சரத்குமாரை ஆதரித்தது ஏன்?

டிகர் சங்கத் தேர்தலில் சரத்குமாருக்கு ஆதரவு என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு அறிவித்தது சர்ச்சையைக் கிளப்பியது. இப்போது விஷால் அணி வெற்றி பெற்ற நிலையில், இது தாணுவுக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. இதுதொடர்பாக தாணுவிடம் பேசினோம்.

“கார்த்தி நடித்த ‘கொம்பன்’ படத்தை வெளியிடக் கூடாது என அரசியல் கட்சி ஒன்றின் தலைவர் போர்க்கொடி தூக்கியபோது, கார்த்தியும் படத்தின் தயாரிப்பாளரும் கண்கலங்கி நின்றார்கள். அந்த வீடியோ என்னிடம் இருக்கிறது. அப்போது, அந்த அரசியல் கட்சியின் தலைவரை சமாதானம் செய்து ‘கொம்பன்’ படத்தை வெளிக்கொண்டு வந்தவர் சரத்குமார். விஷாலின் ‘பாயும் புலி’ படம் ரிலீஸ் நேரத்தில் சிக்கலில் மாட்டியது. அதையும் சுமுகமாகத் தீர்த்து வைத்தது சரத்குமார். எனவேதான், நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணியை ஆதரித்தோம்
இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமனும், செயலாளர் செல்வமணியும் என்னை சந்தித்தனர். ‘நடிகர் சங்கத் தேர்தல் பிரசாரம் தனிநபர் தாக்குதலாகப் போய்க்கொண்டு இருக்கிறது. இதை நாம் தடுத்து நிறுத்தியாக வேண்டும்’ என்றார்கள். எனவே, தயாரிப்பாளர்கள் சார்பில் இரு அணிகளையும் அழைத்துப் பேச முடிவு செய்தோம். இருதரப்புக்கும் கடிதம் அனுப்பினோம். அந்தக் கடிதத்தைப் பார்த்த பாண்டவர் அணியினர், ‘நாங்கள் தேர்தலே நடத்த வேண்டாம் என்று சொல்வதாகவும், வேட்புமனுக்களை வாபஸ் வாங்கச் சொல்வதற்காகப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாகவும்’ தவறாகப் புரிந்துகொண்டனர். விஷால் எனக்கு போன் செய்து, “நீங்க ஏன் சார் நடிகர் சங்க விவகாரத்துல தலையிடுறீங்க?” என்று கோபப்பட்டார்.

பாண்டவர் அணியில் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், என்னை ‘மிஸ்டர் தாணு’ என்று ஒருமையில் கூறியிருந்தனர். ‘இந்தத் தேர்தல் மூலம் சங்கம் பிளவுபட்டுவிடும் என்கிற உங்களது பயம் எதற்காக என்று தெரியவில்லை. ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என்கிற பாண்டவர் அணியின் முயற்சியைக் கண்டு நீங்கள் பயப்படுவது எங்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. தேர்தலில் எங்களால் மட்டும் பிளவு ஏற்படும் என்று நீங்கள் குழம்புவது ஏன்? என்று புரியவில்லை. இந்தக் கருத்தை எங்களிடம் சொல்வதைவிட கடந்த 10 ஆண்டுகளாக தேர்தலில் நிற்காமலேயே பதவியில் இருப்பவர்களிடம் சொல்ல வேண்டும். நல்லது செய்யத் துடிக்கும் பாண்டவர் அணி அதை பெருமையாக நினைக்கும்’ என்று அந்தக் கடிதத்தில் கூறியிருந்தனர்.

கடிதத்தைப் படித்த கவுன்சில் உறுப்பினர்கள் பலர் கொந்தளித்தனர். விஷால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அப்போது நான், அவர்களை சமாதானம் செய்தேன். அடுத்து ‘முதல்வரே அழைத்தாலும் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்று விஷால் பேசியதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதுமாதிரி எடுத்தேன், கவிழ்த்தேன் என்று பேசும் விஷாலோடு சேர்ந்து எப்படி தயாரிப்பாளர்கள் சங்கம் பயணிக்க முடியும் என்கிற யோசனை தயாரிப்பாளர்களுக்கு எழுந்தது.

அதன்பின் சங்கத்தின் நிர்வாகக்குழு, செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 150 தயாரிப்பாளர்கள் கொண்ட பொதுக்குழுவில் ஆலோசிக்கப்பட்டது. 147 உறுப்பினர்கள் சரத்குமார் அணியை ஆதரித்தனர். கார்த்தி படங்களைத் தயாரிக்கும் இரண்டு தயாரிப்பாளர்கள் மட்டும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஒரு தயாரிப்பாளர் நடுநிலை வகித்தார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவிப்பதாக சொன்னதோடு நின்றுவிட்டது. சரத்குமாருக்கு ஆதரவாக வாக்களிக்கச் சொல்லி யாரையும் வற்புறுத்தவில்லை” என்றார் தாணு. 

தாணுவின் விளக்கம் பாண்டவர்களை சமாதானப்படுத்துமா?

- எம்.குணா, படம்: ஜெ.வேங்கடராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick