12 லட்சம் ஓட்டுகள் அ.தி.மு.க-வுக்கு இல்லை!

ஆசிரியர் சங்கம் அதிரடி!

சிரியர்கள் 12 ஆண்டுகளுக்குப் பிறகு போராட்டக் களத்தில் குதித்து உள்ளார்கள். 2003-ம் ஆண்டு நடந்த போராட்டத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என ஒன்றரை லட்சம் பேரை அ.தி.மு.க அரசு டிஸ்மிஸ்  செய்ததை யாரும் மறந்திருக்க முடியாது.

தமிழகத்தில் ஆசிரியர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 14 ஆயிரத்தைத் தாண்டுகிறது. இவர்கள் பல்வேறு சங்கங்களாகப் பிரிந்து இருந்தாலும், 21 ஆசிரியர் சங்கங்கள் சேர்ந்து ‘ஜாக்டோ’ என்ற பொது அமைப்பின் கீழ் போராடிவருகிறார்கள். ‘6-வது ஊதியக்குழுவில் உள்ள வேறுபாடுகளை களைய வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை நீக்கிவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்’ என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

முதற்கட்டமாக தங்களது கோரிக்கைகளுக்காக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் உள்பட 3 கட்ட போராட்டங்களை நடத்திய ‘ஜாக்டோ’ அமைப்பினர் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். 8-ம் தேதி தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். 90 சதவிகித ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை.

இதுதொடர்பாக ஆசிரியர் சங்கத் தலைவர்களிடம் பேசினோம்.

‘ஜாக்டோ’ அமைப்பின் உயர்மட்டக்குழு உறுப்பினரும் தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகச் செயலாளருமான சுரேஷ்: ‘‘மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. கடந்த 2006-ம் ஆண்டு 6-வது சம்பள கமிஷனை அரசு நடைமுறைப்படுத்தியது. அதில்தான் ஏகப்பட்ட குளறுபடிகள். பொதுவாக இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களின் அடிப்படைச் சம்பளங்களில் கொஞ்சம்தான் வித்தியாசம் இருக்கும். ஆனால் 6-வது ஊதியக்குழுவில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. 2011-ல் சட்டசபைத் தேர்தலில், ‘6-வது ஊதியக்குழுவில் உள்ள வேறுபாடுகள் நீக்கப்படும்’ என்றும், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம், மருத்துவப்படி, பயணப்படி, கல்விப்படி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் ஜெயலலிதா உறுதியளித்தார். எங்களது கோரிக்கைகள் தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சரிடமும், இயக்குநரிடமும் மனு கொடுத்தோம். அதற்கு எந்தப் பதிலும் இல்லை. தி.மு.க ஆட்சியின்போது பேச்சுவார்த்தையாவது நடத்தினார்கள். ஆனால், அ.தி.மு.க ஆட்சியில் அதுவுமில்லை. எங்கள் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்தகட்ட போராட்டங்கள் தொடரும். சட்டசபைத் தேர்தலில் ஆசிரியர்களின் சக்தி என்ன என்பதை அ.தி.மு.க-வுக்குக் காட்டுவோம். எதிர்வரும் தேர்தலில் எங்களது 12 லட்சம் ஓட்டுகள் அ.தி.மு.க-வுக்கு இல்லை’’ என்றார் ஆவேசமாக.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் தியாகராஜன்: ‘‘பழைய பென்ஷன் திட்டத்தில் ஆசிரியர்களின் வருங்கால வைப்பு நிதியை எந்தெந்த திட்டங்களில் முதலீடு செய்வது என்பது பற்றி கருத்து சொல்லும் உரிமை தொழிற்சங்கங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. புதிய பென்ஷன் திட்டத்தில் அது இல்லை. புதிய பென்ஷன் திட்டத்தின் கீழ் ஆசிரியர்களிடம் இருந்து இதுவரை 8 ஆயிரம் கோடி ரூபாய் வரை பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. அது எங்கு முதலீடு செய்யப்பட்டிருக்கிறது, எவ்வளவு முதலீடு செய்திருக்கிறார்கள் என்ற விவரங்களைக்கூட பெற முடியவில்லை. ஆசிரியர்களிடம் வசூலிக்கப்பட்ட அந்தப் பணம் வேறு திட்டங்களுக்குச் செலவழிக்கப்பட்டு விட்டதோ என்ற பீதி ஆசிரியர்கள் மத்தியில் இருக்கிறது’’ என்றார் வருத்தத்துடன்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் ரங்கராஜன்: ‘‘புதிதாகப் பணிக்குச் சேர்ந்த 48 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் தமிழகத்தின் அரசுத் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றுகின்றனர். இதில் 6-வது ஊதிய கமிஷனால் கிட்டத்தட்ட 32 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் ரூ.9,300, தர ஊதியம் ரூ.4,200 என்று ரூ.13,500 மட்டுமே வழங்குகிறது. தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் ரூ.5,200, தர ஊதியம் ரூ.2,800 என்று மொத்த சம்பளம் ரூ.8,000 நிர்ணயித்துள்ளது. இதன்மூலம் ஒவ்வோர் இடைநிலை ஆசிரியர்களும் மாதம் 5,500 ரூபாயை இழக்கிறார்கள்’’ என்றார்.

ஜாக்டோ அமைப்பின் மாநிலத் தொடர்பாளரும், பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிர்வாகியுமான இளங்கோவன்: ‘‘ஆசிரியர்களுக்குப் பணி பாதுகாப்பு இல்லை. சமீபத்தில் வேலூர், சென்னை வண்டலூர், நெல்லை உள்பட சில இடங்களில் பள்ளிக்கு வெளியே ஆசிரியர்களை மாணவர்கள் கற்களால் தாக்கும் சம்பவங்கள் நடந்துள்ளன. தமிழகத்தில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு மருத்துவப்பணி சார்ந்த பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்ததைப்போல, ஆசிரியர்களின் பாதுகாப்புக்கென்று தனியாக சட்டம் இயற்ற வேண்டும்’’ என்றார்.

தமிழ்நாடு அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் சாமி சத்தியமூர்த்தி: ‘‘நலத்திட்ட உதவிகள் பெற தகுதியான மாணவர்கள் பற்றிய விவரங்கள் அளித்தல்; மாணவர்களுக்கு சாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ்கள் வழங்குதல்; அரசு கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்களுக்கு வங்கிகளில் கணக்குத் தொடங்குதல்; வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் உள்பட பல வேலைகளில் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்தான் செய்ய வேண்டியிருக்கிறது. இப்படி பல வேலைகளுக்கு மத்தியில் பள்ளியில் பிற ஆசிரியர்கள் ஒழுங்காகப் பாடம் நடத்துகிறார்களா, கல்விப் பணி சிறப்பாக நடக்கிறதா என்பதையும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்தான் கண்காணிக்க வேண்டும்.

எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் தேர்ச்சி சதவிகிதம் குறையக் கூடாது என்று பள்ளிக்கல்வித் துறையின் உயர் அதிகாரிகள் டார்ச்சர் ஒரு பக்கம். பல பள்ளிகளில் போதிய வாட்ச்மேன்கள், துப்புரவுப் பணியாளர்கள் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. எனவே, பள்ளியைச் சுத்தப்படுத்துவது முதல், கழிவறையைக் கழுவுவது வரை எல்லாமே தலைமை ஆசிரியர் தலையில்தான் விழுகிறது. மேலும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதை கண்காணிக்க வட்டார அளவில் ஓர் அலுவலரை நியமிக்க வேண்டும். அப்போதுதான் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பாடங்கள் சொல்லித்தருவதிலும், கல்வித்தரத்தை உயர்த்துவதிலும் கவனம் செலுத்த முடியும்’’ என்று கோரிக்கை வைத்தார்.

‘ஜாக்டோ’ அமைப்பினரின் கோரிக்கைகள் தொடர்பாக பள்ளிக்கல்விச் செயலாளர் சபீதாவை தொடர்புகொண்டோம். ‘‘ஜாக்டோ அமைப்பினர் கடந்த 8-ம் தேதி நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் 4,666 ஆசிரியர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். பிற ஆசிரியர்கள் வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றுள்ளனர். அந்த ஸ்டிரைக்கினால் பெரிய அளவில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. ‘ஜாக்டோ’ அமைப்பினரின் கோரிக்கைகள் அனைத்தும் ‘நிதி’ தொடர்பானவை. எனவே, இதுதொடர்பாக அரசிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்” என்றார்.

அரசு செவிசாய்க்குமா?

- எம்.கார்த்தி
படங்கள்: ஜெ.வேங்கடராஜ், ஆர்.எம்.முத்துராஜ், ஈ.ஜெ.நந்தகுமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick