ஊழல் பொறியாளருக்கு விஜிலென்ஸ் ஆபீஸர் பதவி!

குற்றச்சாட்டு சொன்னால் பதவி உயர்வு கிடைக்கலாம்!

மிழ்நாடு பொதுப்பணித் துறையில் ஊழலில் ஈடுபட்டதாக 10 பொறியாளர்களின் பெயர் பட்டியலை லஞ்ச ஒழிப்புத் துறையில், பொறியியல் ஒப்பந்ததாரர்கள் சங்கம் கொடுத்தது. இந்த விவகாரம் கடந்த மே மாதம் பரபரப்பைக் கிளப்பியது. அதுபற்றி 17-5-15 தேதியிட்ட ஜூ.வி-யில் ‘இது ஆரம்பம்தான்... அடுத்த லிஸ்ட் விரைவில் வரும்’ என்கிற தலைப்பில் எழுதியிருந்தோம். அந்த ஊழல் பட்டியலில் இடம்பெற்றிருந்த சிலருக்குப் பதவி உயர்வுகொடுத்து அசத்தியிருக்கிறது அரசு.

இதுகுறித்து தமிழ்நாடு பொதுப்பணித் துறை பொறியியல் ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் குணமணியிடம் பேசினோம். ‘‘பொதுப்பணித் துறையில் உள்ள பொறியாளர்கள் 45 சதவிகிதம் கமிஷன் கேட்பதாக லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுத்தோம். இதற்கு ஆதாரமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பணியாற்றிய பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் ஸ்ரீதர், ரூ.90,000 லஞ்சம் கேட்ட போன் உரையாடலை சி.டி-யாகக் கொடுத்தோம். இப்போது ஸ்ரீதர், தரமணியில் உள்ள நீர்வளத் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நாங்கள் கொடுத்த பட்டியலில் இடம்பெற்ற உதவி செயற்பொறியாளர் சங்கரலிங்கம், டி.பி.ஐ கட்டுமானப் பிரிவுக்கும் எழும்பூர் பகுதியில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றிய திருமூர்த்தி, சென்னை அரசு மருத்துவமனை கட்டுமானப் பிரிவுக்கும் அரசு மருத்துவமனையில் உதவி செயற்பொறியாளராக இருந்த பாண்டியராஜன், தொழில்நுட்ப பிரிவுக்கும் மந்திரி - நீதிபதிகள் குடியிருப்புப் பகுதி செயற்பொறியாளர் ஆயிரத்து அரசு ராஜசேகரன், அங்கிருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நாங்கள் கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பொதுப்பணித் துறையில் நடந்த ஊழல் குறித்த விவரம் முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தெரிந்தவுடன் முதல்கட்டமாக 50-க்கும் மேற்பட்ட பொறியாளர்களுக்கு இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்னும் அடுத்தகட்ட இடமாறுதல் பட்டியல் விரைவில் வெளியிடப்பட உள்ளது. எங்களது சங்கத்தைப் பிளவுபடுத்தும் வகையில் பொறியாளர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் ஒப்பந்ததாரர்களுக்கு நாங்கள் பதவியில் இருக்கும்போதே எங்களை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஊழல் பொறியாளர்களின் முகத்திரையைக் கிழித்ததற்காக எங்களைப் பழிவாங்கும் நடவடிக்கையாக இது உள்ளது. எங்களைச் சங்கத்திலிருந்து நீக்கியதற்காக எந்த நோட்டீஸும் தரப்படவில்லை” என்றார்.

பொதுப்பணித் துறையில் ஊழலுக்கு எதிராகப் போராடி வரும் நீர்வளத் துறையின் செயற்பொறியாளர் தேவராஜனிடம் பேசினோம். “கடந்த முறை ஒப்பந்ததாரர்கள் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுக்கச் சென்றபோது அவர்களுடன் நானும் சென்றேன். இதற்காக எனக்கு மெமோ கொடுக்கப்பட்டது. ஊழலுக்கு எதிராக நான் போராடி வருவதால் எனக்கு வரவேண்டிய பதவி உயர்வு வழங்கப்படவில்லை. உதவிப் பொறியாளர் பதவி உயர்வுக்கு ரூ.15 லட்சமும், செயற்பொறியாளர் பதவி உயர்வுக்கு ரூ.25 லட்சமும், கண்காணிப்புப் பொறியாளர் பதவி உயர்வுக்கு ரூ.50 லட்சமும் மண்டல முதன்மைப் பொறியாளர் பதவி உயர்வுக்கு ஒரு கோடி ரூபாயும் லஞ்சமாகப் பெறப்படுகிறது. ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் கொடுத்த ஊழல் பட்டியலில் இடம்பெற்ற 10 பேரில் ஒரு பொறியாளருக்குப்  பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வழங்கப்பட்ட பதவி, விஜிலென்ஸ் அதிகாரி. இதைவிட கொடுமை வேறு எங்கும் கிடையாது” என்றார்.

பொதுப்பணித் துறை முதன்மைப் பொறியாளர் திருமாறனிடம் பேச செல்போனில் அவரை தொடர்பு கொண்டபோது அவர் பதிலளிக்கவில்லை.

பொதுப்பணித் துறை வட்டாரத்தில் விசாரித்தோம். “கடந்த மாதம் 18 செயற்பொறியாளர்களுக்கு, கண்காணிப்புப் பொறியாளர்களாகப் பதவி உயர்வு வழங்கப்பட்டது. 35 உதவி செயற்பொறியாளர்களுக்கு, செயற்பொறியாளர்கள் பதவி உயர்வு வழங்கப்பட்டது. பொதுப்பணித் துறையில் ஒரே நேரத்தில் 18 பேர் கண்காணிப்புப் பொறியாளர்களாகவும், 35 பேர் செயற்பொறியாளர்களாகவும் பதவி உயர்வு பெற்றது இதுவே முதல் முறை. இந்தத் துறையில் தவறுசெய்யும் பொறியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையை முதன்மைப் பொறியாளர் எடுக்க வேண்டும். ஆனால், அரசியல் தலையீடு காரணமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லை” என்றனர்.

தமிழ்நாடு பொதுப்பணித் துறை பொறியியல் ஒப்பந்ததாரர்கள் சங்கத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஏகாம்பரத்திடம் பேசினோம். “தமிழ்நாடு பொதுப்பணித் துறை பொறியியல் ஒப்பந்ததாரர்கள் சங்கத்தில் 150 உறுப்பினர்கள் உள்ளனர். குணமணி, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட சிலர் சங்கத்தின் பெயரை தவறுதலாகப் பயன்படுத்தியதால் அவர்களை சங்கத்திலிருந்து நீக்கிவிட்டோம். மீண்டும் சங்கத்தின் பெயரை அவர்கள் பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும. நாங்கள் பொறியாளருக்கு ஆதரவாகச் செயல்படவில்லை” என்றார்.

ஊழல் செய்வது, பதவி உயர்வுக்கு ஒரு தகுதியாகிவிட்டது.

- எஸ்.மகேஷ், படங்கள்: தி.ஹரிஹரன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick