கூட்டணி சலசலப்பு - ம.தி.மு.க.-வில் மல்யுத்தம்!

ட்டமன்றத் தேர்தலில் யாரோடு கூட்டணி என்பதை வைத்து ம.தி.மு.க-வில் சலசலப்பு தொடங்கிவிட்டதாக அந்த வட்டாரத்தில் இருந்து வரும் தகவல்கள் சொல்கின்றன. இப்போது, ‘மக்கள் நலக்கூட்டு இயக்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கி, அதில் ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய ஐந்து கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. ‘‘செப்டம்பர் 15-ம் தேதி திருப்பூரில் நடக்கும் ம.தி.மு.க மாநாட்டில் யாருடன் கூட்டணி என்பதை அறிவிப்பேன்” என்று சொல்லியிருந்த வைகோ, இரண்டு வாரங்களுக்கு முன் கோவில்பட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில், ‘இதுதான் தேர்தல் கூட்டணி’ என்று அறிவித்துவிட்டார். அதன்பிறகு ம.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு தொடங்கிவிட்டது!

‘‘கடந்த ஜூன் மாதம் முதல் தேதி அன்று கட்சியின் உயர்மட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. அதில் பேசிய பொதுச்செயலாளர் வைகோ, ‘வர இருக்கிற பொதுத்தேர்தல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தத் தேர்தலில் பொது எதிரியை வீழ்த்த வேண்டுமானால், அதற்கு பலமான கூட்டணி வேண்டும். அதனை எல்லாம் கட்சியும் உணர்ந்துள்ளது. இன்றைய சூழ்நிலையில் தனித்துப் போட்டியிட முடியாது. மூன்றாவது அணியும் சாத்தியம் இல்லை. இன்று நமக்கு பொது எதிரி ஜெயலலிதாதான். அவரை வீழ்த்த வேண்டுமானால், தி.மு.க கூட்டணியில்தான் சேரவேண்டும்’ என்று சொன்னார். ‘உள்ளூர் தி.மு.க-வினருடன் நட்பு பாராட்டிக்கொள்ளுங்கள்’ என்றும் அப்போது சொன்னார். இது, பெரும்பாலான நிர்வாகிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. இன்றைய சூழ்நிலையில் தி.மு.க கூட்டணியில் சேர்ந்தால்தான் 15, 20 பேராவது எம்.எல்.ஏ. ஆக முடியும் என்று நினைத்தோம். 20 வருஷங்களாகக் கஷ்டப்பட்டாகிவிட்டது. இந்தத் தேர்தலிலாவது பொதுச்செயலாளர் நல்ல முடிவை எடுக்கிறாரே என்று நினைத்தோம். ஆனால், இடையில் என்ன நடந்ததோ, அப்படியே மாறி மூன்றாவது அணி என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார். தனியாக நிற்பதும் ஒன்றுதான், இந்தக் கூட்டணியும் ஒன்றுதான்” என்று கட்சி நிர்வாகிகள் சிலர் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

தங்களது அணிக்குத்தான் ம.தி.மு.க வரும் என்று தி.மு.க-வும் பலத்த எதிர்பார்ப்பில் இருந்தது.

அந்த ஆர்வத்தை அதிகப்படுத்தியது மு.க.தமிழரசு மகன் திருமணம். அங்கு சென்ற வைகோ, ‘தனது ஓயாத உழைப்பினால் திராவிட முன்னேற்றக் கழகத்தில் உன்னதமான உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ள பொருளாளர் ஸ்டாலின் அவர்களே’ என்று அவரைப் பாராட்டினார். ‘என் உயிரினும் மேலான என்ற காந்தக் குரல் செவிகளில் ஒலிக்கும்போது எல்லாம் கடலலைகள் ஆர்ப்பரிப்பதைப்போல கரவொலியை எழுப்புகிற தி.மு.கழகத் தொண்டர்களே’ என்று கருணாநிதியைப் பாராட்டினார். இந்த விழாவுக்கான அழைப்பிதழைத் தர வந்த ஸ்டாலினிடம் தனியாகப் பேசிய வைகோ, தி.மு.க-வுடன் கூட்டணிக்கு இணக்கமாக வருவது போன்ற தகவல்களைச் சொல்லி அனுப்பி இருக்கிறார். அதையெல்லாம் வைத்துத்தான் தி.மு.க-வும் நம்பிக்கையாக இருந்தது. ஆனால், கடந்த இரண்டு வாரங்களாக நிலைமை தலைகீழாக மாறியதில் தி.மு.க-வைவிட ம.தி.மு.க. தொண்டர்களே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த திங்கள்கிழமை கூடிய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய வைகோ, மக்கள் நலக் கூட்டியக்கத்துடன் சேர்ந்துதான் நாம் தேர்தலைச் சந்திக்கப்போகிறோம் என்று அறிவித்துவிட்டாராம். ‘ஈழத் தமிழர்களுக்கு ராஜபக்‌ஷே, சோனியா, கருணாநிதி ஆகிய மூவர்தான் துரோகம் செய்தவர்கள். அப்படிப்பட்ட தி.மு.க-வுடன் நாம் கூட்டணி வைக்க முடியாது. மக்கள் விரோத அரசு நடத்தி வருகிறார் ஜெயலலிதா. எனவேதான், நாம் இந்தக் கூட்டணியை அமைத்துள்ளோம். இந்தக் கூட்டணிக்கு விஜயகாந்த் வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது” என்று பேசினாராம் வைகோ. தி.மு.க. தங்களை மதிக்கவில்லை என்பதற்கு நீண்ட நேரம் விளக்கம் அளித்தாராம். ஆனால், முக்கிய நிர்வாகிகள் தங்கள் தரப்பு யோசனைகளைச் சொல்வதற்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லையாம்.

‘‘கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த ம.தி.மு.க மாநாட்டில் பொது எதிரி ஜெயலலிதாதான் என்று சொன்னவர், கடந்த மாதம் நடந்த உயர்மட்டக்குழுக் கூட்டத்திலும் அதைச் சொன்னவர், இப்போது மாறிவிட்டார். அதற்கு உரிய விளக்கத்தை நிர்வாகிகளுக்கும் தரவில்லை, எங்களிடமும் கருத்துக் கேட்கவில்லை” என்கிறார்கள். இந்த நிலையில், ம.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு ஒரு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ‘உங்களை நேசிக்கும் தொண்டர்கள்’ என்று அந்தக் கடிதம் சொல்கிறது.

‘‘எம்.பி. தேர்தல் வரும்போது யாருடன் கூட்டு என்பதை சூசகமாகவோ, பகிரங்கமாகவோ அறிவிக்கும் நீங்கள் எம்.எல்.ஏ. தேர்தல் என்று வரும்போது நிர்வாகிகள், தொண்டர்கள் எதிர்பார்ப்பு, அவர்களின் மனநிலையைத் திட்டமிட்டு குழப்புகிறீர்கள். உங்களின் உண்மையான திட்டம்தான் என்ன? கட்சிக்காரர்களை, கடன்காரர்களாகவும் ஏமாற்றத்துக்கும் உள்ளாக்கும் உங்களின் உள்நோக்கத்தைப் பகிரங்கமாக வெளிப்படுத்துங்கள். உண்மையில் தி.மு.க-வுடன் கூட்டுச் சேரக் கூடாது என்ற கொள்கை இருந்திருந்தால் எம்.பி தேர்தலில் ஏன் கூட்டு சேர்ந்தீர்கள்? எதற்கு எம்.எல்.ஏ தேர்தல் வரும்போது மட்டும் குழப்பம் செய்கிறீர்கள்?

ஜெயலலிதா கட்சி வெற்றிபெறும் என்று தெரிந்துதானே இப்போது உறவாடும் இதே கம்யூனிஸ்ட்காரர்கள், ஜவாஹிருல்லா ஆகியோர் விஜயகாந்த் அலுவலகத்துக்குக் கடந்த தேர்தலில் ஓடினார்கள். விஜயகாந்த் வந்தால் ஜெயிக்க முடியும் என்று தெரிந்துகொண்ட கட்சிகள், ஏன் பழுத்த அரசியல்வாதியான உங்களை ஒதுக்கிவிட்டு கோயம்பேடு விஜயகாந்த் அலுவலகத்துக்குச் சென்று கெஞ்சிக்கூத்தாடி ஜெயலலிதாவுடன் விஜயகாந்த்தைக் கூட்டுச்சேர வைத்தார்கள்.

மதுவிலக்கு உங்களுடைய நியாயமான கொள்கை, இதற்காக மற்றவர்களைவிட நீங்கள் மிக அதிகமாக உழைத்தவர். இந்த உழைப்பின் தகுதியை மதித்துத்தான், பழைய மகாபலிபுரம் சாலையில் முன்கூட்டியே கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு போனில் தகவல் தந்து நீங்களும் சம்மதித்து நடைபயணத்தின்போது ஜெயலலிதா வழியில் தனது காரை நிறுத்திவிட்டு இறங்கிவந்து மரியாதை கொடுத்தார். அதைப் பயன்படுத்த எந்த முயற்சியும் நீங்கள் எடுக்கவில்லை.

திருமண வீட்டில் ஸ்டாலினிடம் மனம் நெகிழப் பேசி பாசம் காட்டியதும், கருணாநிதி வீட்டுத் திருமணத்தில் ‘அடடா வைகோ எதையும் மறக்கவில்லை’ என்று கருணாநிதியை நம்பவைத்து அவர் உங்கள் கையைப் பிடித்து பாசம் காட்டியதும் கண்ணீர் உதிர நீங்கள் பேசியதெல்லாம் நன்றியா? நாடகமா?

நீங்கள் முதல்வராக வரவேண்டும் என்பதில் எங்களுக்கும் உடன்பாடு உண்டு. அதற்காக கட்சியில் பலம் இருக்கிறதா? பணம் இருக்கிறதா? கிளைகள்தான் உள்ளனவா? எட்டு மாதங்களுக்கு அவர்கள் வண்டியை உருட்டிட உங்களை அவர்கள் சக்கரமாகப் பயன்படுத்துகிறார்கள். ஸ்டாலின் முதல்வராக நான் உழைக்க வேண்டுமா என்று பயிற்சி பாசறைகளில் பகிரங்கமாகப் பேசுகிறீர்களே? இது அப்பட்டமான திராவிட இயக்கத் துரோக சிந்தனைதானே? ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் மனதுக்குள் புழுங்கிக்கொண்டு இருக்கிறார்கள். கட்சியின் மேல்மட்ட நிர்வாகிகள் இப்படி தவறான முடிவெடுக்கும் தலைவரிடம் சிக்கிவிட்டோம் என்று புலம்பித் தீர்க்கின்றனர்.

உங்கள் காலத்துக்குப் பிறகு ம.தி.மு.க இருக்க வேண்டுமானால் சட்டமன்றத்துக்குள் கட்சி உறுப்பினர்கள் செல்வதற்குரிய கூட்டணியைப் பற்றி சிந்தியுங்கள். மூன்றாவது அணி, நான்காவது அணி தமிழ்நாட்டில் எடுபடாது. நீங்கள் மனித நேயம் மிக்கவர் என்பது உலகறியும். தமிழ் மக்களிடம் நீங்கள் பெற்றுள்ள நற்பெயர் ஒவ்வொருவரும் உணர்வார்கள். ஆனால், தற்போது உங்களுடைய நிலைப்பாடுகள் திராவிட இயக்க உணர்வே இல்லாததுபோல மாறிக்கொண்டிருக்கிறது. திருப்பூர் மாநாட்டில் எந்த முடிவையும் அறிவிக்காதீர்கள்” என்று போகிறது அந்தக் கடிதம். யாருடன் கூட்டணி என்பதில் வைகோ எடுத்த முடிவு கட்சி நிர்வாகிகள் மட்டத்தில் அதிருப்தியை எழுப்பி இருப்பது இதன்மூலம் தெரிகிறது!

- பாலகிஷன், ச.ஜெ.ரவி

படம்: தி.குமரகுருபரன்


ம.தி.மு.க-வை விட்டு விலகுகிறாரா கணேசமூர்த்தி?

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவுக்கும், கட்சியின் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் ஈரோடு கணேசமூர்த்திக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு ​உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுபற்றி நாம் கணேசமூர்த்தியிடம் கேட்டபோது, இந்தத் தகவலை அவர் மறுத்தார்.

 “நீங்கள் சொல்வதுபோல பொதுச்செயலாளருக்கும் எனக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. இவை திட்டமிட்டு பரப்பப்படும் வதந்திகள்” என்று சொல்கிறார் கணேசமூர்த்தி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick