அன்று சொன்னது ஜூ.வி. இன்று கிளம்புது ஆவி!

கிரானைட் புதையலில் புதைக்கப்பட்ட பிணங்கள்...

கோடிக்கணக்கான மதிப்பிலான கிரானைட் கற்களை சூறையாடிய சூதாட்டத்தில் மர்மம் இன்னமும் விலகவில்லை. ஆனால் மர்மங்கள் வெளிச்சத்துக்கு வருவதற்கான நாட்கள் நெருங்கிக்கொண்டு இருப்பது மட்டும் தெரிகிறது.

மதுரை கிரானைட் முறைகேடுகளுக்கு முன்னுரை தேவையில்லை. அனைத்துமே அனைவரும் அறிந்ததுதான். சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. மதுரையில் தங்கி ஆய்வுசெய்த சகாயம் கனிம வளம், பொதுப்பணித் துறை, வேளாண்மை, வருவாய், காவல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட துறைகளில் இருந்து விசாரணைசெய்து பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகவைத்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களில் தமது இறுதி அறிக்கையைத் தயார் செய்துள்ளார். இந்த நிலையில் விசாரணை ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில் கிரானைட் குவாரிகளில் கொடுக்கப்பட்ட நரபலி சம்பந்தமாக வந்த புகார்களை வாங்கியவர் தனியாக டீம் போட்டு விசாரணை செய்தார்.

நரபலி விவகாரத்தை முன்பே சொன்னது ஜூ.வி. இந்த நரபலிகள் தொடர்பாக ‘மதுரை கிரானைட் குவாரிகளில் நரபலி... சகாயத்திடம் அதிர்ச்சி மனுக்கள்’ (16.12.14), ‘கிரானைட் கொள்ளையர்கள் விழுங்கிய கிராமங்கள்... சகாயம் ஆய்வில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி’ (29.12.14) ஆகிய தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறோம். அதிர்ச்சி தரும் அந்த விவகாரம்தான் இப்போது பூதாகரமாகியிருக்கிறது.

நரபலிகள் சம்பந்தப்பட்ட புகார்களை விசாரிக்க பி.ஆர்.பி நிறுவனத்துக்குச் சொந்தமான மேலூர் தெற்குத் தெருவில் அமைந்து இருக்கும் கிரானைட் ஃபேக்டரிக்கு சகாயம் திடீர் விசிட் அடித்தார். இதைத் தொடர்ந்து நரபலி கொடுத்து புதைக்கப்பட்ட இடமான சின்னமலம்பட்டி பகுதியில் நுழைந்ததும் தமிழகம் பரபரப்பானது.

‘‘இங்கேதான் புதைத்தோம்!”

கீழவளவு பகுதியைச் சேர்ந்த சேவற்கொடியோன் என்கிற பிரபு கொடுத்த புகார்தான் இதன் ஆரம்பம். தனது புகார்மனுவில் சேவற்கொடியோன், “1999-ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதிகளில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட இரண்டு நபர்கள் உள்பட மொத்தம் 14 நபர்களை வண்டியில் ஏற்றிக்கொண்டு பி.ஆர்.பி நிறுவனத்தில் விட்டேன். அவர்களில் இரண்டு நபர்களை பி.ஆர்.பி நிறுவனத்தினர் கொடூரமாக உயிரோடு நரபலி கொடுத்து ஓலைப்பாயில் சுருட்டிக் கட்டி பொக்லைன் இயந்திரம் மூலம் குழிதோண்டி புதைத்தார்கள். இதுபற்றி 2004-ம் ஆண்டு புகார் கொடுத்ததும் நடவடிக்கை இல்லை’’ எனச் சொல்லியிருந்தார். நரபலி கொடுத்து உடல்களைப் புதைத்த இடம் இதுதான் என்று மேலூரை அடுத்துள்ள சின்னமலம்பட்டி என்ற இடத்தை சேவற்கொடியோன் காட்ட அந்த ஊர் வி.ஏ.ஓ மூலம் புகார் வாங்கி அதை காவல் துறைக்கு அனுப்பி அந்த இடத்தைத் தோண்டச் சொன்னார்.

சகாயத்தைப் பின்தொடர்ந்த மர்ம நபர்!

சேவற்கொடியோன் சொன்ன இடம் இப்போது அந்தப் பகுதி மக்கள் பயன்படுத்திவரும் சுடுகாட்டுப் பகுதியாகும். மேலும் சகாயம் குழுவினர் இந்த ஆபரேஷனை கடந்த 12-ம் தேதி காலை ஒன்பது மணிக்குத் தொடங்கினர். முறைப்படி புகார் அளித்தும் அந்த இடத்துக்கு போலீஸ் உள்பட சம்பந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் வந்து சேரவில்லை. அந்த இடத்தில் எலும்புக்கூடுகள் இருந்தால் அதை ஆய்வுசெய்ய பிணக்கூராய்வு செய்யும் மருத்துவர்கள், அறிவியல் அலுவலர், டெக்னீஷியன் உள்பட பல்வேறு நபர்கள் அடங்கிய குழு ஒன்றை காவல் துறை மூலம் சகாயம் கேட்டு இருந்தார். மதியம் வரை யாரும் வரவில்லை. உடனடியாக சகாயம் முறைப்படி அந்த ஊர் வி.ஏ.ஓ மூலம் புகார் கொடுத்து, அதை கீழவளவு காவல் நிலையத்தில் புகாராகப் பதிவு செய்துவிட்டு, அந்த இடத்தைத் தோண்டும் பணிகளில் மும்முரமாக இருந்தபோது, அங்கு நடந்தம் அனைத்து விஷயங்களையும் மர்ம நபர் ஒருவர் மறைந்து இருந்து, யாரோ ஒருவருக்கு போனில் தகவல்களைச் சொல்லிக்கொண்டு இருந்தார். அந்த மர்ம நபரை மடக்கிய சகாயம் குழு உடனடியாக அவரைப் பிடித்து விசாரித்தபோது, தனது பெயர் முருகானந்தம் என்றும் பி.ஆர்.பி நிறுவனத்தில் இருந்து ஜோதிபாசு என்கிற நபர் தம்மை வேவுபார்க்க இங்கு அனுப்பி வைத்ததாகவும் சொன்னார். உடனடியாக அவரின் செல்போனை வாங்கி பரிசோதித்துவிட்டு அங்கிருந்து அவரை கீழவளவு காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

தாமதமாக வந்த மருத்துவர்கள்!

இதற்கிடையில், சகாயத்திடம் புகார் கொடுத்ததால் குடும்பத்துடன் கொலைசெய்து விடுவதாக மீண்டும் பி.ஆர்.பி நிறுவனத்தில் இருந்து ஆட்கள் வந்து மிரட்டினார்கள் என்று, புதுத்தாமரைப்பட்டி என்ற ஊரில் இருந்து பெண்மணி ஒருவர் மீண்டும் சகாயத்திடம் புகார் கொடுத்து இருந்தார். கோவையில் அரசு வழக்கறிஞராக இருக்கும் திருமோகூரைச் சேர்ந்த பிரேமா என்பவரின் தோட்டத்தில் கிரானைட் கற்களைக் கொட்டி மீண்டும் பி.ஆர்.பி ஆட்கள் மிரட்டுகிறார்கள் என்று இன்னொரு புகாரும் வரவே, இந்த இரண்டு புகார்களையும் விசாரிக்க அங்கு சென்றார் சகாயம். அங்கு சென்று இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் சின்னமலம்பட்டி ஸ்பாட்டுக்கு வந்தார். அப்போதும் மருத்துவர் குழு வரவில்லை. ஏன் இன்னமும் வரவில்லை என்று மதுரை மருத்துவமனை டீன் ரேவதியிடம் சகாயம் விசாரித்தார். அவர், தமக்கு இன்னமும் முறைப்படி பேப்பர் வரவில்லை என்று சொல்லி, பிறகு ஆறுபேர் கொண்ட குழுவை அனுப்பிவைத்தார்.

மதியம் மூன்று மணியளவில் கீழவளவு வந்த மருத்துவக் குழுவை அங்கிருந்த எஸ்.ஐ ஒருவர், மேலூருக்கு அழைத்துச் சென்று அலைக்கழித்து நேரத்தைக் கடத்தியுள்ளார். இந்த எஸ்.ஐ மீது, சகாயம் கமிஷனில் பி.ஆர்.பி-க்கு எதிராகப் புகார் கொடுத்த ஒருவரை இரவில் சட்ட விரோதமாக தூக்கிச் சென்று கிரானைட் குவாரியில் வைத்து விடியும் வரை தாக்கியதாகக் குற்றச்சாட்டு நிலுவையில் உள்ளது. 

‘‘கோர்ட்டைவிட கலெக்டர்தான் பெருசு!”

சகாயம் குழு, மருத்துவக் குழுவை தொடர்புகொண்டபோது அவர்கள் ஸ்பாட்டுக்கு வந்து சேர மணி மாலை நான்கு மணி ஆகிவிட்டது. இதற்கிடையில் நரபலி கொடுத்து புதைக்கப்பட்ட இடத்தில் பொக்கலைன் கொண்டு தோண்ட வந்தனர். பொக்கலைன் கொண்டு தோண்டினால் எலும்புகள் உட்பட உள்ளிருக்கும் பல்வேறு ஆதாரங்கள் சேதாரம் ஆகும் என்ற சகாயம், ஆட்களைக் கொண்டு தோண்டச் சொன்னார். ஆனால், அதற்குள் மருத்துவர்கள், எங்களுக்கு கலெக்டர் ஆர்டர் இருந்தால்தான் நாங்கள் வேலை பார்ப்போம்’ என முரண்டுப் பிடித்தனர்.

அவர்களிடம் சகாயம், ‘‘இது உயர் நீதிமன்றம் அமைத்த சட்டப்பணி ஆணையர் குழு. நான் உங்களுக்கு அனைத்து பேப்பர்களும் தருகிறேன்’’ என்றார். அவர்களோ, ‘எங்களுக்கு உயர் நீதிமன்றத்தைவிட கலெக்டர்தான் பெருசு’ என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்படி இப்படி என்று நேரம் மாலை ஐந்து மணியாகிவிட்டது. போஸ்ட்மார்ட்டம் போன்ற பணிகளை இரவில் செய்ய மாட்டோம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டனர் வந்திருந்த மருத்துவக் குழுவினர்.

முழு இரவை சுடுகாட்டில் கழித்த சகாயம்!

நரபலி கொடுத்த இடத்துக்கு தாம் காலை ஒன்பது மணிக்கே வந்தாச்சு. ஆனால், இங்கு நடக்க வேண்டிய வேலைகள் ஒன்றுகூட நடக்கவில்லை. மாறாக நேரம்தான் கடந்துபோய் இருக்கிறது. ஏதோ இங்கு விபரீதம் நடக்கப் போகிறது என்று உணர்ந்த சகாயம் மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் தமக்கு ஒழுங்காக சப்போர்ட் செய்யவில்லை என்று மீடியாக்களிடம் புகார் கூறினார். ‘நரபலி கொடுத்து புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து நான் எங்கேயும் போகமாட்டேன்’ என்று சுடுகாட்டில் உட்கார்ந்துகொண்டார்.

மாலை நேரம், மக்கள் நடமாட்டம் இல்லாத ஊரின் ஒதுக்குப்புறமான அந்த இடத்தில் மின்சார வசதி உட்பட எந்த வசதியும் இல்லை. உடனடியாக ஜெனரேட்டர் வசதி செய்யும்படி தாசில்தார் கிருஷ்ணனிடம் சகாயம் சொன்னதும் அவரும் அங்கிருந்து கழண்டுகொண்டார். வழக்கம்போல சகாயத்துக்்குப் பாதுகாப்புக்கு வரும் காவலர்களைத் தவிர, மற்றவர்கள் அனைவரும் மெதுவாக அங்கிருந்து போய்விட்டனர். அப்படியே இரவு ஏழு மணி ஆகியும் மின்விளக்கு வசதி இல்லாததால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், ஜெனரேட்டர் ஒன்றையும் அதை இயக்க ஆபரேட்டர் ஒருவரையும் மினி லாரியில் அழைத்து வந்தனர். இதை எப்படியோ மோப்பம் பிடித்த கீழவளவு போலீஸ் எஸ்.ஐ அய்யனார், அந்த வண்டியை மறித்து ஜெனரேட்டர் ஆபரேட்டரை அவருடன் விசாரணைக்கு வருமாறு அழைத்துச்சென்றதோடு ஜெனரேட்டரின் முக்கியமான பாகம் ஒன்றையும் கழற்றிக்கொண்டு போய்விட்டார். இதையெல்லாம் அறிந்த சகாயம் இரவில் பிணத்தைத் தோண்டி எடுக்க சதி நடக்கிறது என்று நினைத்து இரவு முழுவதும் சுடுகாட்டிலேயே தங்குவதாக அறிவித்தார். அதோடு ஜெனரேட்டருக்குப் பதிலாக பெட்ரோ மாக்ஸ் லைட்டை வைத்து சமாளித்தனர்.

‘‘காவல் துறை சப்போர்ட் செய்கிறது!”

கலெக்டரும், மாவட்ட எஸ்.பி-யும் அவரசக் கூட்டம் ஒன்றை நடத்தினார்கள். உடனடியாக இரவு எட்டு மணிக்கு மேல் சம்பவ இடத்துக்கு வந்தார் மாவட்ட எஸ்.பி விஜயேந்திர பிதாரி. அங்கு வந்து செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி., “காவல் துறை நன்றாகத்தான் சப்போர்ட் செய்கிறது. ஒத்துழைப்பு தரவில்லை என்பது உண்மையல்ல. இது இரவு நேரம் என்பதால் பிணக்குழிகளைத் தோண்டுவதில் சிரமம் இருக்கிறது” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து போய்விட்டார். ஜெனரேட்டர் விஷயத்தில் போலீஸ் எஸ்.ஐ  அய்யனார் செய்த விஷயத்தை எஸ்.பி-யிடம் புகாராக சகாயம் சொன்னார்.

சுடுகாட்டில் உணவு... வள்ளி திருமண நாடகம்!

சகாயம், இரவில் சுடுகாட்டில் பாதுகாப்பாக இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. சகாயம் குழுவுக்கு ஆதரவு தெரிவித்து பல இளைஞர்களும் பொதுமக்களும் வந்தனர். சகாயம் சென்றுவிடுவார் என்று நினைத்த நேரத்தில் இரவு உணவாக இட்லியை பார்சல் வாங்கி வந்து  அங்கிருந்தவர்களோடு சாப்பிட்ட சகாயம், நள்ளிரவு வரை தூங்கவே இல்லை. பக்கத்து கிராமத்தில் திருவிழாவுக்காக நாடகம் போட்டிருந்தார்கள்.  காற்றில் கரைந்து வந்த நாடக வசனங்களை கேட்டவர், தனது சிறுவயதில் நாடகத்தைப் பார்த்து ரசித்ததை சிலாகித்துச் சொன்னார். இரவு ஒரு மணியளவில் ஆம் ஆத்மி,  சட்டப்பஞ்சாயத்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் வந்தார்கள். அவர்களுடன் பேசிக்கொண்டே இருந்தவர், இரவு மூன்று மணியளவில் பிளாஸ்டிக் கயிற்றுக்கட்டிலில் படுத்துவிட்டார். மறுபடியும் நான்கு மணிக்கு எழுந்தவர் அந்த இடத்தைவிட்டு நகரவில்லை. காலையில் அங்கிருத்த வேப்பங்குச்சியில் பல் துலக்கியவர், அங்கிருந்து கிளம்பி மறுபடியும் காலை ஒன்பது மணிக்கு சம்பவ இடத்துக்கு வந்தார். “இன்னும் ஒரு வாரத்தில் இறுதி அறிக்கை தாக்கல்செய்யப் போகிறேன். இனி நரபலி சம்பவத்தை போலீஸும், வருவாய்த் துறை அதிகாரிகளும் நல்ல முறையில் விசாரணை செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று பத்திரிகையாளர்களிடம் சொல்லிவிட்டு அலுவலகம் சென்றுவிட்டார்.

எலும்புக்கூடு புதையல்கள்!

மருத்துவக் குழு சம்பவ இடத்துக்கு வந்ததும் ஏழு பேர் கொண்ட குழு ஒன்று கடப்பாரை மண்வெட்டியால் மார்க் செய்த இடத்தைத் தோண்டினார்கள். முதல் எலும்புக்கூட்டை மதியம் 12 மணிக்கு மேல் எடுத்தனர். அதில் ஒரு மண்டை ஓடு, இரண்டு கால் எலும்புகள் உட்பட ஐந்து சிதைந்த எலும்புகளை எடுத்தனர். அந்த எலும்புகள் சமீபத்தில் இறந்த அந்த ஊரைச் சேர்ந்த ஆண்டி என்பவரின் எலும்புகள் என்று சொல்ல, ஆண்டியின் மகள் சின்னக்கருப்பி என்பவரை உடனடியாக சம்பவ இடத்துக்கு அழைத்து வந்தனர். சின்னக்கருப்பியோ, “இது என் அப்பா எலும்பு இல்லை... அவரை வேற இடத்தில் புதைத்தோம்” என்றார்.

அதற்குள் சம்பவ இடத்துக்கு வந்த பி.ஆர்.பி-யின் வழக்கறிஞர்கள் மனோகரன், முத்துராமலிங்கம் பத்திரிகையாளர்களிடம் அறிக்கை ஒன்றை கொடுத்தனர். அதில் ‘சேவற்கொடியோன் பணத்துக்காகப் புகார் கொடுக்கிறார். இணைய தளங்களில், ‘சகாயம் சி.எம் ஆஃப் தமிழ்நாடு’ என வரும் செய்திகளைவைத்து, அதற்கு அடித்தளம் அமைப்பதுபோல செயல்படுகிறார். அதனால் இந்த விஷயத்தில் சி.பி.ஐ விசாரணை தேவை’ எனச் சொல்லியிருந்தனர். எலும்புகளை எடுக்கும் இடத்தில் பத்திரிகையாளர்களை அனுமதிக்கவில்லை. ஆனால் பி.ஆர்.பி-யின் வழக்கறிஞர்களுக்கு ஜூஸ் கொடுத்து உபசரித்து அவர்கள் வீடியோ எடுக்க அனுமதித்தது போலீஸ்.

பூஜைப் பொருளுடன் வந்த எலும்புகள்!

முதல் எலும்புகள் கிடைத்த அடுத்த ஒரு மணி நேரத்தில் இரண்டாவது எலும்புக்கூட்டை எடுத்தனர். அதில் பூஜை செய்யப்பட்ட பழைய முழுத்தேங்காய், சிவப்புகலர் பட்டுத்துணி, உட்பட தேய்ந்துபோன எலும்புகள், மண்டை ஓடு என்று எடுத்தனர். அடுத்த அரை மணி நேரத்தில் அதற்குப் பக்கத்தில் மீண்டும் ஒரு மண்டை ஓட்டு எலும்புகளை எடுத்தனர். இப்படியே தோண்டத் தோண்ட மாலை ஐந்து மணி வரை ஆறு அடி ஆழம் வரை தோண்டினார்கள். அதில் ஒரு சிறு வயது குழந்தை மண்டைஓடு உட்பட நான்கு நபர்களின் மண்டை ஓட்டு எலும்புகளை எடுத்தனர். அவற்றை மதுரை தடய அறிவியல் சோதனை மையத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து முழுப் பரிசோதனைகள் செய்ய சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்த வாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இறுதிக்கட்ட அறிக்கையைத் தாக்கல் செய்யப்போகிறார் சகாயம். கிரானைட் மர்மங்களுக்கு முற்றுப்புள்ளி கிடைக்குமா?

- சண்.சரவணக்குமார், சே.சின்னதுரை

அட்டை மற்றும் படங்கள்: எம்.விஜயக்குமார், நா.விஜயரகுநாதன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick