“இனிமேல் கூடுதல் அபாயங்கள் இருக்கும்!”

குஜராத் போலீஸ் அதிகாரிக்கு மகன் எழுதிய கடிதம்!

தனது அப்பாவுக்கு மகன் எழுதிய கடிதம்:

‘‘துயரம் நிறைந்த நேரம் இது. நேர்மையும் அறிவும் துணிச்சலும் சாந்தமும் கொண்ட ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியை இந்தியக் குடியரசு இழக்கிறது. இந்தத் துயரம் மிகுந்த தருணத்தில், நான் உங்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன். உங்கள் மகனாக... படித்த, விழிப்பு உணர்வுள்ள இந்த அழகான தேசத்தை நேசிக்கும் ஒரு குடிமகனாக... நான் உங்களுக்கு நன்றி சொல்லவும் கடமைப்பட்டு உள்ளேன். சரியான காரணம் ஒன்றுக்காக, சரியான பாதையைத் தேர்ந்தெடுத்து, அதில் பயணிப்பதால், எதிர்காலத்தில் ஏற்படப்போகும் அபாயங்கள் அனைத்தையும் தெளிவாக உணர்ந்திருந்தபோதிலும், அந்தப் பாதையிலேயே பயணத்தை நீங்கள் தொடர்ந்ததற்காக நான் உங்களுக்கு நன்றி சொல்கிறேன். உதவி கேட்டு ஒலித்த அவலக்குரல்களை காதில் வாங்காமல், ஒதுங்கிப்போன மனிதர்களுக்கு மத்தியில், அவலக்குரல் எழுப்பியவர்களின் பக்கம் நீங்கள் நின்றதற்காகவும் நான் உங்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். இந்த நேரத்தில் நான் உங்களுக்கு சத்தியம் செய்து கொடுக்கிறேன்... மோசமான, ஆனால் சரியாகத் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டு உள்ள இந்த அமைப்புக்கு எதிராக நானும் உங்களைப்போல் போராடுவேன். அதே நேரத்தில் எச்சரிக்கையோடு உங்களுக்கு ஒன்றை நினைவுபடுத்தவும் விரும்புகிறேன். சத்தியத்துக்கு எதிராக நடத்தப்பட்டும் இந்தப் போர் முன்னைவிட இனி கூடுதல் அபாயகரமானதாகவும் நாசங்களை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கும். இந்தியக் குடியரசின் நச்சுத்தன்மை மிகுந்த ஆட்சியாளர்களுக்கு எதிரான உங்கள் போராட்டம், நீங்கள் 27 வயதில் ஐ.பி.எஸ் அதிகாரியாக ஆனதில் இருந்து கடந்த 14 ஆண்டுகளாகத் தொடர்கிறது. இதில் குடும்பம் என்ற நிலையில் நாங்களும் உங்களோடு இதுவரை இருந்துள்ளோம்.

மோசமான மனிதர்களால் நடத்தப்படும் இந்த அரசாங்கத்தில் உங்களுக்கு இனிமேல் கூடுதல் அபாயங்கள் இருக்கும். ஆனால், அவை எல்லாம் உங்களையும், குடும்பம் என்ற முறையில் எங்களையும் மேலும் வலுப்படுத்தவே செய்யும். உங்களுக்கு நான் சொல்கிறேன்... நாங்கள் அனைவரும் இதே நம்பிக்கையுடன், இதே துணிச்சலுடன் என்றும் உங்களோடு நிற்போம். கொடும் பகையும் வஞ்சனையும் உள்ள இந்த ஆட்சியாளர்களிடம் இருந்து, அவர்களுக்கு எதிராகப் பேசுபவர்களை அழித்தொழிக்க நினைக்கும் இவர்களைப் போன்ற மனிதர்களிடம் இருந்து, நேர்மைக்கு எதிராக எப்போதும் நிற்கும் இவர்களிடம் இருந்து நீங்கள் விலகி நிற்பதற்கு என் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். அளவுகொள்ளாத அன்பு மற்றும் மரியாதை​யுடன் உங்கள் அன்பு மகன் சாந்தனு பட்.”

- இப்படி கம்பீரமாக இருக்கிறது அந்தக் கடிதம்!

‘குஜராத்தில் நடந்த கலவரத்துக்குக் காரணமான குற்றவாளி நரேந்திரமோடி’ என்று உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்த  போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட் என்பவரின் மகன்தான் இந்த சாந்தனு பட். இப்படி ஒரு மனுத் தாக்கல் செய்தால் சும்மா விடுவார்களா? கடந்த
19-ம் தேதி போலீஸ் சேவையில் இருந்தே நீக்கப்பட்டு விட்டார் சஞ்சீவ் பட். அப்பாவுக்கு ஏற்பட்ட நிலைமையை உணர்ந்த மகன், இப்படி எழுதியதாக ஒரு கடிதம் வெளியாகி உள்ளது.

மும்பையில் பிறந்த சஞ்சீவ் பட் ஒரு குஜராத்தி. ஓரளவு வசதியான குடும்பம். சிவில் சர்வீஸ் தேர்வை வெற்றிகரமாக முடித்து, 1988-ம் ஆண்டு ஐ.பி.எஸ் பணியில் சேர்ந்தார். 2002, பிப்ரவரி 27-ம் தேதி, குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் நிலையத்தில், சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீ வைத்துக் கொளுத்தப்பட்டு 58 பேர் பலியானதும், அதைத் தொடர்ந்து குஜராத் ரத்தக்களறியானபோதும் காந்தி நகரில் உளவுத் துறை துணை இயக்குநராக இருந்தார் சஞ்சீவ் பட்.

கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் நடைபெற்ற தினத்தன்று, காவல் துறை உயர் அதிகாரிகள் கூட்டத்தை நடத்திய முதலமைச்சர் நரேந்திர மோடி, ‘இந்துக்கள் தொடுக்கும் தாக்குதலை போலீஸ் கண்டுகொள்ளக் கூடாது’ என்றார் என்பதுதான் சஞ்சீவ் பட்டின் வாக்குமூலம். ‘‘மோடி அப்படிச் சொன்னதால்தான், 2002, பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய கலவரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காணாமல் போனார்கள். மாநிலமே தீப்பிடித்து எரிந்தது” என்பது சஞ்சீவ் பட்டின் குற்றச்சாட்டுகள். 

2011-ம் ஆண்டு, சி.பி.ஐ நடத்திய சிறப்பு விசாரணைக் குழுவில் இதை சஞ்சீவ் பட் சொன்னபோது தேசமே ஒரு நிமிடம் திகைத்துவிட்டது. மோடி அரண்டுபோனார். ஏனென்றால், அந்த நேரத்தில்தான், குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி, இந்தியப் பிரதமர் மோடியாகும் கனவுக்குள் இழுத்துவிடப்பட்டு இருந்தார். அதனால், சஞ்சீவ் பட்டின் வாக்குமூலம் மோடியின் தலையில் அப்போது இடியாக இறங்கியது. 

சஞ்சீவ் பட்டை ஒழித்துக்கட்ட குஜராத் அரசு இயந்திரம், வேலையைத் தொடங்கியது. அலுவலகத்துக்கு ஒழுங்காக வரவில்லை என்று சொல்லி, முதலில் அவரை 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி சஸ்பெண்ட் செய்தது. அதன்பிறகு, சஞ்சீவ் பட்டுக்கு கார் ஓட்டிய போலீஸ் கான்ஸ்டபிள் கே.டி.பன்ந்த்தை வைத்து அவரை சிறைக்கு அனுப்பும் வேலையில் இறங்கியது. ‘‘மோடி நடத்திய ரகசியக் கூட்டத்துக்கு சஞ்சீவ் பட்டுக்காக நான்தான் கார் ஓட்டிச் சென்றேன்’’ என்று ஏற்கெனவே வாக்குமூலம் அளித்திருந்த பன்ந்த் இப்போது மாற்றிப் பேசினார். அத்துடன், ‘‘அப்படித் தன்னைச் சொல்லச் சொன்னது சஞ்சீவ்தான்’’ என்றும் புகார் கொடுத்தார். அதன்பேரில் சஞ்சீவ் பட் கைதுசெய்யப்பட்டார். ஒரு கான்ஸ்டபிள் கொடுத்த புகாரில், ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி கைதுசெய்யப்பட்டார். எல்லாம் மூன்றே நாட்களுக்குள் அப்போது நடத்தப்பட்டது.

2011 செப்டம்பர் மாதம் 30-ம் தேதி கைதுசெய்யப்பட்ட சஞ்சீவ் பட், 18 நாள்கள் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டார். இதே சிறையில் 2004-ம் ஆண்டு சிறைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றியவர் அவர். அங்கிருந்து சஞ்சீவ் பட் மாற்றப்பட்ட போது, 4,000 கைதிகள் உண்ணாவிரதம் இருந்தனர். 8 பேர் தங்களின் மணிக்கட்டை அறுத்துக்கொண்டனர். ஆனால், அதே சிறைக்குள் கைதிகளோடு கைதிகளாக அடைக்கப்பட்டார்.

சஞ்சீவ் பட் தனக்கு ஜாமீன் வேண்டும் என்று மனுத் தாக்கல் செய்தார். குஜராத் அரசாங்கம் அவருக்கு ஜாமீன் கொடுக்கக் கூடாது என்று மனுத் தாக்கல் செய்தது. அதற்காக பிரபல வழக்கறிஞர்களைத் தேடிப்பிடித்து களம் இறக்கியது.

அந்த நேரத்தில், 2011, அக்டோபர் 4-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சஞ்சீவிடம், மூன்று மணிநேரங்களாவது போலீஸ் காவலுக்கும் விசாரணைக்கும் ஒத்துழைத்தால், உடடினயாக ஜாமீன் வழங்குவதாகச் சொன்னார் செஷன்ஸ் நீதிபதி ஜி.என்.பட்டேல். அதே இடத்தில் அதற்குப் பதிலளித்த சஞ்சீவ், “பொறுக்கிகளோடும் கிரிமினல்களோடும் சமரசம் என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது அறம் சார்ந்த போராட்டம். எனது ஜாமீன் கோரிக்கை மனுவின் மீது நியாயமாக நீங்கள் அளிக்கும் சட்டப்பூர்வமான உத்தரவு என்னவோ, அதற்குக் கட்டுப்படுகிறேன். ஏழு நாட்கள் அல்ல... 14 நாட்கள்கூட போலீஸ் காவலில் இருக்க எனக்குச் சம்மதமே” என்று முழங்கினார். அதன்பின் 18 நாட்கள் கழித்து நீதிபதி வியாஸ், சஞ்சீவ் பட்டுக்கு ஜாமீன் வழங்கினார்.

இதன்பிறகு, மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டு அதன்பேரிலும் சஞ்சீவ் பட் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தது.

சஞ்சீவ் பட் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மத்திய உள்துறையின் மறு ஆய்வுக் குழு ஆய்வு செய்து, இனியும் இவரது சஸ்பெண்டை நீட்டிக்கத் தேவையில்லை எனத் தெரிவித்தது. அதை குஜராத் அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. ஆனால், மத்திய உள்துறை அமைச்சகம் இனி எதற்கும் இடம் கொடுக்கக் கூடாது என்று நினைத்ததோ, என்னவோ... சஞ்சீவ் பட்டை போலீஸ் சேவையிலிருந்து நிரந்தரமாகவே நீக்கிவிட்டது. கடந்த 19-ம் தேதி அந்த உத்தரவு வெளியான நேரத்தில், தன் தந்தைக்காக அவருடைய மகன் சாந்தனு, லண்டன் கிங்ஸ்டனில் இருந்து எழுதிய கடிதம்தான் அது!

- ஜோ.ஸ்டாலின்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick