உதவும் ராகவா லாரன்ஸ்... களத்தில் விகடன் டீம்!

ராகவா லாரன்ஸின் நல்ல கனவு நனவாகும் தருணம் இது.

‘என்னை வாழவைக்கும் தமிழ் மண்ணுக்கு 1 கோடி ரூபாயை நான் நன்கொடையாகக் கொடுக்கிறேன். கல்வி, மருத்துவம், சுற்றுச்சூழல் மேம்பாட்டுப் பணிகளுக்கு எனத் தகுதியானவர்களுக்கு இதை அளிக்க வேண்டும். ஊருக்கு நல்லது செய்ய விரும்புகிற 100 இளைஞர்கள் மூலம், விகடன் குழுமத்துடன் இணைந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த விரும்புகிறேன்’ என்ற லாரன்ஸின் விருப்பம், இனிய சவால். இதோ... ‘கலாமின் காலடிச் சுவட்டில்... அறம் செய விரும்பு’ திட்டம் ஆரம்பமாகிவிட்டது.

‘‘நான் சாப்பிடுற ஒவ்வொரு வேளை சாப்பாடும் மக்கள் கொடுத்ததுதான். அவங்களுக்கு நான் என்ன செய்றேன்? என்ன வேணாலும் செய்ற அளவுக்கு சக்தி இருக்கிற சாமி இல்லை நான். ஆனா, சாப்பிடும்போது கொஞ்சம் சாப்பாட்டை சாமிக்காக, நம் முன்னோர்களுக்காக ஓரத்துல எடுத்துவைக்கிற மாதிரி நமக்கு உதவி செஞ்சவங்களுக்கு ஏதாவது திரும்பக் கொடுக்கணும்னு தோணிச்சு. ‘காஞ்சனா 2’-வுக்கு அட்வான்ஸ் வாங்கும்போதே கொடுத்துடலாம்னு ஒரு கோடி ரூபாய் எடுத்துவெச்சேன். ஆனா, அப்போ மனத் தடுமாற்றம், கொடுக்கலை. இப்போ ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘நாகா’ ரெண்டு படங்களையும் தயாரிக்க வேந்தர் மூவீஸ் வந்தாங்க. ஒரு கோடி ரூபாய் அட்வான்ஸ் தந்தாங்க. அதை ‘மேடையிலேயே கொடுங்க’னு சொல்லி கலாம் ஐயா பெயரில் உதவி பண்றதா அறிவிச்சேன். அதுதான் இந்தத் திட்டம்’’ என்கிறார் லாரன்ஸ்.
இதன்படி முதல் 20 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் சுறுசுறுப்பாகத் தங்கள் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். ‘‘அறம் செய விரும்பு’ திட்டத்தின் 100 தன்னார்வலர்களுள் ஒருவராக நானும் இணைந்துகொள்கிறேன்’ என விருப்பம் தெரிவித்து பலர் விகடனைத் தொடர்புகொண்டவண்ணம் உள்ளனர். தங்களால் இயன்றதை உதவ விரும்புவோரும், படிப்பு / மருத்துவச் செலவுக்கு நிதி உதவி தேவை எனவும் கேட்டு பலர் தொடர்புகொள்கின்றனர். அத்தனை கோரிக்கைகளையும் பரிசீலித்து ஒருங்கிணைத்துக்கொண்டிருக்கிறோம்.

திட்டத்தின் முதல் 10 தன்னார்வலர்களில் ஒருவரான திருநங்கை பானு, ‘‘அரசு பெண்கள் பள்ளிகளிலும், பெண்கள் விடுதிகளிலும் பயன்படுத்திய சானிட்டரி நாப்கின்களை அப்புறப்படுத்துவது பெரும் பிரச்னையாக இருக்கிறது. ‘சானிட்டரி நாப்கின் டிஸ்போஸல் மெஷின்’களை வாங்கி அரசுப் பள்ளிகளின் கழிப்பறைப் பகுதியில் பொருத்தலாம். ஒரு பள்ளியில் ஓர் இயந்திரம் பொருத்தினாலும் நூற்றுக்கணக்கான மாணவிகளின் பிரச்னை சரிசெய்யப்படும்’’ என்றார். சானிட்டரி நாப்கின்களை எரித்து சாம்பலாக்கும் இயந்திரங்களை, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசுப் பள்ளி மாணவிகள் விடுதிகளில் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை தவிர்த்த தமிழ்நாட்டின் இதரப் பகுதிகளில் மின்வெட்டு இப்போதும் முக்கியப் பிரச்னை. அது, மாவட்டத் தலைநகரங்களைவிட வட்டாரப் பகுதிகளில் இன்னும் மோசம். ‘இந்தப் பகுதிகளில் இருக்கும் அரசுப் பள்ளிகளின் ஹாஸ்டல்களுக்கு இன்வெர்ட்டர் அமைத்துத் தரலாம். மின்வெட்டு நேரத்தில் மாணவர்கள் அங்கு அமர்ந்து படிக்க வசதியாக இருக்கும்’ என்பதும் உதவி குறித்த ஓர் ஆலோசனை. கிராமப்புற மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில்கொண்ட இந்த உதவி முக்கியமானதே. இதற்கான இன்வெர்ட்டர் வாங்குவதற்கான வேலைகளும், பொருத்தமான அரசுப் பள்ளி விடுதிகளை அடையாளம் காணும் வேலைகளும் நடைபெற்று வருகின்றன.

‘‘பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஆடியோ லைப்ரரி பயனுள்ளதாக இருக்கும்’’ என்றார் தன்னார்வலர்களில் ஒருவரும், பார்வையற்ற மாற்றுத்திறனாளியுமான, உதவிப் பேராசிரியர் நாகராஜன். மதுரை தியாகராசர் கலை அறிவியல் கல்லூரியில் சுமார் 40 பார்வையற்ற மாணவர்கள் படிக்கிறார்கள் எனவும், அங்கு ‘ஒலி நூலகம்’ அமைத்தால் மாணவர்கள் பயன்பெற வாய்ப்பாக இருக்கும் எனவும் கூறினார். இதுதொடர்பாக  தியாகராசர் கல்லூரி முதல்வர் எயினியிடம் பேசியபோது, ‘‘மிகுந்த மகிழ்ச்சி. உரிய இடவசதியை அளிக்கத் தயார்’’ என்றார். அடுத்தகட்டப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

‘‘சென்னை சிந்தாதரிப்பேட்டை கூவம் கரையோரக் குடிசைப் பகுதியில் உள்ள மாணவர்களுக்கு, அதே பகுதியில் வசிக்கும் படித்த மாணவி ஒருவர் மாலை நேர டியூஷன் வகுப்புகள் நடத்துகிறார். இப்போது திறந்தவெளியில் நடைபெற்றுவரும் இந்த வகுப்புகளுக்கு ஒரு ஷெட் அமைத்துத் தந்தால் பேருதவியாக இருக்கும்’’ என்பது உதவி இயக்குநர் கவின் ஆண்டனியின் பரிந்துரை.

தாய், தந்தை இருவருமே மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் பொறியியல் கல்லூரியில் சேர்ந்திருக்கும் ஒரு மாணவன், குறைந்தபட்ச கல்விக் கட்டணத்தைக்கூட செலுத்த முடியாமல் சிரமப்படுவதையும், அந்தக் கிராம மக்களே அந்தப் பையனின் போக்குவரத்துச் செலவுகளை ஏற்றுக்கொள்வதையும் பற்றி கூறினார் ஆசிரியர் ஆனந்த். விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இந்த மாணவருக்கான முழுக் கல்விக் கட்டணத்தையும் செலுத்துவதற்கான விசாரணைகள், ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இப்படி தன்னார்வலர்கள் பரிந்துரைக்கும் ஒவ்வொரு கோரிக்கைக் குரலின் பின்னாலும் தீர்க்கப்படாத நம் சமூகச் சிக்கலின் பல அடுக்குகள் மறைந்திருக்கின்றன. ‘அறம் செய விரும்பும்’ நல் உள்ளங்களின் உதவியோடு அந்த இருள் அகற்றும் பணி தொடர்கிறது.

அறம் செய விரும்பு திட்டம் - எப்படிச் செயல்படும்?

ராகவா லாரன்ஸ் அவர்கள் ‘வாசன் சாரிட்டபிள் டிரஸ்ட்’டுக்கு 1 கோடி ரூபாயை அளித்துள்ளார். அந்த 1 கோடி ரூபாய் 100 தன்னார்வலர்களுக்கு தலா ஒரு லட்சம் என ஒதுக்கப்படும். அந்த 100 பேர் கல்வி, மருத்துவம், சுற்றுச்சூழல் மேம்பாடு உள்ளிட்ட பல மக்கள் சேவைப் பணிகளுக்கு என உதவ, தகுதியான பயனாளிகளைத் தன்னார்வலர்கள் கண்டுபிடித்துப் பரிந்துரைக்க வேண்டும். லாரன்ஸ் மற்றும் விகடன் குழுமத்தின் ஒப்புதலுக்குப் பிறகு, தக்க பயனாளிகளுக்கு அவர்களின் தேவைக்கு ஏற்ப உதவித் தொகை நேரடியாக அளிக்கப்படும். இந்தத் திட்டத்தின் செயல்பாடுகள் அவ்வப்போது ஆனந்த விகடனிலும், இதற்கான பிரத்யேக வலைதளம் மூலமும் பகிரப்படும். திட்டம் தொடர்பான தகவல்களை www.vikatan.com/aramseyavirumbu என்ற வலைதளத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம். இந்தத் திட்டம் மூலம் உதவ விரும்புபவர்கள் / உதவி வேண்டுபவர்கள் aram@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்புகொள்ளலாம்.


முதல் 20 தன்னார்வலர்கள் யார் யார்?

நாகராஜன் : பார்வையற்ற கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர். அரசுக் கல்லூரி ஒன்றில் ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியர்.

திவ்யதர்ஷினி : விஜய் தொலைக்காட்சியின் பரபர நிகழ்ச்சித் தொகுப்பாளர். சமூகத்துக்கு தன்னால் இயன்ற நல்லதை செய்ய விரும்பும் நல்மனம் கொண்டவர்.

கிரேஸ் பானு : தமிழ்நாட்டில், முதன்முதலில் பொறியியல் கல்லூரியில் சேர்ந்துப் பயிலும் திருநங்கை மாணவி.

கரு.அண்ணாமலை : மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றியவர். சினிமா மீதான தீவிரக் காதல் கொண்ட உதவி இயக்குநர்.

காயத்ரி : தடகள வீராங்கனை. தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் ஆறு முறை சிறந்த வீராங்கனையாகத் தேர்வுசெய்யப்பட்ட சாதனையாளர்.

ஆனந்த் : திருவாரூர் மாவட்டம் காளாச்சேரி கிராம அரசுப் பள்ளி ஆசிரியர். இந்தக் கிராமத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த தற்கொலைகளை முடிவுக்குக் கொண்டு வந்தவர்.

வினோத்ராஜ் சேஷன் : குளம், ஏரி போன்ற நீர்நிலைகள் ஆக்கிரமிப்புக்கு எதிராகச் செயல்படும் திருச்சி இளைஞர். ‘தண்ணீர் இயக்கம்’ என்ற அமைப்பை நடத்திவருபவர். 

பாலாஜி : பண்பலை எஃப்.எம் மற்றும் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமானவர். கிண்டல், காமெடிகளுக்கு மத்தியில் சமூகத்துக்கு நல்லன செய்ய விரும்பும் இளைஞர்.

கவின் ஆண்டனி : பேருந்து விபத்தில் வலது கையை இழந்தவர். விபத்துகளின் பின்னணி குறித்து ‘அதிகாலை’ என்ற குறும்படம் இயக்கியவர். இப்போது திரைப்பட உதவி இயக்குநர்.

கீதா இளங்கோவன் : PIB-ன் ஊடக அலுவலர். ‘மாதவிடாய்’ என்ற ஆவணப்படத்தின் இயக்குநர். தற்போது ‘நம்பிக்கை மனிதர்கள்’ என்ற தலைப்பில் தொடர் ஆவணப்படங்கள் எடுத்துவருகிறார்.

அ.முத்துகிருஷ்ணன் :  சுற்றுச்சூழல் ஆர்வலர், எழுத்தாளர். மதுரை மக்களைத் திரட்டி, ‘பசுமை நடை’ என்ற சூழல் நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர்.

வானவன் மாதேவி, இயல் இசை வல்லபி :  தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சகோதரிகள். ‘ஆதவ் அறக்கட்டளை’ மூலம் தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குப் பயிற்சி அளித்து வருபவர்கள்.

சிவா :  மதுரை அரசுப் பள்ளி ஆசிரியர். வகுப்பறைச் சூழலை மாற்றி அமைக்க ‘கலகல வகுப்பறை’ என்ற நிகழ்ச்சியை நடத்தி வருபவர்.

ச.பாலமுருகன் : வழக்குரைஞர், மனித உரிமைச் செயற்பாட்டாளர். ‘சோளகர் தொட்டி’ நாவல் ஆசிரியர். பழங்குடி மக்களின் நலன்களுக்காய் உழைத்து வருபவர்.

அஜயன் பாலா : பல்வேறு விருதுகளைப் பெற்ற எழுத்தாளர், திரைப்பட கலைஞர். வரலாறு, சினிமா, இலக்கியம்... போன்ற துறைகளில் 26 புத்தகங்களின் ஆசிரியர்.

திவ்யா :  மாணவர்களை அரசியல் போராட்டங்களில் பங்கேற்க வைக்கும் சமூக செயற்பாட்டாளர். இளைஞர்களை அரசியல்படுத்தும் பொறுப்பான பணியை இடைவிடாமல் செய்து வருபவர். 

பூ.கொ.சரவணன் :  எழுத்தாளர், விவசாயி மற்றும் நீர்ப்பாசனப் பொறியாளர், பேச்சாளர் என பன்முகம் கொண்ட இளைஞர். டாப் 200 வரலாற்று மேதைகள், டாப் 100 அறிவியல் மேதைகள் ஆகிய புத்தகங்களின் ஆசிரியர்.

அருண் கிருஷ்ணமூர்த்தி :  சுற்றுச்சூழல் ஆர்வலர். ‘கூகுள்’ வேலையைத் துறந்துவிட்டு ஏரி, குளம் தூர்வாரும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் துடிப்பான இளைஞர்.

தய்.கந்தசாமி : திருத்துறைப்பூண்டியில் வசிக்கும் வழக்குரைஞர், சமூக செயற்பாட்டாளர். மக்கள் போராட்டங்களில் முன்நிற்பவர். ‘தனி இருட்டு’ என்ற கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick