சோக நெருப்பை விழுங்கி சிரிக்கத் தெரிந்த சித்தர்!

வழக்கறிஞர் அ.அருள்மொழி

ச்சி என்பது தமிழ்நாட்டின் ஓர் ஊர்ப் பகு​தியைச் சேர்ந்த பெண்ணாகக் காட்டும் அடைமொழி. உண்மையில் கோடிக்கணக்கான தமிழர்களுக்கு அவர் மனதளவில் ஒரு தாய். துயரங்களை விழுங்கி, துணிவோடு வாழ ஒரு வழிகாட்டி. எந்தச் சூழ்நிலையிலும் அவரது பேச்சும், பாட்டும், நடனமும், நடிப்பும் ஏதோ ஒரு வகையில் நமது வாழ்க்கையுடன் கைகோத்து வந்துகொண்டேதான் இருக்கின்றன.

அடையாளம் தர மறுத்த தந்தை; உடன்வாழாத கணவர்... இப்படி ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் வேதனையில் புலம்புவர். வெற்றி பெற்றாலும் விரக்தியில் வெடிப்பர். புகழ் பெற்றபின் மற்றவர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவர். அதற்கு தன் கடந்தகால வாழ்க்கையில் இருந்து நியாயம் கற்பித்துக்கொள்வர். இப்படி வறண்டுபோன வாழ்க்கையை வாழ்பவர்களுக்கு நடுவில், நெருப்பை விழுங்கிவிட்டு சிரிக்கத் தெரிந்த ஒரு சித்தரைப்போல் வாழ்ந்தார் மனோரமா.

அவர் பட்ட அடிகளை எழுதியிருந்தால் கண்ணீரில்தான் அச்சிட வேண்டியிருக்கும். ஆனால், அடிக்க அடிக்க எழும் பந்தானது அவரது வெற்றி. புகழின் உச்சம் எல்லோரையும் நிலை தடுமாறவைக்கும். ஆனால், மனோரமாவின் நிதானமான பண்பை எந்த வெற்றியும் மாற்றவில்லை. அவமானங்களை அடித்தளமாகக் கொண்டு எழுந்து நின்ற கட்டடம் அல்லவா? புகழ் என்னும் சூறாவளியால் அதனை அசைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

‘கலாட்டா கல்யாணம்’ என்றொரு படம். ஆண்களை வெறுக்கும் இளம்பெண்ணாக மனோரமா. அவரை காதலிக்கத் திட்டமிடும் நாகேஷிடம் பொய்க்கோபம் காட்டியபடியே வெட்கப்படும் அந்த அழகை நினைத்து நினைத்து ரசித்தது அன்றைய தலைமுறை. ‘நடிகன்’ படத்தில் ‘எனக்கும் செவ்வாய் தோஷம்’ என்று சொல்லி, சத்யராஜிடம் அவர் வெட்கப்பட்ட அழகைச் சொல்லிச்சொல்லி ரசிக்கிறது இன்றைய தலைமுறை.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், நடிகவேள் எம்.ஆர்.ராதா, ரங்கா ராவ், பாலையா என்ற மலைக்கவைக்கும் பெருங்கலைஞர்கள் காலத்தில் திரைத்துறைக்கு வந்த அவர், சந்திரபாபு, டணால் தங்கவேலு, நாகேஷ், தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன் என நகைச்சுவை நடிகர்கள் அத்தனை பேருடனும் போட்டிபோட்டு நடித்தார். அவர்களுக்குப் பிறகும் மனோரமாவின் கலைப்பயணம் மட்டும் வற்றாத ஊற்றாக நடைபோட்டது.

அவரின் பட்டறிவு, வாழ்க்கையின் வடுவாக திரைப்படங்களில் வெளிப்பட்டது. மருமகளோடு சண்டை போட்டு மகனால் அவமானப்படுத்தப்பட்ட ஒவ்வொரு தாய்க்கும் மாமியாரை எதிரியாகக் கருதும் ஒவ்வொரு மருமகளுக்கும் பாடம் சொன்ன அவரது நடிப்பால் ஓடிய இயக்குநர் வி.சேகரின் ‘நான் பெத்த மகனே’ என்ற படம். அந்தப் படத்தில் கிணற்றடியில் சேர்ந்து கிடக்கும் பாத்திரங்களை விளக்குவதற்கு முன் ஒரு பாத்திரத்தில் நீரை அள்ளி கையால் சீராகத் தெளித்து காய்ந்துபோன பாத்திரங்களை நனைத்துவிட்டு விளக்கத் தொடங்கும் மாமியராக... தன்னிச்சையான அவரது நடிப்பில் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டார்கள் வீட்டு வேலை செய்யத் தெரிந்த, தமிழ்நாட்டுப் பெண்கள்.

‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் மோகனாவையே மறந்தாலும் ஜில் ஜில் ரமாமணியை மறக்க முடியாது. அந்தப் படத்தில் கள்ளம் கபடமற்ற மனோரமாவின் நடிப்பைப் பார்த்து சிவாஜியைப்போலவே ரசிகர்களும் வியந்தார்கள்; இன்றும் வியக்கிறார்கள்.

‘நவராத்திரி’ திரைப்படத்தில் மனநல மருத்துவமனையின் பெண்கள் வார்டில், விதவிதமான பைத்தியங்களுக்கு நடுவில் கட்டிலின் மேல் சம்மணம் போட்டு அமர்ந்து, ‘வந்தநாள் முதல் இந்த நாள் வரை’ என்று பாடகர் ஆகும் ஆசைகொண்ட பைத்தியமாக அசத்திய அந்தத் தோரணையை ரசித்துப் பார்த்தார் நடிகையர் திலகம் சாவித்திரி. ‘வா வாத்யாரே ஊட்டாண்ட’ என்று சென்னைத் தமிழில் சோவை கட்டியிழுத்த காட்சி, சந்திரபாபுவோடு இணையாக ‘பொறந்தாலும் பொம்பளையா பொறக்கக் கூடாது’ என்று செல்லமாக சலித்துக்கொண்டு ஆடிய நடனம், ‘ஜின்ஜின்னாக்கடி ஜின்ஜின்னாக்கடி பாத்தியளே நீங்களும்... முத்துக்குளிக்க வாரீகளா?’ என்று நாகேஷை ஆட்டிவைத்த ஆற்றல்... எனச் சொல்லிக்கொண்டே போகலாம். பாமரத் தமிழ், கொங்குத் தமிழ், சென்னைத் தமிழ், நெல்லைத் தமிழ் எல்லாம் அவருக்குத் தாய்மொழிதான்.

அரசியலில் எதிரிகள்கூட அவரிடம் அன்பைக் காட்டுவதில் வேறுபடவில்லை. ‘உதயசூரியன்’ நாடக அனுபவங்களை இன்றும் மறக்காமல் சொல்லி அவரை உற்சாகப்படுத்தினார் கலைஞர். ‘படப்பிடிப்பு இல்லாத நாட்களில் அவர் வீட்டுக்குச் செல்வேன். சாப்பிடுறியா அம்மு என்று கேட்டு, தானே தன் கையால் எனக்கு உணவு பரிமாறுவார்’ என்று அவரது அன்பை நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் ஜெயலலிதா. இருவேறு திசைகளில் நிற்கும் இந்த இரண்டு அரசியல் தலைவர்களாலும் இணையாக மரியாதை செய்யப்பட்ட ஒரு ஆளுமை, மனோரமா.

திரைப்பட நடிகை சின்னத்திரைக்கு நடிக்க வந்துவிட்டால் அவரது பெரிய திரை வாழ்க்கை மூடுவிழா காண்கிறது என்கிற எழுதாத சட்டத்தை உடைத்தவர் மனோரமா. பொதிகை தொலைக்காட்சியில் கோமல் சுவாமிநாதனின் நாடகத்தில் ‘மாமியாக’ நடித்தார் மனோரமா. ஒரு காட்சியில் கருக்கலைப்பு செய்துகொண்ட தன் குடும்பத்துப் பெண்ணைப் பார்த்து இப்படிச் செய்துவிட்டாயே என்று பேசினார் ஒரு நீண்ட வசனம்... அன்றுதான் சின்னத்திரை நாடகம் பார்த்த ஆண்கள், பெண்கள் அனைவரும் அழுதார்கள். நடிகர் திலகத்துக்குப் பின் தன் நடிப்பால் பார்ப்பவர்களை அப்படி அழ வைத்தவர் மனோரமா மட்டும்தான்.

ஒரு சமையல் தொடரில் மனோரமா நடித்தால் அவரது மார்க்கெட் குறைந்துவிட்டதாகப் பொருள் அல்ல. அந்த சமையல் நிகழ்ச்சி, நட்சத்திர நிகழ்ச்சியாக அந்தஸ்தில் உயருகிறது என்று பொருள். ஆனால், மனோரமாவை அமிதாப்பச்சனோடு ஒப்பிடத் தோன்றாது.

‘பாட்டி சொல்லைத் தட்டாதே’ படம், குழந்தைகளுக்​கெல்லாம் கொண்டாட்டம். அதிலும் சொந்தக் குரலில் ‘டில்லிக்கு ராஜான்னாலும்..’ என்று பாடும் அவரது குதூகலம்... சொந்தக்குரல் அவரது பலம். தன் குரலுக்கேற்ற பாடல்களைத் தேர்ந்தெடுத்துப் பாடியது அவரது திறமை. ‘தெரியாதோ நோக்கு... தெரியாதோ’ என்று அக்ரஹாரத்து நடையில் பாடினாலும், ‘மஞ்சக்கயிறு... தாலி மஞ்சக்கயிறு’ என்று கயிறு விற்கும் பெண்ணாகப் பாடினாலும் ‘நைனா, உன் நெனப்பாலே நான் நாஷ்டா பண்ணி நாளாச்சி’ என்று சென்னைத் தமிழில் பாடினாலும் அவரது குரல் கம்பீரமானது.

‘பெரியார்’ திரைப்படத்தில் தந்தை பெரியாரின் தாயாராக நடித்தார். அந்தப்பட பாராட்டு விழாவில் அவருக்கு மக்கள் கலையரசி பட்டம் வழங்கப்பட்டது. அந்த மேடையில் மனோரமாவின் சிறப்புகளைக் குறித்து நான் பேசியபோது கண்களை விரித்து சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். மனோரமாவின் ரசிகரான என் தாயும் அந்த விழாவுக்கு வந்திருந்தார். விழா முடிந்தவுடன், என் கன்னத்தை வருடி, ‘எங்க இருந்து இப்படிப் பேச்சும் கருத்தும் வருது’ என்று பாராட்டினார். என் தாயாருக்கு பெருமையில் கண்கலங்கிவிட்டது.

15 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு பெரியார் விருது வழங்கிய விழாவில் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் தங்கள் தாலியை அகற்றுவதற்காக மேடைக்கு வந்தனர். அந்தப் பெண் அணிந்திருந்த தாலியை அவரது கணவரே கத்தரித்து அதில் இருந்த தாலி மற்றும் உருப்படிகளை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியிடம் ‘நாகம்மையார் குழந்தைகள் இல்ல’த்துக்கு நன்கொடையாகக் கொடுத்தார். அந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்த மனோரமா அவர்கள் திடுக்கிட்டு, ஒரு கணம் தன் முகத்தை மூடிக்கொண்டார். நிகழ்ச்சி முடிந்த பிறகு.... மேடையைவிட்டு இறங்கும்போது, ‘ஏனம்மா, அப்படி அதிர்ச்சி அடைந்தீர்கள்’ என்று கேட்டேன். என் கையைப் பிடித்து அழுத்தி, ‘என்னால் தாங்க முடியலம்மா’ என்றார். ‘இது இங்கு சாதாரணமாக நடக்கும் ஒரு நிகழ்வுதானம்மா’ என்றேன். ‘தெரியுது... ஆனால், இந்தக் கயிறு ஒன்று இருந்தால் எங்கள் மரியாதையே வேறு’ என்று முடித்தார். ‘இந்தக் கயிறுக்குத்தானா மரியாதை, பெண்ணுக்கு இல்லையா அம்மா?’ என்றேன். அதற்கு அவர் சொன்ன பதிலை எழுத முடியாது.

தன் முடிவுக்கு சில வாரங்கள் முன்பாக அவருக்கு நடந்த பாராட்டு விழாவில் ஒரு போலி சாமியாரைப் பற்றி அவர் சென்னைத் தமிழில் பேசிக்காட்டிய பழைய வசனம், அவரது நினைவு ஆற்றலையும் தடையற்ற உடல் மொழியையும் கடைசி மூச்சுவரை தன் கலையை நேசித்த, தன் உடல், மனவேதனைகளோடு தன்னையே மறந்து தன் நடிப்புடன் ஒன்றிப்போன ஒரு மாபெரும் கலைஞரை வெளிப்படுத்தியது. தமிழ்த் திரையுலகம் கண்ட ஒரே கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். ஒரே மக்கள் கலையரசி மனோரமா!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick