“நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை!”

கோகுல்ராஜின் தாயார் விரக்தி

‘‘கோகுல் இருக்கும்போது வீடே சொர்க்கமாக இருக்கும். கலகலப்பாகப் பேசிகிட்டே இருப்பான். எவ்வளவு கவலை இருந்தாலும் அவனைப் பார்த்தாலே பறந்துபோயிடும். இப்போ, கோகுல்ராஜ் இல்லாத இந்த வீடு, இருண்ட வீடா இருக்கு. ஒவ்வொரு நாளும் நரக வேதனையா இருக்கு. அவன் செத்துப் போயிட்டான் என்று நினைத்தாலே பைத்தியம் பிடிப்பது மாதிரி இருக்கு. கணவனையும் இழந்துட்டேன். மகனையும் இழந்துட்டேன். செத்துப்போயிடலாம்னு இருக்கு சாமீ...’’ என தலையில் அடித்துக்கொண்டு அழுகிறார் சித்ரா. இவர், தலை துண்டிக்கப்பட்டு தண்டவாளத்தில் வீசப்பட்ட பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜின் தாயார்.

தன் மகனுடைய மரணத்தின் வேதனையில் இருந்து சித்ரா இன்னும் மீளவில்லை. அவரை நாம் சந்தித்தபோது, அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் பேசினார். 

“கோகுல்ராஜ் கொலை வழக்கில் விசாரணை எப்படி போய்க் கொண்டிருக்கிறது?”

“என் பையன் வழக்கில் இதுவரைக்கும் ஒரு துரும்பைக்கூட போலீஸ் கண்டுபிடிக்கலை. என் பையன் காணாமல்போன ஜூலை 23-ம் தேதி, ஓமலூர் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுக்கப் போனோம். ‘உங்க பையன் திருச்செங்கோடு போறதாகத்தானே சொல்லிட்டுப் போயிருக்கிறான். அதனால திருச்செங்கோடுல போய் புகார் கொடுங்க’னு துரத்திவிட்டாங்க. திருச்செங்கோடு இன்ஸ்பெக்டர் சக்கரபாணியிடம் புகார் கொடுத்தோம். மிகவும் தயக்கத்தோடு புகாரை வாங்கினார். காலை 11 மணிக்கு புகாரை வாங்கிக்கொண்டு மாலை 4 மணி வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோகுல்ராஜின் உடல், தண்டவாளத்தில் கிடப்பதாக ரயில்வே போலீஸ் சொன்ன பிறகு எங்களை துரத்திவிடும் முயற்சியில்தான் இருந்தார்கள். அதனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.”

 “இந்த வழக்கு விசாரணையில் டி.எஸ்.பி விஷ்ணுப்ரியாவின் செயல்பாடு எப்படி இருந்தது?”

“விஷ்ணுப்ரியா மேடத்தை இரண்டு மூன்று முறை விசாரணைக்காக திருச்செங்கோட்டில் சந்தித்தேன். ‘இன்னும் குற்றவாளியைப் பிடிக்கவில்லையே... மேடம்’ என்று அழுதுகொண்டே கேட்பேன். ‘உங்க வழக்கை ஸ்பெஷல் கவனம் எடுத்து விசாரித்து வருகிறேன். யுவராஜை நெருங்கிவிட்டேன். கூடிய சீக்கிரத்தில் பிடித்துவிடுவேன்’ என்று சொல்வார். ‘உடம்பை நல்லா பார்த்துக்கொள்ளுங்கள் அம்மா’ என்று சொல்வார். அவங்க மிகவும் நேர்மையான அதிகாரி என்று பொதுமக்கள் சொல்வதை காதுபட கேட்டிருக்கிறேன். அதனால் எப்படியும் யுவராஜை பிடித்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது.”

“அவர் தற்கொலை செய்துகொண்டதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”

“என் பையன் வழக்கில் மிகவும் அர்ப்பணிப்போட வேலைப் பார்த்தாங்க. அவரை நான் சந்தித்தபோதெல்லாம் மிகவும் கம்பீரமாகவும் தெளிவாகவும் இருந்தாங்க. நிச்சயமாக அவங்க தற்கொலை செய்திருக்கமாட்டாங்க. அது கொலையாகவும்கூட இருக்கலாம்.”

“யுவராஜ் சரணடைந்து இருக்கிறாரே? அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?’’

‘‘யுவராஜை தமிழக போலீஸால் பிடிக்க முடியவில்லை. இது தமிழக போலீஸுக்கு மிகப்பெரிய அவமானம். அவருடைய ஆதரவாளர்கள், யுவராஜ் சரணடைந்ததை வரலாற்றுச் சாதனையாகக் கொண்டாடுகிறார்கள்.  அதை போலீஸாரும் வேடிக்கைப் பார்க்கிறார்கள். இதனால், என் பையன் சாவுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை.’’

 - வீ.கே.ரமேஷ்
படங்கள்: பா.காளிமுத்து


“கோகுல்ராஜும் சுவாதியும் காதலர்கள் இல்லை!”

- நண்பர் கார்த்திக் சொல்கிறார்

கொலைசெய்யப்பட்ட பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் குறித்து, அவருடைய நெருங்கிய நண்பர் கார்த்திக்கிடம் கேட்டோம்.

“திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக் அண்டு கம்யூனிகேஷன் பிரிவில் 2011-ல் சேர்ந்தேன். கோகுல் என்னுடன் படித்தான். எல்லோரிடமும் ரொம்ப ஜாலியாகப் பேசுவான். எனக்குத் தெரிந்த வரையில் கோகுல்ராஜும், சுவாதியும் நல்ல நண்பர்கள். அவர்கள் காதலிக்கவில்லை.

சுவாதியிடம் கோகுல்ராஜ் 1,000 ரூபாய் பணம் கேட்டிருந்தான். அதைக் கொடுக்கத்தான் திருச்செங்கோடு மலைக்​கோயிலுக்கு சுவாதி போயிருக்கிறார். அப்போது, ஒரு பெண் உட்பட 3 பேர் வந்து, ‘நீங்கள் லவ்வர்ஸா?’ என்று கேட்டு மிரட்டியுள்ளனர். சுவாதியோட செல்போனை பிடிங்கிக்கொண்டு, ‘யுவராஜ் அண்ணன் உங்களைக் கூட்டிவரச் சொன்னார்’ என்று கோகுலைக் கூட்டிப் போயுள்ளனர். இன்னொரு ஆளும், அந்தப் பெண்ணும் சுவாதியைக் கூட்டிட்டு வந்து மலைக்குக் கீழே விட்டுள்ளனர்.

சற்றுநேரத்தில் காரில் வந்த யுவராஜ், ‘ஒழுங்கா வீட்டுக்குப் போ’ என்று சுவாதியை மிரட்டியிருக்கிறார். அப்போது, ‘கோகுல் எங்கே?’ என்று சுவாதி கேட்டதற்கு, ‘அவனை மலை மேலே விட்டுவிட்டேன்’ என்று சொல்லிவிட்டு யுவராஜ் காரில் கிளம்பிவிட்டாராம். இதை எல்லாம் சுவாதி என்னிடம் சொன்னாள்.

கோகுல் காணாமல் போனதும் அவனோட அண்ணன் கலைச்செல்வன் எனக்கு போன் செய்தார். உடனே நான் சுவாதிக்கு போன் செய்தேன். சுவாதியின் போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருந்தது. சற்று நேரத்தில், சுவாதி அவளோட அம்மாவின் செல்போனில் இருந்து போன் செய்தாள். திருச்செங்கோடு மலைக்கோயிலில் கோகுலை சந்தித்தது, கோகுலை சிலர் அழைத்துச் சென்றது, யுவராஜ் மிரட்டியது என எல்லாவற்றையும் என்னிடம் சொன்னாள். அந்தத் தகவலை கோகுல்ராஜின் அண்ணனிடம் தெரிவித்தேன். போலீஸில் புகார் கொடுக்கலாம் என்று அவர் சொன்னார். திருச்செங்கோடு போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனோம்.

கோகுல் அவனோட ஊரில் ஒரு கேம்ஸ் சென்டர் வைப்பதற்காகப் பலரிடமும் பணம் கேட்டான். அவனுக்கு நான் பணம் கொடுத்தேன். கோகுல் காணாமல் போவதற்கு 20 நாட்களுக்கு முன்பு, கடைசியாக அவனைப் பார்த்தேன். ஆனாலும், அடிக்கடி போனில் பேசுவோம். சம்பவம் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்புகூட அவனிடம் பேசினேன். அப்போது, அவன் திருச்செங்கோடு வருவதாக என்னிடம் எதுவும் சொல்லவில்லை. கோகுல்ராஜ் கொலை சம்பந்தமாக எந்தத் தகவலும் எனக்குத் தெரியாது” என்றார் கார்த்திக்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick