“கமல் யூத்தா? சொந்தம் பார்க்கும் சத்யராஜ்!”

சாட்டை எடுக்கும் சரத்குமார்

வெறும் 3,139 பேர் மட்டுமே ஓட்டு போடும் நடிகர் சங்கத் தேர்தலை தமிழகத்தின் 7 கோடி தமிழர்களிடமும் கொண்டு போய் சேர்த்திருக்கிறார்கள் சரத் மற்றும் விஷால் அணியினர். முறைகேடு புகார்கள், ஓட்டுக்கு பணம், சாதி ரீதியான தாக்குதல்கள், தேர்தல் அறிக்கைகள் என பக்கா சட்டமன்றத் தேர்தலைப்போல சூடு கிளப்பிக் கொண்டிருக்கிறது நடிகர் சங்கத் தேர்தல். விஷால் அணியினர் ஆதாரங்களை அள்ளிப்போட்டதுமே சரத்குமாரும் ஆதாரங்களை காட்டி பதிலடி கொடுத்திருக்கிறார். ‘ஒண்டிக்கு ஒண்டி’ சண்டை நடக்கிறது நடிகர் சங்கத் தேர்தலில். மீண்டும் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சரத்குமாரை சந்தித்தோம்.

‘‘நாசர் அணிக்கு ‘பாண்டவர் அணி’னு பெயர் வைத்திருக்கிறார்களே? அப்படியென்றால் உங்கள் அணியின் பெயர் கெளரவர்களா?’’

‘‘நாசரிடம்தான் கேட்க வேண்டும். 5 நபர் கொண்ட அணியைத்தான் பாண்டவர்கள் என்பார்கள். நாசர் அணியில் 5 பேர் மட்டும் நிற்கவில்லை. மொத்தம்  29 பேர் போட்டியிடுகிறார்கள். நடிகர் சங்கத் தேர்தலை ஒட்டுமொத்த உலகமே உற்றுப் பார்க்கிற தேர்தல் மாதிரி அவர்கள்தான் உருவாக்கிவிட்டனர்.’’

 

 ‘‘நாடக நடிகர்களை தமிழகம் முழுவதும் போய் விஷால் அணியினர் சந்தித்திருக்கிறார்கள். நீங்கள் ஏன் போகவில்லை?’’

‘‘நாடக நடிகர்களை அவர்களுடைய சங்கத்துக்குச் சென்று சந்திக்க வேண்டும். அப்படித்தான் நாங்கள் புதுக்கோட்டை, சேலம், மதுரை பகுதிகளில் இருக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களை மட்டும் சந்தித்துப் பேசினோம். விஷால் அணியைப்போல் உறுப்பினரே இல்லாத ரசிகர் மன்ற கூட்டத்தை ஏற்பாடு செய்து பிரமாண்டத்தைக் காட்டச் செல்லவில்லை.’’

‘‘மனோரமாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் வந்தபோது என்னதான் நடந்தது?

‘‘ஆச்சி வீட்டுக்கு, முதல்வர் வந்தபோது நான் வணக்கம் வைத்தேன். அவரும் பதிலுக்கு வணக்கம் வைத்தார். அதன்பின் ஆச்சியை ‘பெண் நடிகர் திலகம்’ என்று சொல்லி புகழஞ்சலி செலுத்திவிட்டுத் திரும்பினார். இறப்பு வீட்டில் ‘போய்விட்டு வருகிறேன்’ எனச் சொல்வது தமிழர் பண்பாடு இல்லை. அதனால் முதல்வரை காரில் ஏற்றி வழியனுப்பி வைத்துவிட்டுத் திரும்பி ஆச்சி வீட்டுக்குள் நுழைந்தேன். நான் முன்னே செல்ல முதல்வர் கார் ரிவர்ஸில் சென்றது. இந்தக் காட்சியை போட்டோ எடுத்துப் போட்டுவிட்டார்கள்.’’

‘‘விஷால் அணியை பின்னால் இருந்து யாராவது இயக்குகிறார்களா?’’

‘‘அந்த அணியை இயக்கும் ‘இயக்குநர்’ யாரென்று தெரியவில்லை; கதாபாத்திரங்கள் யார் என்றும் புரியவில்லை; கதைக்கரு என்ன என்பதும் விளங்கவில்லை. ராதாரவி ஒரு மேடையில் தவறாகப் பேசிவிட்டார் என்று ஆரம்பத்தில் சொன்னார்கள். அவருக்கு உடனே ‘ஷோகாஸ்’ நோட்டீஸ் அனுப்பினேன். அவரும் மன்னிப்பு கேட்டார். அதன்பிறகும் அந்தப் பேச்சுதான் சங்கத்தை உடைக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவர்களுக்கு உருவாக்கியதா? உண்மையிலேயே அவர்களுக்கு நடிகர் சங்கத்தின்மீது பொறுப்பு இருந்திருந்தால் எஸ்.பி. சினிமாஸ் நிறுவனத்தோடு போடப்பட்ட ஒப்பந்தம் குறித்து எங்களிடம் விவாதம் செய்திருக்கலாம். அதுபற்றி மறுபரிசீலனை செய்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும். வழக்குப் போட்ட தி.மு.க-வை சேர்ந்த பூச்சி முருகனை நம்புகிறார்கள். கடந்த 33 வருடங்களாக சினிமாவில் இருக்கும், நடிகர் சங்கத் தலைவராக இருக்கும், முன்னாள் ராஜ்யசபா எம்.பி-யாகவும் இன்னாள் எம்.எல்.ஏ-வாகவும் இருக்கும் சரத்குமார் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லையா?’’

‘‘உங்கள் அணியைப்பற்றி வடிவேலு கடுமையாக விமர்சித்து இருக்கிறாரே?’’

‘‘நடிகர் சங்க நிலத்தைப் பற்றி ‘இடத்தைக் காணோம்..’, ‘கிணத்தைக் காணோம்’னு காமெடி பண்ணக் கூடாது. இடம் அங்கேதானே இருக்கிறது. எதற்காக இடித்தோம்... புதிதாக கட்டுவதற்குத்தானே? அதைத்தான் கட்டவிடாமல் வழக்குப் போட்டு தடுத்துவைத்து இருக்கிறார்களே. வடிவேலுவின் கிண்டலுக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது.’’

 ‘‘நேற்றுவரை உங்களோடு நெருக்கமாக இருந்த சத்யராஜ், விஷால் அணிக்கு ஆதரவாக ‘புதியவர்களுக்கு வழிவிட வேண்டும்’ எனச் சொல்லி இருக்கிறாரே?’’

‘‘விஷால் அணி, கூட்டத்துக்கு காலை வரை போகும் எண்ணமே அவருக்கு இல்லை. அதன்பிறகே சென்றதாகச் சொல்லி இருக்கிறார். என்னையும், ராதாரவியையும் ‘மச்சான்’ என அழைக்கும் சத்யராஜும், சிவகுமாரும் சொந்தக்காரர்கள் இல்லையா? அதனால்தான் கார்த்திக்குக்கு சத்யராஜ் ஆதரவு தருகிறாரா? ராதாரவியும் நானும் கல்லூரி காலத்தில் இருந்தே நண்பர்கள். அதன்பிறகு உறவுக்காரர்கள் ஆனோம். அப்படித்தான் ராம்கியும். ஆனார். ஒரு வருஷத்துக்கு முன்னாடியே சத்யராஜ் வீட்டுக்குப் போய் நடிகர் சங்கத்தில் நடக்கும் அத்தனை குளறுபடிகளையும் எடுத்துச் சொல்லிவிட்டு வந்தேன். அப்போது ‘எல்லாம் நல்லபடியாக நடக்கும் கவலைப்படாதீங்க’ என்று சொன்னவர், இப்போது அவர்கள் அணியில் இருக்கிறார். ரஜினி சார் வீட்டுக்கும் போய் நடிகர் சங்க நிலைமையையும் ஒப்​பந்தம் பற்றியும் விளக்கிச் சொல்லி இருக்கிறேன்.’’

 ‘‘விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த பிறகு நடிகர் சங்கத் தலைவர் பதவியைவிட்டு விலகினார். அதுபோல கட்சி ஆரம்பித்த நீங்கள் ஏன் விலகவில்லை?’’

‘‘நாங்கள் போட்ட ஒப்பந்தப்படி 2014-ல் நடிகர் சங்கத்துக்கான புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டிருக்கும். அதை சங்கத்திடம் ஒப்படைத்துவிட்டு தலைவர் பதவியில் இருந்து விலகலாம் என்று முடிவு செய்திருந்தேன். ஆனால், வழக்குப் போட்டு கட்டடம் கட்ட முடியாமல் தடை போட்டுவிட்டார்கள். அந்த வழக்கை சந்திக்கிற சக்தி எனக்கு இருக்கிறது. அதில் வெற்றி பெற்று காட்டுவேன்.’’

‘‘நடிகர் சங்கம் குறித்து ராதிகாவிடம் பேசிய கமல், ‘இந்த அசிங்கத்தில் நான் கால் வைக்க விரும்பவில்லை’ எனச் சொல்லி இருக்கிறாரே?

‘‘கமல் எதற்காக அப்படிச் சொன்னார் என்பது ராதிகாவுக்கும் கமலுக்கும்தான் தெரியும். அசிங்கம் என்று எதைச் சொல்லி இருக்கிறார். இரண்டு அணியும் சண்டை போட்டுக் கொள்வதைப்பற்றி சொல்லி இருக்கிறாரா? அல்லது நான் எதற்கு உங்கள் சண்டையில் தலையிட வேண்டும் எனச் சொல்லி இருக்கிறாரா என்பது தெரியவில்லை.’’

‘‘தமிழக அரசின் திரைப்பட விருதுகள் வழங்காமல் வைத்திருக்கிறார்களே... அ.தி.மு.க அரசோடு நெருக்கமாக இருக்கும் நீங்கள் அதற்கான முயற்சியை ஏன் எடுக்கவில்லை?’’

‘‘விருதுகள் வழங்குவது நடிகர் சங்கத்தின் கையில் இல்லை. தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குநர்கள் சங்கம் என நிறைய சங்கங்கள் இருக்கின்றன. சிறந்த படங்களை தேர்வு செய்யும் அரசின் தேர்வு கமிட்டி என நிறைய விஷயங்கள் இருக்கின்றன. சினிமா நூற்றாண்டு விழாவை எல்லாம் தமிழக அரசு எடுத்திருக்கிறது. சினிமா விருதுகளை வழங்குவது அரசின் முடிவு. இதில் நடிகர் சங்கம் தலையிட முடியாது.’’

‘‘சேலம் மேயர் சவுண்டப்​பன் உங்கள் அணிக்குத்தான் ஓட்டுபோட வேண்டும் என நாடக நடிகர்களை மிரட்டி​யதாக சொல்கிறார்களே?’’

‘‘சவுண்டப்பன் சேலத்​தில் இருக்கும் நடிகர் சங்கத்தின் செயலாளர். அதற்கு முன்பே நாடக நடிகர். சமீபத்தில் அங்கு நடந்த தேர்தலில்கூட வெற்றி பெற்றிருக்கிறார். அவரைச் சார்ந்தவர்​களிடம் எங்களுக்கு ஓட்டுபோடச் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?’’

 ‘‘விஷால், கார்த்தி என யூத்தாக இருக்கிறார்கள். அந்த அணிக்குத்தான் கமலின் ஆதரவும் இருக்கிறது. இந்த அணிதான் ஜெயிக்கும் என்கிற தோற்றம் உருவாகி இருக்கிறதே?’’

‘‘கமல் என்ன யூத்தா? அங்கிருக்கிற எல்லோருக்கும் 40 வயதுக்கும் மேல் ஆகிவிட்டது. 20 வயதுள்ள நடிகர்களைத்தான் யூத் என்பார்கள். யூத், வெற்றி தோற்றம் எல்லாம் ஒரு மாயைதான். எங்கள் அணியில் சிம்பு, கார்த்திக், முரளி, சூர்யா எல்லோரும் செயற்குழு உறுப்பினர்களாக இருந்திருகிறார்கள். ‘நாங்கள் தேர்தலில் நிற்கப் போகிறோம்’ என என்னிடம் நேரடியாக சொல்லி இருந்தால் நானே விலகி அவர்களுக்கு வழிவிட்டிருப்பேன். ஆனால், அவர்கள் அப்படிச் செய்யவே இல்லையே.’’ 
 
- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி, எம்.குணா
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick