சந்தேக வளையத்தில் சாமிரவி!

ராமஜெயம் கொலை

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டி இருப்பதாகச் சொல்லப்படுகிறது!

மூன்றரை ஆண்டுகளுக்கு முன்னால் தி.மு.க முன்னாள் அமைச்சரும் திருச்சி மாவட்டச் செயலாளருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை செய்யப்பட்டார். இன்று வரை குற்றவாளிகள் கைதுசெய்யப்படவில்லை.

திருச்சி மாநகர போலீஸாரும் பின்னர், சி.பி.சி.ஐ.டி போலீஸாரும் இந்த வழக்கை விசாரித்துள்ளனர். ரவுடி குரூப், தொழில் போட்டியாளர்கள், அரசியல் எதிரிகள், ராமஜெயத்தால் அவமதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் எனப் பலதரப்பட்டவர்களையும் தேடிப்பிடித்து விசாரித்தனர். எந்த ‘க்ளு’வும் கிடைக்காத நிலையில், சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, கடந்த டிசம்பர் மாதம் ராமஜெயத்தின் மனைவி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார். குற்றவாளிகளை நாங்களே கண்டுபிடித்துவிடுகிறோம் என்று பல முறை அவகாசம் கேட்ட சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு, வரும் அக்டோபர் 28-ம் தேதிவரை அவகாசம் கொடுத்தது உயர் நீதிமன்றம். கடைசி ஆயுதமாக கையில் சி.பி.சி.ஐ.டி தன் கையில் எடுத்திருப்பது, உண்மை கண்டறியும் சோதனையை.

யார் இவர்கள்?

போலீஸ் வளையத்தில் முதல் கட்டமாக  கேபிள் மோகன், நந்து உள்ளிட்டோர் கொண்டுவரப்பட்டு உள்ளார்கள். அடுத்ததாக, விசாரணை வளையத்தில் இருப்பவர் முல்லைக்குடி சண்முகம்.

திருச்சி மாவட்ட தி.மு.க பிரதிநிதியாக உள்ள கேபிள் மோகன், ராமஜெயத்தின் உதவியாளராக இருந்தவர். ராமஜெயம் தினமும் காலையில் வாக்கிங் போய்விட்டு, தன் அலுவலகத்துக்கு வரும்போது, அவருக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்பவர் இவர்.

நந்து (எ) நந்தகுமாருக்கு திருச்செங்கோடுதான் சொந்த ஊர். ராமஜெயம் செய்துவந்த நிறைய தொழில்களில் பிசினஸ் பார்ட்டனராக இருந்த ராஜவேல் என்பவரின் அண்ணன் மகன்தான் நந்து.  ராமஜெயத்தின் பிசினஸ்கள், வேலை நடக்கும் இடங்கள் என அனைத்தும் இவரின் மேற்பார்வையில்தான் இருந்தன. இவரை தில்லை நகர் 2-வது குறுக்குத் தெருவில் ஒரு பங்களா வீட்டில் தங்க வைத்திருந்தார் ராமஜெயம். பல பஞ்சாயத்துகள், முக்கியமான டீலிங்குகள் என இந்த வீட்டில்தான் நடந்ததனவாம்.

ராமஜெயம் எங்கு சென்றாலும், அவருக்கு நிழலாகப் பின்தொடர்ந்து பாதுகாப்பு அளிப்பவர் கீழ முல்லைக்குடி சண்முகம். இவர் மீது கொலை வழக்கு உட்பட பல வழக்குகள் இருந்தன.

ராமஜெயத்துக்கு மிக நெருக்கமாக இருந்த இவர்களுக்குத் தெரியாமல் எதுவும் நடந்திருக்க வாய்ப்பில்லை என சி.பி.சி.ஐ.டி போலீஸார் நினைக்கிறார்கள். எனவே, இவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீஸார் நீதிமன்றத்தில் அனுமதி கோரினர். தனக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த சம்மதமில்லை என்று நீதிமன்றத்தில் சண்முகம் தெரிவித்துவிட்டார். ஆகவே, இவருக்கு அந்தச் சோதனை நடத்தப்படவில்லை. கேபிள் மோகனுக்கும் நந்துவுக்கும் கடந்த 24, 25 தேதிகளில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.

‘‘பிடித்த பெயர்களை நினைக்கச் சொன்னார்கள்!”

கேபிள் மோகனிடம் நாம் பேச முயன்றோம். மிகுந்த தயக்கத்துடன் பேச ஆரம்பித்தார். “இரண்டு நாட்கள் சோதனை நடந்தது. காலையில் 3 மணி நேரம், மதியம் 3 மணி நேரம். உடல் முழுக்க ஆங்காங்கே கிளிப்புகள் போட்டார்கள். பிறகு நமக்குப் பிடித்த பெயர்களை மனதில் நினைக்கச்  சொன்னார்கள். அப்படியே நினைவு இழந்ததும் சில கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள். முதல் நாள் சோதனையில் என்னோட பல்ஸ் ரேட் குறைந்துள்ளது. மறுநாளும் சோதனை நடத்தினார்கள். இரண்டு நாட்களிலும் பலவிதமான கேள்விகள் கேட்டார்கள். கூப்பிடும்போது மறுபடியும் வரவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்” என்றார்.

‘‘எனக்கு முன்னரே விஷயம் தெரியாது!”

நந்துவிடமும் பேசினோம். “ராமஜெயம்  காணாமல் போனதும், லதா மேடம் 8.30 மணிக்கு சித்தப்பா வேலுவுக்கு போன் பண்ணினாங்க. சித்தப்பாவோ, கேபிள் மோகனிடம் அந்த விஷயத்தைச் சொல்லிவிட்டு அவரை கையோடு அழைத்துவந்து என்னிடமும் தகவலைச் சொன்னார். ஆனால், ராமஜெயம் காணாமல் போனது எனக்கு 7.30 மணிக்கே தெரியும் என்றும் நான் சங்கீத்துக்கு போன் செய்து சொன்னதாகவும் சி.பி.சி.ஐ.டி போலீஸார் சொல்கிறார்கள். இதுவரை 100 தடவைக்கு மேல் விசாரணைக்குப் போய் வந்துள்ளேன். சம்பவம் நடந்து மூன்று வருடங்கள்ஆகிறது. இப்போது அனைத்தையும் ஞாபகப்படுத்திச் சொல்வதற்கு முடியவில்லை” என்றார். 

‘‘கண்ணைக் கட்டி அழைத்துச் சென்றார்கள்!”

கீழ முல்லைக்குடி சண்முகத்தை சந்தித்தோம். “ராமஜெயம் இறந்துபோன நாளன்று போக்குவரத்து மேலாளர் ஒருவரிடம் டிரான்ஸ்ஃபர் சம்பந்தமாக பணம் வாங்க விழுப்புரம் சென்றிருந்தேன். எனக்கு எதுவுமே தெரியாது. ஆனால், 60 தடவைக்கு மேல சி.பி.சி.ஐ.டி போலீஸார் என்னை விசாரித்து டார்ச்சர் செய்துவிட்டார்கள். நான் என்னத்த சொல்ல முடியும்? டிசம்பர் 25-ம் தேதி, என் கண்களைக்கட்டி காரில் கொண்டுபோனார்கள். நான்கு நாட்களாக என் வீட்டுக்குக்கூட தகவல் சொல்லாமல் அடித்து சித்ரவதை செய்தார்கள். ஹேபியஸ் கார்பஸ் வழக்குப் போட்ட பிறகுதான் விட்டார்கள். என் காலை முறித்து, இடுப்பை உடைத்துவிட்டார்கள்” என்றார் கண்ணீருடன்.

சி.பி.சி.ஐ.டி வட்டாரத்தில் பேசினோம். “நந்து, முன்னுக்குப்பின் முரணான தகவல்களைச் சொல்கிறார். நந்து முதன்முதலில் ராமஜெயம் கொலை செய்யப்பட்டது பற்றி சங்கீத் என்பவனுக்குச் சொல்லி இருக்கிறார். கேபிள் மோகன், ராமஜெயத்தின் வலதுகரமாக இருந்த வினோத்துக்கு நெருக்கமானவர். வினோத்தும் ஆரம்பத்தில் இருந்தே சந்தேக வளையத்தில் இருக்கிறார். இந்த சண்முகம், ராமஜெயம் கொலை செய்யப்பட்ட அன்று விழுப்புரத்துக்குச் சென்றதாகவும், வழியில் நேருவை சந்தித்ததாகவும் சொல்கிறார். அதை நேரு தரப்பு மறுக்கிறது. கூடவே, சண்முகம் குற்றப் பின்னணி உள்ள நபர். இவைதான் எங்கள் சந்தேகத்துக்கான காரணம்.   ராமஜெயம், கூலிப்படையினரால்தான் கடத்தப்பட்டிருக்க வேண்டும். நல்ல அறிமுகமான நபர்கள் அதில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பதை விசாரணையில் உறுதிப்படுத்தி உள்ளோம்” என்றார்கள்.

சந்தேக வளையத்தில் சாமி ரவி

 சி.பி.சி.ஐ.டி போலீஸாரின் சந்தேக வளையில் விழுந்திருக்கிறார், சாமி ரவி. இந்த நபரைப்பற்றி விசாரித்தோம்.

2006-ல் திருச்சியில் ஐ.ஜி-யாக இருந்த ஜாஃபர் சேட் டீம், முட்டை ரவி என்ற ரவுடியை என்கவுன்டரில் போட்டுத் தள்ளியது. முட்டை ரவி மீது திருச்சி வட்டாரத்தில் கொலை, கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து என பல வழக்குகள் இருந்தன. முட்டை ரவிக்கு மூளையாக செயல்பட்டவர்கள் மண்ணச்சநல்லூர் குணாவும், சாமி ரவியும்தான். ராமஜெயம் கொலைக்கு முட்டை ரவியின் மரணமும் ஒரு காரணமாக இருக்கலாம் என அப்போது சொல்லப்பட்டது. அப்போது போலீஸாரின் விசாரணை வளையத்தில் இருந்தவன், குணா. ‘முட்டை ரவியின் மரணத்துக்குக் காரணமான  ராமஜெயத்தை கொல்வேன்’ ” என குணா சவால் விட்டதாக ஒரு தகவல் உண்டு.

‘‘சாமி ரவி ஒரு பொறியியல் பட்டதாரி. ஆங்கிலம், இந்தி மொழிகளில் சரளமாகப் பேசுவான். ஆங்கிலப் படங்களை பார்த்து ஸ்கெட்ச் போடும் வித்தைகளைக் கற்றுக்கொண்டானாம்.

பல வழக்குகளில் சிக்கிய இவன், சில காலம் லண்டனில் தங்கியுள்ளான். மீண்டும் திருச்சி வந்த  சாமி ரவி, தன்னை காப்பாற்றிக்கொள்வதற்காக, சாதி அமைப்பு ஒன்றில் பொறுப்பை வாங்கியுள்ளான்.  குரங்கு குமார் போன்றவர்களுடன் நெருக்கமாக இருந்துள்ளான். ராமஜெயத்தை சிலமுறை சந்தித்து உள்ளான். முட்டை ரவிக்காக ராமஜெயத்தைக் கொல்ல நினைத்த இவன், ராமஜெயத்துக்கு ஸ்கெட்ச் போட்டிருக்கலாம்” என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள். இப்போது அவன், திருப்பதி பகுதியில் தங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். அவனைப் பிடித்துவிட்டால், ராமஜெயம் கொலை தொடர்பான முக்கியத் தகவல்கள் தெரியவரும் என்கிறார்கள் விசாரணை அதிகாரிகள்.

- சி.ஆனந்தகுமார்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick