வரவேண்டும் ‘சமாதான்’ திட்டம்!

எதிர்பார்ப்பில் வணிகர்கள்!

மிழக அரசின் நிதி ஆதாரங்களுக்கான அமைப்புகளில் வணிகவரித் துறை முதல் இடத்தில் இருக்கிறது. அரசின் மொத்த வரி வருவாயில் 75 சதவிகிதத்தை வணிகவரித் துறையே தருகிறது. 2014-15-ம் ஆண்டு வரிவசூல் 60,314 கோடி ரூபாய். இப்படி, அரசுக்கு பெருவாரியான வருவாய் ஈட்டித்தரும் வணிகர்கள், நிம்மதி இழந்து தவிக்கின்றனர் என்பதுதான் வேதனை.

இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினுடைய தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜாவிடம் பேசினோம். ‘‘வணிகவரித் துறையின் வசூல் இலக்கை எட்ட வேண்டும் என்ற அடிப்படையில் வணிகர்களின் மீது மதிப்புக்கூட்டு வரி சட்ட விதிகளுக்கு மாறாக அறிவிப்புகள் கொடுக்கப்படுகின்றன. அதற்கு, வணிகர்கள் பதில் கொடுத்தாலும் ஏற்கப்படுவது இல்லை. உடனடியாக வரிவிதிப்பு ஆணைகளை பிறப்பிக்கிறார்கள். வரிவிதிப்பு ஆணை பிறப்பித்த பிறகு, வரிவிதிக்கப்பட்ட தொகையில் 25 சதவிகித தொகையை செலுத்தினால்தான் அப்பீல் செய்ய முடியும். அப்பீல் நடந்துகொண்டிருக்கும்போது, மீண்டும் 25 சதவிகித தொகையைச் செலுத்த வேண்டும். ஆக, ஓர் அதிகாரியால் விதிக்கப்பட்ட ஆணை தவறானது என்றாலும் பாதிக்கப்பட்ட வணிகர் 50 சதவிகிதத் தொகையை செலுத்த வேண்டும். அதாவது, 10 லட்சம் ரூபாய் கட்ட வேண்டும் என்றால், 5 லட்சம் ரூபாயைக் கட்டியாக வேண்டும். அப்பீலில் ஜெயித்தாலும் இந்தத் தொகையை திரும்பப் பெற மூன்று ஆண்டுகளுக்கு மேலாகும்.

இப்போது, உற்பத்தியாளர்களிடம் இருந்து சரக்குகளைப் பெறும் மொத்த வணிகர்கள் வரி கட்டித்தான் வாங்குகிறார்கள். மொத்த வணிகர், அடுத்த வணிகருக்கு பில் போட்டு விற்கும்போது ஏற்கெனவே செலுத்திய வரியை கழித்துக்கொள்ளலாம். அதே நேரத்தில் வாங்கிய தொகைக்கும் விற்பனை செய்யப்பட்ட தொகைக்கும் இடையில் உள்ள தொகைக்கு உரிய வரியை செலுத்த வேண்டும். அதையும் செலுத்திவிடுகின்றனர். மொத்த விற்பனையாளரிடம் இருந்து பொருட்களை வாங்கிய சில்லரை வணிகர்கள்தான் செலுத்திய வரியை திரும்பப் பெறுவதில்லை. இதனால், அரசுக்கு வரி இழப்பு ஏற்படுவது இல்லை. ஆனால், முன்பு விற்பனை வரிச் சட்டம் இருந்தபோது ஒருமுனை வரிவசூல் செய்யப்பட்ட நிலையில் இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட வணிகர்கள் கணக்கு நடைமுறையால் பாதிக்கப்படவில்லை. ஆனால், தற்போது மதிப்பு கூடுதல் வரி சட்ட விதிகளை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அதிகாரிகள் இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட வணிகர்களுக்கு எதிராக வரிவிதிப்பு ஆணைகளைப் பிறப்பிக்கிறார்கள்.

நோட்டீஸ் அனுப்பிவிட்டு ஆணை பிறப்பித்துவிடுவோம் என்று மிரட்டியே லஞ்சம் வாங்கும் அதிகாரிகளும் அதிகரித்து வருகிறார்கள். எனவேதான், வணிகவரி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட உத்தேச வரிவிதிப்பு அதிகாரத்தை நீக்க வேண்டும். மேல்முறையீட்டுக்கு 25 சதவிகித வரிவிதிப்பு தொகையை செலுத்த வேண்டும் என்ற விதிமுறையை நீக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே பரிந்துரை செய்துள்ளதை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியும் அடாவடி அதிகாரிகளைக் கண்டித்தும் வணிகவரியில் பதிவு பெற்ற லட்சக்கணக்கான வணிகர்கள் விரைவில் போராட்டக்களத்தில் இறங்க உள்ளோம்’’ என்றார்.

மாநில பொதுச்செயலாளர் கே.மோகன், ‘‘அதிகாரிகள் ஆய்வு செய்யும்போது ஒரு வருட கணக்கை மட்டுமே பார்க்க வேண்டும். ஆனால், முன்பு நடைமுறையில் இருந்த சட்டத்தின்படி, 6 வருட கணக்கையும் ஆய்வுபடுத்தி வரி விதிக்கிறார்கள். வணிகவரி ஆணையரின் சுற்றறிக்கைக்கும் நீதிமன்றத் தீர்ப்புகளுக்கும் எதிராக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சமாதான் திட்டத்தைக் கொண்டு வந்து வரி பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும். அதனால், அரசுக்கு பல நூறு கோடி வசூலாகும்’’ என்று தெரிவித்தார்.

வணிகர்களின் குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரிகள் தரப்பில் பேசியபோது, ‘‘டாஸ்மாக் சரக்கு விற்பனையில் டார்கெட் வைப்பதுபோல வணிக வரித் துறைக்கும் டார்கெட் நிர்ணயிக்கப்படுகிறது. மாதந்தோறும் டார்கெட்டை எட்டாத அதிகாரிகளை மேல் அதிகாரிகள் திட்டித் தீர்க்கிறார்கள். அதனால் பலரும் கடும் மன உளைச்சலில் இருக்கிறார்கள். அரசின் இலவசத் திட்டங்களுக்கு ஒரு தொகையை ஃபிக்ஸ் பண்ணிவிட்டு எங்களை பலிகடா ஆக்குகிறார்கள்’’ என்றனர்.

வணிகவரித் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், ‘‘வணிகவரி நிர்வாக நடைமுறைகளைச் சீர்செய்து, வரி வசூலிப்பில் முனைப்புடன் வணிகவரித் துறை நிர்வாகம் செயல்படுகிறது. நிர்வாகத்திறமை ஆண்டுக்கு ஆண்டு மேம்பட்டு வருகிறது. அதனால்தான் ஆண்டுக்கு ஆண்டு கூடுதல் வரிவசூல் ஆகிறது. வரி செலுத்தும், வணிகர்கள் நலனிலும் அக்கறை கொண்டு நட்புடன் செயல்பட்டு வருகிறோம். சமாதான் திட்டம் உள்பட வணிகர்களின் பிரச்னை முதல்வரின் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டு, ஆலோசனை பெற்று தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று முடித்துக்கொண்டார்.

- எஸ்.முத்துகிருஷ்ணன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick