“வைகோ-வை அவமானப்படுத்தினார் ஸ்டாலின்!”

தொடரும் கூட்டணி சலசலப்புகள்!

‘‘கூட்டணி சலசலப்பு... ம.தி.மு.க-வில் மல்யுத்தம்!” என்ற தலைப்பிட்டு கடந்த இதழில் ஒரு கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

‘‘தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளில் ஏதாவது ஒரு கூட்டணியில் ம.தி.மு.க சேர வேண்டும். இந்த மக்கள் நலக் கூட்டு இயக்க கூட்டணியால் வெற்றி பெற முடியாது” என்று ம.தி.மு.க நிர்வாகிகள் சிலர் சொல்வதாகப் பரவிய செய்தியை அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தோம்.

ம.தி.மு.க தொண்டர் எழுதியதாகச் சொல்லப்படும் கடிதம் ஒன்று, அந்தக் கட்சியின் நிர்வாகிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள விவரத்தையும் அந்தக் கடிதத்தின் சாராம்சத்தையும் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தோம்.

இந்த நிலையில், ம.தி.மு.க அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் நெல்லை செ.திவான், மிகப்பெரிய விளக்கக் கடிதம் ஒன்றை ம.தி.மு.க நிர்வாகிகளுக்கு அனுப்பி உள்ளார். முன்பு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்துக்கு, பதில் கடிதம்போல இது இருக்கிறது.

‘‘3.10.1993-ம் நாளன்று மத்திய உளவுத் துறையால் உறுதிப்படுத்தப்படாத செய்திகளைக்கொண்ட ஒரு கடிதத்தை தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகனைக்கூட கலந்து பேசாமல் மருமகன் முரசொலி மாறனை மட்டும் அருகில் வைத்துக் கொண்டு பத்திரிகையாளர்களிடம் வெளியிட்டார் கலைஞர் கருணாநிதி. ‘உங்களை விடுதலைப் புலிகள் ஏன் கொல்ல வேண்டும்?’ என்று ஒரு நிருபர் கேட்டபோது, ‘அதற்கான நோக்கம் அந்தக் கடிதத்திலேயே உள்ளது’ என்று வைகோ மீது கலைஞர் பழிபோட்டார். வைகோவை அன்று தொண்டர்கள்தான் காத்தார்கள்.

96-ம் ஆண்டு தேர்தலில் ம.தி.மு.க தோற்றது பற்றி அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மூப்பனார், நம்மோடு வராததாலும் சூப்பர் ஸ்டார் ரஜினி ஆதரவு வேறு பக்கம் திரும்பியதாலும்தான் மக்கள், ம.திமு.க-வுக்கு வாக்களிக்கவில்லை. 98 நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவுடன் கூட்டுச்சேர்ந்து மூன்று பேர் எம்.பி ஆனார்கள். 99 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக-வுடன் கூட்டுவைத்து நான்கு பேர் எம்.பி ஆனார்கள். மத்திய அமைச்சரவையில் வைகோவுக்கு அமைச்சர் பதவியைத் தர வாஜ்பாய் விரும்பினார். ஆனால் அவர், அமைச்சர் பொறுப்பை எடுத்துக்கொள்ளவில்லை. 99-ம் ஆண்டும் மத்திய அமைச்சரவையில் கேபினெட் அந்தஸ்து உள்ள அமைச்சர் பொறுப்பை வைகோ எடுத்துக்கொண்டு இருக்கலாம். ஆனால், அவ்வாறு அவர் நடந்துகொள்ளவில்லை. கண்ணப்பனையும் செஞ்சி ராமச்சந்திரனையும் அமைச்சர்களாக்கி அழகுபார்த்தார் வைகோ.

2001 சட்டமன்றத் தேர்தலில் நாம் கேட்ட தொகுதிகளை தி.மு.க தரவில்லை. கேட்ட எண்ணிக்கையிலும் தரவில்லை. எனவே தனித்துப் போட்டியிட்டோம். வெற்றி வாய்ப்பை இழந்தோம்.

2004 எம்.பி தேர்தலுக்கு முன்னால் வைகோ, பொடாவில் கைதாகி வேலூர் சிறையில் இருந்தார். முன்னணியினர்தான் பேச்சுவார்த்தைகள் நடத்தினார்கள். நான்கு இடங்களை மட்டுமே பெற்றார்கள். தான் சிவகாசி தொகுதியில் நின்றால் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறலாம் என்ற நிலை அப்போது இருந்தது. ஆனால் பதவிகளை விரும்பாத வைகோ என்ன செய்தார்? தனது மகனையோ, தம்பியையோ நிறுத்தாமல் சிப்பிப்பாறை ரவிச்சந்திரனை வேட்பாளர் ஆக்கினார். அந்தத் தேர்தலிலும் நான்கு பேர் எம்.பி ஆனார்கள்.

2006 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைக்க காரணமானவர்கள் எல்.கணேசனும் செஞ்சி ராமச்சந்திரனும்தானே! அவர்களே பின்னர் தி.மு.க-வுக்குச் சென்று அடைக்கலம் புகுந்ததை அனைவரும் அறிவோம். அந்தத் தேர்தலில் ம.தி.மு.க போட்டியிட்ட தொகுதிகள் அனைத்துக்கும் தி.மு.க தலைமை ஏராளமான தொகையை வாரி இறைத்தது. அதுதான் உண்மை.

‘என் பின்னால் வந்தால் கண்ணீரும் துன்பமும் தியாகமும் போராட்டமும்தான் வாழ்வாக அமையும். இதற்கு சித்தமானவர்கள் மட்டும் என்னுடன் வாருங்கள். மற்றவர்கள் தள்ளி நில்லுங்கள்’ என்றார் வைகோ.

கடந்த நான்கரை ஆண்டுகளில் வைகோ-வின் அபாரமான உழைப்பால் கழகம் தலைநிமிர்ந்து நிற்கிறது. இந்த நிலையில் இப்படி ஒரு கடிதத்தைத் தயாரித்தது கருணாநிதி, ஸ்டாலின் கூடாரம்தான். அடுத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் இதுபோன்ற ஒரு கடிதத்தை அனுப்ப நயவஞ்சகக் கூட்டம் தயாராகிவிட்டது என்பதால், இந்தக் கடிதத்தைப் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் அனுப்புகிறேன். சிவப்பு-கறுப்பு-சிவப்பு வண்ணப் பதாகையைக் கையிலேந்திய வண்ணம் லட்சியப் பயணத்தைத் தொடர்வோம். முடிவு கட்ட வேண்டிய ஆதிக்கங்களுக்கு முடிவு கட்ட!” - என்று முடிகிறது செ.திவான் கடிதம். இதே போன்ற கடிதத்தை இன்னும் சில நிர்வாகிகளும் தங்களது பெயரில் எழுதி பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்ப ஆரம்பித்து உள்ளார்கள்.

இந்த நிலையில், ம.தி.மு.க-வின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் பாலவாக்கம் க.சோமு அந்தக் கட்சியில் இருந்து விலகி, தி.மு.க-வில் சேர்ந்துள்ளார். தி.மு.க-வுடன் வைகோ கூட்டணி வைக்க மறுப்பதுதான் தன்னுடைய விலகலுக்குக் காரணம் என்றும் சோமு சொல்லி இருக்கிறார்.
‘‘இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், ‘வருகிற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க அரசை வீழ்த்த தி.மு.க-வுடன் நாம் கூட்டணி வைத்துக்கொள்வோம் என்றும் அதனை தக்க நேரத்தில் அறிவிப்பேன்’ என்றும் வைகோ சொன்னார். ஆனால் கடந்த 7-ம் தேதி நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், ‘தி.மு.க-வுடன் கூட்டணி வைத்துக்கொள்ள முடியாது’ என்றார். ‘இப்போது அமைந்துள்ள ஐந்து கட்சி கூட்டணியுடன் சேர்ந்து தேர்தலை சந்திப்போம்’ என்கிறார் வைகோ. ‘நாம் தனித்துப் போட்டியிடுவதால் அ.தி.மு.க வந்துவிடும் என்று நினைக்கிறீர்களா, அ.தி.மு.க வெற்றி பெறட்டும். தி,மு.க-வை விட அ.தி.மு.க மேல்’ என்றும் வைகோ சொன்னார். இதில் எனக்கு உடன்பாடு இல்லை.” என்று பாலவாக்கம் சோமு காரணம் சொல்லி இருக்கிறார்.

வைகோவின் இந்த மனமாற்றத்துக்கு என்ன காரணம் என்று ம.தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தபோது அவர்கள் இரண்டு காரணங்களைச் சொன்னார்கள். ‘‘மு.க.தமிழரசு மகன் திருமணத்தில் வைகோவை பேசவைத்த பிறகு, மற்ற கட்சித் தலைவர்களைப் பேச வைத்தார் ஸ்டாலின். வைகோவுக்கு முன்வரிசையில் நாற்காலி போடவில்லை. துரைமுருகன்தான் எழுந்து தனது நாற்காலியை வைகோவுக்குக் கொடுத்தார். இருந்தாலும் ஸ்டாலினுக்கு உரிய மரியாதை கொடுத்து வைகோ அந்த நிகழ்ச்சியில் பேசினார். சில நாட்கள் கழித்து, ‘வைகோவுக்கு வேறு என்ன வழி இருக்கிறது? எத்தனை ஸீட் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார்’ என்று ஸ்டாலின் கமென்ட் அடித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத் தொழிற்சங்க அலுவலகம் சம்பந்தமாக ஒரு வழக்கு போய்க்கொண்டு இருக்கிறது. இது ம.தி.மு.க-வுக்கும் தி.மு.க-வுக்குமான வழக்கு. கூட்டணி சேர்ந்திருப்பதால் பேச்சுவார்த்தை மூலம் இதனை முடித்துக் கொள்ளலாம் என்று கருணாநிதிக்கு வைகோ தூது அனுப்பினார். அதனை கருணாநிதி ஏற்றுக்கொண்டார். ஆனால், ஸ்டாலின் அதற்கு சம்மதிக்கவில்லை. இப்படிப்பட்ட ஸ்டாலினுடன் எப்படி கூட்டணி வைக்க முடியும்?” என்று கேட்கிறார்கள்.

‘‘தி.மு.க கூட்டணிக்கு வைகோ வரமாட்டார் என்று தெரிந்ததும் ம.தி.மு.க-வினரை இழுக்க முயற்சித்தார்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க இருந்தது. தேர்தல் உடன்பாடு ஏற்படாததால் ம.தி.மு.க விலகியது. இந்தக் கூட்டணிக்கு முயற்சித்த ஒருவர் ம.தி.மு.க-வில் இருந்து விலகி அ.தி.மு.க-வுக்குப் போக ஜெயலலிதாவுக்குக் கடிதம் கொடுத்தார். இவர் வந்தால்தான் நாம் ஜெயிப்போம் என்ற நிலைமையில் கட்சி இல்லை என்று சொல்லி அவரை சேர்க்க மறுத்தார் ஜெயலலிதா. ஆனால், தேர்தலுக்கு முன்பே ம.தி.மு.க-வை உடைக்க நினைக்கும் ஸ்டாலினை எப்படி நம்ப முடியும்?” என்றும் கேட்கிறார்கள்.

திருப்பூர் மாநாட்டில் வைகோ பேச இருப்பதை தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

- நமது நிருபர்கள்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick