கலைஞருக்கு எதிர்காலம் உண்டா?

விளாசும் மல்லை சத்யா!

‘‘இன்றைக்கு, சமூக வலைதளங்களில் நம்பர் ஒன் காமெடி ஸ்டாலின்தான். மு.க.அழகிரியே அதைச் சொல்லி இருக்கிறார். தினமும் ஏதாவது ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டு நகைப்புக்கு உரியவராகிறார். ஸ்டாலின் செய்வது அனைத்துமே செயற்கையாக இருக்கிறது. நாடகம் பார்ப்பதுபோல அவரது நடவடிக்கைகளை மக்கள் வேடிக்கைப் பார்க்கிறார்கள். ஸ்டாலின் சந்திப்பது எல்லாமே அவருடைய கட்சியினரும், பினாமிகள் நடத்தும் கல்லூரி மாணவர்களையும்தான்’’ என்று ஸ்டாலினின் பயணத்தை விமர்சிக்கிறார், ம.தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா.

‘‘ஸ்டாலின் பயணத்தை காமெடி என்கிறீர்கள். ஆனால், உங்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தி.மு.க-வுக்குத்தானே போகிறார்கள்?”

‘‘தி.மு.க-வில் ஆள்பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. எனவேதான், தலைவர் வைகோ-வினால் ஆளாக்கப்பட்டவர்களை இழுத்துச்சென்று அரசியல் நடத்த வேண்டிய அவல நிலை அவர்களுக்கு ஏற்பட்டு உள்ளது. அந்த மாய வலையில் சிக்கிய சில மீன்களுக்கு, அந்தக் குளத்தில் தண்ணீரே இல்லை; தங்களால் உயிர் வாழவே முடியாது என்பதை முந்தைய வரலாறுகள் மூலம் உணரத் தவறிவிட்டதுதான் பரிதாபத்துக்குரியது.’’

‘‘மதுராந்தகம் ஆறுமுகம், எல்.கணேசன், மு.கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன் போன்ற மூத்த நிர்வாகிகளும்கூட தி.மு.க-வுக்குப் போனார்களே?’’

‘‘ம.தி.மு.க-வில் இருந்தபோது செஞ்சி ராமச்சந்திரனும் கண்ணப்பனும் மத்திய அமைச்சரானார்கள். அதன்பிறகு,  மு.கண்ணப்பன் சட்டமன்ற உறுப்பினராக அந்துஸ்து பெற்றது ம.திமு.க-வால்தான். அந்த நன்றியை மறந்து அவர்கள் ஓடிவிட்டனர். இப்போது அவர்கள், இருக்கும் இடம் தெரியவில்லை. அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதைக் கேட்டுச் சொல்லுங்கள். ஸ்டாலின் உட்கார்ந்து இருக்கும் மேடைக்கு செஞ்சி ராமச்சந்திரன் ஏற வருகிறார். அவரை கீழே உட்காரச் சொல்கிறார் ஸ்டாலின். ம.தி.மு.க-வில் அவர் தரைப்படைத் தளபதியாக இருந்தார். அங்கு தரையில் இருக்கிறார். தாயகத்துக்கு செஞ்சியார் வந்தால் அனைவரும் எழுந்து நிற்பார்கள். அங்கு அவரால் எழ முடியவில்லை. இதுதான் போனவர்கள் கதி. எந்தத் தகுதியும் இல்லாதவர்களையும் தி.மு.க. சேர்த்துக்கொள்ளும். ஆனால், பணக்காரர்களுக்கு மட்டும்தான் மரியாதை கிடைக்கும். யாருக்காவது சந்தேகம் இருந்தால், அங்கு கோலோச்சுபவர்கள் யார் என்று பட்டியலிட்டுப் பாருங்கள் புரியும்.

மதுராந்தகம் ஆறுமுகத்தை தாரை தப்பட்டை வைத்து செங்கல்பட்டு சென்று ஸ்டாலின் அழைத்து வந்தார். அதன்பிறகு அவரை கண்டுகொள்ளவே இல்லை. ‘மரியாதை இல்லாத இடத்தில் இருக்கக் கூடாது என்று அ.தி.மு.க-வுக்குப் போய்விட்டார். அவர் மறைந்தபோது, ம.தி.மு.க-வினர்தான் இறுதி அஞ்சலி செலுத்தினோம். அவரது சிலையையும் நாங்கள்தான் திறந்தோம்.’’

‘‘ம.தி.மு.க-வில் இருந்தால் அரசியல் எதிர்காலம் இல்லை என்று தி.மு.க-வுக்குப் போனவர்கள் சொல்கிறார்களே?’’

‘‘யாருக்கு எதிர்காலம் என்ற கேள்விக்கு, 2016 சட்டமன்றத் தேர்தல் பதில் சொல்லும். கலைஞருக்கே எதிர்காலம் உண்டா என்ற கேள்வி எழும்பி இருக்கும் கட்சியில் இருப்பவர்கள் ம.தி.மு.க-வைப் பற்றிப் பேச யோக்கியதை இருக்கிறதா? ம.தி.மு.க மாவட்டச் செயலாளராக இருந்த பாலவாக்கம் சோமு, அவரது மனைவி உள்பட மொத்தம் 10 பேர் மட்டுமே தி.மு.க-வில் சேர்ந்தனர். அதே நாளில் தி.மு.க-வில் இருந்து முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், தனது ஆதரவாளர்கள் 10 ஆயிரம் பேருடன் தே.மு.தி.க-வில் சேர்ந்தார். ‘கலைஞர் கட்டுப்பாட்டில் தி.மு.க. இல்லை. தி.மு.க-வுக்கு அரசியல் எதிர்காலமே இல்லை’ என்று அவர் சொல்லி இருக்கிறார். அரசியல் ரீதியாக வெற்றிகொள்ள முடியாதவர்கள், ஆள் பிடிக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள்.’’

‘‘ம.தி.மு.க-வுக்கு தனியாக ஒரு பத்திரிகை தொடங்கப்போவதாக சொன்னது, என்ன ஆனது?’’

‘‘களத்தில் நின்று போராடி வழக்குகளை எதிர்கொள்கிற எங்களுக்கு ஊடகம் இல்லை.  இந்தச் சூழலில்தான், ‘இமயம்’ ஜெபராஜ் என்பவர், ஒரு பத்திரிக்கை தொடங்குவதற்கான தன் ஆவலை தலைவர் வைகோவிடம் தெரிவித்தார். தலைவர் வைகோ ஒவ்வொரு மாவட்டமாக பயணம் மேற்கொண்டு, ம.தி.மு.க. தொண்டர்களிடம் சுமார் 5 கோடி ரூபாயை சந்தா தொகையாக பெற்றுத் தந்தார். அதை வாங்கிக்கொண்ட ஜெபராஜ், ம.தி.மு.க-வில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இப்போது அவர் தொடங்கியுள்ள நாளேடு, சென்னையில் மட்டும் வெளிவருவதாகத் தெரிகிறது. அதுவும்கூட ம.தி.மு.க-வின் சந்தாதாரர்களை ஒழுங்காகச் சென்றடையவில்லை. பத்திரிகையை அனுப்ப முடியவில்லை என்றால், சந்தா தொகையை அவர்கள் திருப்பிக்கொடுக்க வேண்டாமா?’’

‘மக்கள் நலக் கூட்டு இயக்கத்தின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும்?’’

‘‘அரை நூற்றாண்டு காலமாக தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் மாறி மாறி ஆட்சி செய்து, ஊழல்கள் செய்து தமிழகத்தைச் சீரழித்து வைத்திருக்கிறார்கள். எனவே, மாற்றுச் சக்தி ஆட்சிக்கு வரவேண்டும் என்ற எண்ணம் இயல்பாகவே மக்களிடம் உருவாகி இருக்கிறது. விரல் நீட்டி குற்றம் சொல்ல முடியாத தலைவர்களால் மக்கள் நலக் கூட்டு இயக்கம் உருவாக்கப்பட்டு உள்ளது. அறம் சார்ந்த அரசியலை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று விரும்புகிற புரட்சிக் கலைஞர் கேப்டன், அண்ணன் ஜி.கே.வாசன் போன்றவர்கள் இந்த அணியில் கரம் கோர்ப்பது தமிழக அரசியலுக்கு அவசியம்.’’

- எஸ்.முத்துகிருஷ்ணன்
படம்: ப.சரவணகுமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick