“அழகிரி எப்போதுமே தி.மு.க-வுக்கு விசுவாசமாக இருந்தது இல்லை”

கொந்தளிக்கும் மா.செ-க்கள்!

மு.க.அழகிரிக்கு எதிராக இப்போதுதான் தி.மு.க-வினர் வெளிப்படையாகப் பேச ஆரம்பித்து உள்ளார்கள்.

‘‘ஸ்டாலினை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தால் கட்சி தோற்றுவிடும்” என்று அழகிரி சொன்னது, ஸ்டாலின் ஆதரவாளர்களைக் கொந்தளிக்க வைத்தது. ‘‘நான் எப்போதும் என்னை முதலமைச்சர் வேட்பாளர் என்று சொல்லிக்கொண்டது இல்லை” என்று ஸ்டாலின் சாதாரணமாக அறிக்கைவிட்டாலும் அவரது ஆதரவாளர்கள் மதுரையில் திடீரென பத்திரிகையாளர்களைச் சந்தித்து கொந்தளிக்க ஆரம்பித்தார்கள். இதுவரை அழகிரி என்ன சொன்னாலும் அமைதியாக இருந்தவர்கள் இப்போது பதிலடி கொடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

அவர்களை நாம் சந்தித்தோம்:

வேலுச்சாமி (மதுரை மாநகர் வடக்கு மாவட்டச் செயலாளர்), கோ.தளபதி (மாநகர் தெற்கு மாவட்டச் செயலாளர்):

‘‘அவசியம் இல்லாத கருத்துகளை அவ்வப்போது பேசுவது அழகிரிக்கு வாடிக்கை. அவர் இப்படி அடிக்கடி அபத்தமாகப் பேசுவது ஆளும் கட்சியிடம் இருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளத்தான். அழகிரி, இப்போது தி.மு.க-வில் அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லை. அப்படிப்பட்டவர் தி.மு.க-வை விமர்சிப்பது தேவையற்றது.

இவர் என்றைக்குமே தி.மு.க-வுக்கு விசுவாசமாக இருந்தது இல்லை. அவரைப் பற்றி நாங்கள் பேசுவதே இல்லை. இப்போது அவரின் கடந்த காலச் செயல்பாடுகளை நாங்கள் வெளிப்படையாகச் சொல்ல வேண்டிய சூழலை அவரே ஏற்படுத்திவிட்டார். 2001-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க வேட்பாளர்களுக்கு எதிராக தனது ஆதரவாளர்களைப் போட்டிக்கு நிறுத்தி துரோகம் செய்தவர். அதற்காக அன்று கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர். தி.மு.க ஆட்சியில் இருக்கும்போது தீவிர அரசியல் பண்ணுவார். ஆட்சியில் இல்லாதபோது அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக நடந்துகொள்வார். அவர் போடும் இரட்டை வேடம் மதுரை மக்களுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கே தெரியும்.”

பி.மூர்த்தி (மதுரை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர்),
மா.செ.மணிமாறன் (வடக்கு மாவட்டச் செயலாளர்):

“கட்சித் தலைமையால் நீக்கப்பட்ட அழகிரிக்கு கட்சியைப் பற்றி பேச உரிமை இல்லை. எங்களுக்குத் தலைவர் கலைஞரும் தளபதி ஸ்டாலினும்தான் எல்லாமும். தளபதிக்கு எவ்வளவு மக்கள் செல்வாக்கு இருக்கிறது என்பதைக் காட்ட வருகிற 25-ம் தேதி ஒருநாள் முழுதும் மதுரை மாவட்டத்தைச் சுற்றி வரப்போகிறோம். அப்போது தெரியும் அவருக்குள்ள மக்கள் செல்வாக்கு. அதன்பிறகாவது இந்த மாதிரி பேட்டி தருவதை அழகிரி நிறுத்த வேண்டும்.’’

சேடப்பட்டி முத்தையா (முன்னாள் சபாநாயகர்):

‘‘இந்திய விடுதலைக்குப் பின் மகாத்மா காந்தியையும் நேருவையும் பிரித்துப் பார்க்காமல், மக்கள் அனைவரும் அவர்களை ஒற்றுமையாக எப்படி ஏற்றுக்கொண்டார்களோ, அதுபோல தலைவர் கலைஞரையும், தளபதி ஸ்டாலினையும் பார்க்கிறோம். இதை யாராலும் பிரிக்க முடியாது. ஓய்வில்லாமல் தமிழகமெங்கும் சுற்றி கட்சியை ஸ்டாலின் வளர்த்து வருகிறார். அவர் இல்லாமல் கட்சி இல்லை. கட்சிக்குத் துரோகம் செய்தவர்கள் அவரைப்பற்றி பேச அருகதை இல்லை. அழகிரி சொல்வதை கட்சியினர் எல்லோரும் புறம்தள்ள வேண்டும்’’.

ஐ.பெரியசாமி (தி.மு.க, துணைப் பொதுச் செயலாளர்):

 ‘‘தி.மு.க-வுக்கு யார் தலைவராக இருக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு யார் முதலமைச்சராக வேண்டும் என்ற முடிவை எடுக்கக்கூடிய அதிகாரம் கலைஞருக்குத்தான் இருக்கிறது. அழகிரிக்கும் தி.மு.க-வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அடிப்படை உறுப்பினராக இல்லாத ஒருவரின் அறிக்கைக்கு தி.மு.க தொண்டர்கள் முக்கியத்துவம் அளிக்கத் தேவையில்லை’’.

- செ.சல்மான், ஆர்.குமரேசன், படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

ஓவியம்: அரஸ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick