நீதியைக் காக்க நீதிமன்றங்களைக் காப்போம்!

நீதியரசர் சந்துரு சொல்லும் 10 யோசனைகள்

னி மனிதனோ, ஒரு குழுவோ, ஓர் அதிகார மையமோ, ஓர் அரசாங்கமோ அல்லது இவர்கள் அனைவரும் மொத்தமாக சேர்ந்தோ ஒருவருக்கு அநீதி இழைத்தால், பாதிக்கப்பட்டவர் கடைசியில் அடைக்கலம் புகும் இடம், நீதிமன்றம்தான். ஜனநாயக அமைப்பில் இரண்டாவது தூணாக நிற்கும் அந்த நீதிமன்றங்களில், உடனடியாக செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் என்ன? ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துருவிடம் கேட்டோம். 10 ஆலோசனைகளைப் பட்டியலிட்டார். அவை:

1. நீதிமன்றங்களைப் பரவலாக்குதல்

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், உயர் நீதிமன்றம் மட்டும் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஏனென்றால், வீட்டு வாடகை பிரச்னை வழக்குகளில் தொடங்கி சிறு வழக்குகள், குடும்ப வழக்குகள் மற்றும் தொழிலாளர் வழக்குகளை நடத்தும் நீதிமன்றங்கள் அனைத்தும் ஒரே வளாகத்துக்குள் இருப்பதால் பல சிக்கல்களும் பிரச்னைகளும் எழுகின்றன. இடநெருக்கடி, குடும்ப வழக்குகளில் எதிர்தரப்புகளின் மோதல்கள், வழக்கை நடத்துபவர்களுக்கான அடிப்படை வசதியின்மை, வழக்கறிஞர் போராட்டங்கள், பொருளாதாரச் செலவுகள், காலவிரயம் போன்றவை இதன்மூலம் ஏற்படுகிறது.

இதைத் தவிர்க்க நீதிமன்றங்களைப் பரவலாக்க வேண்டும். முதற்கட்டமாக சென்னை மாநகரத்தை நான்கு நீதிமன்ற மாவட்டங்கள் / அமர்வு நீதிமன்ற பகுதிகளாகப் பிரிக்க வேண்டும். திருவொற்றியூர், அம்பத்தூர், போரூர், நீலாங்கரை ஆகிய இடங்களில் (50 வார்டுகளுக்கு ஒரு வளாகம் என்ற முறையில்) அனைத்துக் கட்டமைப்புகளுடன் எல்லா நீதிமன்ற பிரிவுகளும் அடங்கிய நீதிமன்ற வளாகங்களை உருவாக்க வேண்டும். அந்த 50 வார்டுகளுக்கு உண்டான எல்லையில் அனைத்து நீதிமன்றங்களும் செயல்படும் ஏற்பாட்டை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்கு குறைந்தபட்சம் மூன்று முதல் ஐந்து வருடங்கள் ஆகலாம். ஆனால், இதை நடைமுறைப்படுத்திவிட்டால், வழக்கறிஞர்கள் வழக்குத் தொடுத்தவர்கள் மற்றும் பொதுமக்களின் பல இன்னல்களுக்கு எளிதாகத் தீர்வுகள் கிடைக்கும்.

2. அறிவியல் - தொழில்நுட்ப கட்டமைப்புகள்

உயர் நீதிமன்ற ஆவணங்களை (court of records) பாதுகாக்க வேண்டும் என்று அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. கடந்த 153 வருடங்களுக்கான ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு வருவதாக நீதியமைப்பு சொல்கிறது. அந்த ஆவணங்களில் இருந்து ஒரு காகிதத்தைத் தொட்டால், தூள் தூளாக நொறுங்கிவிழுகிறது. நீதிமன்ற ஆவணங்களை டிஜிட்டல் முறையில் பதிவுசெய்து பாதுகாக்க வேண்டும். இதுவரையிலான ஆவணங்களை டிஜிட்டலாக்குவதற்கு மிகப் பெரிய பொருளாதாரமும் மனித சக்தியும் தேவை. முதலில், தற்போது தாக்கல் செய்யப்படும் ஆவணங்களையாவது டிஜிட்டல் முறைப்படி பதிவுசெய்ய ஆரம்பிக்கலாம்.

3. கடைநிலை ஊழியர் நியமனங்கள்

நீதிமன்றங்களில் ஊழியர் நியமனங்கள் என்பது நீதிமன்றத் தேவையைக் கருத்தில்கொள்ளாமல், அளவீட்டின் தேவைக்கேற்ப செய்யப்படுகிறது (pyramid system). இது முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும். ஏனென்றால், இன்றைக்கு நீதிமன்றங்களின் தேவை கடைநிலை ஊழியர்கள் அல்ல. அவர்களைவிட சற்றுக் கூடுதலான கல்வியும் திறனும் படைத்த இடை நிலை ஊழியர்கள்தான் நீதிமன்றங்களுக்குத் தேவை. ஆகவே, நியமன விகிதாசாரங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதேபோல் பிரிட்டிஷ் காலனியாதிக்கம் விட்டுச் சென்ற தேவையற்ற பல பதவிகள் இன்னும் நீதிமன்றங்களில் சம்பிரதாய அடிப்படையில் ஒட்டிக்கொண்டிருக்கின்றன. உதாரணமாக, ஒரு நீதிபதிக்கு முன் செங்கோல் பிடித்துச் செல்லும் ஊழியருக்கு அது மட்டும்தான் வேலை. நீதிபதி தன் இருக்கையில் அமர்ந்து வழக்குகளை விசாரிக்கத் தொடங்கியதும், அந்த ஊழியரும் ஓர் ஓரத்தில் போய் அமர்ந்துவிடுவார். அதன்பிறகு, மீண்டும் நீதிபதி கிளம்பும்போது, செங்கோலை கையில் எடுத்துக்கொண்டு அவருக்கு முன்பாகச் செல்வார். இதனால், ஒரு மனித உழைப்பு பல மணி நேரங்கள் வீணடிக்கப்படுகிறது. நீதிபதிகளின் வாகன ஓட்டுநர்கள், காலையிலிருந்து மாலை வரை வேலையின்றி இருக்கின்றனர். இவர்களுக்குக் கூடுதல் பணிகளை ஒதுக்கிக் கொடுக்கலாம். அதற்காக பணித்தேவைகள் குறித்து ஒரு கணக்கெடுப்பு (time and motion study) உடனடியாக நீதித்துறையில் நடத்தப்பட வேண்டும். 

4. உத்தரவு நகல்கள்

வரம் கொடுக்க கடவுள் தயாராக இருந்தாலும் பூசாரி விடுவது இல்லை என்பதுபோல, நீதிபதிகள் கையெழுத்துப்போட்டு தீர்ப்பளித்துவிட்ட பின்னரும் அந்த நகல்கள் உரியவர்களுக்குக் கிடைப்பதில்லை. அதற்கு பல வாரங்களோ, மாதங்களோ பிடிக்கிறது. கணினி மயமாகிவிட்ட இந்தக் காலத்தில், இந்தத் தாமதம் சகிக்க முடியாதது.

இதைத் தவிர்க்க கணினியில் பதிவு செய்யப்படும் தீர்ப்புகள் உடனடியாகத் தரவிறக்கம் செய்து வழங்கப்பட வேண்டும். பஞ்சாப், அரியானா மாநிலங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் ஜாமீன் உத்தரவுகள் உடனடியாக சம்பந்தப்பட்ட சிறைச்சாலைகளுக்கும், காவல் நிலையங்களுக்கும் இ-மெயில் மூலம் அனுப்பப்பட்டு கைதிகள் ஜாமீனில் விடுதலையாவது நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இதை தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டும். 

5. நீதிமன்ற கட்டணங்கள்

நீதிமன்றத்துக்கான கட்டணங்கள் முத்திரைத் தாள்களாகவும், முத்திரை வில்லைகளாகவும் செலுத்தப்படுகின்றன. இதைப் பராமரிக்க உத்தரவிடும் சட்டங்கள் காலனியாதிக்கத்தில் உருவாக்கப்பட்டவை. இன்றுவரை ஏன், எதற்கு, என்ற கேள்வியின்றி பின்பற்றப்படுகின்றன. இந்தக் கட்டணங்களை வசூல் செய்வதற்கு ஒருவர், அதில் ஓட்டை போடுவதற்கு மட்டும் ஒருவர், முத்திரைத் தாள்களை செயலிழக்கச் செய்ய ஒருவர் என மிகப்பெரும் ஊழியர் பட்டாளம் இதற்காகச் செயல்படுகிறது. இதை எளிதாக்கலாம். அதுபோல் ஒரு வழக்குக்கான தொகையை முதலிலேயே வசூலித்துவிடலாம். மனுவுக்கான கட்டணம், எதிர்தரப்புக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டிய கட்டணம், தீர்ப்பு நகலுக்கான கட்டணம் என்று தனித்தனியாக வசூலிப்பது மேலும் மேலும் சிக்கலை ஏற்படுத்துகிறது. மேலும் இதற்கான நிர்வாகச் செலவுகளும் கூடுதலாக உள்ளன.

6. நீதிமன்ற அறிவிக்கைகள்

நீதிமன்றம் ஒரு வழக்கில் எதிர்தரப்பிலுள்ள அரசுக்கோ, தனி நபர்களுக்கோ நோட்டீஸ் அனுப்பினால், அது உரியவர்களைச் சென்றடைவதில் பல தடங்கல்கள் உள்ளன. தகவல் தொழில்நுட்பம் எத்தனையோ தொடர்புகளை உருவாக்கி வைத்துள்ளது. அவற்றில் ஒன்றை இதற்காகப் பயன்படுத்தலாம். தகவல் தொழில்நுட்ப சட்டமும் உருவாகிவிட்ட நிலையில், இ-மெயிலில் நோட்டீஸ் அனுப்பலாம். அப்படி அனுப்பும் நோட்டீஸ்களை சட்டப்பூர்வ நடவடிக்கையாகக் கருத வேண்டும் என்று விதியை உருவாக்க வேண்டும். இதனால் நேரமும் செலவும் மிச்சப்படும்.

7. வழக்குகளின் தேக்கம்

இப்போது நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளை விசாரித்து முடிப்பதற்கே 100 வருடங்களுக்கு மேலாகும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. இதனால் நீதிமன்றங்கள் மீது நம்பிக்கையற்ற எண்ணம் உருவாகி இருக்கிறது. இதைத் தவிர்க்க வழக்குகளைக் குறித்த காலங்களில் விசாரித்து முடிப்பதற்கும், அப்படி வாய்தா வாங்கி வழக்கை தாமதப்படுத்துபவருக்கும் பொய் வழக்குகளைப் போடுபவர்கள் மீதும் விதிக்கப்படும் அபராதத் தொகையை பல மடங்கு உயர்த்த வேண்டும். இப்போதுள்ள சட்டங்களில் அதற்கான அதிகாரம் நீதிபதிகளுக்குக் கொடுக்கப்பட்டிருந்தாலும், பெரும்பான்மையான நீதிபதிகள் அந்தச் சட்டப்பிரிவுகளைப் பயன்படுத்துவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், இதில் நீதிபதிகளிடம் மனமாற்றம் ஏற்பட வேண்டும்.

  8. நீதிபதிகள் நியமனம்

பல நாடுகளை ஒப்பிட்டால் இந்தியாவும் மக்கள்தொகைக்கேற்ப நீதிபதிகளை நியமிப்பது இல்லை. இப்போது இந்தியாவிலுள்ள உயர் நீதிமன்றங்களில் 35 சதவிகிதத்துக்கு மேல் பதவிகள் காலியாக உள்ளன. கீழமை நீதிமன்றங்களிலும் இதே கதிதான். நிலைமை இப்படி இருந்தால், காலதாமதமற்ற நீதி எப்படிச் சாத்தியமாகும்? எனவே, தகுதியும் திறமையும்வாய்ந்த நீதிபதிகளைக் கண்டறிந்து மக்கள்தொகைக்கேற்ப நீதிபதிகளின் எண்ணிக்கையையும் உயர்த்த வேண்டும்.

9. சட்ட உதவி மையங்கள்

ஏழைகளுக்கான இலவச சட்ட உதவி மையங்களை வழக்கறிஞர் குழுமங்களே நடத்தும்படி ஏற்பாடு செய்யவேண்டும். இங்கிலாந்தில் இந்தப் பொறுப்பு வழக்கறிஞர்களிடம் மட்டுமே உள்ளது. ஆண்டுதோறும் 100 கோடிக்கு மேல் மத்திய அரசு செலவிட்டாலும் அந்தச் செலவு பொறுப்பான முறையில் செய்யப்படுவது இல்லை. பதவியிலுள்ள நீதிபதிகளுக்கு இதனைச் செய்வதற்காக தகுதியும் நேரமும் கிட்டுவது இல்லை. சட்ட உதவி வழக்கறிஞர்களுக்குத் தொழில் அனுபவம் போதுமானதாக இல்லை. அவர்களைத் தயார்படுத்துவதற்கான பயிற்சி மையங்களை ஏற்பாடு செய்வதுடன் ஒவ்வொரு மூத்த வழக்கறிஞரும் குறிப்பிட்ட விழுக்காடு வழக்குகளை இலவசமாக நடத்த வேண்டும் என்று பார் கவுன்சில் விதிகளைத் திருத்த வேண்டும்.

10. சட்டக்கல்வி

இன்று சட்டக்கல்வி மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாமை, உள்கட்டமைப்பில் குறைபாடுகள், மாணவர்களின் ஊக்கத்திறனைக் கண்டுபிடித்து அதன்பின் மாணவர் சேர்க்கை இல்லாமை இப்படி பல பிரச்னைகள். சட்டக் கல்லூரிகளின் தரத்தை உயர்த்தாமல் வழக்கறிஞர்களின் திறமையை மேம்படுத்த முடியாது.  இதற்கான உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டு சட்டக் கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்த வேண்டும்.

- நீதித்துறையை காப்பாற்ற இந்த நடவடிக்கைகள் துரிதமாகச் செய்யப்பட வேண்டும்.

- ஜோ.ஸ்டாலின்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick