தட்டும் தமிழர்களுக்கு கதவு திறக்குமா?

மிழகத்தின் மேற்கு எல்லையில், கேரளத்தின் நுழைவாயிலான கழுதுருட்டி உள்ளிட்ட அழகிய மலைக் கிராமங்களில் நடக்கும் போராட்டத்தில் தமிழர்களின் வேதனைக் குரல்கள் விம்மி வெடிக்கின்றன. திருவிதாங்கூர் பகுதிக்கு உட்பட்ட அம்பநாடு எஸ்டேட்டிலும் அதைச்சுற்றியுள்ள கிராமங்களிலும் வசிப்பவர்களில் 80 சதவிகிதத்தினர் தமிழர்கள். தமிழகத்தில் இருந்து வாழ்வாதாரம் தேடிச் சென்றவர்கள் 3 தலைமுறைகளாக தேயிலை எஸ்டேட்களில் வேலை பார்த்து வருகிறார்கள். நியாயமான சம்பள உயர்வு, வீட்டு வசதி, குடிநீர், மருத்துவ வசதி, வாரிசுகளுக்கு கல்வி உதவி ஆகியவற்றை வலியுறுத்தி கடந்த ஒரு மாதமாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

போராட்டம் குறித்து ‘யூத் ஒன்டே’ அமைப்பின் மாநிலச் செயலாளர் சஞ்சைகானிடம் பேசினோம். “தேயிலை மற்றும் ரப்பர் தோட்டத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு வழங்கப்படும் சம்பளம் மிகவும் குறைவு. ஒருநாள் சம்பளமாக 500 ரூபாய் வழங்க வேண்டும் என போராடி வருகிறோம். வருடத்துக்கு 20 சதவிகித போனஸ் என சொன்னாலும் 8.3 சதவிதம் மட்டுமே வழங்கப்படுகிறது. அதிகாலை 2 மணிக்கே தோட்டத்துக்குப் போக வேண்டும். காட்டு மிருகங்கள் தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில்தான் தினமும் வேலைக்குச் செல்கிறோம். போன மாதம் ஒருவரை யானை மிதித்துக் கொன்று விட்டது. மருத்துவமனை வசதிகள்கூட இல்லை. ஒரு மருந்தகம் மட்டுமே உள்ளது. ஆம்புலன்ஸ் வசதியும் கிடையாது. சுத்தமான குடிநீரும் இல்லை. தொழிலாளிகளை அடிமை மாதிரித்தான் நடத்துகிறார்கள். 12-ம் வகுப்பு வரை மலையாளம் மற்றும் தமிழ் வழிக் கல்வி வழங்கும் ஒரே ஒரு பள்ளி நெடும்பாறையில் இருக்கிறது. இங்கேதான் தொழிலாளர்களின் குழந்தைகள் படிக்கின்றனர். உயர்கல்வி படிப்பதற்கு வசதி கிடையாது. இதையெல்லாம் அரசு பூர்த்தி செய்யவேண்டும்’’ என்றார்.

ஐ.என்.டி.யூ.சி துணைச் செயலாளரான செல்வமணி, ‘‘19 வருஷமா வேலை பாக்குற எனக்கு வெறும் 349 ரூபாய்தான் சம்பளம். நாங்க போராட ஆரம்பிச்ச இந்த ஒரு மாத காலத்தில் நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்காலிகமாக கம்பெனியை மூடிட்டாங்க. இதனால், அறுவடை செய்யுற நிலையில இருக்கும் 3 கோடி மதிப்பு மிளகும் கிராம்பும் பாதிப்புக்குள்ளாகும். ஆனால், எவ்வளவு நஷ்டமானாலும் எங்களுக்கு 10 பைசா தர மாட்டாங்களாம்” என்றார் வேதனையுடன்.

தொழிலாளர்களுடான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துவிட்டது. ரப்பர் மற்றும் தேயிலைக்கு பற்றாக்குறை ஏற்பட்டதால் நிர்வாகத்துக்கு அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளபடி, சம்பள உயர்வு, வீடு, மருத்துவம் மற்றும் குடிநீர் வசதி, இன்ஷூரன்ஸ் என அனைத்தையும் வழங்குமாறு வலியுறுத்தியிருக்கிறது. இதையாவது நிர்வாகம் நிறைவேற்றுமா?

 - ந.ஆசிபா பாத்திமா பாவா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick