மவுலிவாக்கம் கமிஷன் சர்ச்சைகள்!

‘‘சி.எம்.டி.ஏ அனுமதி கொடுத்ததில் எந்தவிதத் தவறும் இல்லை. முறையான அனுமதிதான் வழங்கப்பட்டிருக்கிறது. கட்டடம் கட்டிய நிறுவனம்தான் விதிகளை மீறி கட்டடம் கட்டியிருக்கிறது’’ - மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டட விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டபோது முதல்வர் ஜெயலலிதா பத்திரிகையாளர்களிடம் சொன்ன வார்த்தைகள் இவை. அன்றைக்கு ஜெயலலிதா சொன்ன அதே கருத்தைத்தான் கிட்டத்தட்ட வழிமொழிந்திருக்கிறது ரகுபதி விசாரணை கமிஷன் அறிக்கை.

ரியல் எஸ்டேட் கொள்ளையின் கறுப்புப் பக்கம் மவுலிவாக்கம் விபத்து. 61 பேரை பலிவாங்கிய இந்தக் கோர விபத்து இந்தியாவையே உலுக்கியது. சம்பவம் நடந்து ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் அதற்காக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் அறிக்கையும் ஓராண்டு கழித்துத்தான் வெளியாகியிருக்கிறது. சட்டசபையில் வைக்கப்பட்ட கமிஷன் அறிக்கை, அந்த விபத்தைவிட பல சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது.

விபத்து பற்றி விசாரிக்க ரகுபதி கமிஷன் அமைக்கப்பட்டபோதே சர்ச்சைகள் வெடித்தன. ‘தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு’ என விசாரணை கமிஷனை போட்டார் ஜெயலலிதா. அதற்கும் இதே ரகுபதிதான் தலைவர். நாலரை ஆண்டுகள் ஆகியும் அந்த விசாரனை முடியாத நிலையில்தான் மவுலிவாக்கத்துக்கும் ரகுபதியை நியமித்தார்கள். சி.பி.ஐ விசாரணை கேட்டு மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில், ‘விசாரணை கமிஷனுக்கு ரகுபதியைவிட்டால் வேற ஆளே இல்லையா? பல பொறுப்புகளை வகிக்கும் ரகுபதியிடம் இந்த விவகாரத்தை ஒப்படைக்க வேண்டிய அவசியம் என்ன? அவர் அந்த சக்தி படைத்த மனிதரா?’ என கேள்வி எழுப்பியது உயர் நீதிமன்றம். இந்த நிலையில்தான் மின்னல் வேகத்தில் விசாரித்து அறிக்கையும் அளித்துவிட்டார் ரகுபதி. ஆனால், அதை சட்டசபையில் உடனே வைக்கவில்லை அரசு. ஸ்டாலின் வழக்கின் அடுத்தடுத்த விசாரணைகளின்போது, ‘அறிக்கை அரசுக்கு அளிக்கப்பட்டுவிட்டது. விரைவில் வெளியாகும்... சட்டசபை கூடும்போது தாக்கல் ஆகும்...’ என நீதிமன்றத்தில் சொல்லிக்கொண்டே இருந்தது அரசு. ‘இதுவரையில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டங்களில் விசாரணை கமிஷன் அறிக்கையை ஏன் வைக்கவில்லை. 2014 அக்டோபரில் இருந்து 5 முறை சட்டமன்றம் கூடிவிட்டது. ஏன் தாக்கல் செய்யவில்லை. காரணத்தையும் சொல்லவில்லை. அறிக்கையை எப்போது வைக்கப் போகிறீர்கள்? ‘என அடுக்கடுக்காய் நீதிமன்றம் கேள்வி எழுப்பிய பிறகுதான் ஒருவழியாக அறிக்கை ரிலீஸ் ஆனது.

‘சி.எம்.டி.ஏ-வின் திட்ட அனுமதிக்கு மாறாக கட்டடம் கட்டியதே விபத்துக்குக் காரணம். விபத்துக்கு முழு முதற்காரணம் சிருஷ்டி ஹவுஸிங் நிர்வாகத்தினர்தான்’ எனச் சொல்லியிருக்கிறது கமிஷன். அரசை குறை சொல்லவில்லை. இந்த அறிக்கையில் நிறைய முரண்கள் இருக்கின்றன என எதிர்க் கட்சியினர் சந்தேகங்கள் எழுப்பியிருக்கிறார்கள். அதில் இருந்து கொஞ்சம்.

கட்டடக்கலை நிபுணரான சுகன்யா, சிருஷ்டி நிறுவனத்துக்காகப் பணியாற்றியிருக்கிறார். கட்டடத்தை வடிவமைத்து திட்டம் உருவாக்கிய குழுவில் அவர் இடம்பெற்றிருந்தார். சுகன்யாவையும் போலீஸ் குற்றவாளியாகச் சேர்த்தது. ‘என்னுடைய பங்கு மிகவும் குறைவானது. கட்டடத்தில் அஸ்திவாரத்தின் ஆழம், உறுதித்தன்மை உள்ளிட்ட பணிகளை கட்டடத்தை கட்டும் இன்ஜினீயர்கள்தான் மேற்கொள்ள வேண்டும். இந்தப் பணிக்கும், எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனக்கு முன்ஜாமீன் வழங்கவேண்டும்’ என நீதிமன்றத்தில் கேட்டிருந்தார் சுகன்யா. விசாரணை கமிஷன் அறிக்கையிலோ, ‘கட்டடம் கட்டிய பில்டர், அவரது கூட்டாளிகளான கட்டடக்கலை வல்லுநர் எஸ்.வெங்கடசுப்பிரமணியன், ஆலோசகர் விஜய் பர்கோத்ரா ஆகியோர்தான் விபத்துக்குக் காரணம்’ எனச் சொல்லியிருக்கிறார்கள். அதோடு ‘சுகன்யா, சுட்டிக்காட்டிய முக்கியமான மாறுபாடுகளை வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் இவர்கள் கருத்தில் கொள்ளவில்லை. மாறுபட்ட எண்ணம் கொண்டவர்களின் மாறுபாடான செயல் இது’ எனச் சொல்லியிருக்கிறார் ரகுபதி. சுகன்யா விவகாரத்தில் ஏன் இந்த மாறுபாடு என்பது புரியவில்லை.

அரசிடம் தாக்கல் செய்யப்பட்ட ரகுபதி அறிக்கையை வெளியிடாமல் ஒரு வருடம் கிடப்பில் போட்டது ஏன்? கமிஷன் அறிக்கைகள் அரசிடம் அளிக்கப்பட்ட பிறகு ஆறு மாத காலத்துக்குள் சட்டசபையில் வைக்க வேண்டும் என்பது விதி. அது ஏன் கடைப்பிடிக்கப்படவில்லை. ‘சில நிர்வாகக் காரணங்களால் சட்டசபையில் உடனே வைக்க முடியவில்லை’ எனச் சொல்லியிருக்கிறார் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன். ‘சட்டப்பேரவையில் சமர்ப்பிப்பதற்கான காலம் கடந்தநிலையில் ரகுபதியின் அறிக்கை இனி செல்லுமா?’ என கருணாநிதி பொடி வைத்திருப்பதில் அர்த்தம் இருக்கிறது.

 விசாரணை கமிஷன் தனியாக அமைக்கப்பட்ட நிலையில் ‘மவுலிவாக்கம் விபத்துக்கு சென்னை போலீஸ் கமிஷனரின் ஒட்டுமொத்த மேற்பார்வையில், இணை கமிஷனர் தலைமையில் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்படும்’ எனச் சொல்லியிருந்தார் ஜெயலலிதா. அது என்ன ஆனது என்றே தெரியவில்லை.

 கட்டடத்துக்கு அனுமதி கொடுத்த கோப்பில் துறையின் அமைச்சர் கையெழுத்திட்டிருக்கிறாரா, இல்லையா? சி.எம்.டி.ஏ அனுமதி கொடுத்த பிறகுகூட, கட்டடம் கட்டும்போது பிளானிங் பர்மிஷனில் கொடுக்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில் கட்டடம் கட்டப்படுகிறதா என்று ஒவ்வொரு ஸ்டேஜிலும் சி.எம்.டி.ஏ அதிகாரிகள் சென்று கவனிக்க வேண்டும். அப்படிக் கவனித்தார்களா? என்கிற விவரங்களை எல்லாம் கமிஷன் ஆராயவில்லை. ஒவ்வொரு ஸ்டேஜிலும் சி.எம்.டி.ஏ அதிகாரிகள் ஆய்வுசெய்ய வேண்டும் என்பது விதிகளில் இருக்கும்போது அதையே கமிஷன் ஒரு பரிந்துரையாகத் தந்திருப்பது ஏன்?

3-6-2013 அன்றுதான் திட்ட அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் ஓராண்டு காலமாக கட்டடம் கட்டப்பட்டு வந்த நிலையில் சி.எம்.டி.ஏ அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்களா என்பதை கமிஷன் விசாரித்ததா?

ஸ்டாலின் எழுப்பும் சந்தேகங்கள்!

‘சி.பி.ஐ விசாரணை வேண்டும்’ என வழக்குப் போட்ட ஸ்டாலின், ‘ஆட்சியாளர்களைக் காப்பாற்றும் அறிக்கையாக மட்டுமே இருக்கிறது’ எனச் சொல்லி, கமிஷன் அறிக்கையின் குளறுபடிகள் என மிக நுணுக்கமாக சிலவற்றைப் பட்டியல் போட்டிருக்கிறார். அவை... 

 ரகுபதி ஏன் அவசர அவசரமாய் அறிக்கையை தயார் செய்து அரசிடம் கொடுத்தார்?

 ‘இணைப்புகள்’ எனச் சொல்லப்படும் ஆவணங்கள், எதுவும் அறிக்கையில் இடம் பெறவில்லை.

 கட்டட உரிமையாளரால் தரப்பட்ட வரைபடம், அரசு அனுமதி அளித்த வரைபடம், மண் பரிசோதனைச் சான்று, துறை ரீதியாக பெறப்பட்ட கடிதங்கள் எதுவும் அறிக்கையில் இல்லை. விசாரிக்கப்பட்ட சாட்சிகள் என அறிக்கையில் மேற்கோள் காட்டிவிட்டு, அவர்களின் சாட்சியத்தை அறிக்கையில் இணைக்கவில்லையே ஏன்?

 சி.எம்.டி.ஏ-வில் எத்தனை அதிகாரிகள் விசாரிக்கப்பட்டார்கள்? அவர்கள் தாக்கல் செய்த ஆவணங்கள் என்ன? என்பதெல்லாம் அறிக்கையில் இல்லை.

 கட்டடம் கட்ட இரண்டு சிறப்பு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டது எதற்காக? என்ற கேள்விக்கு அறிக்கையில் விடை இல்லை. அரசாணை பிறப்பித்த அதிகாரி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டாரா?

அறிக்கையில் கட்டடத்தின் உறுதித் தன்மை இல்லை என்று சொல்லப்பட்டிருந்தும் தொழில்நுட்ப ஆய்வு நடத்தப்பட்டதா?

என்.பி.சி மற்றும் பி.ஐ.எஸ் தரத்தில் கட்டுமானம் நடைபெற்றதா? எனக் கூறப்படவில்லை.

 ஏரிக்கு அருகில் கட்டடம் கட்ட மண் பரிசோதனை செய்து, அனுமதி கொடுத்த அதிகாரிகள் யார்? அவர்கள் விசாரிக்கப்பட்டார்களா? என்பது அறிக்கையில் இல்லை.

 கட்டட உறுதித்தன்மையை அவ்வப்போது கண்காணிக்க வேண்டிய சி.எம்.டி.ஏ அதிகாரிகள் அரசாணை 106-ன்படி கட்டடத்தைப் பார்வையிட்டு குறிப்பெழுதி இருக்க வேண்டும். அப்படி எழுதப்பட்ட குறிப்புகள் எங்கே?

 எதற்காக சிறப்புச் சலுகை கட்டுமான உரிமையாளருக்கு வழங்கப்பட்டது? விசாரணை ஆணையத்தால் எத்தனை அதிகாரிகள் விசாரிக்கப்பட்டார்கள்?

ஒரே கருத்து!

ரகுபதி கமிஷனை ஜெயலலிதா நியமித்த நேரத்தில் கருணாநிதி ஒரு கருத்தை பதிவு செய்தார். ‘ரகுபதி கமிஷன் ஆய்ந்தறிந்து முடிவெடுப்பதற்கு முன்பாகவே, ‘சி.எம்.டி.ஏ அனுமதி கொடுத்ததில் தவறும் இல்லை. கட்டடம் கட்டிய நிறுவனம்தான் விதிகளை மீறி கட்டடத்தைக் கட்டியிருக்கிறது என்றெல்லாம் பத்திரிகையாளர்களிடம் முதல்வர் சொல்லியிருக்கிறார். அதை மீறி விசாரணை நீதிபதி எவ்வாறு வேறு கருத்தினைத் தெரிவிக்க முடியும்? விசாரணை கமிஷன் நீதிபதியை எவ்வாறு சொல்ல வேண்டுமென்று அறிவுறுத்துவதைப் போல ஆகாதா?’ என அப்போது கருணாநிதி அறிக்கைவிட்டார். கமிஷன் அறிக்கை வெளியான நிலையில் ‘ஜெயலலிதாவின் கருத்தும் ரகுபதியின் கருத்தும் ஒன்றாகத்தான் இருக்கிறது’ என்கிறார்கள் எதிர்க் கட்சியினர்.

- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick