முதலீட்டாளர்கள் மாநாடு - பலன் தருமா... பணால் ஆகுமா?

சென்னையில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி முடித்திருக்கிறது ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு. ஆட்சிக்காலம் முடிய இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில் இந்த மாநாட்டின் மூலம் தமிழகத்துக்கு என்ன பயன்கள் கிடைக்கப் போகிறது என்பது குறித்து பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை எழுப்பியுள்ளனர்.

‘குறைந்த விலைக்கு நிலம் தருகிறோம், வரிச் சலுகையும் அளிக்கிறோம்’ என ஆந்திராவும் கர்நாடகாவும் போட்டிப்​போட்டு தமிழகத்தில் கூட்டம் நடத்தி முதலீட்டாளர்களை அழைத்தார்கள். கர்நாடக முதல்வர் சித்தராமையா கோவைக்கே வந்து ‘கர்நாடகாவில் தொழில் தொடங்க வாருங்கள்’ என அழைப்புவிடுத்தார். அதனால், கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் புதிதாக அமைக்கப்பட்ட 1,595 ஏக்கர் பரப்பளவிலான தொழிற்பூங்காவில் தமிழகத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்தனர். அப்படித்தான் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் தமிழக முதலீட்டாளர்களை அழைத்தார். இவ்வளவும் நடந்த பிறகுதான், தமிழக அரசுக்கு திடீர் ஞானோதயம் உதித்தது.

தள்ளாட்டம் போட்ட மாநாடு!

‘ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கப் போகிறோம்’ எனச் சொல்லி அறிவிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாட்டை, திட்டமிட்டவாறு நடத்த முடியாமல் அ.தி.மு.க அரசு திணறியது. அதனால் இரண்டு முறை மாநாடு தள்ளிப்போனது. ‘2014 அக்டோபரில் மாநாடு நடத்தப்படும்’ என முதலில் அறிவித்தார்கள். ஜெயலலிதா சிறைக்குப் போனதால், 2015 மே மாதத்துக்கு மாற்றினார்கள். பிறகு, திடீரென்று செப்டம்பர் மாதத்துக்கு மாநாட்டை மாற்றினார்கள். ‘மே மாதம் கடுமையான வெயில் இருக்கும் என்பதால், தேதி மாற்றப்பட்டிருக்கிறது’ என நொண்டிச்சாக்கு சொன்னார்கள்.

சந்திக்க முடியாத முதல்வர்!

ஜெயலலிதா பங்கேற்பதற்காக இவ்வளவு திட்டமிடும் ஆட்சியாளர்கள், முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான விஷயங்களை ஆரம்பத்திலேயே காண்பித்திருந்தால், அது சரித்திரம் ஆகியிருக்கும். இந்த மாநாட்டுக்காகக் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த முன்னோட்ட நிகழ்ச்சியில், ‘18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு 7 நிறுவனங்களோடு புரிந்து உணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்’ என விளம்பரங்கள் செய்யப்பட்டன. அது புஸ்வாணம் ஆனது. குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாநாட்டை நடத்தியிருந்தால்தானே முதலீட்டை ஈர்த்து தொழில்களைப் பெருக்கியிருக்க முடியும். சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், குறுகியகால இடைவெளியில் மாநாட்டை நடத்தி என்ன சாதிக்கப் போகிறார்கள்?

தொழில் தொடங்குவது தொடர்பாக முதலமைச்சரை சந்தித்துப் பேசுவதற்கான வாய்ப்பு தமிழ்நாட்டில் இல்லை. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், கர்நாடக முதல்வர் சித்தராமையா, கேரள முதல்வர் உம்மன் சாண்டி, மத்தியப் பிரதேச முதல்வர் சவுகான், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் பல மாநிலங்களுக்கும் நாடுகளுக்கும் சென்று முதலீடுகளைத் திரட்டிவருகின்றனர். ஆனால் ஜெயலலிதா, சென்னைக்கு வந்து சந்திக்க விரும்பும் தொழிலதிபர்களைக்கூட சந்திப்பது இல்லை.

புரிந்துகொள்ளப்படாத ஒப்பந்தங்கள்!

‘ஒரு லட்சம் கோடி என்ற இலக்கைத் தாண்டி, மாநாட்டின் மூலமாக முதலீடு வந்துள்ளது’ என பெருமைப்படுகிறார் முதல்வர் ஜெயலலிதா. முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்து உணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இந்த மாநாடு நடப்பதற்கு பல மாதங்களுக்கு முன்பு, 33 இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுடன் 31,706 கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டுக்கான புரிந்து உணர்வு ஒப்பந்தங்களைப் போட்டிருக்கிறார் ஜெயலலிதா. இதுதவிர வழிகாட்டு மையத்தின் மூலம் 35 தொழில் திட்டங்களைத் தொடங்குவதற்காக 14,896 கோடி முதலீடு பெறப்பட்டிருப்பதாகவும் சொன்னார்கள். இதனையும் சேர்த்து மொத்தமாக கடந்த 4 ஆண்டுகளில் 46,602 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டி​ருப்பதாக அரசு சொன்னது. ‘இப்படி ஒப்பந்தம் போட்ட நிறுவனங்களில் இதுவரை எத்தனை நிறுவனங்கள் தொழிலைத் தொடங்​கியிருக்​கின்றன? எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்​பட்டுள்ளது என்கிற விவரங்களை எல்லாம் வெள்ளை அறிக்கையாக வெளியிட முடியுமா?’ என்ற எதிர்க் கட்சிகளின் கேள்விகளுக்கு அரசின் பதில் என்ன?

கானல்நீராகிப்போன விஷன் - 2023!

தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துப்போவதாகக் சொல்லி ‘விஷன் 2023’ என்ற தொலைநோக்குத் திட்டத்தை ஜெயலலிதா வெளியிட்டார். ஆனால், அதன் இலக்கை எட்டுவதற்கான நடவடிக்கைகள் முடங்கிப் போயிருக்கின்றன. ‘15 லட்சம் கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்’ என ‘விஷன் 2023’-ல் அறிவிக்கப்பட்டது. அதற்காக, 4.09 லட்சம் கோடி செலவிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 4 ஆயிரம் கோடிகூட ஒதுக்கப்படவில்லை. இதேபோல, ‘20 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு அனல் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்’ என அறிவிக்கப்பட்டும், அதன் இலக்கை எட்டவில்லை. செங்கல்பட்டு - தூத்துக்குடி, தூத்துக்குடி - கோவை, கோவை - செங்கல்பட்டு இடையே 24 ஆயிரம் கோடி ரூபாயில் முக்கோண 6 வழி மற்றும் 8 வழி சாலைகள், 1.88 லட்சம் கோடி ரூபாய் செலவில் மத்திய அரசுடன் இணைந்து ரயில்பாதை மேம்பாடு, 25 ஆயிரம் கோடியில் விமானநிலைய விரிவாக்கத் திட்டம், 1,60,985 கோடி ரூபாயில் தொழில் துறை திட்டங்கள், 25 ஆயிரம் கோடி ரூபாயில் நகர்ப்புறங்களில் குடிசைகளில் வாழும் மக்களுக்குப் புதிய வீடுகள் என்ற விஷன் 2023 அறிவிப்புகள் எல்லாம் கானல் நீராகிவிட்டது. தொழில் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் இந்தத் திட்டங்களை நிறைவேற்ற முயற்சித்திருந்தால், முதலீட்டாளர்கள் தாங்களே தேடிவந்து முதலீடு செய்திருப்பார்கள்.

நோக்கியாவின் அவலம்!

‘நோக்கியா தொழிற்சாலையை நாங்கள்தான் கொண்டு வந்தோம்’ என தம்பட்டம் அடித்த அ.தி.மு.க-வின் ஆட்சியில்தான், அதற்கு மூடுவிழாவும் நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையை இழந்தனர். அவர்களுக்கு மாற்று வேலைகள் கிடைப்பதற்காக எந்த முயற்சியையும் அரசு எடுக்கவில்லை. எனவேதான், ‘கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப வேட்டைக்கு தமிழகத்தைத் திறந்துவிடும் வேலையை முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி தமிழக அரசு செய்துகொண்டிருக்கிறது’ என விமர்சனங்கள் வருகின்றன.

அந்தரத்தில் மோனோ ரயில்!

கட்டமைப்புகள், சாலைகள், துறைமுகங்கள், போக்குவரத்து வசதிகள் என சகலமும் செய்யப்பட்டிருக்கும் இடத்தைத் தேடித்தான் தொழில்கள் வரும், முதலீடுகள் குவியும் என்பது பெட்டிக்கடை நடத்துபவருக்கூட தெரியும். ஆனால், மெட்ரோ ரயில் திட்டம்கூட சென்னையில் முழுமை அடையவில்லை. ‘மெட்ரோ ரயிலைவிட மோனோ ரயில்தான் பெஸ்ட்’ என பக்கம் பக்கமாக அறிக்கைவிட்டு மெட்ரோவை மட்டம் தட்டியவர்கள்தான், மெட்ரோ ரயில் திட்டத்துக்குச் சொந்தம் கொண்டாடினார்கள். மதுரை, கோவை, திருச்சியிலும் மோனோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் என்றும் சொன்னார்கள். எல்லாமே புஸ்வாணம்தான்.

பறக்கும் சாலையா? பறக்காத சாலையா?

கார் தொழிற்சாலைகளில் இருந்து துறைமுகத்துக்கு கார்களை எளிதாக அனுப்புவதற்காக மதுரவாயலில் இருந்து சென்னை துறைமுகத்துக்குப் பறக்கும் சாலைத்திட்டத்தைக் கொண்டுவந்தது மத்திய அரசு. ஆனால், அதை முடக்கிப் போட்டுவிட்டது தமிழக அரசு. ‘முதலீட்டாளர்களுக்கு ஏற்ற வளர்ச்சிபெற்ற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது’ என மாநாட்டில் பெருமை பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ‘மத்திய அரசின் பறக்கும் சாலைத் திட்டத்தை ஏன் முடக்கினீர்கள்?’ என்று ஏன் கேட்கவில்லை?

50 ஆயிரம் கோடி... போயே போச்சு!

கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் தொழில் முதலீடுகள் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குக் குறைந்து போயிருப்பதாகச் சொல்கிறது ஒரு புள்ளிவிவரம். ஹூண்டாய் கார் தொழிற்சாலை விரிவாக்கம் ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களுக்குச் செல்லத் திட்டமிட்டு இருக்கின்றன. தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்வந்த இசுசு நிறுவனம், ஆந்திராவுக்குப் படையெடுத்துவிட்டது. பிரான்ஸ் நாட்டின் செயின்ட் கோபைன் நிறுவனம், சென்னைக்கு அருகில் கண்ணாடித் தொழிற்சாலை தொடங்கியது. இதன் விரிவாக்க ஆலை 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராஜஸ்தான் மாநிலத்துக்கு இடம்பெயர்ந்துவிட்டது. தமிழகத்தின் ராம்கோ சிமென்ட் நிறுவனம், ஆண்டுக்கு 2.5 மில்லியன் டன் சிமென்ட் உற்பத்தி செய்யும் தனது தொழிற்சாலையை ஆந்திராவின் கர்நூல் மாவட்டத்தில் அமைக்க அனுமதியைப் பெற்றிருக்கிறது. ஃபாக்ஸ்கான் ரூ.30,000 கோடி செலவில் மராட்டியத்தில் தொழிற்சாலை அமைக்க புரிந்து உணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறது. சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் செயல்பட்டுவந்த பல வாகன உதிரிபாக நிறுவனங்கள் ஆந்திராவில் ஸ்ரீசிட்டி சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு இடம்பெயர்ந்துள்ளன. அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தபின் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு ரூ.50,000 கோடி முதலீடு இங்கிருந்து போயிருக்கிறது.

வரும் ஆனா...வராது!

‘நான்கு ஆண்டுகளில் மின்வெட்டே இல்லாத, மின்மிகை மாநிலமாகிவிட்டது தமிழகம்’ என முதலீட்டாளர்கள் மாநாட்டில் சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா. மின்வெட்டுப் பிரச்னையால், தமிழகத்தில் இருந்து 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கான தொழில் முதலீடுகள், கர்நாடகத்துக்குப் போய்விட்டன. பல தொழில் நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

05.09.2011 அன்று சென்னையில் நடைபெற்ற இந்திய தொழில் வணிகக் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, ‘அடுத்த 5 ஆண்டுகளில் 15,140 மெகா வாட் அனல் மின்சாரம், 5,000 மெகா வாட் காற்றாலை மின்சாரம், 3,000 மெகா வாட் சூரிய ஒளி மின்சாரம் என தமிழகத்தின் மின் உற்பத்தித் திறன் 23,140 மெகா வாட் அளவுக்கு அதிகரிக்கப்படும்’ என அறிவித்தார். ‘தமிழகத்துக்கு 22,440 மெகா வாட் மின்சாரம் கிடைக்க அரசு வகை செய்திருக்கிறது’ எனச் சொன்னாலும், அவை அ.தி.மு.க அரசால் செயல்படுத்தப்பட்டவை அல்ல. முந்தைய ஆட்சியிலும், மத்திய பொதுத் துறை மின் நிறுவனங்களுடனான கூட்டு முயற்சியிலும் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் பயனாகக் கிடைத்த மின்சாரம் இது. 2012 அக்டோபரில் ஜெயலலிதா வெளியிட்ட சூரிய ஒளி மின் உற்பத்திக் கொள்கையில், ‘ஆண்டுக்கு 1,000 மெகா வாட் வீதம் அடுத்த 3 ஆண்டுகளில் 3,000 மெகா வாட் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கப்படும்’ என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நடக்கவில்லை. மின்தட்டுப்பாடு போக்கப்படவில்லை. இந்த நிலையில், முதலீட்டாளர்களுக்கு எங்கிருந்து மின்சாரத்தைக் கொண்டுவருவார்கள்?

விளைநிலங்கள் அபகரிக்கப்படலாம்!

‘முதலீட்டாளர்களுக்கு என தமிழகத்தில் 42 ஆயிரம் ஏக்கர் நிலம் தயாராக உள்ளது’ என மாநாட்டில் சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா. மத்திய பி.ஜே.பி அரசு கொண்டுவந்த நிலம் கையகப்படுத்தல் மசோதாவை முதலில் ஆதரித்தவர் ஜெயலலிதா. அதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால், மசோதாவுக்கு எதிரான நிலையை ஜெயலலிதா எடுத்தார். 42 ஆயிரம் ஏக்கர் இருக்கிறது எனச் சொன்னாலும், புதிதாக கம்பெனிகள் வந்தால், அதைவிட கூடுதலாக நிலங்கள் தேவைப்படும். விளைநிலங்களில் கைவைப்பார்களோ என்று விவசாயிகள், அ.தி.மு.க-வை மிரட்சியோடு பார்க்கிறார்கள்.

தமிழகத்தில் சுமார் 85 லட்சம் இளைஞர்கள் படித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து வேலைக்காகக் காத்திருக்கிறார்கள். தமிழக அரசுத் துறைகளில் சுமார் 5 லட்சம் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன்சுமை ரூ.4 லட்சம் கோடிக்கும் அதிகம். அ.தி.மு.க ஆட்சி 6 மாதங்களில் முடிவுக்கு வரப்போகிறது. இந்தச் சூழலில், ஒரு லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்துவிட்டோம் என தண்டோரா போடுவதற்கு மட்டுமே இந்த மாநாடு பயன்படப்போகிறது.

- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick