குஜராத்தில் இருந்து இதோ அடுத்த அரசியல் அஸ்திரம்...

வருகிறார் ஹார்திக் படேல்!

குஜராத்தில் படேல் சமூகத்தினர் நடத்தி வரும் போராட்டம் இடஒதுக்கீட்டுக்கானது அல்ல, அது இடஒதுக்கீட்டுக்கு ஆப்புவைப்பதற்கான போராட்டம் என்று பலர் விமர்சிக்கிறார்கள்.

100-க்கும் மேற்பட்ட போராட்டங்கள், 150-க்கும் அதிகமான வழக்குகள், பலியான 10 உயிர்கள், எரிக்கப்பட்ட கணக்கிலடங்கா வாகனங்கள் மற்றும் அரசு சொத்துகள் என பற்றி எரிகிறது குஜராத் மாநிலம். இவற்றுக்குக் காரணம் படேல் சமூகம். அவர்களை இயக்கிக்கொண்டிருப்பது 22 வயது இளைஞரான ஹார்திக் படேல்.

மூன்று மாதங்களுக்கு முன்புவரை, பி.காம் படித்துவிட்டு தன் தந்தையின் தொழிலைக் கவனித்துவந்த சராசரி இளைஞன். இன்று ஒரு சமுதாயத்துக்கே தலைவனாகி, லட்சக்கணக்கான மக்களைத் தன் பின்னால் திரட்டி, மாநிலத்தையே ஸ்தம்பிக்க வைத்திருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்புகளில் படேல் சாதியினருக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்பதுதான் அவரது கோரிக்கை.

அன்று...

1970-களில், குஜராத்தில் வலுவான அரசியல் கட்சியாக காங்கிரஸ் இருந்தது. அங்கு தலித் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது, அதுவரை காங்கிரஸ் பின்னால் இருந்த படேல் சமூகத்தினர், அந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து மிகப்பெரிய போராட்டங்களை நடத்தினர். எனவே, முஸ்லிம்கள் மற்றும் எந்த சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீடு தேவையோ அவர்களுடன் இணக்கமாக இருந்து அவர்களின் ஆதரவில் 1980 வரை ஆட்சிப்பீடத்தில் இருந்தது காங்கிரஸ். அந்தக் காலகட்டத்தில் இருந்துதான், குஜராத் மாநிலம் அரசியல் அமைதியை இழக்க ஆரம்பித்தது. காங்கிரஸ் அரசை எதிர்த்தும், இடஒதுக்கீட்டுக்கு எதிராகவும் படேல் சமூகத்தினர் கிளர்ச்சி செய்தனர். 1980 முதல் 1985 வரை ஏராளமான போராட்டங்களை நடத்தினர். ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் துடைத்தெறியப்பட்டது.

இன்று...

அரசியல், கல்வி, தொழில் உட்பட பல தளங்களில் பலமான நிலையில் இருக்கிறது படேல் சமூகம். 117 எம்.பி-க்கள் இருக்கிறார்கள். குஜராத்தில் மட்டும் 40 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். குஜராத் முதல்வரே படேல் சமூகத்தைச் சேர்ந்தவர்தான். குஜராத் மக்கள்தொகையில் 12 சதவிகிதமாக இருக்கும் இவர்கள் தற்போது, தங்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக்க வேண்டும் என்று போராடி வருகிறார்கள். ‘பாடிதார் அனாமத் ஆந்தோலன் சமிதி’ என்கிற அரசியல் அல்லாத பட்டேல் சமுதாய இயக்கத்தைக் கடந்த ஜூலை 6-ம் தேதி ஆரம்பித்தார், ஹார்திக் படேல். இத்துடன், ஏற்கெனவே இருந்த 3 படேல் சங்கங்கள் ஆதரவு கொடுக்க, இடஒதுக்கீடு போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்தப் போராட்டத்துக்கு ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் என சமூக வலைதளங்களை முழுமையாகப் பயன்படுத்தி வருகிறார்கள்.

ஹார்திக் படேல் எந்த இடத்தில் கூட்டம் நடத்தினாலும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கூடுகிறார்கள். சமீபத்தில் ஓர் இடத்தில், நான்கரை லட்சம் பேர் கூடியிருக்கிறார்கள். ‘எங்களுக்கென்று சரியான தலைமை இல்லை; விலகிக்கொள்ளுங்கள். பட்டேல் சமுதாயத்தினரே இனி எங்களுக்குத் தலைமை’ என்ற முழக்கத்துக்கு அத்தனை ஆரவாரம். ‘எங்களுக்குப் பின்னால் 27 கோடி பேர் இருக்கிறார்கள், இந்த தேசத்தில். எங்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்காவிட்டால், ஒட்டுமொத்தத் தேசத்துக்கான பிரச்னையாக எங்களால் இதனை மாற்ற முடியும்’ என்று மிரட்டுகிறார் ஹார்திக்.

‘முழுக்க முழுக்க இளைஞர்களை மூளைச்சலைவை செய்யவே இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. குஜராத் அரசியல் மதவாத, இனவாதப் போக்கில் போகிறது. ஏற்கெனவே 27 சதவிகிதம் பிற்படுத்தப்பட்டோருக்கும், 7.5 சதவிகிதம் தலித் மக்களுக்கும், 15 சதவிகிதம் பழங்குடியினருக்கும் என இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. 50 சதவிகிதத்துக்கும் அதிகமான இடஒதுக்கீடு வழங்க சட்டத்தில் இடமில்லை.  ஆகவே, இவர்களின் கோரிக்கை நடைமுறை சாத்தியமற்றது. இந்தப் போராட்டத்தின் பின்னணியில் சங்பரிவார் இருக்கிறது. அரசின் மறைமுக ஆதரவும் இருக்கிறது. மாநிலத்தில் எப்போதும் தங்களின் இருப்பைத் தக்க வைத்துக்கொள்ள இந்த மாதிரி போராட்டங்களை அவர்கள் தூண்டிவிடவும் வாய்ப்பிருக்கிறது’ என்றெல்லாம் அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.

ஹார்திக் படேல் என்ற இந்த இளைஞர், கையில் துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டிருப்பதும், இடுப்பில் பிஸ்டலைத் தொங்கவிட்டிருப்பதும் போன்ற படங்களைப் பார்க்கையில் பயமாக இருக்கிறது. ‘குஜராத் முன்மாதிரி’ என்ற பிரசாரத்தோடு ஆட்சியைப் பிடித்த நரேந்திர மோடி, இந்த விவகாரத்தை மற்ற மாநிலங்களும் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளும் முன் நடவடிக்கை எடுப்பாரா?

- மா.அ.மோகன் பிரபாகரன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick