட்ருங்க. எப்படி நீங்க ஒரு அப்பாவா இப்படி இருக்கீங்கனு நிஜமாலுமே தெரியலை. பொதுவா இருந்து  நான் சொல்றேன். இதுவே என் ஃபேமிலிக்கு ஒரு கஷ்டம் வந்துச்சுனா கண்டிப்பா தப்பிச்சு ஓட மாட்டேன். கண்டிப்பா திரும்பி வந்துருப்பேன். இங்க இருக்கவங்களுக்கு இப்படி ஒரு கஷ்டம்னு தெரிஞ்சும் விட்டுட்டு இருக்கீங்கன்னா அப்புறம் என்னங்க இருக்கு? ‘ஏதோ நீங்க இப்படி வந்துட்டுப் போறீங்க. அதனால எங்களுக்குக் கொஞ்சம் சேஃப்ட்டியா இருக்கு’னு உங்க ஒய்ஃப் சொல்றாங்க. எந்த அளவுக்கு ஒரு லேடி பயந்துருந்தா அப்படிச் சொல்லுவாங்க..? நீங்க அடிக்கடி வந்து விசாரிக்கிறீங்க இல்லனா நெஜமாவே இந்த வீட்ல இருக்க முடியாதுனு சொல்றாங்க!’’

 ‘‘இவ்வளவு தூரம் நீங்க பேசுறீங்க, கண்டிப்பா உங்க ஒய்ஃப்கிட்ட பேசியிருப்பீங்க?’’

 (அதற்கு யுவராஜ், ‘‘இல்ல... இல்ல... உண்மையிலேயே இல்ல. அவுங்க பேச தயாரா இல்ல. ட்ரை பண்ணேன். பசங்களைக் கொண்டு செல்போனை கொடுக்கச் சொன்னேன். பெயில் எடுத்துட்டு வரச்சொல்லுங்க. அதுவரைக்கும் நாங்க பேசமாட்டோம்னு சொல்லிட்டாங்க!” என்கிறார்! )
‘‘பேசமாட்டேன்னு சொன்னது ஓகே. அட்லீஸ்ட் செல்போனை கொண்டு குடுக்கச்சொன்ன பசங்கள்கிட்ட விசாரிச்சிருக்கலாம். உங்க ஃபேமிலி என்ன மெண்ட்டல் டார்ச்சர்ல இருக்குனு.’’

(அதற்கு யுவராஜ், ‘‘எனக்குத் தெரியும் குழந்தைங்க ரொம்ப இளைச்சி போயிட்டாங்க.’’)

‘‘ஏங்க எவனோ போறான், எவனோ வர்றான். அவனையெல்லாம் விட்டுத்தள்ளிடுங்க. அந்த ரெண்டு குழந்தைங்க இருக்கு. ஃபேஸ்புக் ப்ரொஃபைல்ல அந்தக் குழந்தையோட ஃபோட்டோ வெச்சிருக்கீங்க. அத பாக்குறதுக்கு எனக்கே பாவமா இருக்குங்க. ஒருமுறை நாங்க இல்லாதப்பகூட வந்து பாத்துட்டுப் போங்க. அந்த ஃபேமிலி எவ்வளவு கஷ்டப்படுதுனு உங்களுக்குத் தெரியும். பேசத் தயாரா இல்லைனு அவுங்க சொல்றாங்க. அது வேற விஷயம். ஒருதடவ  அந்தக் குழந்தைங்களை வந்து பாத்துட்டுப் போங்க. அவுங்க எவ்வளவு ஏங்கிப் போயிருக்காங்கனு உங்களுக்குத் தெரியும். இந்த வயசுல உங்களுக்கு மென்ட்டல் ப்ரெஷர் ஹேண்டில் பண்ண முடியல.. இந்த வயசுல எனக்கு இவ்வளவு மென்ட்டல் ப்ரெஷர் ஹேண்டில் பண்ண முடியல.. அந்த சின்னக் குழந்தைங்களுக்கு தெரிஞ்சிருச்சி. இவுங்க  அப்பாவ எதுவோ பண்றாங்க. அம்மா டெய்லி அழுகுறாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் ஏதோ பேசிட்டுப் போறாங்க. அம்மா ஹெல்ப் கேட்டா யாரும் பண்றது இல்ல. அம்மாவுக்கு ஒருமுறை மாடுமுட்டி உடம்பு சரியில்லாம போயிடுச்சி. ஒருமுறை வழுக்கி விழுந்துட்டாங்க.. இப்படி இவ்வளவு சம்பவங்கள் இருக்கு. ஒரு அம்மா அழுகுறப்ப ஒரு குழந்தைக்குத் தெரியாதா? ஏன் அழுகுறாங்கன்னு. அது ஒண்ணும் தெரியாத குழந்தை கிடையாது. ஏன் அம்மா அழுறாங்க..? ஏன் அப்பா இல்லன்றதும் அந்தக் குழந்தைக்குத் தெரியுது. சும்மா ஃப்ரெண்ட்லியா என்னப்பா ஆச்சினு நான் கேட்டதுக்கு,  அந்தக் குழந்தை சொன்ன பதிலை கேட்டா அப்படியே நடுங்குது. ‘எங்க அப்பா யாரையோ ஏதோ பண்ணிட்டாராம். அதனால எங்க அப்பாவை எல்லாரும் தேடுறாங்களாம்’ அப்படிங்குது. இதெல்லாம் கேட்கும்போது ரொம்ப வருத்தமா இருக்குது. எங்களை விடுங்கங்க.... அந்தக் குழந்தைங்களைப் பாத்துக்கூட உங்களுக்குக் கரிசனம் வரலையா என்ன..? நீங்க சரண்டர் ஆகியிருந்தா இந்நேரம் நீங்க வெளியில வந்திருக்கலாம். இவ்ளோ நாள் நீங்க உங்க ஃபேமிலியை பிரிஞ்சு  ஓடி ஒளிஞ்சுருக்குறதுக்குப் பதிலா ஜெயில்ல இருந்துருக்கலாம்.’’

(அதற்கு யுவராஜ், ‘‘ஜெயில்ல இருக்குறதுக்காக பயந்துகிட்டெல்லாம் இல்லீங்க. நமக்கு ஜெயில் புதுசும் இல்ல. நமக்கு அங்க இருக்குறது கஷ்டமும் கிடையாதுங்க. அதுக்காகவெல்லாம் இல்ல.’’)

‘‘ஒண்ணு தெரிஞ்சுக்குங்க யுவராஜ். இப்போ நீங்க இதை சாதாரண கேஸ்மாதிரி ட்ரீட் பண்ணலனு சொன்னீங்க இல்லையா? உண்மைதான். அவ்ளோ சென்சிட்டிவ் கேஸ் இது. இந்த கேஸுக்கு முற்றுப்புள்ளி வைக்கணும்னு நினைக்கிறீங்க. நாலைஞ்சு குடும்பத்தை நல்லா வைக்கணும்னு நினைக்கிறீங்க. அதுகூட வேண்டாம். உங்க ஃபேமிலியும் உங்க குழந்தைங்களும் நல்லா இருக்கணும்னு நினைச்சீங்கன்னா ஒரே வழி நீங்க சரண்டர் ஆகுறதுதான். உங்க சேஃப்டிக்கு நான் கேரண்டி. நான் டிபார்ட்மென்டுக்கு புதுசுதாங்க. எனக்கு போலீஸ் புதுசுதான். இருந்தாலும் எனக்குள்ள இருக்கிற பொதுஜனம் இருந்துகிட்டேதான் இருக்காங்க. நீங்க ஒரு கேஸ்ல அக்யூஸ்ட்டுங்க. நீங்க ஓடுனா யாருக்குங்க கோவம் வராது? எனக்கே கோவம் வரத்தான் செய்யும். நானே திட்டத்தான் செய்வேன்.’’

(அதற்கு யுவராஜ், ‘‘மேடம், வழக்குல 80 சதவிகிதம் வெளிவிஷயங்கள் இருக்கிறது.  எனக்கு பயமெல்லாம் இல்லை. இதை வெச்சி காரியம் சாதிக்கணும்னு சிலர் நினைக்கிறாங்க  அது நடக்கக் கூடாது. பயம் இல்லை மேடம். கெளரவம் மேடம்” என்கிறார். )

‘‘ஏங்க... கெளரவம் பாத்து குடும்பத்தை இழந்துடாதீங்க. கெளரவம் கெளரவம்னு சொல்லிட்டு இது மாதிரி எல்லாத்தையும் பலிகடா ஆக்குனவங்கதான் அதிகம். கெளரவத்துக்காக குடும்பத்தை பலிகடாவாக குடுத்து கடைசியில ஒண்ணுமே இல்லாம நின்னவங்கதான் அதிகம். ஏங்க... உங்களுக்கு இருக்கிறது ஒரு ஃபேமிலிதான். அந்த ஃபேமிலிக்காக உங்க கெளரவத்தைக்கூட இழக்க மாட்டீங்களா..? அப்படி என்னங்க நீங்க எல்லாம் கல்நெஞ்சக்காரவங்களா ஆகிட்டீங்க.’’

 (குறுக்கிடும் யுவராஜ், ‘‘ மேடம் ஃபேமிலினு நீங்க சொல்றீங்க ஆனா.... அமைப்பு ரீதியா பாக்கக்குள்ள..” என்று ஏதோ சொல்ல வருகிறார். )

‘‘ஏங்க இதுவரைக்கும் யுவராஜ்னு சொன்னா யாருக்குங்க தெரியும்..? இல்ல யாருக்குத் தெரியும்னு கேக்குறேன். இன்னைக்கு யுவராஜ்னு நேஷனல் லெவல்ல ஃபேமஸ் ஆகிட்டீங்க. இதுனால பெருசா என்ன கெளரவத்தை இழந்துடப் போறீங்க?’’

(அப்போது யுவராஜ், ‘‘நல்ல விதமா ஃபேமஸ் ஆகியிருந்தா பரவாயில்லை மேடம்!” என்கிறார்!)

‘‘எல்லா  பொலிட்டிக்கல் லீடர்ஸும் இப்படி வர்றவங்கதாங்க. முதல்ல ஃபேமஸ் ஆகிடுறாங்க. அதுக்கப்புறம் தலைவராகிடுறாங்க. இப்படித்தான் போகுது. உண்மையாவே நீங்க தப்பு பண்ணலைனா வந்து ப்ரூஃப் பண்ணிட்டு போய்டுங்களேன். இப்ப மட்டும் உங்க கெளரவத்துக்கு என்ன ஆச்சி? இப்பக்கூட ஒரு கொலை குற்றவாளினுதான் உங்களைச் சொல்றாங்க..?”

- என்று ஒலிக்கிறது விஷ்ணுப்ரியாவின் குரல்! அடிதடி, வெட்டுக்குத்து, வன்முறை என்று வாழும் ஆட்களின் குடும்பம் என்ன சூழ்நிலைக்கு ஆகும் என்பதைச் சொல்லிப் போய்விட்டார் விஷ்ணுப்ரியா. இது பலரது மனச்சாட்சியின் குரல்!

 - எம்.புண்ணியமூர்த்தி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick