வீடு இருப்பதை மறைத்து மனை வாங்கினார்

நீதிபதி குமாரசாமி மீது சொத்துக் குவிப்பு புகார்!

குமாரசாமி என்ற பெயருக்கு அறிமுகம் தேவையில்லை. குழந்தையைக் கேட்டால்கூடச் சொல்லும், அவர் கர்நாடக நீதிபதி என்று. சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுவித்து தீர்ப்பு அளித்ததன் மூலமாக அகில இந்திய பிரபலம் அடைந்த நீதிபதி குமாரசாமி, கடந்த 24-ம் தேதி பணி ஓய்வுபெற்றுவிட்டார். அதன்பிறகுதான் அவருக்கு ஆரம்பித்துள்ளது தலைவலி. அவருக்கு எதிரான அஸ்திரங்கள் கர்நாடகாவில் இருந்தே கிளம்பி உள்ளன.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வரையும் விடுதலை செய்தார் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி. அவர் அளித்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த நிலையில் ‘கர்நாடக பிரஷ்ட்டாசார நீர்மூலன வேதிகே’ என்ற கன்னட அமைப்பு, நீதிபதி குமாரசாமி மீது பகிரங்கக் குற்றச்சாட்டுகளைக் கிளப்பி உள்ளது. இது கர்நாடக எல்லையைத் தாண்டி தமிழகத்திலும் பரபரப்பைக் கிளப்பி வருகிறது. இந்த நிலையில், கர்நாடக பிரஷ்ட்டாசார நீர்மூலன வேதிகே அமைப்பின் தலைவர் ராமலிங்க ரெட்டியை சந்தித்தோம்.

‘‘கர்நாடக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி குமாரசாமி மீது நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் என்னென்ன?”

‘‘முன்னாள் நீதிபதி குமாரசாமி கோலார் மாவட்ட செஷன்ஸ் கோர்ட் நீதிபதியாக இருந்தார். 23.5.1997-ல் கர்நாடக வீட்டு வசதி வாரியம் கெங்கேரியில் ரூ.5,10,500 மதிப்புள்ள அடுக்கு மாடி குடியிருப்பை ஒதுக்கியது. 

அடுத்து, 2001-ம் ஆண்டு பெல்லாரி மாவட்ட செஷன்ஸ் நீதிபதியாக குமாரசாமி இருந்தார். அப்போது மைசூர் கே.ஹெச்.பி காலனியில் அதிக வருவாய் உள்ள பிரிவில் ஒரு வீடு கொடுக்கும்படி விண்ணப்பித்து இருந்தார். அதில் நிரந்தர முகவரிகள் எதுவும் கொடுக்காமலும், கெங்கேரியில் ஏற்கெனவே வீடு ஒதுக்கீடு செய்திருப்பதை மறைத்தும் தனக்கும் தன் குடும்ப உறுப்பினர்களுக்கும் எந்த ஒரு வீடோ, நிலமோ கிடையாது என்று சொல்லியும் மைசூர் ஹூட்டஹள்ளி காலனியில் 2.2.2002-ல் ரூ.6,35,500 மதிப்புள்ள தனி வீடு ஒன்றை வாங்கி இருக்கிறார். 4.3.2002 வரை கெங்கேரி குடியிருப்பு ஒதுக்கீட்டை நீக்கவும் கேட்கவில்லை.

கர்நாடக மாநில காதி மற்றும் கிராமத் தொழில் வாரியத்தில் முதல் பிரிவு உதவியாளராகப் பணியாற்றிய குமாரசாமியின் மனைவி நாகரத்தினம்மா பி.டி.ஓ-வுக்கு விண்ணப்பித்த படிவத்தில் கெங்கேரியில் வாங்கிய வீட்டையும் மைசூரில் வாங்கிய வீட்டையும் மறைத்து, தனக்கோ, தன் கணவருக்கோ, தன் குடும்ப உறுப்பினர்களுக்கோ எந்த ஒரு வீடும் இல்லை என்று பெங்களூரு பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் விண்ணப்பித்து இருந்தார். அதனால் 2000-ம் ஆண்டு மே 31-ம் நாள்,  ரூ.1,68,600 மதிப்புள்ள காலி மனை ஒதுக்கீடு செய்து 60 நாட்களில் பணம் கட்ட வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் 60 நாட்களில் பணம் கட்டவில்லை. 3 வருடங்கள் காத்திருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தை நீக்கி 21.10.2003-ல் பதில் கேட்டு பி.டி.ஓ. நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதற்கு குமாரசாமியின் மனைவி நாகரத்தினம்மா எங்களிடம் அப்போது பணம் இல்லை, தற்போது பணம் அனுப்புகிறேன் என்று டி.டி-யாக பணம் அனுப்பியதால் 20.8.2005-ல் கெங்கேரியில் உள்ள ஞானபாரதி தெருவில் காலி மனை ஒதுக்கி கிரயம் செய்து கொடுத்தது.

அதே வருடம் நீதிபதி குமாரசாமியே முன்வந்து தன் சொத்துப் பட்டியலை வெப்சைட்டில் வெளியிட்டு இருந்தார். அதில் குமார பார்க் மேற்குப் பகுதியில் உள்ள போலஸ்குட்டஹள்ளியில் உள்ள திவ்யா மேனர் அப்பார்ட்மென்ட்டில் ஜி2 கீழ்த்தளத்தில் ரூ.29,47,500 மதிப்புள்ள வீடும், 2006-ல் நீதிமன்ற ஊழியர்களுக்கு  வீட்டு வசதி கூட்டுறவு சங்கம் மூலமாக சிவநகர் ஜூடிஷியல் லே அவுட்டில் 4,000 சதுர அடியில் ரூ.9,60,000 மதிப்புள்ள வீட்டுமனை வாங்கி இருப்பதாகவும் அவரே குறிப்பிட்டு இருக்கிறார்.

கர்நாடக வீட்டு வசதி வாரியத்திலோ, பெங்களூரு பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திலோ வீடோ, காலி நிலங்களோ வாங்க வேண்டுமென்றால் வேறு எங்கும் அவர்கள் பெயரில் வீடு, காலி நிலங்கள் இல்லாதபோதுதான் விண்ணப்பிக்க வேண்டும் என்று விதிமுறைகள் உள்ளன. அதைப் பின்பற்றாமல் பொறுப்புள்ள நீதிபதி பதவியில் இருந்து, பதவியை துஷ்பிரயோகம் செய்து விதிமுறைகளை மீறி கர்நாடக வீட்டு வசதி வாரியத்திலும், பெங்களூரு பெருநகர் வளர்ச்சிக் கழகத்திலும், கர்நாடக நீதித்துறை ஊழியர்கள் கூட்டுறவு சங்கத்திலும் வீடும், காலி நிலங்களும் வாங்கிக் குவித்து இருக்கிறார் என்பதுதான் எங்கள் குற்றச்சாட்டு.

மேலே சொல்லப்பட்டுள்ள புகார்கள் அனைத்தும் ஆதாரபூர்வமானவை. அப்படி இருக்கும்போது லஞ்ச ஒழிப்புத் துறைதான் மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.”

‘‘தகவல் அறியும் உரிமை சட்டத்தில் குமாரசாமி சொத்து விவரம் வாங்கி வெளியிடுவதன் நோக்கம் என்ன?”

‘‘எங்கள் அமைப்பின் பெயர், கர்நாடக ஊழல் எதிர்ப்பு இயக்கம். இந்திய தேசத்தில் புற்றுநோய் போல பரவி வரும் ஊழலை ஒழிப்பதே எங்களின் ஒரே நோக்கம். அதற்காக தினம் தினம் போராடி வருகிறோம். வருமான வரி ஏய்ப்பு செய்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி கபில் மோகனுக்கு எதிராகவும் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி கார்ப்பரேஷன் கம்பெனி லிமிடெட் நிறுவனம் கம்ப்யூட்டர் வாங்கியதில் செய்த ஊழலை எதிர்த்தும் பல போராட்டங்கள் செய்து வருகிறோம். விதான சவுதா இன்ஸ்பெக்டரும், ஆர்.கே.நகர் இன்ஸ்பெக்டரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் வாங்கி இருப்பதாகத் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெறப்பட்டு, அவர்களுக்கு எதிராக போராட்டம் செய்து வந்தோம். இதனால் எங்களை கைதுசெய்து சிறையில் அடைத்தார்கள். இன்று காலைதான் சிறையைவிட்டு வெளியே வந்தோம். இப்படி யார் ஊழல் செய்தாலும் அவர்களுக்கு எதிராகப் போராடுவதுதான் எங்கள் நோக்கம். தனிப்பட்ட முறையில் யார் மீதும் வெறுப்பு காரணமாக எதிர்ப்பது இல்லை. ஊழலுக்கு மட்டுமே நாங்கள் எதிரானவர்கள்.”  

‘‘தமிழக முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்ததால்தான் நீங்கள் இந்தப் புகார்களைத் தெரிவிப்பதாகச் சொல்லப்படுகிறதே?”

‘‘நிச்சயம் அப்படி எதுவும் கிடையாது. நாங்கள் அரசியல் கட்சி கிடையாது. அரசியல்வாதிகளுக்கு எதிரானவர்களும் கிடையாது. அதே சமயத்தில் யார் ஊழலில் ஈடுபடுவதாகத் தெரிந்தாலும் அவர்களுக்கு எதிராகப் போராடுவதற்கும் சட்டத்தின் முன் அவர்களின் முகத்திரையைக் கிழிப்பதற்கும் தயங்க மாட்டோம். ஜெயலலிதாவுக்கோ, தமிழக மக்களுக்கோ சிறிதளவும் எதிரானவர்கள் கிடையாது.”

‘‘ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு கர்நாடகாவில் நடைபெற்றபோது சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பும் அதற்கு முற்றிலும் மாறாக உயர் நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”

‘‘நீதிமன்ற தீர்ப்புகளைப் பற்றி கருத்துகள் கூறினால் நீதிமன்ற அவமதிப்பு செய்வதாக வழக்குப் போடுவார்கள். அதனால் கருத்து சொல்ல விரும்பவில்லை. என்ன காரணத்துக்காக சிறையில் அடைத்தார்கள் என்றும், என்ன காரணத்துக்காக விடுதலை செய்தார்கள் என்றும் யாராலும் கேட்க முடியாத சூழ்நிலை இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். ஜனநாயக நாட்டில் அனைவரையும் கேள்வி கேட்கும் உரிமை பெற வேண்டும்.”

‘‘அடுத்தகட்டமாக என்ன செய்யப் போகிறீர்கள்?”

‘‘இது சம்பந்தமாக ஜனாதிபதிக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் புகார் அனுப்பி இருக்கிறோம். எங்கள் புகாரின் அடிப்படையில் விசாரித்து உண்மை என்றால் குமாரசாமி நீதித்துறையில் பணியாற்றிய காலத்தில் இருந்து ஓய்வுபெற்ற காலம் வரை அவர் வழங்கிய தீர்ப்புகள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும். இதையடுத்து இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக இருந்த பவானி சிங் பற்றிய முழு விவரங்களையும் சேகரித்துக் கொண்டிருக்கிறோம். கூடிய சீக்கிரத்தில் அவர் பெயரிலும் அவர் குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் உள்ள சொத்துகளையும் வெளியிடுவோம்.”

 சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிப்பவர்கள் மீதே சொத்துக் குவிப்பு வழக்கு பாயும் சூழ்நிலை வந்துவிட்டது.

- வீ.கே.ரமேஷ்
படங்கள்: ரமேஷ் கந்தசாமி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick